SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொன், பொருள் தந்தருள்வார் தென்கரை மகாராஜா

2017-12-02@ 10:24:26

நம்ம ஊரு சாமிகள் - சித்தூர், வள்ளியூர், நெல்லை.

திருநெல்வேலி மாவட்டம் சித்தூர் கிராமத்தில் கோயில் கொண்டுள்ள தென்கரை மகாராஜா, நம்பி வரும் பக்தர்களுக்கு பொன், பொருள் வழங்கி கஷ்ட  நஷ்டங்களை களைந்து வாழ்வை வளமாக்கி வைக்கிறார். பந்தள நாட்டு மன்னன் ராஜசேகரன் ஒருநாள் உதவியாளர்கள் சிலருடன் வேட்டைக்கு வந்திருந்தார்.  பம்பாநதி கரையோரமாக வந்தபோது நந்தவன செடிகள் நிறைந்த பகுதி அருகே அவரது குதிரை நின்றது. அதற்குமேல் மன்னன் முயற்சித்தும் குதிரை நகரவே  இல்லை. சினம் கொண்டு குதிரையின் மேலிருந்து இறங்கினான், மன்னன். அப்போது சிசுவின் குரல் அவனது செவிகளில் கேட்டது. குரல் கேட்டு  அந்த  இடத்துக்கு சென்ற மன்னன் வியந்தான். அழகான ஆண்குழந்தை. மகிழ்ந்தான். கையிலெடுத்து முத்தமிட்டான். குழந்தை இல்லாமல் ஏங்கிய தனக்கு தெய்வம்  கொடுத்த குழந்தை என்பதை உணர்ந்தான்.

மன்னரின் மனமறிந்து மகிழ்ந்தனர் உடன் வந்த வீரர்கள். குழந்தையுடன் அரண்மனைக்கு விரைந்தான் ராஜசேகரன். பட்டத்து ராணி கோப்பெரும்தேவியிடம்  நடந்ததைக் கூறினான். ராணி குழந்தையை எடுத்து வாரி அணைத்துக் கொண்டாள். குழந்தை இல்லாத குறையை போக்க வந்த தெய்வீக குழந்தை என்ற  பெருமகிழ்வு கொண்டாள். குழந்தையின் கழுத்தில் மணிமாலை இருந்ததால். கண்டத்தில் மணி அணிந்திருந்த குழந்தை என்பதால் மணிகண்டன் என பெயரிட்டு  வளர்த்து வந்தனர். அனைவரிடமும் அன்போடும் பரிவோடும் நடந்து கொண்டான், மணிகண்டன். மகன் மீது அளவற்ற பாசம் வைத்திருந்தாள் ராணி  கோப்பெரும்தேவி. மணிகண்டனுக்கு வயது பதிமூன்று தொடங்கியது. கல்வி மற்றும் அனைத்து கலைகளையும் கற்க குருகுலத்திற்குச் சென்றான்.

ஒரு குழந்தையை வளர்த்ததன் பலன் ராணிகோப்பெரும்தேவிக்கு இறைவன் அருளால் குழந்தை பாக்யம் கிட்டியது. தான் கருவுற்றிருந்ததை மன்னனிடம் கூற,  இருவரும் மகிழ்ச்சி அடைந்தனர். ராணிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு ராஜராஜன் என பெயரிட்டனர். தம்பி மீது மணிகண்டன் பிரியமாக இருந்தான்.  ராஜராஜனும் அண்ணன் மணிகண்டனை உயிருக்கு உயிராக மதித்தான். மணிகண்டனுக்கு முடிசூட்ட எண்ணினார் பந்தளராஜா. இதற்கு எதிராக ராணியின்  உறவினரான ஒரு அமைச்சர் சதி செய்தார். தனது எண்ணோட்டத்தை ராணியிடம் கூறினார். காட்டில் கண்டெடுத்த பிள்ளை அரசாள வேண்டுமா?, உன் வயிற்றில்  பிறந்த பிள்ளை அரசாள வேண்டுமா என கேள்வி எழுப்பியவர், மணிகண்டன் இருக்கும் வரை இந்த பிரச்சனைக்கு முடிவு இல்லை. ஆகவே அவனை விரட்ட  வேண்டும். இல்லையேல் தீர்த்து கட்ட வேண்டும் என்று முடிவு செய்து, அரண்மனை வைத்தியரின் மூலம் ஒரு நாடகத்தை அரங்கேற்றினர்.

