SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கல்யாண மேளம் கொட்டும்!

2017-12-07@ 13:55:14

என் இரு மனைவிகளுக்கும் பிறந்த பெண் குழந்தைகள் என்னோடு தொடர்பில் உள்ளார்கள். என் முதல் மனைவிக்கு பிறந்த என் மகன் மட்டும் தொடர்பில் இல்லை. ஆறு ஆண்டுகளாக அமெரிக்காவில் தன் குடும்பத்துடன் வசித்து வரும் அவரது முகவரி, தொடர்பு எண் எதுவும் தெரியாது. உறவினர்களிடம் தொடர்பில் உள்ள அவர் என்மீது என்ன குறைகண்டார் என்று தெரியவில்லை. இந்நிலை மாறுமா? இராம. கார்த்திகேயன், மயிலாடுதுறை.

உத்திராட நட்சத்திரம், தனுசு ராசி, கன்னியா லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகத்தின்படி தற்போது குரு தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் தகப்பனாரைப் பற்றிச் சொல்லும் ஒன்பதாம் வீட்டில் கேது அமர்ந்துள்ளார். ஒன்பதாம் இடத்திற்கு அதிபதியான சுக்கிரனும், பிதுர்காரகன் சூரியனும் ராகுவுடன் இணைந்து மூன்றாம் வீட்டில் அமர்ந்துள்ள நிலையும் தனது தந்தையை விட்டு அவரைப் பிரித்திருக்கிறது. 12வது வயதில் தான் சந்தித்த சம்பவத்தின் காரணமாக மனநிலையில் உண்டான தாக்கம் அவரை இந்நிலைக்கு ஆளாக்கி உள்ளது. வயதாக வயதாகத்தான் அறிவில் முதிர்ச்சி வந்துசேரும் என்பார்கள். அவரது வாழ்வில் அவர் எதிர்கொள்ள உள்ள சம்பவங்கள் அவரது மனநிலையை மாற்றும். முதலில் தனது சகோதரிகளிடம் உறவுமுறையைப் புதுப்பித்துக்கொண்டு கொஞ்சம், கொஞ்சமாக உங்களை நாடி வருவார். 01.11.2021 வரை பொறுத்திருங்கள். அதன் பின்னரே அவர் உங்களை நாடி வருவதற்கான கால நேரம் கூடிவரும். மகன் உங்களை நாடி வந்தவுடன் பழனி மலைக்கு வந்து முடி காணிக்கை செலுத்துவதாக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். பிள்ளைப்பாசம் வெற்றி பெறும்.

வெளிநாட்டில் வேலை செய்யும் என் மகனுக்கு நான்கு ஆண்டுகளாக பெண் தேடியும் கிடைக்கவில்லை. முடிவாகும் நேரத்தில் ஏதாவது தடங்கல் வருகிறது. எனது கணவரின் அண்ணன் திருமண வயதில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். என் மகன் பிறந்ததும் முருகனுக்கு காவடி எடுப்பதாக வேண்டி இதுவரை செய்யவில்லை. அவனது திருமணத் தடைக்கு இவைதான் காரணமா? ஹேமாவதி, ஆம்பூர்.

அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, மிதுன லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகளின் ஜாதகத்தின்படி தற்போது சந்திர தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகப்படி அவர் வெளிநாட்டில் வேலை செய்வதுதான் நல்லது. திருமணத்திற்காக அவரது வேலையை மாற்றிக் கொள்ள வேண்டாம். உங்கள் பிள்ளையின் ஜாதகத்தில் ஏழாம் இடத்திற்கான அதிபதி குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதும், ஏழாம் வீட்டில் செவ்வாய் அமர்ந்திருப்பதும் 31 வயது வரை திருமணம் ஆகாமல் தடை செய்து வருகிறது. மகன் பிறந்ததும் செய்வதாக வேண்டிக்கொண்ட நேர்த்திக்கடனை இதுவரை செய்யாமல் இருப்பது முற்றிலும் தவறு. உங்கள் பிரார்த்தனையை முதலில் நிறைவேற்றுங்கள்.

மேலும், உங்கள் கணவரின் அண்ணன் திருமண வயதில் தற்கொலை செய்து கொண்டதும் வம்சத்தினை பாதிப்பதற்கான வாய்ப்பு உண்டு. தர்மசாஸ்திரம் அறிந்தவர்களை அணுகி, ‘நாராயணபலி’ என்று அழைக்கப்படும் சடங்கினைப் பற்றி அறிந்து கொண்டு, அதனை முறையே செய்துமுடித்து துர்மரணத்தால் இறந்தவரின் ஆத்மாவினை சாந்தியடையச் செய்யுங்கள். 17.02.2018க்குப் பின் அவரது திருமணம் முடிவாகிவிடும். காவடி எடுத்த கையோடு கந்தனிடமே உங்கள் பிரார்த்தனையை வையுங்கள். கல்யாண மேளம் விரைவில் கொட்டும்.

