SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சண்முகனை வழிபட சந்ததி உருவாகும்..!

2017-11-21@ 12:55:27

முப்பத்து நான்கு வயது ஆகும் என் மகளுக்கு உடம்பில் கட்டி, கட்டிகளாக உள்ளது. அதனால் உடம்பிற்கு தீங்கு இல்லை. அழகைக் கெடுக்கிறது. திருமணம் நடைபெறவில்லை. இதற்கு ஒரு சரியான தீர்வினைச் சொல்லுங்கள். சற்குணவதி, சென்னை.

மிருகசீரிஷ நட்சத்திரம் (ரோகிணி என்று கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளீர்கள்), ரிஷப ராசி, மேஷ லக்னத்தில், பிறந்துள்ள உங்கள் மகளின் ஜாதகத்தில் தற்போது குரு தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தில் லக்னாதிபதி செவ்வாய் மூன்றாம் வீட்டில் ராகுவின் சாரம் பெற்றுள்ளதும், ராகு சந்திரனுடன் இணைந்து அமர்ந்திருப்பதும் உடலின் மேற்தோலில் இது போன்ற அமைப்பினை உண்டாக்கி உள்ளது. இதற்காக மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு உடம்பை வீணாக்கிக் கொள்ள வேண்டாம். இரும்புச்சத்து அதிகமுள்ள முருங்கைக் கீரை முதலானவற்றையும், பீட்ரூட், கேரட் முதலான காய்கறிகளையும் அதிக அளவில் சாப்பிட்டு வரச் சொல்லுங்கள்.

தற்போது உங்கள் மகளின் ஜாதகத்தில் நல்ல நேரம் நடந்து கொண்டிருப்பதால் திருமணம் செய்ய இயலும். திருமண வாழ்வினைக் குறிக்கும் ஏழாம் வீட்டில் சனி வலுவாக அமர்ந்திருப்பதால் அந்தஸ்தில் குறைவான மாப்பிள்ளையாக அமைவார். ஒரு காது மட்டும் கேட்கும் திறன் குறைவாக உடையவராக இருப்பதற்கு வாய்ப்பு உண்டு. அதுபோல வரன் வந்தால் தயங்காமல் மணம் முடித்து வையுங்கள். உங்கள் மகளின் வாழ்க்கை சிறப்பானதாக அமையும். செவ்வாய், வெள்ளி இருநாட்களும் ராகுகால வேளையில் அருகிலுள்ள அம்மனின் ஆலயத்திற்குச் சென்று விளக்கேற்றி வைத்து வழிபட்டு வரச் சொல்லுங்கள். ஆவணி மாதத்திற்குள் அவரது திருமணம் கைகூடும்.

என் மகனுக்கு 32 வயது ஆகியும் திருமணம் கைகூடி வரவில்லை. அதன் காரணம் புரியவில்லை. ஜாதகத்தை வாங்கிச் செல்கிறார்கள். ஆனால் பதில் எதுவும் வருவதில்லை. அப்படியே வந்தாலும் குறையுள்ள ஜாதகமாக வருகிறது. தடைவிலகி திருமணம் நடைபெற பரிகாரம் கூறவும். சுப்ரமணியம், பெருந்துறை.

அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, மிதுன லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகத்தின்படி தற்போது சந்திர தசையில் சந்திர புக்தி நடந்து வருகிறது. உங்கள் மகனின் ஜாதகத்தில் வாழ்க்கைத்துணையைக் குறிக்கும் களத்ர ஸ்தானத்தைப் பொறுத்தவரை எந்தவிதமான தோஷமும் இல்லை. 27வது வயதில் தேடி வந்த திருமண வாய்ப்பை வேண்டாம் என்று ஒதுக்கியதன் விளைவு தற்போது திருமணத் தடையைக் கண்டு வருகிறார். அவருடைய ஜாதகப்படி உங்கள் உறவு முறையிலேயே பெண் அவருக்காக காத்திருக்கிறார்.

வசதி வாய்ப்பில் சற்று குறைவானவர்களாக இருந்தாலும், கௌரவமான குடும்பத்தில் இருந்து பெண் அமைவார். நல்ல குணவதியாகவும், வேலைக்குச் செல்லக் கூடியவராகவும் இருப்பார். வருகின்ற 21.06.2018க்குள் அவருடைய திருமணம் கூடி வரும். திங்கட்கிழமை தோறும் அருகிலுள்ள சிவாலயத்தில் மாலை நேரத்தில் நடக்கும் சாயரட்சை பூஜையில் கலந்துகொண்டு உங்கள் மகனை தரிசனம் செய்து வரச் சொல்லுங்கள். கீழேயுள்ள பதிகத்தை தினமும் இருவேளையும் பாராயணம் செய்து வரச் சொல்லுங்கள். விரைவில் தடை விலகும்.

