SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மழலைச் செல்வமருளும் செம்பய்யனார்

2017-11-18@ 10:06:13

நம்ம ஊரு சாமிகள் - முதனை, விருத்தாசலம், கடலூர்

விருத்தாசலம் அருகேயுள்ள முதனை கிராமத்தில், ஊருக்கு மேற்கே காட்டுக்குள் வீற்றிருக்கும் செம்பய்யனார் குழந்தை வரம் தந்தருள்கிறார். பூலோகத்தில்  தாருகா வனத்தில் முனிவர்கள், தங்கள் பத்தினியுடன் வாழ்ந்து வந்தனர். இந்த வனத்தில் வாழ்ந்த முனிவர்களுக்கு, தங்கள் தவத்தின் வலிமையே உயர்ந்தது  என்ற கர்வம் இருந்தது. அவர்களின் பத்தினிகளோ, கற்பு நெறியில் தங்களுக்கு இணை எவரும் இல்லை என்று இறுமாப்புடன் இருந்தார்கள். பரமனையோ,  பரந்தாமனையோ வணங்க மறுத்து பெரும் ஆணவம் கொண்டு வாழ்ந்திருந்தார்கள். முனிவர்களுக்கு நல்லறிவு புகட்ட, மகாதேவனும், மகாவிஷ்ணுவும் முடிவு  செய்தனர். ஆணழகனாக, வாலிப பருவம் கொண்டு, காண்பவரை கவர்ந்து இழுக்கும் அழகு வடிவத்துடன் பிட்சாடனர் திருக்கோலத்தை சிவனார் கொண்டார்.  பொன்னிற மேனியாக, பேரழகுடன் மோகினி அவதாரம் எடுத்தார், திருமால். இருவரும் தாருகாவனம் வந்தனர்.

தாருகாவனத்தில் தவ முனிவர்களின் யாக சாலைக்குச் சென்றாள், மோகினி. அவளது கால் கொலுசு ஓசைகேட்டு திரும்பிய முனிவர்கள் வியப்புற்றனர்.  யாகத்தை விட்டெழுந்தார்கள். மோகினியை பின் தொடர்ந்து வௌியே வந்தனர். இங்கே இப்படி இருக்க, முனிவர்களின் வசிப்பிடம் பகுதிக்கு கட்டிளம்  காளையாக வந்த பிட்சாடனர், கரம் தனில் வீணையை ஏந்தியபடி, தேவகானம் இசைக்க, முனிவர்களின் இல்ல வாசலில் நின்று பிச்சை கேட்டார். முனிவரின்  பத்தினி தர்மம் கொண்டு, வந்து பார்த்தார். என்ன அழகு, இப்படி ஒரு இளைஞனை இதுவரை யான் காண்கிலேன் என வியந்தார். அடுத்தடுத்த இல்லங்களில்  இருந்த ரிஷி பத்தினிகளிடம் எடுத்து இயம்பினாள். அவர்களும் அந்த ஆச்சரியத்தைக் காண விரைந்தனர். ரிஷி பத்தினிகள் ஒன்றாக கூடி பிச்சாடனாரின்  தேவகானத்தை ரசித்துக் கேட்டபடி, அவரைப் பின் தொடர்ந்தனர்.

இதைக்கண்டு எதிரே மோகினியின் அழகில் மோகப்பித்து பிடித்து பின் தொடர்ந்து வந்த முனிவர்கள் மனம் வெதும்பினர். கோபம் பொங்கிட இயல்பு நிலைக்கு  வந்தனர். ரிஷிகளாகிய நமது தவத்தை அழித்து, தமது மனைவிமார்களின் கற்பு கெடும் விதத்தில், அவர்களை மயக்கியது இந்த பிச்சைக்காரன்தான். இவன் சதி  வேலையின் காரணமாகத்தான் இந்தப் பெண்ணும் நம்மை மயக்க வந்திருக்கிறாள் என்று எண்ணிய அவர்கள் சினம் கொண்டு பிட்சாடனருக்கு எதிராக வேள்வி  ஒன்றை நடத்தினர். அதன் மூலம் பல ஆயுதங்களை உருவாக்கி பிட்சாடனர் மீது ஏவினர். பின்னர், தங்கள் முயற்சிகள் யாவும் பலனற்றுப் போனதைக் கண்ட  முனிவர்கள் தலை குனிந்து நின்றார்கள். மேலும், அவர்களைச் சோதிக்க வேண்டாம் என்று எண்ணிய ஈசன் தனது விஸ்வரூபத்தை காட்டியருளினார்.

