SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆதிரை நாயகனின் ஆனந்தத் தாண்டவம்

2017-12-30@ 09:54:16

ஆருத்ரா தரிசனம்: 02-01-2018

பிரபஞ்சத்தைப் படைத்த இறைவன் அதனை ஓயாது செயல்படுத்த படைத்தல், காத்தல், (இன்பக் காத்தல், துன்பக் காத்தல்) அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய ஐவகைத் தொழிலையும் செய்து கொண்டே இருக்கின்றான். அந்த ஐந்தொழிலையும் ஒருசேரச் செய்யும்படி அவன் ஆடும் நடனம் ஆனந்தமான நடனம் என்று போற்றப்படுகின்றது. இறைவன் இந்த நடனத்தை பூமண்டலத்தின் இருதய கமலமாக விளங்கும் ‘‘சிதம்பரம்’’ என்னும் தில்லையம்பதியிலுள்ள சிற்சபையில் ஆடிக் கொண்டிருக்கின்றான். அன்பர்கள் இதனை பஞ்ச கிருத்திய பரமானந்த தாண்டவம் என்று போற்றுகின்றனர். ஞானிகள் நாதாந்த நடனம் என்று கூறுவர்.

இதில் வலக்காலை முயலகன் மீது ஊன்றி, இடது காலை வலப்புறமாகத் தூக்கி எடுத்து வீசி, அதற்கிணையாக இடது கரத்தை வீசியவாறு ஆடுகின்றான். அபயம் காட்டும் முன் வலது கரத்தில் ஓர் பாம்பு சுற்றிக் கொண்டு படம் எடுத்து ஆடுகின்றது. வலது மேற்கரம் துடியை முழக்க இடது மேற்கரம் அனலை ஏந்துகிறது. ஆனந்த நடனத்தில் வேகம் அதிகமின்மையால் சடைகள் பின்னே தாழ்ந்து கிடக்கின்றன. அவனது வலது கை துடியை முழக்கி உலகினைப் படைத்துக் கொண்டு இருக்கின்றது. அபயம் காட்டும் வலது முன் கை காத்தல் தொழிலைச் செய்கிறது. இடது கரத்திலுள்ள தீ ஓயாது அழித்தல் தொழிலை நடத்துகிறது. ஊன்றிய பாதத்தால் மறைப்புத் தொழிலும் தூக்கிய திருவடியால் உயிர்களை மாறாத இன்பத்தில் நிலைத்திருக்கச் செய்யும் அருளல் எனப்படும் முத்தியருளும் ெதாழிலும் நடைபெறுகின்றன. ஆனந்த நடனத்தைக் கண்டு அவரது தூக்கிய திருவடியை சிந்தையுள் நிறுத்தி வழிபடுவோர்க்கு முத்தியன்பம் எளிதாகும்.

