SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அனுமன் புகழ்பாடி ஆனந்தம் அடைவோம்!

2017-12-17@ 06:59:07

அனுமன் ஜெயந்தி

அயோத்தி நகரம் விழாக் கோலம் பூண்டிருந்தது. மக்களனைவரும் புது ஜன்மம் பெற்றதுபோல பூத்துக் களித்திருந்தார்கள். இதையெல்லாம் பார்த்து அனுமன்  ஆனந்தக் கண்ணீர் விட்டான். இந்தப் பட்டாபிஷேகத் திருவிழாவுக்குத் தன்னாலான உதவி எதையாவது செய்ய வேண்டும் என்று துடித்தான். பட்டாபிஷேகத்தின்  முக்கியமான சடங்கு, ராஜகுமாரனை நீராட்டுவது! அந்த நீராட்டலுக்குப் பல புனிதத் தீர்த்தங்களிலிருந்து நீர் கொண்டு வரும் பொறுப்பை அவன் ஏற்றான்.  தன்னுடன் அங்கதன், நீலன், நளன் முதலிய வானர வீரர்களை அழைத்துச் சென்று நான்கு பெருங்கடல்களிலிருந்தும், புண்ணிய நதிகளிலிருந்தும் நீராட்டுதற்குரிய  புனித நீரைக் கொண்டுவந்தான். பட்டாபிஷேகம் நடத்தி வைக்கும் முனிவர்களுக்கும் பெரு மகிழ்ச்சி.

தம்முடைய வைதீகச் சடங்குகள் மிகவும் நேர்த்தியாகவும், அப்பழுக்கில்லாமலும் நிறைவேற்றப்பட இந்தப் புனித நீர்கள் பெரிதும் துணை புரியும் என்று  நெகிழ்ந்தார்கள். புரோகித விசேஷங்கள் ஒவ்வொன்றாக, பார்ப்போர் அனைவரும் பரவசப்படும்படியாக அமோகமாக நடந்தேறின. முனிஸ்ரேஷ்டர் வசிஷ்டர்,  ராமனைப் புண்ணிய தீர்த்தங்களால் நீராட்டினார். பட்டாடை உடுத்தி அரசகோலம் அலங்கரித்து பேரழகனாக மாற்றினார். மங்கள வாத்திய ஒலிகளும்  இயல்பைவிட இனிமைகூடியதாக, ஊருக்கெல்லாம் அந்த மங்கல நிகழ்ச்சியை மென்மையாக அறிவிப்பதாக அமைந்தன. அனுமன் மட்டுமின்றி, சீதை, லட்சுமணன்  மற்றும் அவனைப் பதினான்கு ஆண்டுகளாகக் கானகத்தில் தரிசித்து, இப்போது வாழ்த்த வந்த அனைவரும் கண்களில் நீர் பெருக, ராமனின் பட்டாபிஷேக  கோலத்தைக் கண்டு மகிழ்ந்தார்கள்.

அரியணை அனுமன்தாங்க, அங்கதன் உடையவாள் ஏந்த,
பரதன் வெண்குடை கவிக்க இருவரும் கவரிபற்ற
விரைசெறி குழலி ஓங்க வெண்ணெய் மன்சடையன் வண்மை
மரபுளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மவுலி
 
என்கிறார் கம்பன். சிங்காதனத்தை அனுமன் தாங்கவும் என்று சொல்லி அனுமனுக்கு கம்பர் முதல் முக்கியத்துவம் அளித்திருப்பதை கவனிக்கலாம். பிறகு,  அங்கதன் உடைவாளைக் கையில் ஏந்தி மெய்க்காப்பாளன் போல நிற்கவும், பரதன் வெண்கொற்றக் குடையினைப் பிடித்து இருக்கவும், லட்சுமணனும்,  சத்ருகனனும் வெண் சாமரம் வீசவும், மலர்களால் கூந்தலை அலங்கரித்துக் கொண்டு பூரிப்பும் பெருமையும் பொங்க சீதை அழகுற அமர்ந்திருக்கவும், சடையப்ப  வள்ளல் வம்சத்தின் முன்னோர்கள் மகுடத்தைக் கொண்டுவந்து கொடுக்க, அதை வசிஷ்ட முனிவன் வாங்கி, ராமனுக்குச் சூட்டி மகிழ்ந்தான் என்று  பாடிக்கொண்டாடுகிறார். முடிசூட்டு விழா இனிதே நிறைவேறியதும், ராமன் அந்த விழாவில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த அனைவருக்கும் தகுந்த  பரிசுகளைக் அளித்து கௌரவித்தார்.

