SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வீட்டிற்கு மகாலட்சுமி வரட்டும்!

2017-11-30@ 11:05:24

என் மகனுக்கு திருமணம் நடந்து 10 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை. இரண்டு வருடங்களாக கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார்கள். அவன் சக குடும்ப சகிதமாக வாழ வழி சொல்லுங்கள். சுந்தரராஜன், புதுக்கோட்டை.

திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, கும்ப லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகத்தையும், அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, மிதுன  லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மருமகளின் ஜாதகத்தையும் ஆராய்ந்ததில் புத்திர பாக்கியம் என்பது நன்றாக உள்ளது. இருவர் ஜாதகத்திலும் குழந்தை பாக்கியத்தைத் தரும் ஐந்தாம் இடத்தில் வலுவான கிரகங்கள் அமர்ந்திருப்பதாலும், ஐந்தாம் இடத்திற்கு அதிபதி நல்ல நிலையில் இருப்பதாலும் உடல் ரீதியாக எந்தவிதமான குறையும் இருப்பதாக தெரியவில்லை. இருவரும் பிரிந்து வாழ்வதற்கான காரணம் என்ன என்பதைக் கண்டறிந்து அதனை சரிசெய்ய முயற்சியுங்கள்.

இறைவன் நமக்கு அளித்த வாழ்வினை வறட்டு கௌரவத்தினால் பாழாக்கிக் கொள்ள வேண்டாம் என்று உங்கள் பிள்ளைக்கு அறிவுறுத்துங்கள். இருவரின் ஜாதக பலத்தின்படி 26.08.2018க்குள் மருமகள் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பு நன்றாக உள்ளது. இந்த நேரத்தினை பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் வம்சவிருத்தி தடைபட்டுவிடும் என்பதையும், தாம்பத்திய வாழ்விற்கான அர்த்தம் என்ன என்பதையும் உங்கள் பிள்ளைக்குச் சொல்லி புரிய வையுங்கள். தம்பதியர் இருவரும் ஒன்று சேர்ந்து ஏதேனும் ஒரு வியாழக்கிழமை நாளில் குருவாயூருக்குச் சென்று சேவித்து பிரார்த்தனை செய்துகொள்ள உடனடியாக உங்கள் வம்சம் தழைக்கக் காண்பீர்கள்.

என் மகளுக்கு வரன் பார்க்கிறோம். எதுவும் சரியாக அமையவில்லை. காதல் திருமணம் ஆகுமோ என்ற பயம் என்னை வாட்டுகிறது. பெரியவர்கள் பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எனது கவலையை போக்குங்கள். விஜயலட்சுமி, சென்னை.

உத்திராட நட்சத்திரம், மகர ராசி, மீன லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகளின் ஜாதகத்தின்படி தற்போது ராகு தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. உங்கள் பெண்ணின் ஜாதகப்படி தற்போது திருமணப்பேச்சு எடுக்காமல் இருப்பதே நல்லது. தந்தை இறந்துவிட்ட நிலையில் முதலில் உங்கள் மகனுக்கு திருமணத்தை நடத்துங்கள். முதலில் நம் வீட்டிற்கு ஒரு மகாலக்ஷ்மி வந்த பின்பு நம் வீட்டில் பிறந்த மகாலட்சுமியை அடுத்தவர் வீட்டிற்கு அனுப்பலாம். தற்போது நிலவும் கிரகச் சூழலின்படி உங்கள் மகளின் மனநிலை தெளிவாக இல்லை.

அவருடைய ஜாதகத்தின்படி அவருடைய மனதிற்கு பிடித்தமான, அவருடைய கற்பனைக்கு ஏற்றவாறு நல்ல மணமகன் அமைவதோடு, அவரது திருமணம் பெரியவர்களின் ஆசிர்வாதத்தோடு நடக்கும். 6.12.2018க்குப் பின் அவரது ஜாதகப்படி திருமண யோகம் என்பது வருகிறது. அதற்கு முன்பாக அவரது அண்ணனுக்கு திருமணத்தை நடத்துங்கள். செவ்வாய்க்கிழமை தோறும் அருகிலுள்ள அம்மன் கோயிலிலுள்ள துர்க்கையின் சந்நதியில் ராகு கால வேளையில் விளக்கேற்றி வழிபட்டு வாருங்கள். ராகுவினால் உண்டாகும் குழப்பங்கள் தீர்ந்து உங்கள் மகள் தெளிவு பெறுவாள். மகிழ்ச்சியான வாழ்வு அவருக்காக காத்திருக்கிறது.

