SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

கார்த்திகை மாதம் பிறந்தவர்கள் எப்படியிருப்பார்கள்?

2017-11-16@ 15:52:54

பூமிகாரகன், உத்யோகத்திற்குரியவர், சகோதரகாரகன் என்று அழைக்கப்படும் செவ்வாயின் வீடாகிய விருச்சிக ராசியில் சூரியன் இருக்கும் காலத்தை கார்த்திகை மாதம் என்று அழைக்கின்றோம். வீரதீர பராக்கிரம செயல்கள், நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை, கொள்கைகளில் உறுதி, திடசித்தம் என பல ஸ்திரமான குண விசேஷங்கள் உடைய செவ்வாயின் ராசியில் அதேபோன்று ஆட்சி பீடம், ஆளுமைத்திறன், அதிகாரப் பதவிகள், அரசியல் செல்வாக்கு, கம்பீரம் என பல இயல்புகளை தன்னகத்தே கொண்ட சூரியன் சஞ்சரிக்கும்போது பிறந்தவர்கள் கிட்டத்தட்ட இந்த இரண்டு கிரகங்களின் அம்சங்களை அதிகமாகப் பெற்றிருப்பார்கள். இவர்களின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்தால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.

எந்த நேரத்தில் எப்படிப்பட்ட மனநிலையில் இருப்பார்கள் என்பதை கணிக்கவே முடியாது. எதையும் வெளிப்படையாக, நேருக்கு நேராக, பின் விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல், மனதில் இருப்பதைக் கொட்டி விடுவார்கள். முன்கோபம், கொஞ்சம் பிடிவாதம், எதிர்வாதம் இருக்கும். பிறரை உயர்த்தியும், தாழ்த்தியும், கேலி கிண்டல் செய்தும் பேசுவது இவர்களின் வாடிக்கையாகும். அதற்கு காரணம் அந்த ராசியின் சின்னம் தேள் என்பதால் விஷம வார்த்தைகளால் பிறரை எளிதாகக் காயப்படுத்திவிடுவார்கள். ஓடுமீன் ஓட உருமீன் வரும் வரை காத்திருக்குமாம் கொக்கு. என்பதற்கேற்பதான், தன் சுகம், தன் காரியம் என்ன என்பதில் இவர்கள் குறியாக இருப்பார்கள். அவசரத்தையும், ஆத்திரத்தையும் தன்னகத்தே கொண்டிருந்தாலும் எப்பொழுது எதை வெளிக்காட்ட வேண்டுமோ, அப்போது தன் சுயரூபத்தை வெளிப்படுத்துவார்கள்.

‘களவும் கற்று மற’ என்பது இவர்களுக்குத்தான் பொருந்தும். எல்லா விஷயங்களிலும் ஈடுபாடு உடையவர்களாக இருப்பார்கள். பொய்யை உண்மைபோல் சித்தாரிப்பதில் நிபுணர்கள் எனலாம். இவர்கள் நடந்துகொள்ளும் முறைகள் மூலம் இவர்களின் சுயரூபத்தை புரிந்துகொள்வது மிகவும் கடினம். தீய பழக்க வழக்கங்கள், நய வஞ்சகர்களின் சேர்க்கை என்று சிக்கினாலும், எல்லா கல்யாண குணங்களையும் ஒருசேர அனுபவித்துவிட்டு அதிலிருந்து மிகச் சுலபமாக மீண்டு வந்துவிடுவார்கள். சிற்றின்பப் பிரியர்கள் என்றால் அது மிகையாகாது. அந்த சுகத்தை எவ்வளவு முடியுமோ அந்தளவிற்கு அனுபவித்துவிட்டு, சட்டென பற்றற்றவர்களாக மாறிவிடுவார்கள். அதேநேரத்தில் ஆன்மிகத்தில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு அருள் ஞான பேரின்பப் பிரியர்களாகவும் மாறுவார்கள். இவர்களின் இயல்பு நிலைகள் எல்லாம் சற்று முரண்பாடு உடையதாகவே இருக்கும்.

