SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முதல் மலையாகி நின்ற மகேஸ்வரன்

2017-12-16@ 09:41:13

விருத்தாசலம்

விருத்தாசலம்’ திருத்தலத்திற்கு வித்தியாசமானதொரு மகிமை உண்டு. அது என்ன? இந்த தலத்தில் உயிர் நீப்பவரின் உடலை இறைவன் தன் மடிமீது கிடத்தி மந்திர உபதேசம் செய்ய, இறைவி தன் முந்தானையால் வீசி இளைப்பாற்றுகிறாளாம்! இதை ‘கந்த புராண வழி நடைப்படலம்’ பாடல் 13 தெரிவிக்கிறது. மேலும் விருத்தகாசி என்னும் இந்த திருமுதுகுன்றில் வழிபாடு செய்தாலே காசியில் செய்த புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் உண்டு. அது மட்டுமா, பஞ்சாட்சர மகிமையை நினைவுறுத்துவது போன்ற, தீர்த்தம், கோபுரம், பிராகாரம், என யாவும் ஜந்தைந்தாக அமைந்து காணப்படுவதும் இத்தலத்தின் தனிச் சிறப்பாகும். இந்த தலத்தை ஏன் பழமலை என்றழைக்கிறார்கள்?

ஒரு யுகப் படைப்பின்போது பிரம்மதேவர் முதலில் நீரைப் படைத்தார். அப்பொழுது மது, கைடப அசுரர்கள் அவரை எதிர்த்துப் போரிடவே திருமால் அவர்களை வெட்டி வீழ்த்தினார். வீழ்த்தப்பட்ட அவர்களின் உடல்கள் நீரில் மிதந்தன. மிதந்த உடல்களும் நீரும் ஒன்றாகி இறுகி மண்ணுலகம் அமைய வேண்டும் என பிரம்மதேவன் சிவபெருமானிடம் வேண்டினார். வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட சிவபெருமானும் அருள்புரிந்தார். அதன்படியே உருவானதால் பூமிக்கு மேதினி எனும் பெயர் வந்தது. பின்னர் சிவபெருமான் மலை வடிவில் தோன்றினார். இவ்வாறு தோன்றிய மலை, சிவபெருமான் என உணராத பிரம்மதேவர் வேறு மலைகளையும் படைத்தார்.

ஆனால், பிரமாண்டமான  சிவமலை இருந்ததால் பிரம்மன் உருவாக்கிய மலைகளுக்கு இடம் இல்லாது போயிற்று. இதனால் வருந்திய பிரம்மனுக்கு சிவபெருமான் தாமே மலைவடிவில் தோன்றியிருப்பதை உணர்த்தியதோடு பிரம்மனின் வேண்டுதலை ஏற்று அவன் படைத்த மலைகளுக்கும் இடமளித்தார். ஆக சிவமாகிய இந்த மலை தோன்றிய பின்னரே பிரம்மனால் படைக்கப்பட்ட பிற மலைகள் பூமியில் இடம்பெற்றன. ஆதலால் இத்தலம் பழமலை என்றானது. புராண பெருமையோடு திகழும் பழமலை நாதனை தரிசித்த கணத்திலேயே பிறவிப் புண்ணியம் கிட்டிவிடும் என்பார்கள், கோயிலில் தேரோடும் வீதியே முதல் பிராகாரமாகும், அடுத்ததாய் பஞ்சவர்ண பிராகாரம் உள்ளது. மூன்றாவது பிராகாரத்தை கயிலாய பிராகாரம் என்கிறார்கள்.

இந்தப் பிராகாரத்தில் பழமலை நாதர், லிங்க வடிவில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார். கிழக்கு வாயிலின் முன்னால் 20 கால் மண்டபத்தை காணலாம். இதன் தென்கிழக்கு திசையில் உள்ள கணபதியை வணங்கிவிட்டு ராஜகோபுர வாயில் வழியாக கோயிலினுள் வரலாம். கோபுர தீபாராதனை மண்டபத்தை அடுத்து 100 கால் மண்டபம் துலங்குகிறது. இதன் மத்தியில் பலிபீடம், கொடிமரம், நந்தி ஆகியன திகழ்கின்றன. பலிபீடத்தின் முன், விநாயகர் சிலை உள்ளது. இவரை வழிபட்டுக் கைலாயப் பிராகாரத்தை வலம் வரவேண்டும். அடுத்துள்ளது விபசித்து முனிவருக்கு ஈசன் திருக்காட்சி வழங்கும் விபசித்து மண்டபம். இதன் கிழக்குப் பக்கம் பிரம்மன் உருவாக்கிய அக்னி தீர்த்தம் உள்ளது.