எனது மனைவியின் பெயரிலுள்ள வீட்டை விற்க கடந்த இரண்டரை வருட காலமாக முயற்சி செய்து வருகிறேன். ஆனால், இதுநாள் வரை அதற்கான அறிகுறி ஏதும் தெரியவில்லை. எப்போது வீடு விற்பனையாகும், அதற்காக காத்திருக்கும் எங்களுக்கு நல்லதொரு வழி காட்டுங்கள். விஜயகுமார், கூடுவாஞ்சேரி.


சித்திரை நட்சத்திரம், துலாம் ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மனைவியின் ஜாதகப்படி தற்போது புதன் தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் நான்காம் வீட்டில் செவ்வாயும், ஜென்ம லக்னத்தில் சனியும் பரிவர்த்தனை யோகத்தில் அமர்ந்திருப்பதால் தற்போதைய கிரகச் சூழலில் அவருடைய பெயரில் உள்ள வீட்டினை விற்க இயலாது. விற்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. விற்றுத்தான் ஆக வேண்டும் என்று நீங்கள் கருதினால் அவர் பெயரில் இருக்கும் சொத்தினை விற்கும் பவர் ஏஜென்டாக உங்கள் பெயரில் பத்திரம் பதிவு செய்து கொள்ளுங்கள்.

உங்கள் பெயருக்கு பவர் எழுதி வாங்கிய பின் விற்க இயலும். 20.12.2017ற்குப் பின்னர் விற்பனை ஆகும். எனினும் நன்கு ஆலோசித்த பின்பு முடிவு எடுக்கவும். செவ்வாய்க்கிழமை நாளில் திருப்போரூர் கந்தஸ்வாமி ஆலயத்திற்கு தம்பதியராகச் சென்று தரிசனம் செய்து மனமுருகி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். சொத்து நல்லபடியாக விற்பனையாகி எதிர்பார்க்கும் ஆதாயம் கிடைத்தவுடன் அபிஷேக ஆராதனை செய்வதாக உங்கள் பிரார்த்தனை அமையட்டும். கீழேயுள்ள துதியினைச் சொல்லி கந்தனை வழிபட்டு வர உங்கள் கவலை தீரும்.

“ஸர்வஸ்ய நாதஸ்ய குமாரகாய
க்ரௌஞ்சாரயே தாரக மாரகாய
ஸ்வாஹேய காங்கேய ச கார்த்திகேய
சைலேய துப்யம் ஸததம் நமோஸ்து.”


எனது பேத்தி நாங்கள் பார்த்துச் செய்யும் திருமணத்திற்கு சம்மதிப்பாளா? ராமகிருஷ்ணன், சென்னை.

புனர்பூசம் நட்சத்திரம், கடக ராசி, கும்ப லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் பேத்தியின் ஜாதகத்தில் தற்போது புதன் தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. 27வது வயதில் உங்கள் உறவு முறையில் வந்த வரனை தட்டிக் கழித்ததன் விளைவு தற்போது இந்த சூழலை உருவாக்கி உள்ளது. எனினும் அவரது ஜாதகத்தின்படி வாழ்க்கைத்துணைவரைப் பற்றிச் சொல்லும் ஏழாம் இடத்திற்கு அதிபதி சூரியன் நான்காம் வீட்டில் அமர்ந்திருப்பதும், ஏழாம் வீடு சுத்தமாக இருப்பதும் பலமான அம்சமே. குடும்ப ஸ்தானத்தில் குரு பகவான் அமர்ந்திருப்பதும் நல்ல நிலையே ஆகும். அவருடைய மணவாழ்வு சிறப்பான முறையில் இருக்கும். மனதிற்கு பிடித்த மணாளனை அவர் கரம் பிடிக்க அனுமதியுங்கள்.

அவருடைய ஜாதகத்தில் ஜென்ம லக்னாதிபதி சனி ஜீவன ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் அவர் தனக்குரிய உத்யோகத்தை நிரந்தரமாக்கிக் கொள்வது நல்லது. 30 வயது முடிந்த உங்கள் பேத்தியை சுயமாக முடிவெடுக்க அனுமதியுங்கள். மனம் ஒத்துப்போனால் மதம் ஒரு பிரச்னை அல்ல. கண்ணுக்குத் தெரிந்த கடவுளான சூரிய பகவானை தினந்தோறும் காலைப்பொழுதினில் கீழேயுள்ள ஸ்லோகத்தினைச் சொல்லி வணங்கி வாருங்கள். சூரிய பகவானின் அருளால் உங்கள் பேத்தி சுகமான வாழ்வினைப் பெறுவார்.