நாங்கள் ஏழ்மையான குடும்பம். என் மகளுக்கு கடந்த மூன்று வருடங்களாக மன ரீதியாக பிரச்னை உள்ளது. சுயநினைவு கிடையாது. டாக்டர் தந்த மருந்தினாலும் குணமாகவில்லை. பிரச்னை தீர எளிமையான பரிகாரம் கூறவும். எப்போது திருமணம் நடைபெறும்? சாரதா.


உத்திர நட்சத்திரம், சிம்ம ராசி, கடக லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகளின் ஜாதகப்படி தற்போது ராகு தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் குருவும், கேதுவும் சனியின் சாரத்தில் இணைந்திருப்பது மனநிலையில் மாற்றத்தை உண்டாக்கி இருக்கிறது. மனநிலை சரியில்லாத மகளுக்கு மணவாழ்வு எப்போது அமையும் என்று எதிர்பார்க்கும் உங்கள் தாயுள்ளம் புரிகிறது. 27 வயதாகும் உங்கள் மகளுக்கு திடீரென்று மனநிலையில் மாற்றம் உண்டானதற்கான காரணம் என்ன என்பதை நீங்கள் நன்றாக அறிந்திருப்பீர்கள்.

அவர் சந்தித்த ஏமாற்றம் அவரை இந்த நிலைக்கு ஆளாக்கி உள்ளது. பெற்றோரால் மட்டுமே அவரது மனநிலையைப் புரிந்துகொள்ள முடியும். உங்களுடைய அன்பும், அரவணைப்பும்தான் அவரது மனநிலையை மாற்றும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். மணவாழ்வினைப்பற்றி எண்ணாது மகளின் மனநிலை முன்னேற்றம் காண வேண்டும் என்பதே உங்களது முழுநேரப் பிரார்த்தனையாக அமைய வேண்டும். சனிக்கிழமை தோறும் அருகிலுள்ள ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு உங்கள் மகளை அழைத்துச் செல்லுங்கள். அவரது கையால் விளக்கேற்றி வைக்க முயற்சியுங்கள். கீழேயுள்ள ஸ்லோகத்தினைச் சொல்லி அனுமனிடம் பிரார்த்தனை செய்ய உங்கள் மகளின் மனநிலையில் முன்னேற்றம் காண்பீர்கள்.

“மனோஜவம் மாருத துல்ய வேகம் ஜிதேந்த்ரியம் புத்திமதாம்வரிஷ்டம்
 வாதாத்மஜம் வானரயூத முக்யம் ஸ்ரீராம
தூதம் சிரஸா நமாமி.”


பத்தொன்பது வயதில் காது முழுவதும் கேளாமல் போய்விட்டது. 42வது வயதில் திருமணம் நடந்து 50வது வயதில் மனைவி மரணம் அடைந்துவிட்டார். பிள்ளைகள் இருவருக்கும் நல்ல கல்வியினை அளித்து திருமணமும் செய்து வைத்துவிட்டேன். தற்போது எனக்கு பல வகையிலும் மனஅமைதி இன்மையும், அவமானமும் ஏற்பட்டுள்ளது. எனது கடைசிக்காலம் நல்லபடியாக அமைய நான் என்ன செய்ய வேண்டும்? பரமசிவன், தூத்துக்குடி.

வாலிப வயதிலேயே காது கேட்கும் திறனை முழுவதுமாக இழந்தும், தன்னம்பிக்கையை இழக்காமல் வாழ்க்கையில் வெற்றி பெற்றிருக்கிறீர்கள். இதைவிட வேறு சாதனையும் உண்டோ? மனைவியை இழந்த நிலையிலும், தனியொரு மனிதனாக பிள்ளைகளைப் படிக்க வைத்து அவர்களுக்கு திருமணமும் செய்து வைத்திருக்கிறீர்கள். இன்னமும் என்ன குறை? உத்திராடம் நட்சத்திரம், மகர ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தில் தற்போது சனி தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. உணர்ச்சிமயமான வயதிலேயே தனது உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, தான் சந்தித்த அவமானங்களைப்பற்றி எண்ணாது தனது கடமையில் மட்டும் கண்ணாக இருந்த உங்களுக்கு தற்போது செய்ய வேண்டிய கடமைகள் முடிந்ததும் அவமானம் மட்டும் கண்ணில் தெரிகிறது.

