SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜெயம் தருவார் ஜோதிர்லிங்கேஸ்வரர்!

2017-12-11@ 07:22:10

திருவெண்ணாவநல்லூர்

திருச்சி  திருவானைக்காவலை அடுத்து உள்ளது திருவெண்ணாவநல்லூர் என்ற ஊர். திருவாணைக்காவல்  பேருந்து நிலையத்திலிருந்து கிழக்கே 1 கி.மீ. தொலைவில் உள்ள கீழ கொண்டையான் பேட்டையில் உள்ளது கீழ விபூது வீதி. இங்குள்ள ஆலயத்தில் ஜோதியாய் அருள் பாலிக்கிறார் ஜோதிர்லிங்கேஸ்வரர். ஆலயம் கிழக்கு திசை நோக்கி உள்ளது.  முகப்பைக் கடந்ததும் பெரிய மகாமண்டபமும், நடுவே பீடமும், நந்தியும் உள்ளன. வலதுபுறம் இறைவி ஜோதீஸ்வரியின் சந்நதி உள்ளது. அன்னை நின்ற கோலத்தில் தென்முகம் நோக்கி அருள்பாலிக்கிறாள்.  மகாமண்டபத்தின் அடுத்துள்ள கருவறை எண் கோண வடிவில் உள்ளது. இறைவன் ஜோதிர்லிங்கேஸ்வரர் லிங்கத்திருமேனியில் கீழ் திசை நோக்கி அருள்பாலிக்கிறார். இறைவனின் பீடம் வட்ட வடிவில் அமைந்துள்ளது. இங்கு இறைவனை பிரதிஷ்டை செய்ததற்கு தனி வரலாறு உள்ளது.

இந்த இடத்தில் ஆலயம் அமைக்க முடிவு செய்த நிர்வாகத்தினர் பிரதிஷ்டை  செய்ய  ஒரு சிவலிங்கத்தை தேடி அலைந்தனர். கிடைக்கவில்லை. திருவானைக்காவல் அருகே உள்ள திருவளர்சோலை என்ற கிராமத்தில் ஒரு சிவலிங்கம் உள்ளது என்றும் அது பூஜை ஏதும் செய்யப்படாமல் இருப்பதாகவும் அதற்குரியவர் அங்கு தினம் ஒரு வேளை விளக்கு மட்டுமே ஏற்றி வருகிறார் என்றும் கேள்விப்பட்ட நிர்வாகத்தினர் அவரிடம் சென்றனர்.  அவரிடம் விபரத்தைக் கூறி அந்த சிவலிங்கத்தை தங்களுக்குத் தர முடியுமா என்று அவர்கள் தயங்கியபடியே கேட்டனர். அதற்கு அவர் தனக்கு முதல் நாள் கனவில் நீங்கள் வருவீர்கள் என்றும், உங்களிடம் சிவலிங்கத்தை தரும்படி பணிக்கப்பட்டேன் என்றும் கூறி அந்த சிவலிங்கத்தை அவர் ஆலய நிர்வாகிகளிடம் ஒப்படைத்தார். இறைவனுக்கு திருநீற்றீஸ்வரர் என திருநாமம் சூட்ட எண்ணியிருந்தனர். ஆனால்,  சிவலிங்கத்தை எடுத்து வரும்போதே ஜோதி ரூபமாய் இறைவன் தன்னை வெளிப்படுத்தியதால் ஜோதிர்லிங்கேஸ்வரர் என பெயரிட்டு அழைக்கப்பட்டார்.

சிவபிரானுக்கு எண் கோண வடிவத்தில் கர்ப்பகிரகத்தில் ஐம்பொன்னும் நவகிரக கற்களும் சிதம்பர சக்கரமும் பதிக்கப்பட்டு அதன் மேல் லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கர்ப்பகிரகத்தில் சென்று வழிபடும் பக்தர்களின் மன வெளிபாடும் மன அதிர்வுகளும் லிங்கத்திற்கு கீழ் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிவசிதம்பர சக்கரத்தில் பட்டு எதிரொளித்து ஜோதிர்லிங்கேஸ்வரர் ரூப இறைவனை அடையும்படி கர்ப்பகிரகத்தின் அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. கர்ப்பகிரகத்தின் தென்கிழக்கு, தென்மேற்கு, வடகிழக்கு, வடமேற்கு திசைகளில் இருக்கும் சுவர்களில் உள்ள சிறிய துவாரங்களில் ஏதேனும் ஒன்றில் நாம் ஓம் என்று சொல்ல அந்த ஓசை நான்கு புறமும் எதிரொளிப்பது நம்மை சிலிர்க்க வைக்கும் அற்புதமாகும்.

