SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேதமலையாக நின்ற வேதகிரீஸ்வரர்

2017-11-21@ 07:19:48

திருக்கழுக்குன்றம்

ஒரு முறை வேதங்களுக்கு பூமியில் அவதரிக்க ஆவல் உண்டானது. அவை நான்கும் ஈசனிடம் சென்று, ‘பெருமானே, முழுமையாக இருந்த எங்களை தேவர்களும், முனிவர்களும் பேதப்படுத்திவிட்டனர். நான்முகனோ எங்களை நான்கு பிரிவுகளாகப் பிரித்துவிட்டார். தாங்கள்தான் நாங்கள் இணை பிரியாதிருக்க நல்ல வழி காட்ட வேண்டும்’ என முறையிட்டன. சர்வேஸ்வரன் மனம் கனிந்து, ‘பூவுலகில் நீங்கள் நால்வரும் இணைந்து மலைவடிவாய் நில்லுங்கள். யாம் உங்கள் மீதமர்ந்து உலக மக்களுக்கு அருள்புரிவோம். அப்போது நீங்களும் நாமும் இணைந்த ஞான வடிவாக அந்த மலை திகழும்’ என திருவாய் மலர்ந்தருளினார்.

ஈசனின் திருவாக்குப்படியே ரிக்வேதம் வேராகவும்; யஜுர்வேதம் மத்தியபாகமாகவும்; சாமவேதம்  மேல்பாகமாகவும்; அதர்வணவேதம் சிகரமாகவும், உபநிடதங்கள் மரங்களாகவும், சிவாகமங்கள் நாற்புறத்து சாரல்களாகவும் அமைந்து, மொத்தத்தில் வேதகிரியானது. ஈசனும் அதன் உச்சியில் வேதகிரீஸ்வரராக எழுந்தருளினார்.
அறுநூற்றைம்பது படிகள் மலையின் உச்சிக்கு நம்மை அழைத்துச் செல்கின்றன. மேலே, வேதகிரீஸ்வரர் சுமார் ஒரு அங்குல உயரமேயுள்ள வாழைப்பூவின் குருத்து போன்ற சுயம்புலிங்கமாய் தரிசனம் அளிக்கிறார். அவரது கருவறையிலேயே நந்தியம்பெருமானும், சண்டிகேஸ்வரரும் வலப்புற சுவரில் தரிசனமளிக்கின்றனர்.

லிங்கத்திருவுருமுன் மார்க்கண்டேயரும், பின்சுவரில் சங்கரரும், திருமாலும், திருமகளும் பார்வதியை வணங்கும் காட்சியும் சிலை வடிவாகக் காட்சியளிக்கின்றன. இடப்புற சுவரில் யோக தட்சிணாமூர்த்தியும், நான்முகனும் அமர்ந்துள்ளனர். கருவறைக் கூரையின் ஒருபுறம் சிறிய துவாரம் ஒன்று உள்ளது. அதன் வழியாக இந்திரன் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இடி மூலமாக ஈசனை வழிபடுவதாக ஐதீகம். அப்போது கருவறையிலிருக்கும் அனைத்து பூஜா பொருட்களும் சிதறிக் கிடக்குமாம். ஆனால், இந்த வேதகிரீஸ்வரர் மட்டும் எந்த விதமான பாதிப்பும் இல்லாமல் அருட்காட்சியளிப்பாராம்.

கருவறைக்கு வெளியே அர்த்த மண்டபத்தை அடுத்த சிறிய மண்டபத்தில் துவாரபாலகர்களாக விநாயகரும், முருகப்பெருமானும் அமர்ந்தருள்கின்றனர். அனைத்து தெய்வங்களும் ஒருங்கே ஈசனைச் சுற்றி அமர்ந்து அருள்வதால் இத்தலம் தட்சிண கைலாசம் என கருதப்படுகிறது. சைவசமயக் குரவர்கள் நால்வராலும் வணங்கப்பட்ட தலம் இது. வேண்டும் வரம் தரும் வேத மூர்த்தி அருளும் தலம். நாவார்ந்த மறைபாடி நான்முகன் முதலானோர் ஏற்றும் நாயகன் இவர். திருமணவரம் தருவதில் இத்தல இறைவனும், இறைவியும் நிகரற்றவர்கள் என பக்தர்கள் அனுபவபூர்வமாக நம்புகின்றனர். மலைக்கோயிலில் வேதகிரீஸ்வரராக அமர்ந்த ஈசன், மலையடிவாரத்தில் அமைந்துள்ள நான்கு வாசல்களிலும் மிகப்பெரிய கோபுரங்களுடன் கூடிய மாபெரும் ஆலயத்தில் ‘‘பக்தவத்சலர்’’ எனும் திருப்பெயரோடு லிங்கரூபமாய் அருள்கிறார்.