இவர்களிடம் ரகசியம் தங்காது. எந்த பிரச்னையாக இருந்தாலும் சாதாரண பேச்சில் ஆரம்பித்து, உணர்ச்சி வசப்பட்டு தன்னை அறியாமலேயே எல்லா விஷயங்களையும் வெளிப்படுத்தி விடுவார்கள். கரடு முரடாக பேசினாலும் உதவி செய்யும் குணம் இருக்கும். யாருக்காவது உதவ வேண்டும் என்று நினைத்து விட்டால் அதை உடனே செய்து விடுவார்கள். நம்ப வைத்து நாடகமாடுவது இவர்களுக்குப் பிடிக்காது. அதிகார பதவியில் அமரும் யோகம் இவர்களுக்கு உண்டு. படிப்பு, அறிவு, ஆற்றல் மூலம் I.A.S., I.P.S, I.F.S., ராணுவம் போன்றவற்றில் உயர் பதவி வகிப்பார்கள். அரசியலில் இவர்களுக்கு பெரும்பங்கு இருக்கும். கட்சி, பொது அமைப்புகள் சங்கங்களில் மிக முக்கிய பதவிகளில் அமரும் பாக்கியம் உண்டு. சோதனையான காலகட்டங்களில் மனம் தளராமல், பிரச்னைகளை எதிர்கொண்டு அதிலிருந்து மீண்டு வந்துவிடுவார்கள்.

தனம்  குடும்பம்  வாக்கு

குடும்பம், உற்றார், உறவினர்களிடையே மிகவும் ஈடுபாட்டுடன் இருப்பார்கள். இவர்களின் பேச்சுதான் இவர்களுக்கு எதிரி. ஆனால் அதில் நியாயம், நேர்மை இருப்பதனால் இவர்களை நன்றாக புரிந்து கொள்பவர்கள்தான் இவர்களிடம் நட்பாக இருப்பார்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருப்பார்கள். எதையும் உரிய நேரத்தில் செய்துவிட வேண்டும். காலம் தாழ்த்துவது இவர்களுக்கு பிடிக்காது.  பணம் கொடுக்கல், வாங்கலில் மிகவும் கறாராக இருப்பார்கள். குரு, சந்திரன் சாதகமாக இருக்கப் பிறந்தவர்கள் நல்ல அதிர்ஷ்டசாலிகள். பணப்புழக்கம் எப்பொழுதும் இருக்கும். சேமிப்பில் அதிக கவனம் செலுத்துவார்கள். பண நடமாட்டம் இருக்கும்போது நிலம், தங்கம் போன்றவற்றில் முதலீடு செய்வார்கள். தங்களின் சுய தேவைக்கும், ஆசைக்கும் கணக்கு பார்க்காமல் பணத்தை செலவிடுவார்கள்.

திட  தைரிய  வீரியம்

திடமாகவும், தீர்க்கமாகவும் முடிவு எடுப்பதில் இவர்களுக்கு இணை இவர்கள்தான். எந்த சூழ்நிலையிலும் மனம் தளராமல், சஞ்சலத்திற்கு இடம் கொடாமல் எடுத்த காரியத்தை செவ்வனே செய்து முடிப்பார்கள். சில தடைகள், இடையூறுகள் வந்தால் அதை மற்றவர்களிடத்திலும், குடும்பத்தினரிடமும் காட்ட மாட்டார்கள். காரியத்தில் கண்ணாக இருந்து சூழ்நிலைக்கு ஏற்ப தங்களைத் தயார்படுத்திக் கொள்வார்கள். கொஞ்சம் விஷய ஞானம் உள்ளவர்களுக்கு தான் என்ற மமதை இருக்கும். எப்படியாவது தங்களின் கருத்தை மற்றவர்கள் மீது திணிப்பார்கள். பிறர் தம்மை அண்டி இருக்க வேண்டும் என்பதில் குறியாக இருப்பார்கள்.

