SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மகப்பேறு வரம் தரும் நித்யசுமங்கலி அம்மன்

2017-11-28@ 07:22:31

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகரில் இருக்கிறது 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த ‘நித்யசுமங்கலி மாரியம்மன்’ கோயில். கொல்லிமலை, ஆலவாய்மலை, நைனாமலை, போதமலை என்று 4 மலைகளுக்கு மத்தியில் எண்கோண விமானத்துடன் அம்பாளுக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது. மூலஸ்தானத்தில் அம்பாள் சதுர ஆவுடையாரில் அமர்ந்திருப்பதும், சுயம்பு அம்பிகை லிங்கவடிவில் காட்சி தருவதும் வேறு கோயில்களில் இல்லாத சிறப்பு. எதிரே பிரமிப்பூட்டும் ஆழி வாகனம் கவனத்தை ஈர்க்கிறது.‘‘முற்காலத்தில் இந்த பகுதி வயலாக இருந்தது. விவசாயி ஒருவர் உழுது கொண்டிருந்தார். அப்போது ஓரிடத்தில் இருந்து ரத்தம் வெளிப்பட்டது. இது குறித்து விவசாயி ஊர்மக்களிடம் தகவல் தெரிவித்தார். அனைவரும் ஓரிடத்தில் திரண்டனர். ரத்தம் பீறிட்ட இடத்தை கிராம மக்கள் தோண்டினர். அப்போது அந்த இடத்தில் சுயம்புவாக ஒரு அழகிய வடிவம் தெரிந்தது.

அதேநேரத்தில் பக்தரின் உடலில் அசரீயாக அம்பிகை தோன்றி, தனக்கு அந்த இடத்தில் ஒரு கோயில் கட்ட வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து சுயம்புவடிவம் இருந்த இடத்தில் அம்பிகைக்கு கோயில் கட்டப்பட்டது. இதற்கடுத்து அம்பிகையின் பின்புறத்தில் மாரியம்மன் விக்ரகம் வைக்கப்பட்டது’’ என்பது நித்யசுமங்கலி மாரியம்மன் கோயில் தலவரலாறு. பெரும்பாலும் மாரியம்மன் கோயில்களில் பண்டிகை நாட்களில் மட்டும் அம்மனுக்கு எதிரே கம்பம் நடப்படும். இந்த கம்பத்தை அம்பாளின் கணவராக நினைத்து மங்கையர் பூஜை செய்கிறார்கள். இந்த கோயிலில் அம்பாளுக்கு எதிரே நிரந்தர கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. கணவருக்கு பூஜை செய்தால் மனம் மகிழும் அம்மன், தங்களை நித்யசுமங்கலியாக வாழ அருள்பாலிப்பார் என்பது ஐதீகமாக உள்ளது. இதேபோல் மகப்பேறு வேண்டி இங்கே நடக்கும் பிரார்த்தனையும் மிகவும் வித்தியாசமானது.

ஐப்பசி மாதத்தில் நடக்கும் திருவிழாவின்போது, அம்மனுக்கு எதிரேயுள்ள பழைய கம்பத்தை கோயிலுக்கு அருகில் உள்ள தீர்த்தகிணற்றுக்கு கொண்டு செல்கின்றனர். கிணற்றுக்கு அருகில் கம்பத்தை வைத்து நெய்வேத்தியம், தயிர்சாதம் படைத்து பூஜைகள் செய்கின்றனர். இந்த பூஜையின்போது மகப்பேறு இல்லாத பெண்கள் கம்பத்தை வணங்கி, எலுமிச்சை தீபமேற்றி, தயிர்சாத பிரசாதத்தை வாங்கி சாப்பிடுகின்றனர். இப்படி சாதம் சாப்பிட்டால் அம்மன் அருளால் மகப்பேறு கிடைக்கும் என்பது தொடரும் நம்பிக்கை. இதேபோல் கண்நோய் உள்ளவர்கள், கண்மலர் வைத்து அம்மனை வழிபட்டால் குறைபாடுகள் அனைத்தும் அகலும் என்கின்றனர் பக்தர்கள். அம்பாளை வேண்டி பிரார்த்தனை நிறைவேறியவர்கள் அக்னிசட்டி எடுத்தும், அங்கபிரதட்சணம் செய்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.

ஒவ்வொரு மாதத்திலும் மகம் நட்சத்திரத்தில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அம்மனுக்கு எதிரே ஊஞ்சல் மண்டபம் உள்ளது. இங்குள்ள ஊஞ்சலில் அம்மனின் பாதம் பொறிக்கப்பட்டுள்ளது. உரியகாலத்தில் புத்திரபாக்கியம் கிடைக்காத பெண்கள், இந்த ஊஞ்சலை ஆட்டி அம்மனிடம் மனமுருக வேண்டினால் தடைகள் அகலும். தீர்க்க சுமங்கலி அம்மன் கோயில் பிரகாரத்தில் அணுக்கை விநாயகர் என்ற பெயரில் விநாயகருக்கும், பாலசுப்ரமணியர் கோலத்தில் முருகனுக்கும் மண்டப வடிவில் தனிக்கோயில்கள் உள்ளன. வேறு பரிகார தெய்வங்கள் எதற்கும் இங்கு கோயில் இல்லை. எனவே இது தாய்க்கும், சேய்க்கும் உள்ள பந்தத்தை உணர்த்தும் தனிக்கோயிலாகவும் கருதப்படுகிறது. எனவே திருமணத்தடை நீங்கவும், என்றென்றும் மங்களமாக வாழவும், மகப்பேறு அருளவும் நித்ய சுமங்கலி அம்மன் துணை இருப்பாள் என்பது பல நூற்றாண்டுகளாக தொடரும் நம்பிக்கையாக உள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-10-2018

  24-10-18 இன்றைய சிறப்பு படங்கள்

 • FoamFightScotland

  முதலாம் ஆண்டு மாணவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்ற ஸ்காட்லாந்து பல்கலைக்கழம்: புகைப்படங்கள்

 • SALTMarchRashtrapti

  ராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் உருவ சிலைகள்: மாணவர்கள் கண்டுகளிப்பு

 • NagoroJapanVillage

  ஜப்பானில் உள்ள தீவில் வெறிச்சோடிய கிராமத்தை பொம்மைகளால் உயிரூட்டிய பெண்: குவியும் சுற்றுலா பயணிகள்

 • FallFoilageWorld

  உலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்