இக்கோயில் தாழக்கோயில் என அழைக்கப்படுகிறது. பக்தவத்சலர் ஆலய கொடிமரத்தைத் தாண்டி வலதுபுறம் ஆறு அடி உயரத்தில் அகோர வீரபத்திரர் அருட்காட்சி அளிக்கிறார். மகாமண்டபத்தின் இடதுபுறம் ஸகசிவசூரியன் எனும் பெயரில் சூரியபகவானும் ஈசான மூலையில் பைரவரும் அருள்கின்றனர். கருவறையின் பின்புறம் கஜபிருஷ்ட (யானையின் பின்புறம்) ஆக்ருதி என்ற சிவாகமப்படி அமைந்துள்ளது. கருவறையை வலம் வரும்போது தட்சிணாமூர்த்தி, 63 நாயன்மார்கள், லிங்கோத்பவர், சண்டேசுவரர், துர்க்கை ஆகியோரை தரிசிக்கலாம். கல்வெட்டில் இத்தலம் ‘உலகளந்த சோழபுரம்’ என்று குறிப்பிடப்படுகிறது. தொண்டை நாட்டுக்குரிய 24 கோட்டங்களுள் இது களத்தூர்க் கோட்டத்தைச் சார்ந்தது. 7  ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர். சோழர், பாண்டியர், ராஷ்டிரகூடர் காலத்திய கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன.

“தோடுடையான் ஒருகாதில் தூயகுழை தாழ
ஏடுடையான் தலைகலனாக இரந்துண்ணும்
நாடுடையான் நள்ளிருளேம நடமாடும்
காடுடையான் காதல் செய்கோயில் கழுக்குன்றே”

என்று சம்பந்தர் இத்தலத்தை பாடிப் பரவியிருக்கிறார். மகாமண்டபத்திலிருந்து வெளி பிராகாரத்தை வலம் வரும்போது இத்தலத்தைப் பாடிப்பரவி மோட்சமடைந்த மாணிக்கவாசகர் சந்நதியும், எதிரே அவர் ஈசனுடன் கலந்த ஆத்மபீடமாக விளங்கும் ஆத்மநாதர் சந்நதியும் உள்ளன. அதையடுத்து வண்டுவன விநாயகர் அருள்
கிறார். வண்டு என்பதற்கு சங்கு என்றும் வனம் என்பதற்கு தீர்த்தம் என்றும் பொருள் உண்டு. இத்தல தீர்த்தமான சங்கு தீர்த்தக் கரையில் இவர் அருள்வதால் அவருக்கு அந்தப் பெயர். அவரையடுத்து ஏகாம்பரேஸ்வரர், ஜம்புகேஸ்வரர் இருவரும் தனித்தனி சந்நதிகளில் அமர்ந்துள்ளனர். இந்த பிராகாரத்தின் வடகிழக்கு மூலையில் தலவிருட்சமான வாழைமரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. வாழைப்பூவின் குருத்து தோற்றத்தில் அருளும் வேதகிரீஸ்வரருக்குத் தல விருட்சமாக வாழைமரம்! வெளிப் பிராகாரத்தில் திரிபுரசுந்தரி அன்னை சந்நதி உள்ளது. பாசம், அங்குசம், அபய, வரதம் தாங்கிய திருக்கோலத்தில் அருள்கிறாள் அன்னை.