சொத்து  சுகம்

சொத்துகள் சேருவதற்கு பலவழிகள் உள்ளன. படித்த கல்வி மூலம் உத்யோகத்தில் அமர்ந்து அதன் மூலம் இவர்களுக்கு சொத்து அமையும். பரம்பரை, பிதுர்ராஜித சொத்துகள் இவர்களுக்குக் கிடைக்கும். அரசியல், அதிகார பதவி மூலம் செல்வம் சேரும். பெண்கள் மூலம் பெரும்தனம், உயில் சொத்துகள் கிடைக்கும். தாயார், தாய் மாமன், தாய்வழி உறவுகளால் அனுகூலம் உண்டு. இவர்கள் வாகனப் பிரியர்கள். அடிக்கடி பழைய வண்டியை விற்று புது வண்டி வாங்குவார்கள். குரு, சுக்கிரன் சாதகமாக அமைந்தால் பிள்ளைகளால் ஏற்றம் அடைவார்கள். மனைவி மூலம் இவர்களுக்கு நல்ல யோகம் உண்டு. வசதியான வாழ்க்கை அமையும். சீர், வரதட்சணை, அன்பளிப்பு என்று உழைப்பில்லாத செல்வம் சேரும். உடல் ஆரோக்கியத்தில் இவர்களுக்கு முக்கியமாக ரத்த சம்பந்தமான நோய்கள் இருக்கும். உயர், குறைந்த ரத்த அழுத்த நோயால் அவதிப்படுவார்கள். வயிற்றுக்கோளாறுகள் ஏற்படும். குறிப்பாக 50 வயதிற்குமேல் மூட்டு வலியால் மிகவும் பாதிக்கப்படுவார்கள். உடல் மூட்டுக்களில் நீர்க்கோர்த்துக்கொள்ளும். புதன் நல்ல அமைப்பில் இல்லையென்றால் நரம்பு சம்பந்தமான கோளாறுகள் வரவாய்ப்புள்ளது. இளம் வயதில் கட்டுப்பாடு இல்லாவிட்டால் தொற்று நோய்கள், பால்வினை நோய்கள் வரலாம்.

பூர்வ புண்ணியம் குழந்தைகள்

குழந்தைகள், பேரப்பிள்ளைகள் மூலம் பெருமை அடையும் பாக்கியம் உள்ளவர்கள். குரு, சனி செவ்வாய் நல்ல அமைப்பில் உள்ளவர்களுக்கு சகல பாக்கியங்களும் கிடைக்கும். வயோதிக காலத்தில் இவர்களை கவனிப்பதற்கு பிள்ளைகள் நான், நீ என்று தயாராக இருப்பார்கள். இவர்களுக்கு வாக்கு பலிதம் மற்றும் கைராசி இருக்கும். இவர்கள் தொடங்கி வைக்கின்ற காரியங்கள் நிலைத்து நின்று பலன் தரும். இவர்களிடம் மனதாற ஆசி பெற்றால் இவர்களின் வாழ்த்துகள் பலிக்கும். ஆன்மிகத்தில் மிக உச்ச நிலையை அடையும் அமைப்பு உள்ளவர்கள். தவம், யோகம், தியானம், குண்டலினி பயிற்சி என்று மூலாதார சக்கரங்களை எழுப்பி ஆன்ம பலம் கிடைக்கப் பெறுவார்கள். மந்திர, தந்திர, சாஸ்திர முறைகள் இவர்களுக்கு மிக எளிதாகக் கூடிவரும். ஒருவரின் எண்ண ஓட்டங்களை எளிதில் படித்து விடுவார்கள். பெண் தெய்வங்கள், உக்கிர வடிவில் உள்ள காளி, பிரத்யங்கிரா, துர்க்கை, வாராகி போன்ற அம்சங்களை உபாசனை செய்வார்கள். முருக வழிபாடு இவர்களுக்கு நல்ல நிலையைத் தரும். இவர்கள் சோமவார (திங்கட்கிழமை) விரதம் இருப்பதையும், வியாழக்கிழமை மகான்களின் சமாதிகளுக்குச் சென்று தரிசித்து தியானம் செய்வதையும், பௌர்ணமி அன்று அம்பாளை தரிசித்து தியானத்தில் ஈடுபடுவதையும் மேற்கொண்டால் வாழ்க்கையில் மனஅமைதியும், நிம்மதியும் கிடைக்கும்.

ருணம்  ரோகம்  சத்ரு

கடன், வியாதி, எதிரி என்பது பொதுவான விஷயம் என்றாலும், அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதற்கேற்ப எல்லாம் ஒரு கட்டுக்குள் இருப்பது மிகவும் அவசியம். கடன்படுவதில் பல வகைகள் உள்ளன. சுபவிரயங்கள், அசுபவிரயங்கள் மூலம் கடன்படுவது, தொழில், வியாபாரத்தில் அகலக்கால் வைத்து சிரமப்படுவது என பல வகைகள் உள்ளன. இவர்களுக்கு பணம் புரட்ட வேண்டிய சூழ்நிலைகள் வந்தாலும், திடீரென்று பெரும் தொகை தேவைப்பட்டாலும், அதை திருப்பி செலுத்துவதற்கான வழி முறைகளை முதலில் வகுத்துக்கொண்டுதான் செயலில் இறங்குவார்கள். தேவையில்லாமல் கடன்பட மாட்டார்கள். இவர்களின் விடாப்பிடியான, வீரியமிக்க குணம் காரணமாக நேர்முக எதிர்ப்பை விட மறைமுக எதிர்ப்பு அதிகம் இருக்கும். இருந்தாலும் எல்லாவற்றையும் மிகச் சாதாரணமாக சமாளித்து பிரச்னைகளில் இருந்து விடுபடுவார்கள்.

