SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அகங்காரம் அழிக்கும் அருணாசல அக்னி!

2017-12-02@ 09:52:16

திருவண்ணாமலை தீபம் - 2.12.2017

கௌதம மகரிஷியும், பார்வதியும் எதுவும் செய்யாமல் வெறுமே அருணாசலத்தையே பார்த்திருந்தனர்.  கௌதமர் கண்களை இமைப்பதில்லை. அது அவரது நிலை. கண்கள் இடதும் வலதும் ஓயாது அலையாது மையத்திலேயே இருந்தது.  ஒருமுறை அருணாசலத்தின் அடிவாரத்திலிருந்து ஒரு ரிஷி அவருக்கு அருகே அமர்ந்து அவரையே உற்றுப் பார்த்தபடி இருந்தார். புறப்படும்போது அடியார்களைப் பார்த்து, ‘‘இது என்ன நினைக்கிறது என்று கண்டுபிடிக்கவே முடியவில்லையே. இவர் பேசுகிறார் என்கிறீர்கள். இவர் சிந்திப்பதையே என்னால் பார்க்க முடியவில்லையே. உள்ளே யாரும் இல்லையே. நீங்கள் கேட்பது வெறும் எதிரொலி’’ என்று சூட்சுமமாக கூறிவிட்டு வணங்கி நகர்ந்தார். அடியார்கள் அதிர்ச்சியோடு கௌதமரை பார்த்தனர். அவர்கள் பக்குவிகளாக இருப்பதால் அந்த உயர்ந்த நிலையை புரிந்து கொண்டனர்.

அடியார்களுக்காக அவர்களின் நிலைக்கு இறங்கி விஷயங்களை விளக்குகிறார் என்றறிந்து அமைதியாயினர். கௌதமர் இம்முறை தானே சில விஷயங்களை பேசத் தொடங்கினார். ‘‘அடியார்களே... அருணாசல மகாத்மியம் என்பதே அஷ்டதிக் பாலகர்களோடு பூர்த்தியாவதில்லை. ஏனெனில், அஷ்டதிக் பாலகர்களும் மானிடத்தின் மீதும், பிரபஞ்சத்தின் மீதும் எப்படி ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதையே விவாதித்து வருகிறோம். மனதை புறவயமாக விரிக்கும் விஷயங்களை இந்த வெளிச் சக்திகள் எப்படிச் செய்கின்றன என்று பார்க்கிறோம். அதேசமயம், அருணாசலத்தின் அண்மையில் அவை எப்படி தங்களுடைய அதிகாரத்தை மெல்ல இழந்து சொந்த சொரூபத்தை நோக்கி நகர்கின்றன என்பதையும் கவனிக்கிறோம். மனம் என்றொன்று இருக்கும் வரையிலும் இவ்வுலகம் இருப்பது போல காட்டும். மனம் எப்படி இருக்கும்? அதற்கு அதிஷ்டானமாக பீடமாக நான் எனும் அகங்காரம் உள்ளுறையாக இருக்கும் வரையிலும் மனம் ஜீவித்தபடியே இருக்கும். எனவே, தன்னிச்சையாக எழும் அகங்காரத்தை மூலத்தில் நகர்த்தி ஒடுக்கிவிட்டால் உள்ளே வேறு யார் இருக்கப் போகிறார்கள்.

பார்ப்பவர் இருக்கும் வரையில் பார்க்கப்படும் வஸ்துவான உலகம் இருந்து கொண்டுதானே இருக்கும். கனவில் கூட உடல் சலித்துத் தூங்குகிறது. ஆனால், உள்ளுக்குள் இருப்பவர் விழித்துக் கொண்டவுடனேயே ஒரு உலகத்தை உருவாக்கி பார்த்தபடி இருக்கிறார். அப்போது உங்கள் புறக்கண்கள் மூடிவிட்டிருக்கின்றன. ஆனால், நீங்கள் பார்ப்பதோ ஒரு மாயா உலகத்தை. எப்படி இது சாத்தியம். எனவே, பார்ப்பவரை அறிந்துவிட்டால் போதும். அவரே அனைத்துமாகவும் இருக்கிறார். அதிலிருந்து தன்னைப் பிரித்துக் கொண்டு வேறுவேறாக பார்த்தபடியும் இருக்கிறார். ஆனால், தொடர்ந்து இந்த பிரமையை அளித்தபடி இருந்து கொண்டிருக்கிறார். எனவே, அகங்காரத்தை நாசம் செய்து பரப்பிரம்மமான மூலத்தோடு கலக்க வேண்டும். அதையே இந்த அருணாசலம் செய்கிறது. இப்போது நான் சொல்ல வருவது என்னவெனில், இந்த அருணாசலத்திற்கு அருகே எவரெவர் நெருங்கி வருகின்றனரோ அவரின் அகங்காரத்தை நேருக்கு நேராக நின்று மோதிச் சிதைக்கிறது.