“ஸர்வ மங்கள மாங்கல்யம் ஸர்வபாப ப்ரணாசநம் சிந்தாசோக ப்ரசமநம் ஆயுர்வர்த்தந முத்தமம் க்ரஹாணாமாதிர் ஆதித்யோ லோகரக்ஷணகாரக: விஷமஸ்தாந ஸம்பூதாம் பீடாம் ஹரது மே ரவி:”

என் மகனுக்கு 21 வயது ஆகிறது. அவன் 10ம் வகுப்பு தேறவில்லை. எப்பொழுதும் மனக்குழப்பத்தில் உள்ளான். அவன் புத்தி சரியாக வழி சொல்லுங்கள்.
மூர்த்தி, ஆழ்வார்குறிச்சி.


புனர்பூசம் நட்சத்திரம், மிதுன ராசி, மகர லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகத்தில் தற்போது சனி தசையில் செவ்வாய் புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தில் ஜென்ம லக்னாதிபதி சனி, ஜென்ம லக்னத்தில் இடம் பெற்றுள்ள குரு, புத்திகாரகன் புதன் என மூன்று முக்கியமான கிரகங்கள் வக்ர கதியில் அமர்ந்திருப்பது சற்று பலவீனமான நிலை ஆகும். பலவந்தமாக எந்த ஒரு விஷயத்தையும் அவர்மீது திணிக்க இயலாது. 26 வயது முடியும் வரை சனி தசை தொடர்வதால் அதுவரை பொறுமை காக்க வேண்டியது அவசியம். அதே நேரத்தில் உடலுக்கு உழைப்பு தரக்கூடிய பணியினை அவரைச் செய்யத் தூண்டுங்கள். அவருடைய வாழ்விற்கு எப்பொழுதும் ஒரு தூண்டுகோல் தேவை.

தற்போதைய சூழலில் தந்தையாகிய நீங்கள் அவருக்குத் துணையாக நின்று அவரை அவ்வப்போது தூண்டிவிட வேண்டியது அவசியம். ஜீவன ஸ்தானத்தில் சுக்கிரனின் ஆட்சி பலமும், ஜெய ஸ்தானத்தில் செவ்வாயின் ஆட்சி பலமும் அவரது வாழ்வினை சிறப்புள்ளதாக மாற்றும். 27வது வயது முதல் அவருக்கான வாழ்வு துவங்கும். பிரதி வெள்ளிக்கிழமை தோறும் உங்கள் ஊரில் உள்ள சிவசைலநாதர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் பரமகல்யாணி அம்மன் சந்நதியில் உங்கள் பிள்ளையின் கையால் ஐந்து அகல்விளக்குகள் ஏற்றி வைத்து வழிபட்டு வாருங்கள். கீழேயுள்ள அபிராமி அந்தாதி துதியைச் சொல்லி வழிபட்டு வருவதும் நல்லது.

“தஞ்சம் பிறிதில்லை ஈதல்ல தென்றுன் தவநெறிக்கே
நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன் ஒற்றை நீள் சிலையும்
அஞ்சம்பும் இக்கு அலராக நின்றாய் அறியார் எனினும்
பஞ்சஞ்சும் மெல்லடியார் அடியார் பெற்ற பாலரையே.”


பி.ஈ. சிவில் முடித்து 2 ஆண்டுகள் ஆகியும் வேலை கிடைக்கவில்லை. எங்கு சென்றாலும் தோல்வியும், அவமானமுமே மிஞ்சுகிறது. என் ஜாதகத்தில் தோஷமுள்ளதா, சந்திரன்+சனி இணைவு இறுதி வரை அவமானத்தைத் தருமா, உரிய பரிகாரம் சொல்லுங்கள். பிரகாஷ், மதுரை.

அவிட்டம் நட்சத்திரம், மகர ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தில் தற்போது குரு தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் சுபகிரகங்களாகிய குருவும், சுக்கிரனும் வக்ர கதியில் சஞ்சரிக்கின்றனர். ஜென்ம லக்னத்தில் கேது அமர்ந்திருக்கிறார். தாழ்வு மனப்பான்மையும், தயக்க குணமும்தான் உங்கள் வளர்ச்சியை தடை செய்து வருகிறது. அடுத்தவர்கள் சொல்லும் அறிவுரை உங்களுக்கு அவமானமாகத் தோன்றுகிறது. இந்த உலகம் உங்களுக்காகப் படைக்கப்பட்டிருக்கிறது என்ற எண்ணத்தினை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் ஜாதகத்தில் சந்திரன், சனியின் இணைவு நல்ல நிலையே. இந்த இணைவு உங்களை ஒரு உத்தமனாக, தியாகசீலனாக, தர்மநெறி வழுவாதவனாக வாழ வைக்கும்.

