SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அழகான வாழ்க்கை காத்திருக்கிறது!

2017-12-30@ 10:26:58

ஹாஸ்டலில் தங்கி ஏழாம் வகுப்பு படித்து வரும் நான் பெற்றோருடன் இருந்த  வரை வகுப்பில் முதல் மாணவனாக இருந்தேன். தற்போது மதிப்பெண் குறைவாகப் பெறுகிறேன். பெற்றோருடன் இருந்தால்தான் எனக்கு படிப்பு நன்றாக வருமா  அல்லது ஹாஸ்டலில் இருக்கலாமா? உரிய வழி காட்டுங்கள்.
 
- விக்னேஷ்வரன், முளையாம்பூண்டி.

ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசியில் பிறந்துள்ள நீங்கள் உணர்ச்சிபூர்வமானவர்.  சென்ட்டிமென்ட் உணர்வு அதிகம் கொண்டவர். உங்கள் ஜாதகத்தின்படி தற்போது  செவ்வாய் தசை நடந்து கொண்டிருக்கிறது. கல்வியைப் பற்றிச் சொல்லும்  வித்யாஸ்தானம் உங்கள் ஜாதகத்தில் மிகவும் வலிமையாக உள்ளது. அதே போல  உத்யோகத்தைப் பற்றிச் சொல்லும் ஜீவன ஸ்தானமும் மிக நன்றாக உள்ளது.  எனினும் தற்போதைய தசாபுக்தியின் படி இன்னும் மூன்று வருட காலத்திற்கு  அதாவது பத்தாம் வகுப்பு படித்து முடிக்கும் வரை பெற்றோருடன் இணைந்திருப்பது  நல்லது. பதினோராம் வகுப்பு முதல் நீங்கள் ஹாஸ்டலில் தங்கி படிக்க இயலும்.  தற்போதைய சூழலில் ஏழாம் வகுப்பு படித்து முடிக்கும் வரை பெற்றோர் ஞாபகம்  வரும்போதெல்லாம் கீழேயுள்ள துதியினைச் சொல்லி சிவபெருமானை வழிபடுங்கள்.  சிவன், பார்வதி, பிள்ளையார், முருகன் என சிவகுடும்பமாக இருக்கும் படத்தினை  உங்கள் அலமாரியில் வைத்து வணங்கி வாருங்கள். படிப்பினில் மீண்டும் முதல்  மாணவனாகத் திகழ்வீர்கள்.

“இல்லகவிளக்கது இருள்கெடுப்பது சொல்லக விளக்கது சோதியுள்ளது
பல்லகவிளக்கது பலருங் காண்பது நல்லக விளக்கது நமச்சிவாயவே.”


என் திருமண வாழ்வு 43 நாட்களில் முடிவிற்கு வந்துள்ளது. இரு வீட்டாருக்கும்  ஏற்பட்ட பிரச்சினையில் ஆறு மாத காலமாக கணவரை விட்டு பிரிந்து வாழ்கிறேன்.  கடவுள் எனக்குக் கொடுத்த வரம் இதுதானா? மீண்டும் கணவரோடு இணைந்து வாழ  என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

- கலா, தொண்டி.


பரணி நட்சத்திரம், மேஷ ராசி, மகர லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகப்படி  தற்போது செவ்வாய் தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. திருவோணம்  நட்சத்திரம், மகர ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் கணவரின் ஜாதகப்படி  தற்போது குரு தசையில் சுக்ர புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் மண  வாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் இடத்திற்கு அதிபதி சந்திரன் நான்கில்  உள்ளதாலும், ஏழாம் இடம் சுத்தமாக உள்ளதாலும் தோஷம் ஏதுமில்லை. உங்கள்  கணவரின் ஜாதகத்திலும் தோஷம் ஏதும் இல்லை. இது உங்கள்  இருவருக்குமிடையே உண்டான பிரச்சினை அல்ல. மூன்றாம் மனிதர்களின்  தலையீடும், தூண்டுதலும் பிரச்சினையை பெரிதாக்கி உள்ளது. இது வழக்கு  மன்றத்தில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை அல்ல, வாழ்க்கை பிரச்சினை என்பதை  உணர்ந்து உங்கள் கணவரை தனிமையில் சந்தித்துப் பேசிப்பாருங்கள். சுயகௌரவம்  பாராது ஏதேனும் ஒரு சனிக்கிழமை நாளில் அருகில் உள்ள பெருமாள் கோவிலில்  உங்கள் சந்திப்பு நிகழட்டும். இடைத்தரகர்கள் யாரையும் நம்பாது, எவரையும்  துணைக்கு அழைத்துச் செல்லாது தனிமையில் சந்தித்துப் பேசுங்கள். உங்கள்  கணவரைத்தான் கடவுள் உங்களுக்கு அளித்த வரமாக எண்ணி வாழ  முயற்சியுங்கள். கணவரோடு இணைந்ததும் தம்பதியராக சேர்ந்து திருமலை  திருப்பதிக்குச் சென்று வேங்கடமலையானை தரிசிப்பதாக உங்கள் பிரார்த்தனை  அமையட்டும். அழகான வாழ்க்கை உங்களுக்காகக் காத்திருக்கிறது.

