SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நம்பாடுவானை ஆட்கொண்ட நின்றநம்பி

2017-11-29@ 07:24:58

கைசிக ஏகாதசி - 29.11.2017

திருக்குறுங்குடிக்கு மேற்கே மகேந்திரகிரி என்ற மலையடிவாரத்தில் நம்பாடுவான் என்னும் பாணன், எம்பெருமான் மீது பரமபக்தி கொண்டவராய் வாழ்ந்து வந்தார். சதாநேரமும் இறைவனை தொழுது கொண்டும் கைசிகம் என்ற பண்ணை இசைத்துக் கொண்டும் பாடிப்பரவசமாய் வாழ்ந்தார். அவரது பக்தியை உலகுக்கு உணர்த்த குறுங்குடிநம்பி ஆசைப்பட்டார். ஒருநாள் நம்பாடுவான் மலையடிக்காட்டில் சஞ்சாரம் செய்து வந்தபோது திடீரென்று ஒரு பிரம்மராட்சசன் மரத்திலிருந்து குதித்தான். நம்பாடுவான் கழுத்தைப் பிடித்து, இப்பொழுதே நீ எனக்கு உணவாக வேண்டுமென்று கர்ஜித்தான். அந்நிலையிலும் நம்பாடுவான் புன்னகைத்துக் கொண்டே ‘‘இந்த உடல் எதற்கும் பிரயோஜனமில்லை என்று நினைத்தேன். ஆனால், உனக்கிது உதவும் என்றால் எடுத்துக்கொள். ஆனால்,  நான் எம்பெருமான் நம்பியின் பொருட்டு ஏகாதசி விரதம் பூண்டுள்ளேன். விரதத்தை முடித்தபிறகு நீ என்னை புசிக்கலாம். கொஞ்சம் வழிவிட்டால் நான் பூஜைமுடித்து உடனே திரும்புவேன்’’ என்று கூற, அந்த ராட்சசன் சந்தேகத்துடன் உற்றுப் பார்த்தான்.

“இதோ பாரப்பா, நான் திருமாலின் திவ்ய பக்தன். ஒருநாளும் பொய் சொல்லேன். என் திருமண் மீது ஆணை”என கைபிடித்து சத்தியம் செய்தார் நம்பாடுவான்.
ராட்சசன் வழிவிட, நம்பாடுவான் தன் வழியில் தொடர்ந்து நடந்தார். குறுங்குடி கோயிலுக்குள் நுழைய முடியாத துக்கத்துடன் வழக்கம்போல் கோயிலுக்கு எதிரே யிருந்த கொடிமரம் அருகில் போய் நின்றார்.‘‘அனைத்து உலகங்களிலும் ஒளி வீசும் திகழ் சக்கரமே, இதுவே என் கடைசி வாய்ப்போ? இனி உனைக் காண்பது இயலாதோ? நீயே முடிவுசெய்து கொள்”என்று நெக்குருகி நின்றார். அவரெதிரே பெருஞ்சக்தி ஒன்று மையம் கொண்டிருப்பதை உணர்ந்தார். எதிரேயுள்ள கொடிமரம் மேலும் கீழும் வலுவாய் அதிர்ந்தது. பளிச்சென்று விலகி வேரோடு பிடுங்கி ஒதுங்கிய நெடுமரம்போல் நகர்ந்து வழிவிட்டு நின்றது.  

இப்போது நின்றநம்பியும் நம்பாடுவானும் நேருக்குநேரானார்கள். கருவறையிலுள்ள குறுங்குடி நம்பிப்பெருமான் நெடுதுயர்ந்து நின்றார். அப்படியே நின்றநம்பியை நம்பாடுவான் கண்கள் பனிக்கப் பார்த்தார். எம்பெருமானின் கருணை வெள்ளத்தில் மூழ்கித் திளைத்தார். களிக்க களிக்க அதிலேயே கிடந்தார். மீண்டும், நம்பாடுவான் தன்வாக்கைக் காக்க காடு நோக்கி நடந்தார். பிரம்மராட்சசனை சந்தித்த நம்பாடுவான், ‘‘இதோ நான் வந்துவிட்டேன், என்னை எடுத்துகொள்’’ என்றார். ‘‘இல்லை நம்பாடுவானே, உன்னை பார்த்தது முதல் எனக்கு பசியே எடுக்காததுபோல் தோன்றுகிறது. என்னால் உன்னை உண்ண முடியவில்லை. ஏதோ ஒன்று தடுக்கிறது. நான் முற்பிறவியில் யோக சர்மா என்ற பிராமணனாகப் பிறந்து யாகத்தை இழிவாகவும், உண்மையான சிரத்தையில்லாமலும் செய்ததால் இப்படியொரு ராட்சச உருவம் வந்துவிட்டது.

உம்மைப் போன்ற ஹரிபக்தனின் தரிசனத்தினாலும், ஸ்பரிசத்தினாலும் மட்டுமே விமோசனம் கிடைக்கும். நீயே எனக்கு கதி’’ என்று நம்பாடுவான் பாதங்களில் விழுந்தான் பிரம்மராட்சசன். நம்பாடுவானும் தான் பாடிவந்த கைசிகப் பண்ணை பாட குறுங்குடிநாதர் அவ்விருவரையும் ஆட்கொண்டார். வைகுண்ட ஏகாதசிபோல் கைசிக ஏகாதசி இங்கு விசேஷமாய் கொண்டாடப்படுகிறது. இத்தலத்தில் மூலவராக சுந்தரபரிபூரணநம்பி, தாயார் வல்லிநாச்சியார் எனும் திருநாமங்களோடு அருளாட்சி செய்கின்றார்கள். மேலும்இத்தலப்பெருமான் நின்றநம்பி, இளநம்பி, கிடந்தநம்பி, குறுங்குடிநம்பி, மலைமேல்நம்பி என்று ஐந்து திருக்கோலங்களில் சேவை சாதிக்கிறார். திருநெல்வேலி  நாகர்கோவில் பாதையில் நான்குநேரியிலிருந்து 25 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

ஹரிஷ்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • sabarimala11

  சபரிமலை ஐயப்பன் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

 • pothumakkal_siramam1

  வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு : பொதுமக்கள் கடும் சிரமம்

 • dubai_hospitalll11

  துபாயில் ஒட்டகத்திற்கு மட்டும் சிகிச்சை அளிக்கும் வினோத மருத்துவமனை

 • Astronauts

  சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமி திரும்பிய விண்வெளி வீரர்கள்

 • 15-12-2017

  15-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்