திருமந்திரம், உண்மை விளக்கம், குமரகுருபரர் பிர
பந்தம் முதலியவற்றில் இக்கருத்து
மனதில் பதியுமாறு தெளிவுபடுத்தப்
பட்டிருக்கின்றன.
திருமூலர் திருமந்திரத்தில்,
அரன் துடிதோற்றம்: அமைப்பில் திதியாம்
அரன்அங்கி தன்னில் அறையில் சங்காரம்
அரன் உற்று அணைப்பில் அமரும் திரோதாயி
அரனடி என்றும் அனுக்கிரகம் என்னே
என்றும், மனவாசகம் கடந்தார் அருளிய உண்மை விளக்கம் என்னும் சைவ சித்தாந்த சாத்திர நூலில்,
தோற்றம் துடியதனில்; தோயும் திதி அமைப்பில்
சாற்றிடும் அங்கியிலே சங்காரம் ஊற்றமாம்
ஊன்று மலர்ப்பதத்தில் உற்ற திரோதம்; முத்தி
நான்ற மலர்ப்பதத்தே நாடு
என்றும் அருளிச் செய்துள்ளனர்.
குமரகுருபரர்,
பூமலி கற்பகப் புத்தேள் வைப்பும்
நாமநீர் வரைப்பில் நானில வளாகமும்
ஏனைப் புவனமும் எண்ணீங்குயிரும்
தானே வகுத்தது தமருகக் கரமே என்று
(கற்பக மலர்கள் நிறைந்த தேவர்கள் உலகத்தையும், கடல் சூழ்ந்த இந்த நானிலமாகிய பூமண்டலத்தையும், மற்றைய புவனங்களையும், அதிலுள்ள உயிர்த்தொகுதிகளையும்) துடியேந்திய கரம் படைப்பதையும்,
தனித்தனி வகுத்த சராசரப் பகுதி
அனைத்தையும் காப்பது உன் அமைத்த பொற்கரமே
என்று (தனித்தனியே உயிர்களுக்கென இன்பதுன்பங்களை வகுத்து அசைவன, அசையாதன என்ற அனைத்தையும்) பொற்கரமான அபயகரம் காப்பதையும்,
தோன்று நிற்றவத் தொல்லுல கடங்கலும்
மாற்றுவது ஆரழல் வைத்ததோர் கரமே
என்று (தோன்றி நிலைபெற்றுள்ள பழைமையான அனைத்து உலகங்களையும் ஒரு நொடியில் அழிப்பது) அழல் ஏந்திய கையால் என்று அழித்தல் தொழில் நடைபெறுவதையும்,
ஈட்டிய வினைப்பயன் எவற்றையும் மறைத்து நின்று
ஊட்டுவதாகும் நின் ஊன்றிய பதமே
என்று (உயிர்கள் தம் மனத்திற்கேற்ப செயல்களை நடத்தி, அதனால் பெற்ற நல்வினை தீவினை ஆகிய இருவகை வினைப்பயனைப் ெபறுகின்றன. அதை அனுபவிக்குமாறு செய்து மலங்களும் நீங்கி இறையருள் பெறத் தகுதி உடையதாக ஆக்குவதாகிய) மறைத்தல் தொழில் முயலகன் மீது ஊன்றிய திருவடியால்
நடைபெறுவதையும்,
அடுத்து இன்னுயிர்கட்கு அளவில் பேரின்பம்
கொடுப்பது முதல்வ நின் குஞ்சிதபதமே

என்று உயிர்களுக்கு அளவில்லாத பேரின்பத்தை நல்குவது, தூக்கி வளைந்த திருவடியே என்றும் விவரித்திருப்பதைக் காண்கிறோம். ஒரு சில ஆலயங்களில் சிறப்புக் கருதி சதுர தாண்டவ வடிவங்களை எழுந்தருளுவித்திருந்த போதிலும் அவை உட்பட ஆயிரக்கணக்கான ஆலயங்களில் பஞ்ச கிருத்திய பரமானந்தத் தாண்டவ ஆனந்தக் கூத்தனான நடராஜ மூர்த்தியே எழுந்தருளி அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றார்.

உலக இயக்கத்திற்கு மூலமாக உள்ளது ஐந்தொழிலைப் பரமன் ஐந்தெழுத்தால் நடத்துகிறான். அந்த ஐந்தெழுத்தும் அவன் திருமேனியாக விளங்குகிறது. இதையொட்டி ‘நமசிவாய வாழ்க’ என்று தொடங்கி சிவபுராணப் பாடலில் மணிவாசகர் இறைவனை வாழ்த்துகின்றார்.

நடராஜரின் திருமேனியானது ஐந்தெழுத்தின் வடிவானதாகும். அவரது துடியேந்திய கரம் ‘‘சி’’ என்பதாகவும், வீசுகின்ற கரம் ‘‘வா’’ என்றும், அபயகரம் ‘‘ய’’ எனும் எழுத்தாயும், தழல் (நெருப்பு) ஏந்திய கரம் ‘‘ந’’ என்னும் எழுத்தையும், முயலகனால் தாங்கப்படும் திருவடி ‘‘ம’’ என்ற எழுத்தையும் குறிக்கின்றன என்பர். இதையொட்டி இறைவன் திருமேனியே பஞ்சாட்சரமாக (ஐந்தெழுத்தாக) இருக்கிறதென்பர்.

