SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எதிர்காலம் சிறப்பாகும்!

2017-12-19@ 12:34:25

இருபத்தொன்பது வயது முடிந்தும் என் மகளுக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை. வரும் வரன் எல்லாம் தட்டிப் போகிறது. குடும்பமே மிகவும் மன வேதனையோடு உள்ளது. என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? செல்லத்துரை, திருச்சி.

உத்திரம் நட்சத்திரம், சிம்ம ராசி, துலாம் லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகப்படி தற்போது ராகு தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. 22வது வயதிலேயே வந்த திருமண வாய்ப்பினை உதறியதால் தற்போது தாமதம் ஆகிக் கொண்டிருக்கிறது. அவருடைய ஜாதகத்தில் திருமணத்தைப் பற்றிச் சொல்லும் ஏழாம் இடத்திற்கு அதிபதி செவ்வாய் ஆறில் அமர்ந்திருப்பதும், களத்ரகாரகன் சுக்கிரன் 12ல் நீசம் பெற்றிருப்பதும் திருமணத்தை தாமதமாக்கி வருகிறது. எனினும் தற்போது அவருடைய 30வது வயதில் திருமண யோகம் கூடி வந்துள்ளது.

அவர் பிறந்த இடத்திலிருந்து தென்மேற்கு திசையில் உள்ள ஊரைச் சேர்ந்த வரன் வெகுவிரைவில் அமையும். ஏதேனும் ஒரு செவ்வாய்க்கிழமை நாளில் உங்கள் மகளோடு வயலூர் சுப்ரமணிய ஸ்வாமி ஆலயத்திற்குச் சென்று அபிஷேக ஆராதனைகள் செய்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். கீழேயுள்ள ஸ்லோகத்தினைச் சொல்லி சுப்ரமணிய ஸ்வாமியை தினந்தோறும் வழிபட்டு வரச் சொல்லுங்கள். திருமணம் நல்லபடியாக முடிந்தவுடன் வயலூர் சந்நதிக்கு தம்பதி சமேதராக வந்து தரிசிப்பதாக அவரது பிரார்த்தனை அமையட்டும். வரும் வைகாசிக்குள் வரன் அமையும்.

“ஸ்ரீவல்லீரமணாயாத ஸ்ரீகுமாராய மங்களம்
 ஸ்ரீதேவஸேநா காந்தாய ஸ்ரீவிசாகாய மங்களம்.”


என் மகன் முன்கோபம் உள்ளவனாகவும், தற்சமயம் வேலை இல்லாமலும் உள்ளான். அவனுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க என்ன செய்ய வேண்டும்?
சக்கரவர்த்தி, மும்பை.


பூசம் நட்சத்திரம், கடக ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகத்தின்படி தற்போது கேது தசையில் கேது புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தின்படி உத்யோக ஸ்தானம் என்பது நன்றாக உள்ளது. ஜென்ம லக்னத்தில் குரு  சுக்கிரனின் இணைவு உத்யோகத்தில் உயர்ந்த நிலையை எட்டச் செய்யும். தன ஸ்தானத்தில் சூரியன்  செவ்வாய்  புதனின் இணைவும் நல்ல அம்சமே. 18.12.2017 முதல் நல்ல நேரம் துவங்குவதால், அவருடைய எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறு நல்ல உத்யோகம் வெகுவிரைவில் கிடைத்துவிடும். வண்டி வாகனம் சம்பந்தப்பட்ட துறையில் அவரது உத்யோகம் அமையும். தற்போது அமைய உள்ள உத்யோகம் நிரந்தரமானதாகவும் இருக்கும். 29வது வயதில் திருமணம் என்பது எந்தவித தடையுமின்றி நடைபெறும்.

தொடர்ந்து ஏழு வாரங்களுக்கு திங்கட்கிழமை தோறும் அருகிலுள்ள விநாயகப் பெருமான் ஆலயத்திற்குச் சென்று ஏழு முறை வலம் வந்து வணங்கச் சொல்லுங்கள். தினமும் இருவேளையும் கீழேயுள்ள  ஸ்லோகத்தினை 18முறை சொல்லி விநாயகப் பெருமானை மானசீகமாக வணங்கி வரச் சொல்லுங்கள். நேர்முகத் தேர்விற்கு செல்வதற்கு முன்பு விநாயகப் பெருமானின் சந்நதியில் சிதறு தேங்காய் உடைத்து பிரார்த்தனை செய்து கொள்வது நல்லது. ஏழாவது வாரம் முடிவதற்கு முன்னால் அவருக்கு உத்யோகம் கிடைத்துவிடும். சிறப்பான எதிர்காலம் அவருக்காக காத்திருக்கிறது.