அந்த நாடகத்தின்படி ராணி கோப்பெரும்தேவி வயிற்று வலியால் துடிக்க, அரண்மனை வைத்தியரின் ஆலோசனைப்படி புலிப்பால் இருந்தால்தான் வலியை  குணமாக்க முடியும் என்ற நிலை உருவானது. தாயின் மீதிருந்த பாசத்தாலும், தான் அவதரித்த நோக்கத்திற்காகவும், தந்தை பந்தள மன்னன் தடுத்தும் புலிப்பால்  கொண்டு வர காட்டிற்கு விரைந்தார். புலி கூட்டத்துடன் அரண்மனைக்கு வந்தார். தான் யார் என்பதை உணர்த்தினார். தெய்வீகத்தன்மையுடன் ஹரிஹரன் தனது  மகனாக தன் மடியில் தவழ்ந்தானா! அமைச்சரின் பேச்சைக்கேட்டு தவறு இழைத்துவிட்டேனே என்று தப்பை உணர்ந்த ராணி, ஓடிவந்து மணிகண்டனிடம்  மன்னிப்பு கோரினாள்.

மணிகண்டன் ‘‘அம்மா, நீங்கள் என்னைப் பெறாவிட்டாலும், வளர்த்தெடுத்த தாயல்லவா, மகனிடத்தில் மன்னிப்பு கேட்கலாமா? என்று கூறினார். மன்னன்  ராஜசேகரனோ, ‘‘நடந்தது நடந்தாகட்டும். மணிகண்டா, நீ, இனி எங்களோடு இருந்து இந்த நாட்டை ஆள வேண்டும்’’ என்று கூறினார். அதற்கு மணிகண்டன்,  தான் வந்த நோக்கம் முடிந்தது. தந்தையே எனக்கு நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால், உங்கள் ராஜ்யத்துக்குட்பட்ட எல்லையில் ஓர் இடம்  கொடுங்கள். என்று கேட்க, உனக்கு எந்த இடம் வேண்டுமோ அதை நீ விரும்பியபடியே எடுத்துக்கொள். இந்த ராஜ்யமே உனக்குச் சொந்தம் என்றார், மன்னர்.  அப்போது மணிகண்டன் நான் இங்கிருந்து அம்பு எய்கிறேன். அது எங்கு போய் விழுகிறதோ அங்கே எனக்குக் கோயில் எழுப்புங்கள் என்று கூறிய மணிகண்டன்,  அம்பு எய்தார். அந்த இடத்தில் கோயில் கட்டப்பட்டது. அது தான் சபரிமலை.

வளர்த்த மைந்தன் மணிகண்டன் ஜோதியாகி தெய்வமானான். பிறந்த மகன் ராஜராஜன் இந்த நாட்டை ஆளட்டும் என்று மன்னன் ராஜசேகரனும், ராணி  கோப்பெரும்தேவியும் எண்ணிக்கொண்டிருக்கும் வேளையில் தாய், தந்தையே என்னை ஆசிர்வதியுங்கள் என்று கூறியபடி அவர்களின் பாதங்களை தொட்டான்  ராஜராஜன். ‘‘என்னதப்பா இந்தக் கோலம் முடிசூடி சிம்மாசனத்தில் வீற்றிருக்க வேண்டிய நீ, ஆபரணங்களை கழற்றி வைத்து விட்டு எங்கே செல்கிறாய்’’  என்று தாய் கேட்க, ‘‘தந்தையே, அண்ணன் மணிகண்டன் இல்லாத இந்த அரண்மனை வாழ்வு எனக்கு வேண்டாம். நான் நாடாள வேண்டும் என்பதற்காக தாயே  நீங்கள்  நடத்திய நாடகத்தால்தான் அண்ணன் நம்மை விட்டு விலகி சென்றான். அந்த நாடாளும் பாக்யம் எனக்கு வேண்டாம். நான் போகிறேன். கால் போன  போக்கில் பயணம் எனக்கென்று ஓர் இடம். சிறு வயதிலிருந்தே பயன்படுத்திய இந்த குதிரையுடன் செல்கிறேன்.’’