கடமையைச் செய், பலனை எதிர்பாராதே என்ற பகவத்கீதையின் சாரத்தை மனதில் உள்வாங்கிக் கொள்ளுங்கள். நீங்கள் ஆற்றிய கடமைக்கு உரிய பிரதிபலனை எதிர்பார்க்காதீர்கள். பலனை எதிர்பார்த்து, அது நிறைவேறாத பட்சத்தில் மனம் அதனை அவமானமாகக் கருதுகிறது. இதனால் மனஅமைதி கிடைக்காமல் போகிறது. இயற்கையாகவே மற்றவர்கள் பேசுவது உங்கள் காதுகளுக்கு கேட்கப் போவதில்லை. பிறகு ஏன் அடுத்தவர்கள் பேசுவதை அவமானமாகக் கருதுகிறீர்கள். தினமும் காலையில் கந்த சஷ்டி கவசம் படித்து வாருங்கள். 22.03.2018 முதல் உங்கள் மனநிலையில் மாற்றத்தை உணர்வீர்கள்.

என் மகன் கடந்த மூன்று ஆண்டுகளாக தண்டுவட பாதிப்பின் காரணமாக நடக்க இயலாமல் இருக்கிறான். நாங்கள் ஏழைகள். இருப்பினும் எங்களால் முயன்ற அளவு செலவு செய்தும், தர்ம ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. இதற்கு ஒரு பரிகாரம் சொல்லவும். நளினி, புதுவண்ணை.

சதயம் நட்சத்திரம், கும்ப ராசி, கடக லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகத்தில் தற்போது சனிதசையில் குரு புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தில் ஜென்ம லக்னாதிபதி சந்திரன், ராகுவுடன் இணைந்து ஆயுள் ஸ்தானம் ஆகிய எட்டாம் இடத்தில் அமர்ந்துள்ளது பலவீனமான நிலை ஆகும். தண்டுவடத்தின் மீது தனது ஆதிக்கத்தினை செலுத்தும் சூரியனும் ஆறாம் இடத்தில் அமர்ந்து இந்தப் பிரச்னையைத் தோற்றுவித்துள்ளார். சனி தசையில் ராகு புக்தி நடந்து வந்த நேரத்தில் உண்டான விபத்தில் அடிபட்டுள்ளார். உயிருக்கே ஊறு விளைய வேண்டிய காலத்தில் இறைவன் இவரை உயிர்பிழைக்க வைத்திருக்கிறார் என்றால் ஏதோ ஒரு காரணம் அதன் அடிப்படையில் உள்ளது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

மனம் தளராது மருத்துவர்கள் சொல்லும் ஆலோசனையை கடைபிடித்து வாருங்கள். தினமும் காலை, மாலை இருவேளையும் சூரிய ஒளி ஒரு மணி நேரத்திற்கு இவரது முதுகின் மீது விழும்படியான ஏற்பாட்டினைச் செய்யுங்கள். பிரதி ஞாயிறுதோறும் திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று ஈஸ்வர சந்நதியில் நான்கு விளக்குகள் ஏற்றி வைத்து மனதாற பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். கீழேயுள்ள ஸ்லோகத்தினைச் சொல்லி வணங்கி வருவதும் நல்லது. 22.05.2019 முதல் உங்கள் பிள்ளை முற்றிலுமாக குணமடைவார்.

“ம்ருத்யுஞ்ஜய மஹாதேவ த்ராஹி மாம்
சரணாகதம்
 ஜன்ம ம்ருத்யு ஜராரோகை: பீடிதம் கர்மபந்தனை:”

 
எனது அண்ணன் பி.ஈ., முடித்து நான்கு வருடங்கள் ஆகியும் வேலை கிடைக்கவில்லை. அவரைவிட இளையவருக்கு வேலை கிடைத்து விட்டதால் உறவினர்களின் விமர்சனத்திற்கு ஆளாகி உள்ளோம். இதனால் எனது தாய் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி மாத்திரை சாப்பிட்டு வருகிறார். என் அண்ணனுக்கு வேலை கிடைக்க உரிய பரிகாரம் சொல்லுங்கள். நந்தினி, நாமக்கல்.

உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, மிதுன லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் அண்ணனின் ஜாதகத்தில் தற்போது கேது தசையில் செவ்வாய் புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தில் உத்யோகத்தைக் குறிக்கும் பத்தாம் இடத்திற்கு அதிபதி குரு பகவான் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் உத்யோகம் கிடைப்பது தாமதமாகி வருகிறது. எனினும் ஜென்ம லக்னாதிபதி புதனும், தன ஸ்தானாதிபதி சந்திரனும் ஒன்றாக இணைந்து ஜீவன ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது பலமான நிலையே. அவர் படிப்பு சார்ந்த உத்யோகமே அவருக்கு கிடைக்கும். துறைமுகம் மற்றும் கடல் சார்ந்த துறையில் அவரது உத்யோகம் அமைந்துவிடும்.

