SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மகத்தான வாழ்வருள்வார் மகாராஜேஸ்வரர்!

2017-12-09@ 10:23:39

நம்ம ஊரு சாமிகள் - சித்தூர், வள்ளியூர், நெல்லை.

திருநெல்வேலி மாவட்டம் சித்தூர் கிராமத்தில் கோயில் கொண்டுள்ள மகாராஜேஸ்வரர், தன்னை கை தொழும் பக்தர்களுக்கு மகத்தான வாழ்வு அருள்கிறார்.
பந்தள ராஜாவின் மகன் ராஜராஜன், அண்ணன் மணிகண்டன் என்னை விட்டு பிரியக் காரணமான, நாடாளும் அரியனை எனக்கு வேண்டாம். அரண்மனை வாழ்க்கையும் வேண்டாம். மனம்போன போக்கில் பயணிக்கப் போகிறேன். எனக்கென்று ஓர் இடம் அமையும் அவ்விடம் தேடிச் செல்கிறேன் என்று கூறிக்கொண்டு பெற்றோர் தடுத்தும், செவிமடுக்காமல் புறப்பட்டார். பாண்டிய நாடான நெல்லைச் சீமையில் வள்ளியூர் அருகேயுள்ள ராதாபுரம் தாலுகாவிற்குட்பட்ட கண்ணநல்லூர் கிராமத்தில் சித்தூரில் நம்பி ஆற்றின் தென்கரையில் மணல்திட்டில் வந்தமர்ந்தார். நம்பி ஆறு மகேந்திரகிரி மலையின் வடமேற்குப் பகுதியிலுள்ள பஞ்சவடி பகுதியில் உற்பத்தியாகி, திருக்குறுங்குடி மலையிலுள்ள நம்பிக் கோயில் முன்பாக நீரோடையாக பாய்ந்து திருக்குறுங்குடி, ஏர்வாடி, சிறுமளஞ்சி வழியாக சித்தூர் வந்து ஆற்றாங்கரைபள்ளி வாசல் பகுதியில் கடலில் சேர்கிறது.

இந்த நம்பி ஆற்றின் தென்கரையில் வந்து அமர்ந்த ராஜராஜன், தனது அண்ணன் மணிகண்டனை நினைத்து தியானம் செய்தார். அரிஹரசுதன் அய்யப்பன் அவரிடத்தில் உன்னுள் நான் கலந்தேன். உன்னை தரிசிப்பவர்கள் உன்னில் என்னைப் பார்க்கலாம் என்றுரைத்தார், அசரீரியாக. வெட்டவெளிப் பகுதியான கானகத்தில் ஆற்றின் கரையோரம் மணல் குவிந்திருந்த சற்று உயர்ந்திருந்த இடத்தில் அமர்ந்திருந்தார் ராஜராஜன். ராஜராஜன் தான் இங்கே அமர்ந்திருப்பதை ஊரறிய, உலகறியச் செய்ய வேண்டும் என்று எண்ணினார். அந்த நேரம் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு தேரோட்டம் நடத்த வேண்டும் அதற்கு கொடிமரம் வேண்டும் என்று முடிவெடுத்தவர்கள். கொடிமரம் வெட்ட மூன்று குழுவாக பிரிந்து மூன்று மலைகளில் மரம் வெட்ட செல்கிறார்கள். ஒரு குழுவினர் காக்காச்சி மலைக்கு மரம் வெட்ட செல்கின்றனர். ஒரு குழுவினர் சொரிமுத்தய்யன் கோயிலுக்கு மேற்கே காரையார் பகுதிக்குட்பட்ட கன்னடியான் சோலைக்கு செல்கின்றனர். இன்னொரு குழுவினர் திருக்குறுங்குடி மலைக்கு மேற்பரப்பில் வெட்ட செல்கின்றனர்.

திருக்குறுங்குடி மலைப்பகுதியில் கொடிமரத்திற்காக வெட்டப்பட்ட மரத்தை நம்பி ஆற்றில் விடுகின்றனர். அம்மரம் தண்ணீரில் அடித்து வரப்படுகிறது. சித்தூர் வந்ததும், ராஜராஜன் சிலையாக நிலையம் கொண்டிருக்கும் பகுதி அருகே ஆலமரம் வேர் தட்டி நிற்க, மரத்தின் பின் தொடர்ந்த வந்தவர்கள் எவ்வளவோ முயற்சித்தும் முடியாமல் போனது. மரம் நகரவே இல்லை. இதுகுறித்து திருச்செந்தூர் சென்று கோயில் நிர்வாகிகளிடம் எடுத்து கூறுகின்றனர். அவர்கள் கேரள நம்பூதிரிகளை வரவழைத்து பிரசன்னம் பார்க்கின்றனர். அப்போது சித்தூரில் நிலையம் கொண்டிருப்பது அந்த அய்யப்பனின் தம்பி ராஜராஜர் என்றனர். அவருக்கு உரிய பூஜை செய்தபின் முயற்சியுங்கள் காரியம் வெற்றியாகும் என்றனர். பூஜை செய்யும் விதம்பற்றிக் கூறியவர்கள், ராஜராஜர் என்பதை தெய்வாம்சம் கொண்டவர் என்பதால் ராஜராஜ ஈஸ்வரர் என்றும் மகாராஜஈஸ்வரர் என்றும் அழைத்து வழிபடுமாறு கூறினார்.