“ஏகதந்தம் மஹாகாயம் தப்த காஞ்சன ஸந்நிபம்
லம்போதரம் விசாலாக்ஷம் வந்தேஹம் கண நாயகம்
மௌஞ்ஜீ க்ருஷ்ணாஜினதரம் நாகயஜ்ஞோப வீதினம்
பாலேந்து விலஸன்மௌலிம் வந்தேஹம் கண நாயகம்.”


பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போது எங்கள் ஒரே மகன் பெரிய விபத்தினை சந்தித்து தெய்வாதீனமாக உயிர் தப்பினான். கெட்ட நண்பர்களோடு சேர்ந்து சுற்றியதால் குறைந்த மதிப்பெண் பெற்று தேறினான். இளங்கலை ஆங்கிலம் படித்து வரும் அவன் தற்போது புத்தகத்தையே தொடுவதில்லை. ஆசிரியராகிய நான் இவனை மாற்ற இயலவில்லை. கூடாநட்பு விலகவும், எங்கள் வேதனை தீரவும் பரிகாரம் கூறுங்கள். அசோகன், தஞ்சாவூர்.

உத்திராட நட்சத்திரம், தனுசு ராசி, கும்ப லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது செவ்வாய் தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் ஜென்ம லக்னாதிபதி சனி நீசம் பெற்றிருப்பது பலவீனமான அம்சம் ஆகும். இதனால் நீசமான மனிதர்களின் தொடர்பு வந்து சேர்கிறது. எனினும் தனுசு ராசி என்பது குருபகவானின் ராசி என்பதால் தவறான பாதையில் செல்ல சற்று தயங்குவார். அவருடைய உத்யோக ஸ்தானத்திற்கு உரிய செவ்வாய் ஒன்பதில் அமர்ந்திருப்பது பலமான நிலையே. ஆங்கில இலக்கியம் என்பது அவருடைய உத்யோக ஸ்தானத்திற்கு உதவாது.

காவல்துறை சார்ந்த உத்யோகத்தினை அடைய உரிய பயிற்சி மேற்கொள்ளச் சொல்லுங்கள். காவல்துறையினைச் சேர்ந்த உங்களுக்குத் தெரிந்த மனிதர்கள் அல்லது உறவினர்களோடு அவனைப் பழக வையுங்கள். காவல்துறையின் மீது அவனுக்கு உண்டாகும் ஈடுபாடு அவனது வாழ்க்கைப் பாதையை மாற்றும். தற்போதைய சூழலில் நடைபெறும் தசாபுக்தி நன்றாக உள்ளதால் அவனது புத்தியில் மாற்றம் வந்துவிடும். ஏதேனும் ஒரு புதன்கிழமை நாளில் திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு உங்கள் மகனை அழைத்துச்சென்று கோயில் குளத்தில் அவரை ஸ்நானம் செய்ய வைத்து ஈஸ்வரனை வழிபட்டு பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள். வெகுவிரைவில் உங்கள் கவலை தீர்வதோடு அவரது எதிர்காலமும் சிறப்பானதாக அமையும்.

முப்பத்து மூன்று வயதாகும் எனக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை. அவ்வப்போது என் காதலருடன் திருமணம் நடப்பது போன்று உள்ளுணர்வு சொல்கிறது. என் குலதெய்வ சாமியார் எனக்குள் அம்மன் சக்தி இருப்பதாக கூறுகிறார். எம்சிஏ படித்திருக்கும் எனக்கு வேலையும் கிடைக்கவில்லை. வாழ்க்கையில் ஒன்றும் புரியவும் இல்லை. எனக்குரிய வழியினைக் காட்டுங்கள். அனிதா, தஞ்சாவூர்.

அவிட்டம் நட்சத்திரம், மகர ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தில் தற்போது குரு தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. உங்களுடைய ஜாதகம் ஒரு சராசரி பெண்ணின் ஜாதகம் அல்ல. திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் பாவத்திற்கு அதிபதி சனி வக்ர கதியில் சஞ்சரிப்பதோடு கேதுவுடன் இணைந்து மூன்றாம் வீட்டில் உச்ச பலத்துடன் அமர்ந்திருப்பது யோசிக்க வைக்கிறது. அதே போன்று காதலைப் பற்றிச் சொல்லும் ஐந்தாம் இடத்திற்கு அதிபதியான குரு பகவானும் வக்ர கதியில் நீச பலத்துடன் ஆறில் அமர்ந்திருப்பதும் காதலில் வெற்றியைத் தராது. இவை எல்லாவற்றையும் விட உங்கள் ஜாதகத்தின் அமைப்பு சந்யாச யோகத்தினைக் கொண்டுள்ளது.