அரசுப் பணிக்காக காத்திருக்காமல் முதலில் கிடைக்கின்ற தனியார் வேலையில் சேரச் சொல்லுங்கள். 09.01.2018க்குள் தனியார் நிறுவனம் ஒன்றில் உத்யோகம் கிடைத்துவிடும். இவரது தனித்திறமையும், பணியில் இவரது ஈடுபாடும் உத்யோக ரீதியாக இவரை உயரத்திற்கு அழைத்துச் செல்லும். தனியார் நிறுவனமாக இருந்தாலும் அங்கிருந்து இவர் படிப்படியாக முன்னேற இயலும். ஏதேனும் ஒரு புதன்கிழமை நாளில் திருச்சி ஸ்ரீரங்கம் சென்று அரங்கநாதப் பெருமாளை தரிசித்து பிரார்த்தனை செய்துகொள்ளச் சொல்லுங்கள். கீழேயுள்ள ஸ்லோகத்தினைச் சொல்லி தினமும் அரங்கனை மனதாற வணங்கிவர விரைவில் உத்யோகம் வந்து சேரும்.

“லக்ஷ்மீ நிவாஸே ஜகதாம் நிவாஸே ஹ்ருத்பத்மவாஸே ரவிபிம்ப வாஸே
 க்ருபா நிவாஸே குணவ்ருந்தவாஸே ஸ்ரீரங்கவாஸே ரமதாம் மநோ மே.”


அறுபத்தோரு வயதாகும் நான் இலங்கையில் பிறந்தவன். அரசு உத்யோகத்தில் இருந்து ஓய்வுபெற்ற பின் தற்போது பெட்டிக்கடை வைத்து பிழைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் நிம்மதி இல்லை. எங்கு போய் ஜாதகம் பார்த்தாலும் குலதெய்வத்தை கும்பிடச் சொல்கிறார்கள். குலதெய்வம் எதுவென்று தெரியாமல் கஷ்டப்படும் எனக்கு வழிகாட்டுங்கள். மாரிசன் மோகன்ராஜ், கூடலூர்.


ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, மீன லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தின்படி தற்போது சனி தசையில் செவ்வாய் புக்தி துவங்கி உள்ளது. கடந்த இரண்டு தலைமுறையாக குலதெய்வ வழிபாட்டினைத் துறந்திருக்கும் உங்கள் குடும்பத்திற்கு இப்போது நல்ல நேரம் பிறந்துள்ளது. உங்கள் ஜாதகத்தின்படி ஒன்பதாம் இடத்திற்கு அதிபதி செவ்வாய் என்பதாலும், ஒன்பதாம் வீட்டில் சனிராகு இணைந்திருப்பதாலும் ஏதோ ஒரு காட்டுப் பகுதியில் உங்களுடைய குலதெய்வத்தின் ஆலயம் அமைந்துள்ளது. கையில் ஆயுதத்துடன் அமர்ந்திருக்கும் ஆண் தெய்வமே உங்கள் குலதெய்வம். குறிப்பாக அந்த ஆலயத்தில் பூக்குழி இறங்குதல் என்று அழைக்கப்படும் தீமிதித் திருவிழா நடைபெறும்.

இந்த அடையாளங்களைக் கொண்டு உங்கள் தந்தை குறிப்பிட்டுச் சென்ற பகுதியில் காட்டுப் பகுதியில் விசாரித்துப் பாருங்கள். அதிகபட்சமாக 24.12.2018க்குள் உங்கள் குலதெய்வத்தினை கண்டுபிடித்துவிடுவீர்கள். அந்த ஆலய வளாகத்திற்குள் சென்றவுடன் சொந்த வீட்டில் அமர்ந்திருப்பதைப் போன்ற உள்ளுணர்வையும், இதுவரை கண்டிராத ஆனந்தத்தையும் உணர்வீர்கள். சபரிமலைக்கு மாலை அணிந்து விரதமிருக்கும் ஐயப்ப பக்தர்களுக்கு உங்களால் இயன்ற அன்னதானத்தினை சனிக்கிழமைகளில் செய்து வாருங்கள். சாஸ்தாவின் அருளால் வெகுவிரைவில் உங்கள் குலதெய்வ வழிபாடு நிகழ்ந்துவிடும். உங்கள் வாரிசுகளும் அதனை சிறப்பான முறையில் தொடர்வார்கள்.

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா் வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா்

வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை, பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் தினகரன் ஆன்மிக மலா் 229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம். பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-10-2018

  23-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • longestseabridge

  உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

 • delhi_strikepetrol18

  டெல்லியில் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்: கால் டாக்சி, ஆட்டோ சேவைகள் முடக்கம் !

 • solarcar_race

  சூரிய மின்சக்திகளால் இயங்கும் கார்களுக்கான பந்தயம் சிலி நாட்டில் கொண்டாட்டம்!

 • hondurans_americatrump

  ஹோண்டராஸில் இருந்து அமெரிக்கா நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அகதிகள் !

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்