பெற்றவர்கள் தடுத்தும் நிற்காமல் அண்ணன் மணிகண்டன் நாமத்தை உரைத்தபடி அவ்விடத்திலிருந்து குதிரையில் பயணமானார் ராஜராஜன். பல ஊர்கள் கடந்து  பந்தள நாட்டு எல்லை விட்டு நாஞ்சில் நாடு கடந்து, பாண்டிய நாட்டிற்கு வந்தார் ராஜராஜன். நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி மலையில் உருவாகி ஓடும்  நம்பி ஆறு பாய்ந்தோடும் வள்ளியூர் அருகேயுள்ள ராதாபுரம் தாலுகாவிற்குட்பட்ட கண்ணநல்லூர் கிராமத்தில் சித்தூரில் நம்பி ஆற்றின் தென்கரையில்  மணல்திட்டில் வந்தமர்ந்தார் ராஜராஜன். எல்லாம் வேண்டாம் என்று வந்த போதும் அவரது உடையில் ராஜ தோற்றம் மாறவில்லை. ஆற்றில் சிறதளவே  வெள்ளம் வர அப்பகுதியில் மாடு மேய்த்துக்கொண்டிருந்தாள் இடைக்குல பெண்ணொருத்தி.

கன்று தென்கரைக்கு நிற்க, பசுவோடு மற்ற மாடுகளும் வடகரையில் நின்றது. அப்போது ஆற்றில் பெருவெள்ளம் வந்தது. இக்கரையில் நின்ற பசு கத்தியது.  அக்கரையில் நிற்கும் கன்று தாயிடம் வரமுடியாமல் தவித்தது. அப்போது அந்த இடைக்குல பெண் ஆற்றுக்கு தென்கரையில் இருக்கும் மகாராசா  கண்ணுக்குட்டியும், பசுவும் சேர வழி செய் ஐயா என்றுரைத்தாள். ராஜராஜன் அண்ணன் மணிகண்டனை நினைத்து தன் வலக்கரம் நீட்ட, ஆற்றின் நடுவே பாதை  கூட, அவ்வழியே கன்று ஓடி தாயிடம் சேர்ந்தது. மீண்டும் ஆற்றில் சீராய் வெள்ளம் ஓடியது. வியப்பை கண்ட அந்த பெண் தென்கரை மகாராசா என்று குரல்  எழுப்பி அழைக்க, தென் கரையில் இருந்தபடி ராஜராஜன் புன்னகைத்தார். கோயில் உருவானது எப்படி, சாஸ்தா கையில் வேல் இருப்பது ஏன்? அடுத்த இதழில்…

சு. இளம் கலைமாறன்

படங்கள்: வள்ளியூர் ந.கண்ணன்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-08-2018

  18-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • lastfinaldest111

  21 குண்டுகள் முழங்க தங்க நாற்கர சாலையின் நாயகனும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் உடல் தகனம்

 • finaldesti000

  மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்

 • kannirpeoplvaj

  மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு நாட்டு மக்கள் கண்ணீர் அஞ்சலி

 • bjpvajpai123

  டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடல் - பொதுமக்கள் அஞ்சலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்