SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சனிதோஷம் போக்கி அருளும் சங்கரன்!

2017-12-11@ 07:28:24

சேங்காலிபுரம்

இயற்கையால் வகுக்கப்பட்ட நியதிகள் உயிரினங்கள் அனைத்திற்கும் பொதுவானவை என்பதை உலகோர்க்கு உணர்த்த ஈசன் நிகழ்த்திய  திருவிளையாடல்கள் எத்தனையோ! அவற்றுள் ஓன்று - தன் சுழற்சி நியதிப்படி சிவபெருமானைப் பிடிக்க வேண்டிய ஒரு தருணம் சனிபகவானுக்கு வந்தது. சிவபிரானைப்  பிடிப்பதா? ஆனாலும் கடமை தவறினால், தனது ஆற்றல் குன்றிவிடுமே என்று சஞ்சலப்பட்டார். பின்னர், பிரானை அணுகி, பணிந்து வணங்கி, “பரம்பொருளாகிய பரமனே, நான் மேற்கொண்டுள்ள கடமை அடிப்படையில் தங்களை  ஏழரை வருடம் பீடிக்க வேண்டிய ஏழரை நாட்டு சனி காலம் வந்துள்ளது. தாங்களோ என்னையும் சேர்த்து இந்தப்  பிரபஞ்சத்தையே ஆளும் மகேசன். எனவே, தங்களிடம் முன்னறிவிப்பு செய்கிறேன். தங்களைப் பிடித்துக்கொள்ள எனக்கு அனுமதி அருள வேண்டும்’’ என்று வேண்டினார். “அனைத்தையும் படைத்து, காத்து, அழித்து மீண்டும் படைத்து உலகையே இயக்கிவரும் என்னை நீ பீடிப்பதா? என்ன துணிச்சல்!” என்று கேட்டு புருவத்தை நெறித்தார், பிரான்.

நிபந்தனை விதிப்பவர், தாமும் அதற்குக் கட்டுப்பட்டவரே என்பதை அறிய மாட்டாரா என்ன? இருந்தாலும் ஈசன் அதனை அறியாதவர்போல் நாடகம் ஆடினார். நடுங்கிப் போனார், சனி பகவான். “தாங்கள் உலகத்தை இயக்கும் கருவிகளுள் நானும் ஒருவன். நான் இயங்காமல் போனால் தங்கள் இயக்கமும் தடைபடும்தானே? என் கடமையை நான் செய்யத் தவறினால் பின்னர், நவகிரகங்களில் நானும் ஒருவனாக விளங்கும் ஸ்தானம் வில்லங்கத்துக்கு உள்ளாகிவிடும். என் விஷயத்தில் யார் ஒருவரும் தலையிட வழியில்லை. எனவே, தங்களை ஏழரை வருடங்கள் பிடிக்க அனுமதிக்காவிட்டாலும் ஏழரை மாதங்கள் மட்டும் பிடித்துக் கொள்கிறேன்,’’ என்றார் சனீஸ்வரன்.

ஈசன் அதற்கு  இணங்கவில்லை. “உன் பிடிக்குள் நான் அகப்பட்டால் என் மகிமை குன்றி விடும்,” என்றார். “சரி, ஏழரை நாட்கள் மட்டும் பிடித்துக் கொள்கிறேன்.” “ஏழரை நாட்கள் பிடிக்கப்பட்டால், என் தொழிலில் குழப்பமும் குளறுபடியும் உண்டாகி, உலக இயக்கம் பாதிக்கப்படும். ஆகவே நில்லாதே, போ!” தர்ம சங்கடத்துக்கு ஆளானார் சனிபகவான். “தங்களை  பிடிக்காவிட்டால் என் ஆற்றல் போய்விடுமே! பிறகு, உலகோர் முன் நான் மதிப்பிழந்துவிடுவேனே!” “சரி, ஒன்று  செய். ஏழரை வினாடிகள் மட்டும் நீ என்னைப் பிடிக்க நான் அனுமதிக்கிறேன். முடிந்தால் பிடித்துக் கொள்,” என்று கூறி சட்டென்று பாதாளத்திற்குச் சென்று ஒளிந்து கொண்டார். ஏழரை வினாடிகள் கடந்ததும் சிவபிரான், சனீஸ்வரர் முன் தோன்றி புன்சிரிப்புடன், “உன்னால் என்னைப் பிடிக்க  முடிந்ததா?” என்று கேட்டார்.