பத்து வருடங்களாக திருமணத்திற்கு முயற்சித்தும் இதுவரை பலன் இல்லை.  எதனால் என் திருமணம் தடைபடுகிறது, என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

- கமல்ஜெயின், பெங்களூரு.


திருவாதிரை நட்சத்திரம், மிதுனராசி, தனுசு லக்னத்தில் பிறந்த உங்கள் ஜாதகத்தில்  தற்போது சனி தசையில் சந்திர புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் குரு  தசையின் காலம் 28 வயதோடு முடிந்துள்ளது. அதுவரை திருமணத்திற்கு  முயற்சிக்காமல் சனி தசை பிறந்த பிறகு திருமணம் செய்து கொள்ள  முடிவெடுத்துள்ளீர்கள். குரு தசையின் காலத்தில் அதாவது 28 வயதிற்குள் உங்கள்  வாழ்வினில் நடந்த நிகழ்வுகளை எண்ணிப் பாருங்கள். தெரிந்தும், தெரியாமலும்  செய்த பாவச் செயல்களுக்கு மானசீகமான மன்னிப்பைக் கோருவதுடன், அதற்கு  பரிகாரம் தேட முயற்சியுங்கள். செய்த தவறை மறைப்பதை விட, அதனை  உணர்ந்து அதற்கு பிராயச்சித்தம் தேடுவதே சிறந்த பரிகாரமாக  அமையும்.  உங்களை விட வசதி வாய்ப்பில் குறைந்த, கணவனால் கைவிடப்பட்ட பெண்ணிற்கு  வாழ்வளிக்க முன் வாருங்கள். 28.12.2018 வரை திருமணத்திற்கான வாய்ப்பு  பிரகாசமாய் உள்ளது. பிரதி சனிக்கிழமை தோறும் ஆதரவற்ற வயதான  தம்பதியருக்கு அன்னதானம் செய்து அவர்களது ஆசிர்வாதத்தைப் பெறுங்கள்.  உங்களைப் புரிந்துகொண்டு, உங்கள் வாழ்வினில் திருப்புமுனையை உண்டாக்கக்  கூடிய பெண் மனைவியாக வந்து சேர்வார்.

நான் ஒரு ஓய்வூதியர். சொந்த வீடு இருந்தும் பங்கு பிரிக்காததால் 10 வருடமாக  வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறேன். ஒருவருக்கு கடன் ஜாமீன்  கொடுக்கப்போய், அந்த கடனை நான் அடைக்க வேண்டிய சூழல் உண்டாகியுள்ளது.  ஆறு வருடமாக மருத்துவ செலவும் கூடிக்கொண்டே போகிறது. நான் உடல்  நலமுடன், கடனின்றி வாழ என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

- ஆறுமுகம், புதுக்கோட்டை.


ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள்  ஜாதகத்தின்படி தற்போது ராகு தசையில் ராகு புக்தி நடக்கிறது. உங்கள் ஜாதகத்தில்  ஜீவன ஸ்தானத்தில் சூரியன், புதன் மற்றும் சனியின் இணைவு நல்ல அம்சம்  ஆகும். அரசு உத்யோகம் பார்த்து ஓய்வூதியம் பெற்று வருகிறீர்கள். லக்னத்தில்  அமர்ந்துள்ள  ராகு உங்கள் மனதில் பேராசையைத் தோற்றுவித்ததன் விளைவு  தற்போது மனதளவிலும், உடல்நிலையிலும் சிரமத்தைத் தந்திருக்கிறது. இருப்பதை  விடுத்து பறப்பதற்கு ஆசைப்படுவதால் வாழ்வினில் பல்வேறு துன்பங்களை சந்திக்க  நேர்கிறது. ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்பதை உணர்ந்து  கொண்டீர்களேயானால் உடல்நிலையிலும் சரி, மன நிலையிலும் சரி  முன்னேற்றத்தைக் காண இயலும். உங்கள் உழைப்பில் வந்ததை மட்டுமே  அனுபவிக்கும் வாய்ப்புதான் உங்கள் ஜாதகத்தில் காணப்படுகிறது. தற்போது ராகு  தசை நடந்து வருவதால் புதிய முயற்சிகள் எதிலும் இறங்காமல் இருப்பதைக்  கொண்டு திருப்தி அடைய முயற்சியுங்கள். போதுமென்ற மனமே உங்கள்  உடல்நிலையை சரிசெய்யக் கூடிய மருந்து என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.  திங்கட்கிழமை தோறும் ராகு கால வேளையில் அருகில் உள்ள சிவாலயத்தில்  பிரதட்சிணம் செய்து வழிபடுங்கள். நலம் காண்பீர்கள்.