ஜாம்பவானுக்குப் பட்டாடையை வழங்கினார். சுக்ரீவனுக்கு நவரத்தின மாலை, அங்கதனுக்கு வீரக் கவசம்; விபீஷணனுக்குத் தங்கக் கிரீடம், அனுமனுக்கு...?
அவனைப் பார்த்து மெல்ல முறுவலித்தார் ராகவன். தான் அணிந்திருந்த முத்துமாலையைக் கழற்றினார். சுற்றி நின்றிருந்தவர்களுக்கெல்லாம் ஓர் ஏக்கம்  இழையோடியது. தங்களுக்கு மட்டும் பக்கத்திலிருந்ததையும், தாதிப் பெண்கள் கொண்டு வந்து தந்ததையும் பரிசாக வழங்கிய ராமன், அனுமனுக்கு மட்டும், தான்  அணிந்திருந்த மாலையையே கழற்றிப் பரிசாகத் தருகிறாரே! ஆனால், உடனே ராமனுடைய அந்தச் செயலால் அவர்கள் சந்தோஷப்படவும் செய்தார்கள். அதாவது  எந்த வகையில் பார்த்தாலும் ராம சேவையில் மற்ற எல்லோரையும்விட அனுமன் ஒரு படி உயர்ந்துதான் இருந்தான். அப்படிப் பார்க்கும்போது இத்தகையதொரு  பெருமையை அனுமன் பெறுவதில் நியாயம் இருக்கத்தான் செய்தது.

ஆனால், இதென்ன? மாலையைக் கழற்றிய ராமன், அதை அப்படியே நேரடியாக அனுமனிடம்தானே கொடுக்க வேண்டும்? மாறாக, தன் மனைவி சீதையின் பக்கம்  திரும்புகிறாரே! அனுமனும் படபடத்த உள்ளத்துடன் இரு கைகளையும் ஏந்தியபடி கண்கள் மூடி ராம தியானம் செய்தபடியே காத்திருந்தான். சீதையைப் பார்த்து  மெல்லப் புன்னகை செய்த ராமன், ‘‘சீதா, இந்த முத்துமாலையைப் பரிசளிக்கும் வாய்ப்பை உனக்கு நான் தருகிறேன். யாருக்கு இதனை அளிக்க வேண்டும்  என்று நீ விரும்புகிறாயோ, அவருக்கு வழங்கலாம்’’ என்றார். அதைத் தன் செந்தளிர்க் கரங்களால் வாங்கிய சீதை, ராமனுடைய குறிப்பை உணர்ந்தாள்.  அனுமனைக் கனிவுடன் நோக்கினாள். ‘வாயு புத்திரனே! எங்களுக்குத்தான் நீ எவ்வளவு பேருதவி புரிந்திருக்கிறாய்! உனக்கு நாங்கள் பட்டிருக்கும் நன்றிக்  கடனுக்கு இந்த முத்துமாலை ஈடாகாது.

ஆனாலும் எங்களுடைய முழுமன ஆசியுடன், அன்புடன், என் கணவரின் எண்ணப்படி நான் உனக்கு இந்த முத்துமாலையை அளிக்கிறேன், பெற்றுக்கொள்’ என்று
வாஞ்சையுடன் அளித்தாள். பொதுவாகவே பரிசு பெறுபவர்களுக்குக் கணவன் பரிசளிப்பதைவிட அவர் முன்னிலையில் அவர் மனைவி அளிப்பது மிக உயர்ந்தோர்  சிறப்பாகும். அந்தப் பெருமையை அனுமன் பெற்றான் என்றால், அதற்கு அவன் முற்றிலும் தகுதியுள்ளவன் என்றுதானே பொருள்! அப்போதும் சிறிதும் கர்வம்  கொள்ளாத அனுமன், அந்த முத்துமாலையைத் தன் கண்களில் ஒற்றிக் கொண்டு வணங்கி எழுந்தான். ராமனும் மனம் நெகிழ்ந்தார். அனுமனை அருகில்  அழைத்தார். ‘ஆஞ்சநேயா, இந்த உலகத்தில் உன்னை விஞ்சியவர்கள் யாரும் இல்லை. நீ எனக்குச் செய்த உதவிகள் கொஞ்சமா? ‘கண்டேன் சீதையை’ என்று  நீ எனக்கு அளித்த உயிர் மீட்டலுக்கு எதை ஈடாகச் சொல்வது? சுக்ரீவனை அறிமுகப்படுத்தி, அவனுடைய நட்பால் இலங்கை புக உதவியவன் நீ.