சனீஸ்வரரோ பிரானை வணங்கி, “ஈசனே! ஏழரை வினாடிகள் நான் உங்களைப் பிடித்ததால்தான் தாங்கள் பாதாளத்தில் போய் மறைந்திருக்க நேர்ந்தது,” என்று கூற, தாமே ஆடிய திருவிளையாடல் அது  என்பதை சனீஸ்வர னுக்கு உணர்த்தினார், ஈசன். அவரைப் பணிந்து வணங்கிய சனிபகவான், “ஐயனே, தாங்கள் எழுந்தருளிய இத்தலத்திற்கு வந்து வழிபடும்  பக்தர்களுக்கு ஏழரை வருடங்களோ அல்லது அஷ்டமத்து சனியாக இரண்டரை வருடங்களோ நான் பிடிக்கும் காலத்தில் இன்னல் இழைக்கமாட்டேன்,’’ என்று சனிபகவான் பரமனிடம் வாக்குறுதி அளித்தார். ஈசனும் அதுகேட்டு மகிழ்ந்தார். ஈசனேயானாலும் கிரகங்களால் ஏற்படும் பாதிப்பிலிருந்து முழுமையாகத் தப்பிக்க இயலாது என்பதையும், அதிக துன்பமின்றி எளிதில் தீர்க்கக்கூடிய கஷ்டங்களாக அதை இறையருளால் மாற்றச் செய்யலாம் என்பதையும் உணர்த்துவதே  இத்தலத்தின் வரலாறு. மற்ற சிவாலயங்களைப்போல இல்லாமல் இக்கோயிலின் கருவறை தரைமட்டத்திலிருந்து, கீழே பாதாளத்தில் உள்ளது, மேற்படி நிகழ்ச்சியை நினைவுறுத்தும் விதமாக! மொத்தக் கோயிலே பூமியின் தரைமட்டத்திற்குக் கீழேதான் உள்ளது.

அம்பிகை விசாலாட்சி என்னும் பெயரோடு தெற்குப் பார்த்த தனிச் சந்நதியில் கொலுவிருக்கிறார். ஜாதகத்தில் சனிபகவான் சஞ்சாரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் ஈசனை வணங்கி, துன்பப் பிடியிலிருந்து விலகலாம். சனி பாதிப்பால் ஏற்பட்ட தீய பழக்கங்கள், தீய ஒழுக்கம் ஆகியவற்றிலிருந்து விடுபட முடியாமல் தவிப்போர், இங்குவந்து இறைவன் காசிவிஸ்வநாதரை பூஜித்தால், நற்பலன் கிட்டுகிறது. வாழ்வில் புத்தொளியும், புதுப்பாதையும்  புலப்படுகிறது என்கின்றனர் பக்தர்கள்! தரிசன நேரம்: காலை 9 முதல் 11 மணி, மாலை 5 முதல் 7 மணி வரை. திருவாரூர் மாவட்டம் குடவாசலிலிருந்து 8 கி.மீ. தொலைவில் சேங்காலிபுரம் உள்ளது.

- ஆர்.சி.சம்பத்

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • aerospaceexpoberling

  பெர்லிங்கில் சர்வதேச ஏரோஸ்பேஸ் கண்காட்சி : பல்வேறு நாடுகளின் புதுமையான கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன

 • accidentkushinagar

  உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகரில் பள்ளிப்பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் 11 மாணவர்கள் உயிரிழப்பு

 • karanisvararfestival

  மயிலாப்பூர் காரணீஸ்வரர் கோவில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தேர் திருவிழா

 • cmathleticstale

  மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை தடகள போட்டி : அமைச்சர் பாலகிருஷ்ணா தொடங்கி வைத்தார்

 • tiruchurpooram

  கேரளாவில் பிரசித்திப் பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா : கோலாகலமாக நடந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்