அதை அறியாவிட்டாலும் அறிந்தாலும் இது நடந்தே தீரும். இதையேதான் மீளமீள பிரம்மாவும், விஷ்ணுவும் என்கிற இரு சக்திகள் அகங்கரித்து ஈசனை காணப் புறப்பட்டதாக புராணம் கூறுகிறது. இந்த அடிமுடியை தேடுதல் என்பதே புறவயம் சார்ந்த ஆன்மிகத் தேடலின் அயர்ச்சியையும், உள்முகத் தேடலிலுள்ள முடிந்த வரையிலான எல்லையையும் சொல்ல வந்த குறியீட்டு விஷயங்களாகும்’’ என்று கௌதமர் சொன்னபோது மெல்ல ஒரு சிஷ்யர் எழுந்தார். ‘‘அப்படியெனில் விஷ்ணுவும், பிரம்மாவும் சொல்வதென்ன’’‘‘அவர்கள் இறுதியான விஷயத்தை கூறவே வந்தார்கள். தாங்களும் பிரம்ம மயமாக இருந்தும், லீலைகளின் பொருட்டு தங்களை சிவ பக்தர்களாக மாற்றிக் கொண்டார்கள். அகத் தேடலையும், புறத் தேடலையும் முடித்து விடுகின்ற ஒரு தருணமும், கணமும் நிச்சயம் உண்டல்லவா? அப்போது அகங்காரம் ஒரு கேள்விக் குறியாய் நின்று விடுகின்றது.

அகங்காரம் மெல்ல வழிந்து மனதை இயக்கி உலகிய விஷயங்களை தொடாமல் அங்கேயே நிற்கிறது. வேறொரு முறையான அகமுகமாகி ஏதோ பிரம்மம் என்று இருக்கிறதே அதை அடைந்து விடுகிறேன் என்று தன் முயற்சியை உபயோகப்படுத்தி உள்ளுக்குள் பயணப்படாமலும் அகங்காரம் திகைத்து அப்படியே கற்சிலையாகிறது. இந்த நிற்றலின் கணத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்றுதான் இந்தப் புராணக்கதை கூறுகிறது’’.‘‘மஹரிஷி, இன்னும் தெளிவாகச் சொல்ல முடியுமா’’ பால சிஷ்யர் அருகே வந்தமர்ந்தார்.  ‘‘அதாவது, அகங்காரம் தன்னைத்தானே மறுத்து, தன் முயற்சிகளை விட்டுவிட்டு அடங்கி வேறெங்கேயும் நகராத நிலைக்கு தள்ளப்படும் நிலையே இந்த புராணக் கதையின் இறுதியில் நிகழ்கிறது. தேடல் முடிந்து போகவேண்டும். ஆனால், அது தேடி ஓய்ந்த பிறகு வரவேண்டும். புரிகிறதா. அகங்காரம் தன் தோல்வியை ஒப்புக் கொண்டவுடனேயே மெல்லிய பஞ்சுபோல ஆகிவிடுகிறது.

அடங்கிய அகங்காரம் மெல்ல ஆத்ம விசாரத்தில் இறங்குவதற்குண்டான முழுத் தகுதியை வெகு எளிதாக அடைந்து விடுகிறது. நேரடியாக ஆத்ம விசாரத்தில் இறங்குவோரின் விஷயங்கள் வேறு. இங்கு தெளிவடைய வேண்டிய விஷயம் என்னவெனில், தெரிந்தே தலை கொடுப்பது. அகங்காரம் சுய பலியை ஏற்றுக் கொள்வது. அந்த நிலைக்கே இந்த அருணாசலம் ஒரு ஜீவனை நோக்கி நகர்த்துகிறது. இப்போது நாம் வலம் வரும்போது அருணாசலத்தைச் சுற்றியுள்ள அஷ்டதிக் பாலகர்களை கொண்டு மனதின் அவஸ்தைகளை, மனதின் அதிகாரங்கள் ஒவ்வொன்றாக வீழ்வதை புரிந்து கொண்டிருப்பீர்கள். அதேநேரம் உண்மையான அருணாசலத்தின் அருட்செயலை நாம் மறக்கக் கூடாது என்பதற்கே இதை இப்போது கூறினேன்.’’ திடீரென்று கௌதமரின் உபதேச ரத்னங்கள் சீடர்களை உற்சாகம் கொள்ள வைத்தது. மீண்டும் மீண்டும் இலக்கு நோக்கி வரும் வீரர்கள் போல அடியார்கள் இருக்க வேண்டுமென கௌதமர் விரும்பியதை தீர்க்கமாக வெளிப்படுத்தினார்.