விபசித்து மண்டபத்தின் தென்மேற்கில் ஆழத்து விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயில் தரைமட்டத்திலிருந்து 6 மீட்டர் ஆழத்தில் உள்ளது. ஆழத்தில் இவரை வீற்றிருப்பதால் ஆழத்து பிள்ளையார் என்பார்கள். பாதாள விநாயகர் என்று கூறுவோரும் உண்டு. இவரை வழிபட்டு தொடர்ந்து வலம் வரும்போது தெற்கு கோபுர வாயிலின் மேற்கில் உள்ள நந்தவனத்தின் உள்ளே சக்கரதீர்த்தத்தைக் காணலாம். இது திருமாலின் சக்கரத்தால் உண்டாகியது.  கைலாய பிராகாரத்தில் வடமேற்குப் பகுதியில் 28 ஆகமக் கோயில் உள்ளது. முருகப் பெருமான் இவ்விடம் எழுந்தருளி 28 சைவ ஆகமங்களையும் சிவலிங்க வடிவில் அமைத்து பூஜை செய்ததினால் இந்தப் பெயர்.

கைலாய பிராகாரத்தில் வடக்குப் பகுதியில் பெரிய நாயகி அம்மையின் திருக்கோயில் அமைந்திருக்கிறது. கருவறையில் கிழக்கு முகமாக நிறைகோலத்தில் அம்பிகை அருள் தரிசனம் தருகிறாள். அம்மன் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள தேவகோட்டங்களில் தென்புறம் ஜெய சம்கார மூர்த்தி, கால சம்காரமூர்த்தி, நர்த்தன கணபதி, இச்சா சக்தி; மேற்குப் பகுதியில் ஞான சக்தி;, வடக்குப் பகுதியில் கிரியா சக்தி, பைரவி, துர்க்கை; கிழக்கு சுவரில் வாயிலின் தெற்குப் பக்கம் மூஷிக விநாயகர், வடக்குப் பக்கம் மயில் மீது ஆறுமுகர், கிழக்குப் பக்கம் தனி மண்டபத்தில் சண்டிகேஸ்வரி என தரிசிக்கலாம். முன் மண்டபத்தின் வடக்குப் பகுதியில் உள்ள மண்டபத்தில் வடக்கு கோபுரத்தை ஒட்டி குகை முருகன் சந்நதி அமைந்துள்ளது.

இதன் வடக்குப்புறம் குபேர தீர்த்தம் உள்ளது. கண்டராதித்தச் சோழன் கோபுர வாயில் வழியாக வன்னி மரத்தை அடைந்து பழமலைநாதர் கோயிலைச் சுற்றி வரும் பிராகாரம்தான் வன்னியடிப் பிராகாரம் ஆகும். இங்கு தலமரமாகிய வன்னிமரத்தை தரிசிப்பதோடு, விநாயகர், விபசித்து முனிவர், உரோமச முனிவர் சிலைகள் பஞ்சலிங்கங்கள், வல்லப கணபதி, மீனாட்சி அம்மன், சொக்கநாதர், காசி விசாலாட்சி, காசி விஸ்வநாதர், வள்ளி சண்முக முருகன் ஸஹஸ்ரலிங்கம், அண்ணாமலையார் சந்நதிகளையும் தரிசிக்கலாம். வன்னியடிப் பிராகாரத்தின் கிழக்கில் நவகிரக சந்நதி திகழ்கிறது. இப்பிராகாரத்தில் அமைந்திருக்கும் அலங்கார மண்டபத்தின் உள் அறையில் நடராஜ பெருமானை சிவகாமி தேவியோடு தரிசிக்கலாம். கடைசியாக 63 மூவர் பிராகாரத்தை வலம் வந்து திருக்கோயில் தரிசனத்தை நிறைவு செய்யலாம். இக்கோயிலுக்குச் செல்ல பஸ், ரயில் வசதிகள் உள்ளன. சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் உள்ளது.

- எ.கிருஷ்ணன்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • FallFoilageWorld

  உலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்

 • WillaHurricaneMexico

  மெக்சிகோவை மிரட்டவிருக்கும் வில்லா புயல்: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

 • italyrain

  இத்தாலியில் பெய்த ஆலங்கட்டி மழை : பனிக்கட்டிகள் இறுகி பாறை போல் காட்சியளித்த சாலைகள்

 • 23-10-2018

  23-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • longestseabridge

  உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்