2018ம் ஆண்டின் அக்டோபர் மாதத்திற்குள் உங்கள் காதலரைப் பற்றிய எண்ணம் உங்களை விட்டு காணாமல் போய்விடும். 39வது வயதில் நீங்கள் சந்திக்கும் நபர் உங்களுக்கு குருவாக விளங்குவார். அவரது ஆலோசனையைப் பின்பற்றி நடக்கும் நீங்கள் 45வது வயது முதல் தனியாக ஒரு அமைப்பினைத் தொடங்கி அதன் மூலமாக பொதுமக்களுக்கு சேவை செய்து உங்கள் பிறவிக்கான பயனை அடைவீர்கள். உங்களுடைய இஷ்டதெய்வமான சத்குரு சாயிநாத ஸ்வாமியை தொடர்ந்து முழுமனதுடன் தியானம் செய்து வாருங்கள். உங்கள் மனக்குழப்பம் விலகுவதோடு அமைதி பெறுவீர்கள். உங்களுக்குள் இருக்கும் சக்தியை நீங்கள் உணரும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

என் அண்ணனுக்கு சமீப காலமாக நெஞ்சுவலி, படபடப்பு உண்டாகிறது. மருத்துவரிடம் காண்பித்ததில் உடல்நிலை நார்மலாக உள்ளது என்று சொல்கிறார்கள். அண்ணனின் நோய் நொடிகள் நீங்கி மனம் தெளிவு பெற்று நிம்மதியாக வாழ நல்ல பரிகாரம் சொல்லுங்கள். அஞ்சம்மாள், கொன்றைக்காடு.

அவிட்டம் நட்சத்திரம், மகர ராசி, கன்னியா லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் அண்ணன் ஜாதகத்தில் தற்போது சனி தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் சனி பகவான் ஆறாம் இடமாகிய ரோக ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது அவருடைய மனதில் பலவீனத்தைத் தோற்றுவித்திருக்கிறது. தற்போது ஏழரைச்சனியும் துவங்க உள்ள நிலையில் அவருடைய இந்த மனநிலையில் மேலும் கலக்கம் உண்டாகக் கூடும். 15.08.2018ற்கு மேல் 24.12.2019 வரை அவருடைய உடல்நிலையில் சிறப்பு கவனம் தேவை. ஆயுள் ஸ்தானம் ஆகிய எட்டாம் வீட்டில் அதிபதி செவ்வாய் ஆட்சி பலத்துடன் அமர்ந்திருப்பது பலமான நிலையே. ஆயுள் பலம் நன்றாக உள்ளது என்பதை அவரிடம் திரும்பத் திரும்ப எடுத்துச் சொல்லுங்கள்.

அவருடைய மனதில் உண்டாகியுள்ள பயம்தான் அவரைப் பாடாய்படுத்துகிறது என்பதைச் சொல்லிப் புரிய வையுங்கள். பிரதி புதன்கிழமை தோறும் காலை நேரத்தில் அருகிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று சிவன் சந்நதியை 16 சுற்றுகள் சுற்றி வலம் வந்து வணங்கச் சொல்லுங்கள். கீழேயுள்ள ஸ்லோகத்தை தினந்தோறும் 16 முறை சொல்லி வணங்குவதும் நல்லது. மனநிலையில் உண்டாகும் முன்னேற்றம் உடல்நிலையில் முன்னேற்றத்தைத் தரும்.

“மஹாதேவம் மஹேசானம் மஹேஸ்வர உமாபதிம்
 மஹாசேன குரும் வந்தே மஹாபய நிவாரணம்.”


நானும் எனது மனைவியும் 2001ல் திருமணம் செய்துகொண்டோம். 2002ல் ஆண்குழந்தை பிறந்தது முதல் 15 வருடமாக பிரிந்து வாழ்கிறோம். நீதிமன்றம் மூலம் விவாகரத்து ஆகிவிட்டது. இருவரும் மறுமணம் செய்துகொள்ளவில்லை. நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? பழனிவேல் (எ) ஜோசப்ராஜ், திருநெல்வேலி.

சதயம் நட்சத்திரம், கும்ப ராசி, கன்னியா லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தில் தற்போது சனி தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் சுக்கிரன்  கேதுவின் இணைவு கணவன்  மனைவிக்குள் பிரிவினையை உண்டாக்கி உள்ளது. ஜென்ம லக்னத்தில் அமர்ந்திருக்கும் ராகு சிறிது அவசர புத்தியை உங்களுக்குத் தந்திருக்கிறார். அவசரப்பட்டு நீங்கள் நடந்துகொண்ட விதம் அவருடைய மனதிற்குள் ஆறாத வடுவினை உண்டாக்கி இருக்கிறது. எனினும் மனைவி  மகனுடன் இணைந்து வாழ வேண்டும் என்ற உங்களுடைய எண்ணம் வெகுவிரைவில் உங்கள் மனைவிக்கு புரிய வரும். நீங்கள் இருவரும் பிறப்பால் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் என்ற போதிலும் கிறிஸ்துவ மதத்திற்கு மாறி திருமணம் செய்து கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள்.