அன்னை ஜோதீஸ்வரி என்ற திருநாமத்தில் அருள் பாலிக்கிறாள். இறைவனின் கருவறை முகப்பில் இடதுபுறம் பிள்ளையாரும், வலதுபுறம் முருகனும் அருள்பாலிக்கின்றனர்.  வடதுபுறம் வள்ளலாரின் தியான மண்டபம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஜீவன் அனைத்தும் சிவ சொரூபமே என்பதை கருத்தில் கொண்டு பக்தர்கள் யாவரும் மூலவரை தொட்டு வணங்கவும், ஆராதனை நேரங்களில் பக்தர்கள் இறைவனுக்கு அபிஷேகம் செய்யவும், போற்றி வணங்கவும் ஏற்ற வகையில் கோயில் நடைமுறைகள் அமைக்கப்பட்டுள்ளன. பிராகாரத்தின் வடக்குத் திசையில் விபூதி சித்தரின் தனிச்சந்நதி உள்ளது. பாண்டிய மன்னனின் ஆட்சியில் மன்னன் சொல்படி விபூதி சித்தர் திருவானைக்கோயிலில் உள்ள ஜம்புலிங்கேஸ்வரர் ஆலயத்தின் ஐந்தாவது திருச்சுற்று மதிற்சுவரை கட்டிக்கொண்டிருந்தார்.

ஒரு நேரத்தில் கூலி கொடுக்க அவரிடம் பொருளோ பொற்காசுகளோ இல்லை. அதற்குப் பதிலாக பணியாளர்களுக்கு விபூதியை மட்டும் கொடுத்து நீங்கள் வீட்டிற்குச் செல்லுங்கள் இந்த விபூதி உங்களுக்குச் சேர வேண்டிய பொருளாக மாறும் எனக் கூறி பணியாளர்களை அனுப்பி வைத்தார். மறுநாள் காலை பணியாளர்கள் வீட்டில் அவர்களுக்கு சேர வேண்டிய கூலித்தொகை விபூதி இருந்த இடத்தில் பொற்காசுகளாக மாறி இருந்தது. இந்த விஷயத்தை செவி வழித் தகவல்களாக சொல்லி வருகின்றனர். கார்த்திகை மாத சோமவாரங்களில் இறைவனுக்கு 108 சங்காபிஷேகம் நடைபெறும். மார்கழி மாதம் முழுவதும் சூரியோதயத்திற்கு முன் அபிஷேக ஆராதனைகளும் நடைபெறும். தை பூசத்தன்று சிறப்பு ஆராதனைகளும் அன்னதானமும் நடைபெறும். அட்சய திருதியை அன்று திருக்கல்யாண மகோத்சவமும் இறைவன் இறைவி வீதியுலா திருவிழாவும் நடைபெறும். இந்த ஜோதிர்லிங்கேஸ்வரரையும் ஜோதீஸ்வரியையும் வணங்கி வேண்டுவதால் நம் வாழ்வு ஜோதிமயமாகத் திகழும் என பக்தர்கள் நம்புவது உண்மையே!

ஜெயவண்ணன்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • FallFoilageWorld

  உலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்

 • WillaHurricaneMexico

  மெக்சிகோவை மிரட்டவிருக்கும் வில்லா புயல்: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

 • italyrain

  இத்தாலியில் பெய்த ஆலங்கட்டி மழை : பனிக்கட்டிகள் இறுகி பாறை போல் காட்சியளித்த சாலைகள்

 • 23-10-2018

  23-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • longestseabridge

  உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்