SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆண்டவரின் வியத்தகு செயல்கள்!

2017-12-23@ 10:19:26

மனிதன் தவித்தபோது இறைவன் தானே அவனைத் தேடிவந்தார். மானுடம் மீட்கப்பட்டது. இருளில் வழிமாறிப் போனவனுக்கு ஒளியாக வந்தார். வறுமை போக்க  வெறுமையானார். பலவீனமான மனிதனை பலப்படுத்த பலமான தன்னை பலவீனமாக்கினார். அடியவர் வாழ்வை வளமாக்க அடிமைக்கோலம் பூண்டார். என்னே ஆண்டவரின் வியத்தகு செயல்கள். நள்ளிரவு மானுடம் மாண்புற, மண்வாசனை முகர்ந்த மண்ணின் மைந்தர் பிறக்கின்றார். ஏழையரெல்லாம் செல்வராகும்படி ஏதும் இல்லாதவராய் பிறக்கின்றார். வாடையே போர்வை, தீவனத் தொட்டியே தொட்டில், புல்லணையே பஞ்சணை. கழுதையும், மாடுமே தோழர்கள். விந்தையிலும் விந்தை ஏழ்மையின் உச்சக்கட்டம். ஊரே உறங்கும் இவ்வேளையில் உறங்காது சாமக்காவல் காத்துக்கொண்டிருக்கும் இடையர் இவர்கள் யூத சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு தாழ்த்தப்பட்டவர்களாயும், தீட்டுப்பட்டவர்களாயும் கருதப்பட்டவர்கள்.

ஆனால், இவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. காணாமல்போன ஆடுகளைத் தேடி வந்த நல்லாயனாம் இயேசுவை முதலில் கண்டுகளிக்கும் வரமளிக்கிறது. வானதூதர் மூலம் மீட்பர் பிறந்துள்ளார் என்னும் மகிழ்ச்சியூட்டும் செய்தி அறிவிக்கப்பட்டபோது அதை உறுதிப்படுத்த ஓர் அடையாளம் கொடுக்கப்படுகிறது. ‘‘குழந்தையை துணிகளில் சுற்றி தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்.  (லூக்கா 2: 12) இந்த சிறப்பு அடையாளம் பற்றிய சரியான புரிதல் நம்மிடையே உள்ளதா? தீவனத் தொட்டியில் கிடத்தப்பட்டிருக்கும் அடையாளத்தை லூக்கா நற்செய்தியாளர் மூன்று முறை குறிப்பிடுகிறார்.  (லூக்கா 2: 7, 12) அப்படியானால் அதன் உள்ளார்ந்த அர்த்தத்தை உணர்ந்துள்ளோமா! கள்ளங்கபடற்ற எளிய மனம் கொண்ட இடையர் செய்தியை அப்படியே ஏற்றுக் கொண்டனர். தெய்வக் குழந்தையை புல்லணையில் கண்டனர். என்ன ஒரு பேரானந்தம். ஏழ்மை தெய்வீகத்தில் சங்கமித்தது. ஏற்றம் பெற்றது. இன்பத்தில் திளைத்தது.

ஞானியர் மூவர் கீழ்த்திசைவானில் அரியதொரு விண்மீன் கண்டு, யூதேயா நாட்டில் வரலாற்றையே புரட்டிப்போடும் வல்ல அரசர் ஒருவர் பிறந்துள்ளார் எனக் கணித்து, தடைகள் பல கடந்து, வழி தடுமாறினாலும், தேடலில் ஒரு தெளிவோடு, துணிவோடு, பயணித்து சிறிய குகையில் பாலனைக் கண்டபோதும், தாழ்மையோடு உள்ளே சென்று குழந்தையைக் கண்டனர். மத்தேயு நற்செய்தியாளர் கூறுவதுபோல் ‘‘நெடுஞ்சாண் கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள். ஞானிகளின் தாழ்ச்சி இறைமகனைக் கண்குளிரக் காணும் பேற்றினை அளித்தது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேல் கிறிஸ்து பிறப்பு விழாவினை மகிழ்ச்சியின் நாளாக அமைதியின் நாளாகக் கொண்டாடும் நாம் அதையும் தாண்டி புல்லணை தெரிவிக்கும் செய்தியை இன்னும் பூரணமாகப் புரிந்துகொள்ளவில்லை என்பது மறக்க முடியா உண்மை.

சக மனிதன் பசியாய் இருந்தபோது உணவு கொடுத்து, தாகமாய் இருந்தபோது தண்ணீர் கொடுத்து, ஆடையின்றி இருந்தபோது ஆடை அணிவித்து, நோயுற்று துன்புறும்போது கவனித்து செய்தபோது எனக்கே செய்தீர்கள் என்று சொல்வது மாத்திரமல்ல. ஏழைக்கு உதவி செய்வதன் மூலம் ஒருவன் தனக்கு ஈடேற்றதையும் பெற்றுக் கொள்கிறான் என்கிறார் இயேசு. ஏழைக்கு உதவ மறுப்பதால் முடிவற்ற தண்டனையைப் பெறுவான் என்பதை செல்வரும் இலாசரும் என்ற உவமையில்  (லூக்கா 16:1931) விளக்குகிறார். ஏழைக்கு இலாசர் எனப் பெயரிடும் இயேசு பணக்காரருக்கு பெயரின்றி விட்டு விடுகிறார். இறந்தபின் இலாசருவை விண்ணவர் நண்பர்கள் ஆகின்றனர். செல்வந்தருக்கு தன்னுடைய நரகமாகிறது. பகிர்தல் இல்லாத செல்வம் பயனற்றுப் போகிறது.

இயேசுவின்  போதனைகள் நம்மைத் தொட வேண்டும். இன்றும் அவர் பிறப்பு ஏனையரோடு தோழமை கொள்வதிலும் அவர்களுக்கு தோள் கொடுப்பதிலும் அர்த்தம் பெறுகிறது என்பதை உணர வேண்டும். நாம் அலங்கரிக்கும் ஆடம்பரக் குடில்கள் நம்ம மன்னரை வரவேற்க. ஆனால், நம் வாழ்வை மாற்றாத விழாக்களை இறைவன் வெறுக்கிறார். ஏழ்மை என்பது நாம் தேடிச்சேர வேண்டிய இலக்கு. சரியான புரிதலோடு தெளிவான தேடல் இருந்தால் நம் இலக்கை அடையலாம். நாம் அன்பை விதைப்போம். ஆசையை புதைப்போம். இரக்கத்தை இயல்பாக்குவோம். எளிமையை ஆடையாகக் கொள்வோம். பகிர்தலை நம் பண்பாகக் கொள்வோம். புல்லணையில் சென்று பார்ப்போம் நம் மீட்பரை.

டெய்ஸி செல்வதோர்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-10-2018

  21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • dussehraa_11

  நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

 • 20-10-2018

  20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • tirupathivavacha

  திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

 • kulasaidasaraeight

  வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்