பாலம் அமைக்க உன் வானர இனத்தாரோடு உதவியவன் நீ. அசோகவனத்தில் சீதையைக் கண்டது மட்டுமல்லாமல், ராவணனுக்கும் அறைகூவல் விடுத்த  பராக்கிரமசாலி நீ. போரில் மயங்கி வீழ்ந்த லட்சுமணனை, இருமுறை சஞ்சீவி பர்வதம் எடுத்து வந்து உயிர்ப்பித்தவன் நீ. என் பிரிவால் சோகமுற்றுத் தன்  வாழ்க்கையையே முடித்துக் கொள்ள நினைத்த பரதனைக் காத்தவன் நீ. எண்ணிலடங்கா அரிய செயல்களைப் புரிந்தவனே, உனக்கு நான் என்ன கைமாறு  செய்யப்போகிறேன்.... நீ விரும்பியபடியே உன்னுள் நான் உறைகிறேன். வா, திண்ணிய தோளனே, என்னை வந்து ஆலிங்கனம் செய்து கொள்’ என்று இருகரம்  நீட்டி அனுமனை அழைத்தார். அனுமனும் தாயிடம் அடைக்கலம் தேடி ஓடும் கோழிக் குஞ்சைப் போல ராமனை நெருங்கி அவரை ஆரத்தழுவிக் கொண்டான்.  ‘உன் நெஞ்சில் நான் இடம்பெற வேண்டும் என்று நீ விரும்பிக் கேட்டதுபோல, என் நெஞ்சிலும் நீ நீங்காது நிலைத்திருப்பாய்.

என் சீதையான இந்தத் திருமகளின் இருப்பிடத்தை, என் மார்பை உனக்கு அளிக்கிறேன்’ என்று பரவசத்துடன் கூறினான் ராமன். முடிசூட்டு விழாவுக்கு  வந்தவர்கள் எல்லோரும் பிரிய மனமில்லாமல் ஆனால், பிரிய வேண்டிய கட்டாயத்தால் மனம் வருந்தி, கண்களில் நீர் பெருக அயோத்தியை விட்டுப்  புறப்பட்டார்கள். ராமனை, அங்கேயே தங்கியிருந்த ஒவ்வொருவரும் வருந்தி வருந்தி உபசரித்தார்கள். அயோத்தியிலேயே வசிக்கின்ற பேறு பெற்றமைக்காக  இவர்கள் பெரிதும் மகிழ்ந்தார்கள். எந்த வகையிலாவது ராமனுக்கு அருகிலேயே தாம் இருக்கும்படியாகப் பார்த்துக் கொள்வதில் முனைப்பாக இருந்தார்கள்.  இதற்காக ஒரு உபசரணை பட்டியல் தயார் செய்யப்பட்டது. ராமனுக்கு யார் யார், அவனுடைய தினசரி அலுவலில் என்னென்ன சேவை செய்வது என்று  அட்டவணை இட்டார்கள். அதில் அனுமன் பெயர் இல்லை.