பிறந்து 18 மாதங்கள் ஆன எங்கள் பேரனுக்கு தலை சரியாக நிற்கவில்லை.  அவனால் சரியாக உட்காரவும் இயலவில்லை. படுத்த படுக்கையாக இருக்கிறான்.  மனதிற்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. டாக்டரைப் பார்த்து பணம் செலவழித்தும்  பார்த்துவிட்டோம். பரிகாரம் சொல்ல வேண்டுகிறோம்.

- தாத்தா தமிழ்மணி, மீன்சுருட்டி.


பரணி நட்சத்திரம், மேஷ ராசி, மேஷ லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் பேரனின்  ஜாதகத்தின் படி தற்போது சுக்ர தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. அவருடைய  ஜாதகத்தில் ஜென்ம லக்னாதிபதி செவ்வாய், வக்ரம் பெற்ற சனியுடன் இணைந்து  எட்டாம் இடத்தில் அமர்ந்திருப்பது பலவீனமான அம்சம் ஆகும். குரு பகவானும்  வக்ரகதியில் சஞ்சரிப்பதோடு, ராகுவின் இணைவினைப் பெற்றுள்ளது சரியான  நிலை  அல்ல. ஜென்ம லக்னத்தில் இணைந்துள்ள புதன் கேதுவின் சாரம் பெற்று  அமர்ந்திருப்பது நரம்பு மண்டலத்தில் பிரச்சினையைத் தோற்றுவித்துள்ளது.  14.09.2018ற்குள் அவருடைய பிரச்சினையை சரி செய்ய வேண்டியது அவசியம்.  முயற்சியைத் தளரவிடாமல் மருத்துவர்களின் ஆலோசனையின்படி செயல்படுங்கள்.  ஒரு சிறிய அறுவை சிகிச்சையின் மூலம் இந்தப் பிரச்சினையை முற்றிலுமாக சரி  செய்ய இயலும். பரம்பரையில் உண்டான தீய நிகழ்வு ஒன்றின் பாவத்தினை இந்தப்  பிள்ளை அனுபவிப்பது போல் தெரிகிறது. குலதெய்வ ஆராதனை ஒன்றே உங்கள்  பிரச்சினையைத் தீர்க்கவல்லது. குலதெய்வத்திற்கு உரிய நேர்த்திக்கடனை  குறையில்லாமல் செய்து முடியுங்கள். நம்பிக்கையோடு செய்கின்ற பிரார்த்தனைக்கு  நிச்சயம் பலன் உண்டு. சரியான மருத்துவரை விரைவில் சந்திப்பீர்கள்.

திருமுறைகள் ஓதி திருமணம் முடித்து ஏழு ஆண்டுகள் ஆகியும் என் மகனுக்கு  இதுவரை குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. பல திருக்கோவில்களுக்குச் சென்று  வழிபாடு செய்து வருகிறோம். எங்கள் வீட்டில் மழலைக்குரல் ஒலிக்க நாங்கள்  என்ன செய்ய வேண்டும்?

- ராதா, திருப்பத்தூர்.


