ஐயப்பன் அறிவோம்! சபரிமலை பயணம் - 32
2017-12-19@ 10:42:46

ஆண்.. பெண்.. பேதமில்லை...
அனைவருக்கும் பொதுவில் கடவுள் இருக்கிறார். அதிலும் ஆண், பெண் பேதமின்றி தரிசித்து அருள் பெற்றுத் திரும்பும் சக்தியாகவே ஐயப்பன் இருக்கிறார்.
அக்காலத்தில் சபரிமலைக்கு நீண்ட காட்டு வெளிகளில் பயணித்துத் திரும்பும் நிலை இருந்தது. எனவேதான் வன ஆபத்துக் கருதி, இப்பாதையில் பெண்களின் பயணம் குறைந்தது. மேலும், சுவாமி ஐயப்பன் ஒரு ‘பிரம்மச்சாரி’ என்ற ஐதீகமும் பெண்கள் பயணத்திற்கு தடையிட்டது. 10 வயது சிறுமிகள் துவங்கி, 50 வயதுக்குட்பட்ட பெண்கள் வரை சமூக ரீதியாக இப்பயணம் மேற்கொள்வதில்லை. இப்பெண்கள் கோயிலுக்குள் வரவும் அனுமதிப்பதில்லை. சுவாமி ஐயப்பன் சார்ந்த வரலாற்றுக் கதைகளில் வீட்டு விலக்குக்குரிய பெண்கள் இங்கு வருவது தடை செய்யப்பட்டிருப்பதும் முக்கிய காரணமாகும்.
ஆனாலும், இன்றைக்கு 10 வயதுக்கு குறைந்த பெண் குழந்தைகள், 50 வயது கடந்த மூதாட்டிகள் மாலை அணிந்து, விரதமிருந்து, இருமுடி சுமந்து ஐயப்பன் கோயில் வந்து போக அனுமதிக்கப்படுகிறது. கடந்த காலங்களை விட இப்பெண் குழந்தைகள், மூதாட்டிகள் வருகை சமீபமாக அதிகரித்தும் வருகிறது. இதுதவிர, சபரிமலை ஐயப்பனின் உற்சவரை ஆண்டுக்கு ஒருமுறை பம்பை ஆற்றுக்கு கொண்டு வருகின்றனர். இக்கரையில் ஆராட்டு உற்சவம் நடக்கிறது. பிறகு ஐயப்பனை அலங்கரித்து பம்பை விநாயகர் கோயில் முன்பு மக்கள் தரிசனத்துக்கென 3 மணிநேரம் வைக்கின்றனர். சபரிமலை வர இயலாத 50 வயதுக்குட்பட்ட பெண்கள் இச்சமயத்தில் உடல், உள்ளச் சுத்தியோடு ஐயப்பன் உற்சவரை தரிசித்துச் செல்லவும் அனுமதிக்கப்படுகிறது. சுவாமி ஐயப்பனை எந்நேரமும் மனம் கொண்டு பார்க்கிற, மலையேறும் தம் குடும்பத்தவரின் ஆண்களுக்கென தன்னை வருத்தி பணிவிடை தருகிற ஒவ்வொரு பெண்ணும், இந்நாட்களில் அந்த சபரிமலை வாசனின் பேரருள் பெறுகின்றனர் என்பதே உண்மை.
(நாளையும் மலையேறுவோம்...)