இந்த ஆனந்தத் தாண்டவத்தை உலக மக்கள் எல்லோரும் கண்டுகளிக்கின்றனர். இந்த நடனமே இம்மையில் மக்கட்செல்வம், கல்விச்செல்வம், மனையறச் செல்வம் முதலான பல்வகைச் செல்வங்களை வழங்கி இன்பமாக வாழ வைப்பதுடன், மறுமையில் சிவனுடன் இரண்டறக் கலந்து பிறவா வரத்தை அளிக்கிறது. இதனாேலயே

செல்வநெடுமாடம் சென்று சேணாங்கி
செல்வமதிதோய செல்வம் உயர்கின்ற
செல்வர் வாழ்தில்லைச் சிற்றம்பலம் மேய
செல்வன் கழலேத்தும் செல்வம் செல்வமே

என்று தேவாரத்துள், திருநாவுக்கரசர் அருளிச் செய்துள்ளார். எண்ணற்ற எண்ணிக்கையைக் குறிக்க ஏழு என்ற சொல்லால் குறிப்பர். ஏழு
பிறப்பு, ஏழ்கடல் என வருவது காண்க. இப்பாடலிலும் அளவற்ற செல்வத்தைப் பெருமானின் திருவடி நல்குகின்றது என்பதைக் குறிக்க, ஏழுமுறை செல்வம் எனும் சொல் வரும்படி இப்பாடல் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

முயலகன் நடராஜரின் ஊன்றிய திருவடியின்கீழ் மிதியுண்டவாறு கிடக்கும் பூதத்தை முயலகன் என்பர். நன்னெறியில் செல்ல முயலும் உயிர்களை, அவ்வழியில் தொடர்ந்து மேற் செல்லவொட்டாமல் தடுக்கும் ஆணவ மலத்தின் வடிவமாக அவன் விளங்குகின்றான். அவன் இறைவன் அருளுக்கு மாறான தன்மை உடையவன். உயிர்கள் ஆணவத்தால் பிணிபட்டுப் பிறவியை எடுக்கின்றன.
     
தொடர்ந்து வரும் பிறவிகளிலும் துன்பமே தொடருமென்று அறிந்திருந்த போதிலும், உயிர்கள் அத்துன்பங்களைப் போக்கிக் கொள்ள வழி தேடாமல், மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து அலைகிறது. உயிர்களின் வாழ வேண்டுமென்ற ஆசையே தொடர்ந்து பிறவிக்குக் காரணமாக இருக்கிறது. பிறவிச் சூழலுக்குக் காரணமான ஆணவத்தை அழித்து மீண்டும் மேலெழாமல் செய்து உயிர்களை பிறவிச் சூழலிலிருந்து விடுபடச் செய்வது இறைவனின் அருளேயாகும்.

முயலகனை மனதில் விளையும் ஆசைகளாகவும், அவன் ஏந்தும் பாம்பை மும் மலங்களாகவும் கூறுவர். சில வடிவங்களில் முயலகன் இறைவனைச் சுட்டிக் காட்டியவாறும் உள்ளான். முயலகனின் செயல் அழிதலே மோட்சத்தின் வாயிலாகும். உலக வாழ்விற்கு மும்மலங்களே காரணமாக இருப்பதால், பஞ்சகிருத்திய தாண்டவங்களில் முயலகன் மகிழ்வுடன் இருப்பதாகவும், பாம்புடன் விளையாடிக் கொண்டிருப்பவனாகவும் காட்டப்படுகிறான். இவனை அரக்கன் போலவும், கையில் கத்தி, கேடயம் ஏந்தியவனாகவும் அமைக்கின்றனர். இது தத்துவக் கோட்பாடுகளுக்கு மாறுபட்டதாகும். தட்சிணாமூர்த்தியின் காலடியிலும் மும்மலங்களின் வடிவான முயலகனை அமைக்கின்றனர். ஆணவம் அடங்கி நிற்கும் இடமே ஞானத்தின் பிறப்பிடம் என்பதால், தட்சிணாமூர்த்தியின் திருவடியிலும் இவனை அமைத்துள்ளனர்.

சில தலங்களில் நடராஜர் முயலகன் மீதின்றி மலர்ப் பீடத்தில் ஆடுவதைக் காணலாம். இது ஆணவம் நீங்கிய நிலையில் உள்ள அன்பர்களின் இருதயத் தாமரையில் இறைவன் ஆடும் நடனமாகும்.