“ஈசனடி போற்றி எந்தையடி போற்றி  தேசனடி போற்றி சிவன் சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமலனடி போற்றி
 மாயப் பிறப்பறுக்கும் மன்னனடி போற்றி
 சீரார் பெருந்துறைநம் தேவனடி போற்றி
 ஆராத இன்பம் அருளும் மலை போற்றி.”


என் மகளுக்கு திருமணம் ஆகி எட்டு ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லை. ராமேஸ்வரம், திருக்கருக்காவூர் சென்று பரிகாரம் செய்தும் பலனில்லை. சிவனடியார் ஒருவர் திருவண்ணாமலையில் ஏழு பௌர்ணமி நாட்களில் கிரிவலம் செய்யச் சொன்னார். அதை அவர்களால் செய்ய இயலவில்லை. குழந்தை பாக்கியம் பெற பரிகாரம் கூறுங்கள். தவசுபால், மணவூர்.

அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, மேஷ லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகளின் ஜாதகத்தையும், உத்திராடம் நட்சத்திரம், தனுசு ராசி, துலாம் லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மருமகனின் ஜாதகத்தையும் ஆராய்ந்ததில் சற்று தாமதமானாலும் பிள்ளைப் பேறு இருப்பது உறுதியாகிறது. இருவருடைய ஜாதகத்தின்படி 05.06.2018க்கு மேல் கர்ப்பம் தங்குவதற்கான வாய்ப்பு கூடி வருகிறது. அதுவரை உரிய மருத்துவ ஆலோசனையை தவறாது கடைபிடித்து வரச் சொல்லுங்கள்.

தம்பதியர் இருவரையும் வளர்பிறை சஷ்டி நாட்களில் விரதம் இருந்து சுப்ரமணிய ஸ்வாமியை வணங்கி வரச் சொல்லுங்கள். கர்ப்பம் தரித்த கையோடு அனாதை ஆசிரமத்தில் உள்ள ஆறு சிறுவர்களுக்கு புத்தாடையினை உங்கள் மகளின் கரங்களால் தானம் செய்ய வையுங்கள். ஏதேனும் ஒரு செவ்வாய்க்கிழமை நாளில் இருவரையும் சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு அழைத்துச் சென்று தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்து கொள்ளச் சொல்லுங்கள். தினமும் இருவேளையும் கீழேயுள்ள துதியினைச் சொல்லி சண்முகனை வழிபட சந்ததி உருவாகும்.

“அழகுறு மலர்முகனே அமரர்கள்
பணிகுகனே மழவுரு வுடையவனே
மதிநனி பெரியவனே
 இழவுஇலர் இறையவனே எனநினை எனதெதிரே குழகது மிளிர்மயிலே கொணர்தியுன் இறைவனையே.”


நல்ல ஒழுக்கமான என் மகன் சிலகாலமாக ஒரு பெண்ணிடம் தொடர்பு வைத்துள்ளான். அவன் ஒதுங்கினாலும் அந்தப் பெண் மிகவும் தொல்லை கொடுக்கிறாள். அதிகநாள் கழித்துப் பிறந்த எங்களது ஒரே மகன் எங்களுக்குத் திரும்பக் கிடைக்க உரிய பரிகாரம் சொல்ல வேண்டுகிறேன். பேபி, செய்யார்.

புனர்பூசம் நட்சத்திரம், மிதுன ராசி, தனுசு லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகத்தில் தற்போது சனி தசையில் சூரிய புக்தி நடந்து வருகிறது. நீங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதுபோல உங்கள் மகன் ஒழுக்கசீலன்தான். மகன் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது. 19 வயதேயான உங்கள் மகன் தவறான பாதையில் என்றும் செல்ல மாட்டான். இரக்க குணம் காரணமாக அந்தப் பெண்மணிக்கு உதவி செய்து வருகிறான். அவ்வளவுதான். அதனை தவறாக எண்ணி அவனை மனம் வருந்தச் செய்யாதீர்கள். அந்தப் பெண்ணாலும் உங்கள் பிள்ளைக்கு எந்தவிதமான பாதிப்பும் உண்டாகாது. அநாவசியமாக கவலைப்படாதீர்கள். 28.06.2018க்குப் பின் அந்தப் பெண் தானாகவே உங்கள் பிள்ளையை விட்டு வெகுதூரம் சென்றுவிடுவார்.