சிவப்பு கற்கள் பதித்த ஸ்ரீசக்கர மாலையை அணிந்து அருளே வடிவாய் தேவி துலங்குகிறாள். பல நூற்றாண்டுகளுக்கு முன் அப்பிராந்தியத்தை ஆண்ட அரசன் ஒருவன் இந்த சுயம்பு அம்பிகை மூர்த்தத்தின் கால்கள் மெலிந்து சூம்பியிருந்ததைக் கண்டு வருந்தி, புதியதொரு மூர்த்தத்தைப் பிரதிஷ்டை செய்ய விரும்பினான். அச்சமயம் இந்த அம்பிகை அவன் கனவில் தோன்றி, ‘உனது தாயாருக்கு உடலில் ஏதாவது ஊனம் இருந்தால் அவளைப் புறக்கணித்து விடுவாயா?’ என கேட்டு, வேறு ஒரு மூர்த்தியை செய்யும் எண்ணத்தைக் கை விடுமாறும், பழைய மூர்த்தத்தையே பூஜித்து வருமாறும், ஆண்டுக்கு மூன்று நாட்கள் மட்டுமே அந்த மூர்த்தத்திற்கு அபிஷேகம் செய்யுமாறும் அருள் வாக்களித்து மறைந்தாள். அதன்படியே ஆடிப்பூரம், நவராத்திரியின் கடைசிநாள், பங்குனி உத்திரம் ஆகிய மூன்று தினங்களில் மட்டுமே இந்த இறைவிக்கு பூரணமாக அபிஷேகம் செய்யப்படுகிறது.

மற்ற நாட்களில் சாம்பிராணித் தைலம் சாத்தப்பட்டு, அம்பிகையின் பாதங்களுக்கு மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது. இத்தலம் பட்சி தீர்த்தம் என்றும் பெயர் பெற்று விளங்குகிறது. நான்முகனின் மானசபுத்திரர்கள் ‘சாருப்ய’ பதவிக்காக ஈசனை நோக்கி தவம் இருந்தார்கள். ஆனால், ஈசன் தரிசனம் கிட்டியவுடன் ‘சாயுச்ய’ பதவியைக் கேட்டனர். தவம் செய்த நோக்கத்தை மாற்றிக் கேட்டதால் ஈசனின் சாபம் பெற்ற அவர்கள் கழுகுகளாக மாறினர். அந்த சாபம் நீங்க ஒவ்வொரு யுகத்திலும் இரண்டு கழுகுகளாக காலையில் காசியில் கங்கையில் குளித்து, மதியம் இத்தல வேதகிரீஸ்வரரை பூஜித்து, மாலையில் ராமேஸ்வரம் ராமநாதரை அவை தரிசித்து வருவதாக ஐதீகம். ஒரு சமயம் மார்க்கண்டேயர் இத்தலத்திற்கு வந்து ஈசனை பூஜித்தபோது ஈசனை நீராட்ட பாத்திரம் ஏதும் இல்லை. அவர் ஈசனை பிரார்த்திக்க, இந்த தீர்த்தத்திலிருந்து அழகிய வலம்புரிச் சங்கு ஒன்று தோன்றியதாம்.

அன்று முதல் இத்தீர்த்தத்தில் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்குகள் தோன்றி மிதந்து வருகின்ற அற்புதம் நிகழ்கிறது.  இது நோய் தீர்க்கும் தீர்த்தமாக விளங்குகிறது. இதன் கரையில் ருத்ரகோடீஸ்வரர் அருள்கிறார். அவர் நாயகி, அபிராம சுந்தரி. இத்தலத்தில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. பிரம்மோற்சவத்தின்போது அதிகாரநந்தி வைபவத்தில் ஈசன் அன்னையுடன் கிரிவலம் வருவது அற்புதம். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குருபகவான் கன்னி ராசியில் வரும் தினத்தன்று லட்சதீபப் பெருவிழாவில் இத்தலமே ஒளி வெள்ளத்தில் மிதக்கும் காட்சி, கண்கொள்ளாதது. சென்னைக்கு அருகே செங்கல்பட்டு மகாபலிபுரம் நடுவே சாலையோரம் அமைந்துள்ளது திருக்கழுக்குன்றம். சென்னையிலிருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

ந.பரணிகுமார்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-10-2018

  24-10-18 இன்றைய சிறப்பு படங்கள்

 • FoamFightScotland

  முதலாம் ஆண்டு மாணவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்ற ஸ்காட்லாந்து பல்கலைக்கழம்: புகைப்படங்கள்

 • SALTMarchRashtrapti

  ராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் உருவ சிலைகள்: மாணவர்கள் கண்டுகளிப்பு

 • NagoroJapanVillage

  ஜப்பானில் உள்ள தீவில் வெறிச்சோடிய கிராமத்தை பொம்மைகளால் உயிரூட்டிய பெண்: குவியும் சுற்றுலா பயணிகள்

 • FallFoilageWorld

  உலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்