மதம் என்பது ஒழுக்கத்துடன் வாழ்ந்து இறைவனை அடைவதற்கான ஒரு மார்க்கமே. எல்லா மதமும் ‘கடவுளை நம்பினோர் கைவிடப்படார்’ என்றே அறிவுறுத்துகின்றன. தற்போது நீங்கள் எந்த மதநம்பிக்கையை கொண்டுள்ளீர்களோ அதன் வழியாக இறைவனை நாடுங்கள். பிரதி வெள்ளிக்கிழமை தோறும் தேவாலயத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து உங்கள் பிரார்த்தனையை வையுங்கள். அல்லது அருகில் உள்ள மாரியம்மன் கோயிலில் நெய் விளக்கேற்றி வைத்து வழிபடுங்கள். 14.03.2019க்குள் உங்கள் குடும்பத்துடன் ஒன்றிணைவீர்கள். கவலை வேண்டாம்.

என் மகள் பிறந்து நான்கரை மாதங்கள் ஆகின்றன. பாப்பாவிற்கு 12 வயது வரை நேரம் சரியில்லை, உயிருக்கு ஆபத்து என்றும், அதற்கு மேல் இருந்தால் உங்கள் அதிர்ஷ்டம் என்றும் ஜோசியர் கூறினார். மன நிம்மதியின்றி தவிக்கிறேன். எனக்கு ஒரு நல்ல வழி சொல்லுங்கள். கண்மணி, ஓமலூர்.

பிறந்த பச்சிளம் குழந்தைக்கு ஜாதகம் பார்ப்பது சாஸ்திர விரோதம். குழந்தை பிறந்து ஒரு வயது ஆன பின்னர்தான் ஜாதகம் கணித்துச் பலன் சொல்ல வேண்டும் என்பார்கள் சாஸ்திரம் அறிந்த பெரியோர்கள். குழந்தைக்கு பெயர் சூட்டுவதற்காக பிறந்த தேதி மற்றும் நேரத்தினைச் சொல்லி ஜென்ம நட்சத்திரம் என்ன என்பதையும், அந்த நட்சத்திரத்திற்குரிய எழுத்து எது என்பதையும் அறிந்துகொண்டு அதன்படி பெயர் வைப்பதற்காக ஜோதிடரை அணுகுவதில் தவறில்லை. அதனைத் தொடர்ந்து ஜாதக பலனை அறிந்துகொள்ள முற்படுவது முற்றிலும் தவறு. ஒரு மனிதனின் ஆயுளைத் தீர்மானிக்கும் சக்தி இறைவன் ஒருவனைத் தவிர மற்ற யாருக்கும் கிடையாது.

ஜோதிடர் என்பவரும் மனிதரே அன்றி குழந்தையின் ஆயுளை தீர்மானிக்க அவர் ஒன்றும் கடவுள் அல்ல. அநாவசியமான மனக்கவலையை விடுத்து குழந்தையை நல்லமுறையில் வளர்த்து வாருங்கள். தேவையில்லாமல் மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள். உங்கள் குழந்தை பிறந்த நேரம் மிகவும் சிறப்பாக உள்ளது. அனுஷம் நட்சத்திரம், விருச்சிக ராசியில் பிறந்துள்ள உங்கள் மகள் வேகம் நிறைந்தவள் ஆகவும், உயர்ந்த பதவியை வகிப்பவளாகவும் எதிர்காலத்தில் சிறந்து விளங்குவார். முதல் வயது நிறைவடையும் தருணத்தில் குழந்தைக்கு குலதெய்வத்தின் சந்நதியில் மொட்டை அடித்து காதுகுத்தல் விழாவினைச் செய்யும்போது உங்களால் இயன்ற அளவிற்கு ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுங்கள். தனியாக வேறெந்த பரிகாரமும் அவசியமில்லை.

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா் திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை, பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் தினகரன் ஆன்மிக மலா் 229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம். பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 12-12-2018

  12-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • ramnathgovind

  மியான்மரில் அதிபர் ஆங் சான் சூகியுடன் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

 • GuangxiZhuangcele

  தெற்கு சீனாவின் குவாங்ஸி ஜுவாங் தன்னாட்சி பிரதேசத்தின் 60வது ஆண்டு விழா கொண்டாட்டம்

 • chinaexpo

  சீனாவின் பொருளாதார சீர்திருத்தத்தின் 40ம் ஆண்டு நிறைவு விழா: லண்டனில் புகைப்பட கண்காட்சி

 • londonbrexit

  சர்வதேச நாடுகளுடனான பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் மக்கள் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்