வீணாக மனதைப் போட்டுக் குழப்பிக் கொண்டு உங்கள் உடல்நிலையை கெடுத்துக் கொள்ளாதீர்கள். ஏதேனும், ஒரு சனிக்கிழமை நாளில் உங்கள் பிள்ளையை வந்தவாசிக்கு அருகிலுள்ள தென்னாங்கூர் தலத்திற்கு அழைத்துச் சென்று பாண்டுரங்க ஸ்வாமியை தரிசிக்கச் செய்யுங்கள். ஒரு மூன்று மணி நேரமாவது ஆலய வளாகத்திற்குள்ளேயே உங்கள் மகனை தங்கியிருக்கச் செய்யுங்கள். அங்கு நடைபெறும் சம்பவங்களும், சந்திப்புகளும், நல்ல மனிதர்களின் தொடர்புகளும் உங்கள் மகனின் மனதை மாற்றும். உத்தமபுத்திரனான உங்கள் மகன் உங்களை என்றும் கண்ணீர் சிந்த விடமாட்டான். கவலை வேண்டாம்.

என் மூத்த மகளுக்கு சிறுவயதில் தொடையில் அடிபட்டு கால் மூட்டு மடக்க இயலவில்லை. இதனால் 31 வயது ஆகியும் இன்னும் திருமணம் நடக்கவில்லை. கடந்த ஏழு வருடங்களாக மாப்பிள்ளை பார்க்கிறேன். ஆனால், அமையவில்லை. என் மகளுக்கு திருமணம் நடக்க உரிய பரிகாரம் கூறுங்கள். சாந்தி, ஆம்பூர்.

சுவாதி நட்சத்திரம், துலாம் ராசி, கன்னியா லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகளின் ஜாதகத்தில் தற்போது சனி தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. திருமணத்தைக் குறிக்கும் ஏழாம் வீட்டில் ராகு அமர்ந்துள்ளதால் தற்போது திருமண யோகம் கூடி வந்துள்ளது. மேலும், தற்போது நடந்து வரும் தசாபுக்தியின்படி உரிய மருத்துவ அறுவை சிகிச்சை மூலம் அவரது பிரச்னையை நிரந்தரமாக சரி செய்ய இயலும். நாட்டு மருந்து கடையில் விற்கும் உளுந்து தைலம்தனை வாங்கி தினந்தோறும் இரவினில் படுக்கைக்கு செல்வதற்கு முன்னால் மூட்டுப்பகுதி முழுவதும் தடவிக் கொள்ளச் சொல்லுங்கள்.

இட்லி, தோசை முதலான தின்பண்டங்களிலும் வெள்ளை உளுந்திற்கு பதிலாக கருப்பு உளுந்து சேர்ப்பது அவரது உடல்நலத்திற்கு நல்லது. கருப்பு உளுந்து கழுவிய கழிநீரை சுடவைத்து மூட்டுப் பகுதியில் தடவிக் கொள்வதும் நன்மை தரும். தொடர்ந்து 18 வாரங்களுக்கு பிரதி சனிக்கிழமைதோறும் உங்கள் ஊரான ஆம்பூர் நாகநாதஸ்வாமி  ஆலயத்திற்குச் சென்று மூலவர் சந்நதியில் தேங்காய் எண்ணெயில் நான்கு அகல் விளக்குகள் ஏற்றி வைத்து கீழேயுள்ள ஸ்லோகத்தினைச் சொல்லி வழிபட்டு வரச் சொல்லுங்கள். வரும் ஆண்டின் இறுதியில் அவரது திருமணம் சிறப்பான முறையில் நடைபெறும்.

“ராமப்ரியாய ரகுநாதவரப்ரதாய
நாகப்ரியா நரகார்ணவதாரணாய
 புண்யேஷூ புண்யபரிதாய ஸூரார்ச்சிதாய தாரித்ர்ய துக்க தஹனாய நமசிவாய.”


என்மகள் தன்னுடன் படித்த ஒருவரை விரும்புகிறாள். அவரது வீட்டில் சொல்லி சம்மதம் பெறும்வரை பொறுமையாக இருக்கச் சொல்கிறாள். இதெல்லாம் நம் குடும்பத்திற்கு ஒத்துவராது என்றால் மிகவும் கோபப்படுகிறாள். தந்தையில்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்த என் மனம் மிகவும் வேதனைப்படுகிறது. என் மகளின் வாழ்வு சிறக்க பரிகாரம் கூறுங்கள். மணிமேகலை, கோவை.

சதயம் நட்சத்திரம், கும்ப ராசி, கும்ப லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகள் மிகவும் பிடிவாத குணம் உடையவர். எதையும் அவர் இஷ்டப்படிதான் செய்வார். அவராக மனம் மாறும்வரை நீங்கள் அவரை பொறுமையுடன் கையாள வேண்டியது அவசியம். அவருடைய ஜாதகத்தில் தற்போது குரு தசையில் செவ்வாய் புக்தி நடந்து வருகிறது. தற்போதைய கிரஹ நிலையின்படி வருகின்ற 29.05.2018க்குள் உங்கள் மகள் ஒரு நல்ல வேலையில் அமர வேண்டும். அதன்
பின்புதான் அவரது திருமண வாழ்வினைப்பற்றி சிந்திக்க வேண்டும். அவரது ஜாதகப்படி 28 வயது முடிந்து 29வது வயதில்தான் திருமண யோகம் என்பது வருகிறது.