அதுவே மகாராஜேஸ்வரர் என அழைக்கப்படலாயிற்று. நம்பூதிரிகள் சொன்னபடி பூஜை செய்தும் மரம் நகரவில்லை. அன்றிரவு திருச்செந்தூர் கோயில் நிர்வாகிகளின் கனவில் வந்த சண்முகர் இங்கிருக்கும் வேல் ஒன்றை கொண்டு சென்று ராஜேஸ்வரர் சந்நதியில் வைத்துவிட்டு, உனக்கு கோயிலுண்டு, விழா உண்டு, தேரும் உண்டு என்று கூறிவிட்டு மரத்தை தட்டு, மரம் தானே வந்து சேரும் என்று கூற, அதன்படியே அவர்கள் சித்தூர் வந்து மகாராஜேஸ்வரர் சிலையின் வலது கையில் வேல் கொடுத்தனர். பின்னர் நடந்த பூஜையின்போது ஐயா, உனக்கு கோயில் உண்டு, நித்திய பூஜை உண்டு, விழா உண்டு அத்தாந்தர காடானாலும் உத்திரத்தில் ஊர் கூடும். அப்போது தேர் ஓடும் என்று உத்திரவாதம் கொடுத்துள்ளனர். அதன் பின்னரே மரம் தங்கு தடையின்றி சென்றது.

இதன் காரணமாகத்தான் திருச்செந்தூர் மாசித்திருவிழா கொடியேற்றம் அன்று சித்தூர் மகாராஜேஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திர தேரோட்டத்திற்கு கால் நாட்டப்படுகிறது. பத்து நாட்களுக்கு முன்னால் கொடியேற்றம் நடைபெற வேண்டிய விதிகளுக்கு மாறாக ஒரு மாதத்திற்கு முன்னாடியே சித்தூர் கோயிலில் கால் நாட்டக்காரணம். திருச்செந்தூரில் தேர் திருவிழா சிறப்பாக நடைபெற மகா ராஜேஸ்வரர் சாந்தமாகி துணையிருக்க வேண்டும் என்பதற்குத்தான் என்று கூறப்படுகிறது. வள்ளியூரிலிருந்து சுமார் 14 கி.மீ தூரத்திலுள்ள சித்தூர் கோயில் கேரள மரபுப்படி கட்டப்பட்டிருக்கிறது. கோயிலைச்சுற்றி 22 அடி உயரத்திற்கு சுற்றுச்சுவர் உள்ளது. கோயிலின் கருவறை கிழக்கு நோக்கி உள்ளது. வடக்கு வாசல் நம்பி ஆற்றைப் பார்த்து உள்ளது. மகாராஜேஸ்வரர், கேரளாவைச் சேர்ந்த அதிகமானோர்களுக்கு குல தெய்வமாக திகழ்கிறார். குமரி, நெல்லை, தூத்துக்குடி, மதுரை, சென்னை போன்ற பல ஊர்களில் பரவலாக இந்தக் கோயிலுக்கு பாத்தியப்பட்டவர்கள் உள்ளனர். இக்கோயிலின் தல விருட்சமாக மருதாணி மரம் உள்ளது. அதன் கீழ் பேச்சியம்மன் சந்நதி உள்ளது. மூலவர் மகாராஜேஸ்வரரை அடுத்து பிரசித்து பெற்றவராக தளவாய்மாடசாமி உள்ளார். அவர் இத்தலத்திற்கு  வந்தது எப்படி அடுத்த இதழில்…

சு. இளம் கலைமாறன்

படங்கள்: வள்ளியூர் ந.கண்ணன்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-01-2018

  18-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • indhiya_japann11

  இந்தியா - ஜப்பான் கடலோர காவல் படை இணைந்து நடத்திய கூட்டுப்பயிற்சி !!

 • raanuvapayirchii11

  70வது ராணுவ தினம் : பல்வேறு சாகச பயிற்சிகளில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்

 • prime_ashram11

  சபர்மதி ஆசிரமத்தில் இருந்த ராட்டையை சுழற்றிய இஸ்ரேல் பிரதமர் : பட்டம் பறக்கவிட கற்றுக் கொடுத்த மோடி

 • indhiya_isreal11

  தீவிரவாத தாக்குதலில் பெற்றோரை இழந்த இஸ்ரேல் சிறுவன் மோஷே 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வருகை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்