திருவோண நட்சத்திரம், மகர ராசி, கடக லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனின்  ஜாதகத்தையும், மகம் நட்சத்திரம், சிம்ம ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்துள்ள  உங்கள் மருமகளின் ஜாதகத்தையும் ஆராய்ந்ததில் 02.03.2018 ற்குப் பின் நல்ல  நேரம் என்பது கூடி வருகிறது. உங்கள் மகனின் ஜாதகத்தில் ஜென்ம லக்னாதிபதி  சந்திரனோடு கேது இணைந்திருப்பதும், உங்கள் மருமகளின் ஜாதகத்தில் ஜென்ம  லக்னத்தில் புத்ர காரகன் மற்றும் புத்ர ஸ்தானாதிபதி குருவுடன் கேது  இணைந்திருப்பதும் குழந்தை பாக்கியத்தைத் தடை செய்து வருகிறது. எனினும்  தற்போது 02.03.2018 முதல் நேரம் மாறுவதால் குழந்தை பாக்கியத்திற்கான வாய்ப்பு  கூடி வருகிறது. உரிய மருத்துவரை அணுகி சிகிச்சை பெற அறிவுறுத்துங்கள்.  உங்கள் மருமகளிடம் ஆறு குளம் போன்ற நீர்நிலையை ஒட்டி அமைந்துள்ள  அரசமரத்தடியில் அமர்ந்திருக்கும் விநாயகர் மற்றும் நாகர் சிலைகளுக்கு பால் அபிஷேகம் செய்து வணங்கச் சொல்லுங்கள். தொடர்ந்து ஏழு வியாழக்கிழமைகளில்  ஈரத்துணியுடன் இவ்வாறு பூஜை செய்து அரச மரத்தினையும், நாகரையும் 11 முறை  வலம் வந்து வணங்கி விநாயகப் பெருமானை மனமுருகி பிரார்த்தனை செய்து  கொள்ளச் சொல்லுங்கள். பிள்ளையாரின் அருளால் பிள்ளை பிறக்கக் காண்பீர்கள்.

என் மகள் காதல் திருமணம் செய்துகொண்டாள். ஜோதிடர் ராகுதசையில்,  கிருத்திகை நட்சத்திர நாளில் திருமணம் செய்து கொண்ட இந்த பெண் 2019ம்  வருடம் அங்கு இருக்கமாட்டாள் என்றும் அவளுக்கு இரண்டாம் கல்யாணம் செய்ய  வேண்டும் என்றும் அடித்துச் சொல்லிவிட்டார். மனக்குழப்பத்தில் உள்ள எங்களுக்கு  நல்ல வழி காட்டுங்கள்.

- ரேணுகாதேவி, கோவை.


கிருத்திகை நட்சத்திரம், ரிஷப ராசி, மகர லக்னத்தில் பிறந்துள்ள உங்கள்  பெண்ணின் ஜாதகப்படி தற்போது ராகு தசையில் குரு புக்தி நடக்கிறது. உங்கள்  மகளின் ஜாதகப்படி 18வது வயது முதல் 36வது வயது வரை ராகுதசைதான்  நடக்கும். எனில் 36 வயதிற்கு மேல்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று  சொல்வீர்களா? உங்கள் மகளின் திருமணம் நடந்த நேரத்தில் ராகு தசையில் குரு  புக்திதான் நடந்திருக்கிறது. மேலும் அவருடைய ஜாதகத்தில் ஏழாம் வீட்டில்  செவ்வாய் நீசம் பெற்றிருந்தாலும், கணவரைப் பற்றிச் சொல்லும் அந்த இடத்திற்கு  அதிபதியான சந்திரன் ஐந்தாம் பாவத்தில் உச்சம் பெற்றிருப்பது அவருடைய  திருமணம் காதல் திருமணமே என்பதை அடித்துச் சொல்கிறது. லக்னத்திலேயே  சுக்கிரனின் அமர்வினைப் பெற்ற உங்கள் மகள் தீர்க்க சுமங்கலியாக வாழ்வார்.  மேலும் அவருடைய ஜாதகத்தில் ராகு உத்யோகத்தைப் பற்றிச் சொல்லும் 10ம்  இடமாகிய ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் ராகு தசையில் சிறந்த  உத்யோகத்தினைப் பெறுவார். அவருடைய ஜாதகம் மிகவும் நல்ல ஜாதகம்  என்பதோடு உங்கள் சந்தேகத்தின்படி அவரது பெயரிலும் எந்தவிதமான தோஷமும்  இல்லை. நன்றாக குடும்பம் செய்து கொண்டிருக்கும் உங்கள் மகளின் வாழ்க்கை  எதிர்காலத்திலும் மிகவும் சிறப்பாக இருக்கும். இதில் எந்தவிதமான குழப்பத்திற்கோ,  சந்தேகத்திற்கோ இடமில்லை. பரிகாரம் ஏதும் தேவையில்லை.

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா் திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை, பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் தினகரன் ஆன்மிக மலா் 229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம். பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-12-2018

  15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • AmazonIllegalMining

  அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

 • chinasnowfall

  கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

 • hungary_policepadhuga11

  புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

 • ThaiSanctuaryPiano

  யானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்