அந்த நேரத்தில் திருமணம் செய்தால்தான் அவரது குடும்ப வாழ்வு நல்லபடியாக அமையும். அதுவரை பொறுமையாய் இருங்கள். கோடீஸ்வரன் வீட்டிற்கு மருமகளாகச் சென்றாலும் உத்யோகம் பார்த்தால்தான் உங்கள் மகளின் கௌரவம் காப்பாற்றப்படும் என்பதை அவருக்கு நினைவூட்டுங்கள். முதலில் அவரிடம் ஒரு நல்ல வேலையைத் தேடிக் கொள்ளச் சொல்லுங்கள். ஏதேனும், ஒரு செவ்வாய்க்கிழமை நாளில் உங்கள் மகளை மருதமலைக்கு அழைத்துச் சென்று தரிசிக்கச் செய்யுங்கள். தினந்தோறும் கீழேயுள்ள  ஸ்லோகத்தினை வீட்டுப் பூஜையறையில் சொல்லி வழிபட்டு வருவதும் நல்லது. விரைவில் நிரந்தர உத்யோகத்தில் அமர்வார்.

“நித்யாநந்தம் நிகமவிதிதம் நிர்குணம் தேவதேவம் நித்யம் வந்தே மம குருவரம் நிர்மமம் கார்த்திகேயம்.”

பிறந்து 12 வயதுவரை நல்ல நிலையில் இருந்த என் மகனுக்கு பிட்ஸ், காக்காய் வலிப்பு, ஜன்னி வர ஆரம்பித்துவிட்டது. தற்போது 23வது வயதிலும் தொடர்ந்து மாத்திரை சாப்பிட்டு வருகிறான். இருந்தும் சிலநேரம் வலிப்பு வந்துவிடுகிறது. அவனது வாழ்வு சிறக்க உரிய பரிகாரம் சொல்லுங்கள். திருவனந்தபுரம் வாசகி.

கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, கும்ப லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகத்தின்படி தற்போது 25.09.2017 முதல் சுக்கிர தசை துவங்கியுள்ளது. சுக்கிர ஸ்தலமாகிய திருவனந்தபுரத்தில் வசிக்கும் நீங்கள் இனிமேல் உங்கள் பிள்ளையின் உடல்நிலையை எண்ணி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. அவருடைய ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில், லக்னாதிபதி சனி ஆட்சி பலத்துடன் அமர்ந்திருப்பதும், ஆயுள் ஸ்தானத்தில் புதன் உச்ச பலத்துடன் அமர்ந்திருப்பதும் தீர்க்காயுளைக் காட்டுகிறது. ஜீவன ஸ்தானத்தில் இணைவு பெற்றுள்ள குருசந்திர யோகம் அவரை வெகுவிரைவில் நிரந்தர உத்யோகத்தில் அமர்த்தும்.

அரசாங்க பணிகளுக்கான தேர்வுகளை தவறாமல் எழுதி வரச் சொல்லுங்கள். வெள்ளிக்கிழமை நாளில் உங்கள் பிள்ளையை அனந்தபத்மநாப ஸ்வாமி ஆலயத்திற்கு அழைத்துச் சென்று மனமுருகி பிரார்த்தனை செய்து கொள்ளச் சொல்லுங்கள். பிரதி சனிக்கிழமை தோறும் ஆதரவற்ற முதியவர் ஒருவருக்கு உங்கள் பிள்ளையின் கையால் அன்னதானம் செய்து வரச் சொல்லுங்கள். கீழேயுள்ள ஸ்லோகத்தினை தினந்தோறும் இருவேளையும் சொல்லி பெருமாளை வணங்கி வருவதால் உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு வாழ்வியல் தரமும் உயர்வடையும்.

“ப்ராஹ்மே முஹூர்த்தே பரிதஸ்வ பக்தை: ஸந்த்ருஷ்ட
ஸர்வோத்தம விச்வரூப
ஸ்வதைல ஸம்ஸேவக ரோகஹர்த்ரே அனந்தபுரீவாச
நமோ நமஸ்தே.”


வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா்  திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா


வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை, பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் தினகரன் ஆன்மிக மலா் 229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம். பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-10-2018

  23-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • longestseabridge

  உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

 • delhi_strikepetrol18

  டெல்லியில் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்: கால் டாக்சி, ஆட்டோ சேவைகள் முடக்கம் !

 • solarcar_race

  சூரிய மின்சக்திகளால் இயங்கும் கார்களுக்கான பந்தயம் சிலி நாட்டில் கொண்டாட்டம்!

 • hondurans_americatrump

  ஹோண்டராஸில் இருந்து அமெரிக்கா நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அகதிகள் !

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்