லக்னாதிபதி சுக்கிரனின் உச்ச பலம் உங்களை சாதனையாளனாக மாற்றும். விரும்பிய வேலை கிடைக்காவிட்டாலும், கிடைக்கின்ற வேலையை விரும்பிச் செய்யுங்கள். தற்போதைய கிரக நிலையின்படி வருகின்ற 27.09.2018க்குள் நீங்கள் ஒரு நல்ல வேலையில் அமர வேண்டும். மீனாட்சி அம்மன் ஆலய பொற்றாமரைக் குளத்தருகில் அமர்ந்திருக்கும் விபூதி பிள்ளையார் மேல் அபிஷேகம் செய்யப்பட்டிருக்கும் விபூதி பிரசாதத்தினைக் கொண்டுவந்து, தினமும் உடலில் பூசி வாருங்கள். நரம்புத் தளர்ச்சி காணாமல் போகும். கீழேயுள்ள ஸ்லோகத்தைச் சொல்லி தினமும் விநாயகப் பெருமானை வணங்கி வர தடைகளைத் தகர்த்து சாதிப்பீர்கள். கவலை வேண்டாம்.

“ப்ரகாஸ ஸ்வரூபம் நமோ வாயுரூபம் லிகாராதி ஹேதும் கலாதார பூதம்
அநேக க்ரியா யோகசக்தி ஸ்வரூபம் ஸதா விச்வரூபம் கணேசம் நமாமி.”


பதினோரு வயதாகும் எங்கள் ஒரே மகனுக்கு ஜாதகம் பார்த்ததில் மாந்தி பரிகாரம் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். இவனது ஆயுள் பாவம் நன்றாக உள்ளதா? இவனது ஜாதகம் மகர லக்னமா, கும்ப லக்னமா என்ற குழப்பமும் உள்ளது. எங்கள் குழப்பத்தைத் தீர்த்து ஒரு நல்ல பதிலைத் தாருங்கள். செந்தில்குமார், தஞ்சாவூர்.

உங்கள் கடிதத்தைக் காணும்போது நீங்கள் மிகுந்த மனக்குழப்பத்தில் உள்ளது தெளிவாகிறது. குழந்தை பிறந்த நேரம் 01.45 அதாவது அதிகாலை நேரம் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் லக்னம் மகரமா, கும்பமா என்று கேட்டுள்ளீர்கள். அதிகாலை நேரத்தில் பிறந்திருந்தால் மகரம், கும்பம் என்ற பேச்சிற்கே இடமில்லை. மதியம் 01.45 மணிக்கு பிறந்திருந்தால் மட்டுமே இந்த குழப்பம் வந்து சேரும். உங்கள் மகன் பிறந்த தேதியில், தஞ்சாவூர் சூரிய உதய நேரத்தின்படி, பகல் 01.44.04 மணி வரை மகர லக்னம் உள்ளது. அதன்பின்பு கும்ப லக்னம் உதயமாகிறது.

லக்ன சந்தி எனும் வேளையில் பிறந்துள்ள உங்கள் பிள்ளையை நேரில் காணும் ஒரு தேர்ந்த ஜோதிடரால், சாமுத்ரிகா லட்சணத்தைக் கொண்டு இவன் மகர லக்னத்தில் பிறந்துள்ளானா அல்லது கும்ப லக்னத்திலா என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். மாந்தியின் அமர்வு நிலை குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. அசல் யானைமுடியினைக் கொண்டு வெள்ளியில் மோதிரம் செய்து உங்கள் மகனின் வலதுகை மோதிரவிரலில் அணிவியுங்கள். எச்சூழலிலும் அந்த மோதிரத்தைக் கழற்ற வேண்டாம் என்று அறிவுறுத்துங்கள். பூராடம் நட்சத்திரம், தனுசு ராசியில் பிறந்துள்ள உங்கள் மகன் ஊரார்
மெச்சும் பிள்ளையாக வளர்வான். கவலை வேண்டாம்.

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா் திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை, பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் தினகரன் ஆன்மிக மலா் 229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம். பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-10-2018

  23-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • longestseabridge

  உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

 • delhi_strikepetrol18

  டெல்லியில் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்: கால் டாக்சி, ஆட்டோ சேவைகள் முடக்கம் !

 • solarcar_race

  சூரிய மின்சக்திகளால் இயங்கும் கார்களுக்கான பந்தயம் சிலி நாட்டில் கொண்டாட்டம்!

 • hondurans_americatrump

  ஹோண்டராஸில் இருந்து அமெரிக்கா நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அகதிகள் !

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்