சிதம்பர ரகசியம்

அனைத்துச் சமயங்களிலும் உயர்ந்த, அரிய சக்திகளைக் கொண்ட, சிறப்பு வாய்ந்த மந்திரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. அந்த ரகசியத்தை அறிந்தவர்களாகத் தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே அதை உபதேசமுறையில் தெரிவிப்பர். வெளிப்படையாகக் கூறப்படும் பல மந்திரங்களுக்கும்கூட ரகசிய உள் அர்த்தங்கள் உள்ளன. அத்தகைய மந்திரங்களைப் பீடத்திலோ, தகட்டிலோ, சுவரிலோ எழுதி வைத்துப் பூஜிப்பதற்கு ரகசிய பூஜை என்பது பெயர். முன்னாளில் பெரும்பாலான ஆலயங்களில் ரகசிய பூஜை இருந்து வந்த போதிலும், கால வெள்ளத்தால் அவை மறைந்து போயின. திருவாரூர், ஆவுடையார் கோயில், சிதம்பரம் முதலிய தலங்களில் இப்போதும் ரகசிய பூஜை எனும் பெயரில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

திருவாரூரில் பெருமானின் திருமேனியிலேயே மந்திரங்கள் அமைந்துள்ளது என்றும், மார்பில் மந்திரச்சக்கரம் பொறிக்கப்பட்டுள்ளதென்றும் பல
வகையான கருத்துக்கள் உள்ளன. திருநாவுக்கரசர் ஆரூர்ப்பெருமான் ‘‘மந்திரத்தை மனத்துள்ளே வைத்தார்’’ என்று போற்றுகின்றார். ஆவுடையார் கோயிலில் இறைவன் அமர்ந்திருக்கும் பீடத்தில் மந்திரங்கள் அருவ நிலையில் விளங்குவதாகக் கூறுகின்றனர். இவ்விரு தலங்களிலும் திரைக்குள் இருந்தவாறு ரகசிய பூஜைகள் செய்யப்படுகின்றன. சிதம்பரத்தில் மட்டும் ரகசியத் தானத்திற்கு எல்லோரும் காண திரையை விலக்கி தீபாராதனை செய்யப்படுகிறது.

சிதம்பரம் சபாநாயகர் ஆலயத்தில் உள்ள சிற்சபையில் நடராஜருக்குப் பின்புறமுள்ள சுவரில் ரகசியம் அமைந்துள்ளது. ஆகாச வடிவத்தை உணர்த்தும் இச்சக்கரத்திற்குத் திரையிடப்பட்டுள்ளது. இந்தச் சுவர் முழுவதும் திரைச் சீலையால் மூடப்பட்டுள்ளது. இது வெளிப்புறம் கருநீல நிறமும், உட்புறம் இளஞ்சிவப்பு நிறமும் கொண்டது. இது பெருமான் அணிந்துள்ள யானைத் தோலைக் குறிக்கிறதென்றும், பிரபஞ்சத்தின் மேலோட்டைக் குறிக்கிறதென்றும் கூறுவர். திருமூலம் கூறும் திருவம்பலச் சக்கரம் இங்கிருந்தே பெறப்பட்டதென்பர். இந்த ரகசியத்திற்குத் தினமும் பூஜை நடைபெறுகிறது. ரகசியம் அமைந்துள்ள இடத்தின் மீது பொன்னாலான செய்த வில்வ இலைகளைக் கொண்ட மாலைகள் அணிவிக்கப்பட்டுள்ளன. பூஜை முறைக்காரர் (அன்றைய வழிபாட்டைச் செய்யும் தீக்ஷிதர்) மட்டுமே தினப்பூஜை செய்வதுடன், தேவைப்படும்போது அன்பர்களுக்குத் திரையை விலக்கி தரிசனம் செய்விக்கின்றார். செய்கிறார்.

திருவாதிரையின்போதும், ஆனித் திருமஞ்சனத்தின்போதும் நடராஜர் வெளியே எழுந்தருளியிருக்கும் வேளையில் இங்கு சிறப்புப் பூஜைகள் மேற்கொண்டு புனுகு அணிவிக்கின்றனர். ஒவ்வொரு முறையும், புதிய திரைச்சீலை மாற்றப்படுகின்றது. இங்குள்ள ரகசியத்தை நடராஜரின் தத்துவத்தை அறிந்தவர்களால் மட்டுமே பேரின்பத்தில் திளைப்பார்கள். திருநாவுக்கரசர் பெருமானைத் தீண்டற்கரியானை என்று போற்றுவதற்கேற்ப, ரகசியத் தானம் தீண்டாத் திருமேனியாக விளங்குகிறது. தொடாமலேயே பூஜைகள் நடத்தப்படுகின்றன. தினமும் மாலை இரண்டாம் காலத்தில் ரகசியத் தானத்திற்கு சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன.