சிவனாரின் தரிசனம் கண்டு, சிந்தை தெளிந்த ரிஷிகள் தாங்கள் செய்வதறியாது நிகழ்த்திய தவறினை மன்னிக்கும்படி மன்றாடி வேண்டினார்கள்.“ரிஷிகளே!  நீங்கள் கடவுளை விட கர்மாதான் பெரிது என்று எண்ண முற்பட்டதனால், கர்மாவை விட, எல்லாவற்றையும்விட கடவுள் எனும் ஆத்மா, சக்தி மிகப்பெரியது  என்ற உண்மையை உணர்த்தவே நாம் இந்த நாடகமாடினோம். நீங்கள் அறியாத செய்த தவறினை மன்னித்தோம். இனி வேத நெறி வழுவாமல் எம்மை ஆராதித்து  நற்கதியடையுங்கள் என்று வரமளித்து அவ்விடம் விட்டு ஈஸ்வரன் அகன்றார். தாருகாவனம் விட்டு வெளியேறிய பின் மோகினியாக இருந்த மகாவிஷ்ணு,  சிவனாரை நோக்கி, “சுவாமி, முனி பத்தினிகளைக்கூட மயக்கிய அந்த பிட்சாடனர் கோலத்தை நான் மீண்டும் காண விரும்புகிறேன், என்றாள். சிவனாரும்  பிச்சாடனர் கோலம் கொண்டார். இருசக்திகளும் சங்கமம் ஆகின. ஐயனார் அவதரித்தார்.

ஐயனார் பூரணை, புஷ்கலையுடன் பூலோகம் வந்தார். அவர் விரும்பிய கானகப் பகுதிகளில் வாசம் செய்தார். அவ்வாறு வந்த ஐயனார் முதனை கிராமம் இருக்கும்  வனப்பகுதிக்கு வந்தார். ஐயனார் குடும்ப சகிதமாக வேட்டைக்குச் சென்று திரும்பும்போது பூரண கலையின் ஆடையில் முள்செடி தைத்து இன்னல் தந்தது.  ஆவேசம் அடைந்த பூரணகலை, தனக்கு இன்னல் கொடுத்த முள் செடிகளே இவ்விடம் முளையாமல் போகக்கடவாய் என்று சபித்தார். அன்று முதல் இன்று வரை  இப்பகுதிகளில் முள் செடிகள் முளைக்கவே இல்லை. இவ்விடம் சுயம்புவாக தோன்றிய ஐயனாருக்கு அவரை வழிபட்டவர்கள் செம்பு உலோகத்தால் கவசம்  செய்து வழிபட்டுள்ளனர். செம்புக் கவசம் சாத்தப்பட்டதால் இவர் செம்பய்யனார் என அழைக்கப்படலானார். இவரை செம்பர் என்றும் அழைக்கின்றனர்.  திருவண்ணாமலை தீப திருவிழாவுக்கு முதல் நெய் இந்த கிராமத்தில் இருந்துதான் கொடுத்ததாக கூறப்படுகிறது.