‘‘அருணாசலனுக்கும் ஜீவனாகிய நமக்கும் எப்பேற்பட்ட உறவாக இங்கு இருக்கிறது. மஹரிஷி. நினைத்தாலே வியப்பு விண்ணை தொடுகிறது’’ என்று கண்களில் நீர் கொப்பளிக்கப் பேசினார். ‘‘அருணாசல மகாத்மியத்தை வேறுவிதமாகவும் கூறலாம். அது நெருப்புக்கும் பொறிக்கும் உள்ள உறவு. கடலுக்கும் மேகத்திற்கும் உள்ள உறவு. அதுபோலவே அருணாசலம் எனும் பிரம்மமே ஜீவனுமாகும். பூரண பிரம்மத்திலிருந்து ஜீவன் எழுச்சி பெற்று அகங்காரமாக
புறப்படும்போது அதே உயரத்திற்கு அருளும் கூடவே வருகிறது. கடல் காற்று கடலினின்று எழுந்த மேகத்தை குளிர் மலைப்பகுதிகளுக்குக்கொண்டு சென்று மழையாகப் பெய்விக்கிறது. கடலினின்று சூரியனால் பிரிந்த நீர் இப்போது மீண்டும் கடலை நோக்கி வந்து கொண்டிருப்பதுபோலத்தான் இங்கும். ஜீவனை அக்னிப் பொறியாகக் கொண்டால், மீண்டும் அது அக்னியுடன் சேருவதற்குண்டான அனைத்தையுமே இந்த ஞானாக்னியான அருணாக்னி செய்யத் தொடங்குகிறது. ஏனெனில், அது வேறு; இது வேறு அல்ல.

ஜீவனுக்குள் ஈசனான அதாவது எப்போதும் இருக்கிறேன் உணர்வு ரூபமாகவும், அது புரியாத அபக்குவிகளுக்கு தகுந்த நேரத்தில் வெளிமுகத்தில் குருவாகவும் தோன்றி பக்குவப்படுத்தி முடிவில் ஆத்மாவில் ஐக்கியப்படுத்துகிறது. ஜீவனின் பிரியமும் பக்தியும் எல்லைக்குட்பட்டவை. அங்கு பிரியம் செலுத்துபவர், ஏற்றுக்கொள்பவர் என்கிற இருமை இருந்தபடியே இருக்கும். இதுவே கடவுளிடம் பக்தியாக இருக்கும்போதும் ஜீவனுக்கே திருப்தி வருவதில்லை. ஆனால், அதே பக்தியை, பிரியத்தை காரணமற்ற அவ்வியாஜ கருணையாக ஈசனே செலுத்தும்போது ஜீவனின் அன்பும், பக்தியும், பிரியமும் எல்லைகளை உடைத்துக்கொண்டு இருமை அகன்று அனன்யமாக கிடந்தொளிர்கிறது.

நம்முள் தோன்றும் பிஞ்சு போன்ற பக்தியையும் ஈசன் தன்னருளால் சொக்கப்பனையின் நெருப்புபோல, சிகரத்தில் எரியும் தீப்பந்தம்போல தகதகத்து எரியவைக்கிறார். அந்த ஈசனருளால் எரியும்போதுதான் எனை ஆட்கொள்கிறாயே என்றும், பித்து பிடித்தலைகிறேனே, சேர ஒழித்தாய் அருணாசலா என்று நிலைகொள்ளாமல் பெரும் பிரேமையில் மனம் ஆத்மாவிற்கு உணவாகி சிக்குண்டு அழிகிறது. இருளழிந்து விடியலின் கிரணங்களால் உலகம் உய்வடைவதுபோல ஜீவன் அருணாசலமாகிறது’’ என்று சொல்லி முடிக்கும்போது அருணாசல சிகரத்தின் மீது தீபம் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. சகலரும், அருணாசலேஸ்வரருக்கு அரோகரா....என்று பிளிறினர்.

படங்கள்: சு.திவாகர்

கிருஷ்ணா

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • sabarimala11

  சபரிமலை ஐயப்பன் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

 • pothumakkal_siramam1

  வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு : பொதுமக்கள் கடும் சிரமம்

 • dubai_hospitalll11

  துபாயில் ஒட்டகத்திற்கு மட்டும் சிகிச்சை அளிக்கும் வினோத மருத்துவமனை

 • Astronauts

  சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமி திரும்பிய விண்வெளி வீரர்கள்

 • 15-12-2017

  15-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்