பதஞ்சலி - வியாக்ரபாதர் - ஜைமினி

ஆதியில் தில்லையம்பலத்தில் ஆடிக் கொண்டிருக்கும் நடராஜப்பெருமானின் பிரபஞ்ச இயக்கத்திற்கான பஞ்சகிருத்திய பரமானந்தத் தாண்டவம் அதிசூட்சும நிலையில் நடந்து வந்தது. அந்த தாண்டவத்தைப் பலர் தமது அரிய தவமுயற்சியால் இறையருள் பெற்று கண்டு களித்தனர். அவர்களில் பதஞ்சலி, வியாக்ரபாதர், ஜைமினி ஆகியோர் முதன்மை பெற்றவர்கள். அவர்களுடைய வேண்டுகோளின்படியே பலரும் காண அங்கே சிற்சபை தோன்றியது. அவர்களுக்காகப் பெருமான் ஆடிய வரலாற்றையும் மேற்குறித்த மூவர் பற்றிய சிறு குறிப்பையும் இங்கே காணலாம்.

பதஞ்சலி

அனந்தனில் அரிதுயில் கொண்டிருந்த விஷ்ணு ஆனந்தப் பரவசராகி முகம் பொலிவெய்தி ஆனந்தக் கண்ணீர் பெருகக் கைகளைக் கூப்பினார். அதைக் கண்டு வியந்த அனந்தன் பெருமானே இந்த வியப்புக்கு என்ன காரணம் என்றான். திருமால் பெருமானின் ஆனந்தக் கூத்தை எண்ணி மகிழ்ந்ததால் உண்டானது என்றார். அனந்தனுக்குத் தானும் அக்காட்சியைக் காண விருப்பம் உண்டானது. திருமாலிடம் விடைபெற்றுக் கொண்ட அவன் கயிலை மலைக்குச் சென்று தவம் புரிந்தான்.

சிவபெருமான் அவனிடம் அத்திரி-அனசூயா தம்பதியருக்கு மகனாகப் பிறந்து தவம் செய்வாய் என்றார். அவன் சிறிய பாம்பு வடிவுடன் விண்ணில் பறந்து அத்திலி ஆசிரமத்தை அடைந்தான்.

அவ்வேளையில் அனசூயாதேவி ருது ஸ்நானம் செய்து விட்டு கைகளில் நீரை அள்ளியெடுத்தாள். அனந்தன் அவளது கரங்களில் வீழ்ந்தான். அவள் பாம்பென்று பதறி அவளது கைகளை விலக்க, பாதத்தில் வீழ்ந்த அவன், அவளைத் துதித்தான். அங்கு வந்த அத்திரி அவனுக்குப் பதஞ்சலி என்று பெயர் சூட்டினார். அவன் அவரிடம் தன்னை மகனாக ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டினான். அத்திரியும் அனசூயாேதவியும் மகிழ்ந்து அவனை மகனாக ஏற்று வளர்த்து வந்தனர். அவன் உரிய வயதை எய்தியபோது, அவனுக்கு உபநயனம் செய்வித்து மந்திரோபதேசமும் செய்து வைத்தார். அவன் அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு தில்லைவனத்தை அடைந்தான். தமக்கு முன்னமேயே அங்கு வந்து தவம் செய்து கொண்டிருந்த வியாக்ரபாதருடன் சேர்ந்து கொண்டான். அங்கு மூலட்டானரை வழிபட்டு மகிழ்ந்ததுடன் பாம்பரசர்களால் அங்கு நிறுவப்பட்டிருந்த அனந்தேஸ்வரர் சிவலிங்கத்தைக் கண்டு பூஜை செய்து மகிழ்ந்திருந்தான். தில்லையில் நடைபெற்று வரும் பூஜை முறைகளை வகுத்தளித்தவர் அனந்தனின் அவதாரமான பதஞ்சலியேயாவார். அவர் வகுத்தபடியே தான் இப்போதும் பூஜை நடைபெற்று வருகின்றன. பதஞ்சலியின் வடிவம் ஆலயத்தில் உள்ளது.