அதனால் தான் இந்த ஊருக்கு முதனை என் பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது. முதல் நெய் என்பதே மருவி முதனை என ஆனது, என்கின்றனர்.
செம்பய்யனார் கோயில் அருகே சித்திரை ஏரி உள்ளது. இந்த ஏரியின் தண்ணீர் சுவை மிக்கதாக இருப்பதாக அப்பகுதியினர் கூறுகின்றனர். செம்பய்யனார்  கோயிலில் பங்குனி உத்திரம் மற்றும் கார்த்திகை மாத கடைசி வெள்ளிக் கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. தை மாதம் விழா நடைபெறுகிறது.  விசேஷ நாட்கள் என்றில்லாமல் அனைத்து நாட்களிலுமே இக்கோயிலில் முப்பூசை, காது குத்துதல் நடக்கும். குழந்தைப் பேறுக்கு வேண்டிக் கொண்டவர்கள்,  குழந்தை பாக்கியம் பெற்ற பின் கோயிலுக்கு வந்து பொங்கல் வைப்பார்கள். அப்போது செபய்யனார் காலடியில் குழந்தையை படுக்க வைத்து அவருடைய  பெயரையே சூட்டுவார்கள்.

செம்பய்யனாருக்கு சைவ படைப்பு, காவல் தெய்வங்களுக்கு கிடா வெட்டி, சேவல் அறுத்து படையல் போடுவார்கள். குலசாமி கூடவேயிருந்து காப்பார் என்ற  நம்பிக்கையில் புதுவாகனத்தோடு வந்து படையலிட்டு வேண்டிக் கொள்வார்கள். வடலூர் தை பூசத்திற்கு முதல் நாள் செம்பய்யனார் கோயில் தீர்த்தவாரி  முக்கியமானது. சித்திரை ஏரியிலிருந்தும் மணிமுத்தாற்றிலிருந்தும் தீர்த்தவாரி காவடிகள் மூலம் புனித நீரை கொண்டு வந்து செம்பய்யனாருக்கு அபிஷேகம்  நடக்கும். அதனை வேல்முழுகுதல் என்று கிராம மக்கள் சிலிர்ப்போடு அழைக்கிறார்கள். இதனால் கோயில் எப்போதுமே திருவிழா கோலமாகவே காட்சி  அளிக்கிறது. பெற்ற உலகினில் முதனை நகர் தன்னிலே சித்திரை ஏரிக்கரையில் வாழும் செம்பைய்யரே உன்பாதமலர்போற்றியே... செப்பியொரு வரம்  கேட்கிறேன்.

கார்பெற்றமேகமுடன்இடியுடன் குடை கொண்டு கனக மின்னலும் எடுத்து கங்குயிருள் விடியும் முன் கங்கை நதி வெள்ளமாய் கரைபுரள வரமருள்வாய்... இது  போன்ற செம்பய்யனாரின் பெருமை பேசும் பாடல்கள் சுற்றுவட்டார கிராமங்களில் இசையோடு பாடப்பட்டு வருகிறது. வறட்சி காலத்தில் மழை கொண்டு வந்து  வேளாண்மையை காத்த கடவுளராக செம்பய்யனார் விவசாயிகளின் மனதில் குடிகொண்டுள்ளார். இப்பகுதிகளில் செம்பய்யனார், செம்புலிங்கம், செம்பர், செம்பாயி  பெயர்கள் அதிகம். அந்த பகுதிகளில் ஏதாவது ஒரு நிகழ்ச்சி நடந்தால் செம்பா எனக்கூப்பிட்டால் உடனே கூட்டத்திலிருந்து ஒரு இருபது பேராவது சட்டென  திரும்பி பார்ப்பார்கள். எல்லாம் செம்பய்யனாரின் அருளால் பிறந்தவர்கள் அதனால் தான் அவரது பெயரை கொண்டுள்ளனர். முள் செடியே இல்லாத காடு உண்டு  என்றால் அது இங்கு மட்டும் தான்.செம்பய்யனார் கோயில் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்திலிருந்து கிழக்கே 15 கி.மீ. தொலைவிலுள்ள முதனை கிராமத்தில்  அமைந்துள்ளது.

சு.இளம் கலைமாறன், படங்கள்: கடலூர் அன்பன்சிவா

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 16-06-2019

  16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 15-06-2019

  15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • china

  சீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்

 • oaman_thee11

  மர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்

 • AftermathProtestHK

  ஹாங்காங்கில் அரங்கேறும் தொடர் போராட்டங்களால் அலங்கோலமாகும் நகரும்..: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்