சீதையைக் கண்டுபிடித்தது, போரில் தேவையான உதவிகளைச் செய்தது, பரதன் உயிர் காத்தது, பட்டாபிஷேகத்தின்போது தீர்த்தங்களைக் கொண்டு வந்தது என்று  அவன் ஆற்றிய கடமைகள்தான் எத்தனை! அந்த அனுமனுக்கு இப்போது பொறுப்பு எதுவும் இல்லை! இதனால் அவன் வருத்தப்படுவானே என்று ராமன் சற்று  துன்பப்பட்டார். ஆனாலும் அனுமன் சாமர்த்தியசாலி என்பது அவருக்குத் தெரியும். நடப்பவற்றை மௌனமாகக் கவனித்துக் கொண்டிருந்தார். அனுமனை  இனிமேலும் ராமனுக்குச் சேவை செய்ய அனுமதிப்பதில் மற்றவர்களுக்கு விருப்பம் இல்லை. இதுவரை உடனிருந்து ஆற்றிய பணிகளுக்கு உரிய அங்கீகாரம்  அவனுக்குக் கிடைத்துவிட்டதால், இனி அவன் ஓய்வு எடுத்துக்கொள்ளலாம் என்று அபிப்பிராயம் தெரிவித்தார்கள். ஆனாலும் அவன் ராமனுடைய பிரியத்துக்குப்  பாத்திரமானவன் என்பதால் அதை நேரிடையாக அவரிடம் சொல்லவும் அவர்கள் அஞ்சினார்கள். ஆகவே உபசரணைப் பட்டியலை அனுமனிடம் காண்பித்து, இதில்  இல்லாத பொறுப்பு ஏதேனும் இருக்குமானால் அதை அவன் குறிப்பிட்டுச் சொல்லலாம் என்றும் அந்தப் பொறுப்பையே அவன் மேற்கொள்ளலாம் என்றும் கருத்து  தெரிவித்தார்கள்.

பட்டியலை வாங்கிப் படித்தான் அனுமன். பிறகு ராமனைப் பார்த்தான். ராமன் அமைதியான புன்னகையுடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தார். அனுமன் தாழ்ந்த   குரலில் கேட்டான். ‘இதில் விடுபட்டுப் போன ஒரு  பணியை எனக்குத் தருவீர்களா?’அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். குழப்பம்  அவர்களுடைய முகத்தில்! ‘விடுபட்டுப் போன பொறுப்பா! என்ன அது? இத்தனைக்கும் பலமுறை யோசித்து, எந்த ஒரு சிறு கடமையும் விட்டுவிடாதபடி  பட்டியல் தயாரித்திருக்கிறோம்! அனுமன் இதிலில்லாத புது பொறுப்பு ஒன்றைச் சொல்கிறானே!‘அது... அது வந்து...’ அனுமன் தயங்கினான். ராமன்  தலையசைத்து அவனை ஊக்குவித்தார். ‘அதாவது, ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி எப்போதெல்லாம் கொட்டாவி விடுகிறாரோ, அப்போது நான் அவர் வாய்முன் என்  விரல்களால் சொடக்குப் போட வேண்டும்’ என்றான் அனுமன்! மற்றவர்கள் அசந்து நிற்க, ராமன்சீதை லட்சுமணன் அனைவரும் அவனுடைய சாதுர்யத்தை  எண்ணி, எண்ணி மகிழ்ந்தார்கள்.

இது எவ்வளவு சாமர்த்தியமான கோரிக்கை! எப்போதுமே ராமனை விட்டு அனுமன் பிரியாதிருக்க எப்படிப்பட்ட தந்திரம்! ராமன் வாய்விட்டு சிரித்தார். அப்படியே  சிலையாக நின்றிருந்தவர்களைப் பார்த்து அனுமன் சொன்னான். ‘பயப்படாதீர்கள், நான் விரைவிலேயே உங்களனைவரிடமிருந்தும் ஸ்ரீராமனிடமிருந்தும் விடை  பெற்றுக் கொள்வேன். இன்னும் சில காலத்தில் இந்த அவதார நோக்கம் நிறைவேறியதும் ஸ்ரீராமன் அடுத்த அவதாரத்துக்குத் தயாராகி விடுவார். இதையடுத்த  எல்லா அவதாரங்களின்போதும் நான் இப்பூவுலகிலேயே வாழ்ந்து ராம கதாலாட்சேபங்களைக் கேட்டு இன்புறும் பேறு வேண்டுகிறேன். எத்தனை யுகம் கடந்தாலும்  என் மனம், சிந்தனை, பேச்சு அனைத்துமே ராமநாம ஜபத்திலேயே திளைத்திருக்க வரம் வேண்டுகிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக ராமநாமத்தை ஜபித்து, ராம  பராக்கிரமங்களைப் பிறர் சொல்வதைக் கேட்கும் பெரும் பாக்கியம் வேண்டும். ஆகவே, ராம தியானம் செய்யவும், ராம நாமம் கேட்கவும் நான் தேசாந்திரம்  புறப்படுகிறேன்...’அவனுடைய பதிலால் பெரிதும் நெகிழ்ந்து போனார்கள் அனைவரும்.