வியாக்ரபாதர்

மத்தியந்தின முனிவரின் குமாரர் மாத்யானந்தினர். இவர் இளம் வயதிலேயே தந்தையிடம் சகல ஞானங்களையும் கற்றார். அவற்றின் மூலம் சிவ
பூஜையே உயர்ந்த பூஜை எனக் கண்டு தெளிந்து, பல்வேறு தலங்களில் வழிபாடு செய்தவாறே தில்லைக்கு வந்தார். மூலட்டானரைக் கண்டு நாள்தோறும் பூஜை செய்து மகிழ்ந்திருந்தார். அவர் பூஜைக்கென பூச்சி அரிக்கா, வண்டு மொய்க்காத மலர்களைப் பெற வேண்டி அதிகாலையிலேயே நந்தவனங்களுக்குப் பூப்பறிக்கச் செல்வது வழக்கம். நந்தவனங்களில் மரக்கிளைகளில் ஏறும் போது பனியால் கால் வழுக்கியதுடன் இருள் பிரியாத நேரத்தில் பூக்களைத் தேடிப் பறிப்பதும் துன்பமாக இருந்தது. அதனால் மிகுந்த வருத்தம் அடைந்தார்.

இறைவன் அவரது துன்பத்தை மாற்ற வேண்டி இடப வாகனத்தில் காட்சி கொடுத்தார். மாத்யானந்தினர் நாள்தோறும் அதிகாலையில் சிவபூஜைக்கு வேண்டிய மலர்களைப் பெற எளிதாக இருக்க புலிக்கு இருப்பது போன்று இரவிலும் பார்வை நல்கும் கண்களும், வழுக்காது மரங்களில் ஏற, புலி போன்று நகமும் தசைப்பற்றுகளும் கொண்ட கை கால்களைப் பெற்றார். புலி போன்ற பாதங்களைப் பெற்றதால் வியாக்ரபாதர் என்று பெயர் பெற்றார்.
இவர் வசிஷ்டரின் சகோதரியை மணந்தார்.

அவர்களுக்குப் பிறந்தவரே உபமன்யு முனிவர் ஒரு சமயம் உபமன்யு பால் வேண்டி அழுதபோது, இறைவன் அவருக்காகப் பாற்கடலையே அழைத்துத் தந்தார். பாற்கடலின் நினைவாக தில்லையில் அமைந்ததே திருப்பாற்கடல் தீர்த்தமாகும். உபமன்யு முனிவர் முனிவர்களில் உயர்ந்தவராகப் போற்றப்படுகின்றார்.

வியாக்ரபாதர் தில்லை வனத்தில் மூலட்டானரை வணங்கி வந்ததுடன், திருப்புலீச்சரம் என்னும் ஆலயத்தையும், அதன் முன்பாகப் புலிமடு என்னும் தீர்த்தத்தையும் தோற்றுவித்தார். அத்தீர்த்தமே இந்நாளில் இளமையாக்கின தீர்த்தம் என வழங்குகின்றது. புலிக்கால் முனிவர் வணங்கிப் பேறுபெற்ற இடமாதலின் சிதம்பரம், வியாக்ரபுரம், திருப்புலீச்சரம், பெரும் பற்ற புலியூர், புலியூர் என்னும் பெயர்களால் அழைக்கப்படுகிறது. தில்லையில் இரண்யவர்மனைக் கொண்டு பெரும் திருப்பணிகளை நடப்பித்தவர் வியாக்ரபாதரேயாவார்.

தில்லையில் வியாக்ரபாதர் ஜைமினி, பதஞ்சலி ஆகிய மூவரும் ஒரே பீடத்தில் அமைந்த உலாத்திருமேனி உள்ளது. தைப்பூசத்திற்கு முன்பாக ஒன்பது நாட்கள் மூவரும் திருமூலட்டானரை பூஜிக்கும் ஐதீக விழா நடைபெறுகின்றது. பத்தாம் நாள் நண்பகலில் மூவருக்கும் நடனக்காட்சி அருளும்
 ஐதீக விழா நடைபெறுகின்றது. மூவரையும் சிற்சபைக்கு முன்பாக எழுந்தருளுவித்து தீபாராதனை செய்து அவர்களுக்கு குஞ்சிதபாதத்தைச் சூட்டுகின்றனர்.

பூசை.ச. அருணவசந்தன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • CivilAviationJetAirways

  மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம்: புகைப்படங்கள்

 • RajivAnniversary28

  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம்...மலர் தூவி அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்!

 • ICRA2019

  கனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: புகைப்படங்கள்

 • ChongqingCycleRace

  சீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

 • BrazilBarMassacre

  பிரேசில் மதுபான விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு..: 6 பெண்கள் உள்பட 11 பேர் பலியான பரிதாபம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்