அனுமனுடைய ராம பாசத்துக்கு இன்னொரு உதாரணமும் சொல்லலாம். ராமன் தன்னை மீட்க ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறான் என்பதை அனுமன்  மூலம் அறிந்த சீதை, தனக்கு உயிர் கொடுத்தது போன்ற தகவலைத் தந்த அவனுக்கு மிகப்பெரிய பரிசு கொடுக்கத் தீர்மானித்து, ‘என்றென்றும் சிரஞ்சீவியாக  வாழ்வாய்!’ என்று வரமளித்து ஆசி கூறியிருந்தாள் அவள். ராவண வதத்துக்குப் பிறகு, விபீஷணனிடம் இலங்கையை ஒப்படைத்து ‘சிரஞ்சீவியாக இரு’ என்று  வாழ்த்தினார், ராமன். பளிச்சென்று அவர் மனசுக்குள் ஓர் உறுத்தல். பக்கத்தில் நின்றிருந்த அனுமனைப் பார்த்தார். ஏற்கனவே சீதையால் சிரஞ்சீவி பட்டம் பெற்ற  அனுமன், ‘இப்போது தனக்குப் போட்டியாக இன்னொரு சிரஞ்சீவியா! அதுவும் ராமனாலேயே ஆசிர்வதிக்கப்பட்டவனாகவா!’ என்று யோசிக்கக் கூடுமோ? ராமன்,  கலவரப்படுவதை உணர்ந்தான் அனுமன். ‘ஐயனே! விபீஷணனுக்குத் தாங்கள் சிரஞ்சீவி ஆசியளித்ததில் எனக்குப் பரிபூரண சந்தோஷம்.

ஏன் தெரியுமா? நான் மட்டும் சிரஞ்சீவியாக இருந்தால், உலகமே அழிந்தபிறகு, ஜீவராசிகள் எல்லாமும் அழிந்தபிறகு நான் தனித்து விடப்படுவேன். தனியே  விடப்பட்ட சூழலில் யார் சொல்லி நான் ராம நாமம் கேட்பேன்? அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் உதவுவதற்கென்றே, இதோ, நீங்கள் விபீஷணனைச் சிரஞ்சீவியாக்கி  விட்டீர்கள். எனக்கு இதைவிட ஆனந்தம் வேறென்ன வேண்டும்! யார் இல்லாவிட்டாலும் விபீஷணன் உயிர் வாழ்ந்து ராமநாமம் ஜபிக்க, நான் அதை உளம் நெகிழ  கேட்டுக் கொண்டிருப்பேனே! எனக்கு இத்தகைய ஒரு பாக்கியத்தை அருளிய உங்களுக்கு நான் எப்படித்தான் நன்றி சொல்வேன்!’ என்று நெகிழ்ச்சியுடன் உருகிச்  சொன்னான் அனுமன்.(சூரியன் பதிப்பகம் (தொலைபேசி எண். 04442209191, Extn. 21125) வெளியிட்ட ‘சிரஞ்சீவி’ புத்தகத்திலிருந்து)

பிரபுசங்கர்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • NagoroJapanVillage

  ஜப்பானில் உள்ள தீவில் வெறிச்சோடிய கிராமத்தை பொம்மைகளால் உயிரூட்டிய பெண்: குவியும் சுற்றுலா பயணிகள்

 • FallFoilageWorld

  உலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்

 • WillaHurricaneMexico

  மெக்சிகோவை மிரட்டவிருக்கும் வில்லா புயல்: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

 • italyrain

  இத்தாலியில் பெய்த ஆலங்கட்டி மழை : பனிக்கட்டிகள் இறுகி பாறை போல் காட்சியளித்த சாலைகள்

 • 23-10-2018

  23-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்