பயணங்கள்  மனைவி கூட்டாளிகள்

நம்முடைய  அவசியத் தேவைக்கான பயணங்களைத் தவிர, உல்லாசப் பயணங்கள், பக்தி சுற்றுலாக்கள், நண்பர்களுடன் இயற்கை எழில் கொஞ்சும் மலை வாசஸ்தலங்களுக்குப் போய் தங்குவது, இயற்கையை ரசிப்பது ஆகியவை இவர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அழகை, கலையை ஆராதிப்பவர்கள் தனிமையிலே இனிமை காண்பார்கள். நண்பர்கள், கூட்டாளிகள் இவர்களின் குணம், குறிப்பறிந்து விட்டுக்கொடுத்து விடுவார்கள். சுக்கிரன், குரு, சந்திரன் நல்ல அமைப்பில் இருக்கும்போது பிறந்தவர்களுக்கு இனிய இல்லறம் அமையும். மனைவி மூலம் அந்தஸ்து, சொத்து கிடைக்கும். எது எப்படி இருந்தாலும் தன் சுகபோகம் குறையக்கூடாது என்பதில் குறியாக இருப்பார்கள். ஆகையால் மகுடிக்கு கட்டுண்ட நாகம்போல் மனைவி சொல்லே மந்திரம் என்று வாழ்ந்து தம் தேவைகள், இச்சைகளை நிறைவேற்றிக் கொள்வார்கள்.

தசமஸ்தானம்


தொழில், வியாபாரம், வேலை வாய்ப்பு, ஆளுமைத்திறன் ஆகியவற்றை கணிக்கும்போது அதிகாரம் செலுத்துகின்ற பதவிகளில் அமர்வார்கள். I.A.S, I.P.S., I.F.S.,  ராணுவம் போன்ற அரசு இயந்திரங்களை இயக்கும் ஆற்றல் பெற்றவர்களாகத் திகழ்வார்கள். தொழிற்சங்கங்கள், கூட்டுறவு சங்கங்கள், சுயஉதவிக் குழுக்கள் போன்றவற்றில் முக்கிய பொறுப்பு, அங்கம் வகிப்பார்கள். நெருப்பு சம்பந்தமான அனைத்து தொழில்களும் இவர்களுக்குக் கைகொடுக்கும். ஹோட்டல், பேக்கரி, செங்கல் சூளை, உலோகங்களை உருக்கிச் செய்யும் வார்படத் தொழில், தங்கம், வெள்ளி, பித்தளை போன்ற உலோகங்களில் கலை நயமிக்க பொருட்கள் தயார் செய்வது, சாதுர்ய பேச்சால் தொழில் செய்யும் புரோக்கர், கமிஷன் ஏஜென்சிகள். அரசாங்க சம்பந்தப்பட்ட கட்டிட கான்ட்ராக்டுகள், சாலை போடுவது, பாலம் கட்டுவது போன்ற பொதுப்பணித்துறை பணிகள், இரும்பு, எந்திரம், எண்ணெய் வகைகள் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் என பல்வேறு துறைகளில் இவர்கள் கால் பதிக்கலாம். எந்தத்துறையில் நுழைந்தாலும் இவர்களுக்கென்று ஒரு தனி இடம் இருக்கும், ஒரு சிறப்பு முத்திரையைப் பதித்துவிடுவார்கள். கடின உழைப்பு, விடாமுயற்சி காரணமாக தொழில் யோகமும், செல்வ வளமும், பெயரும், புகழும் பெரும் தனமும் கிடைக்கப் பெறுவார்கள்.

ஜோதிட முரசு மிதுனம் செல்வம்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

மருத்துவம்

Medical Trends கைகளின் வலி
Like Us on Facebook Dinkaran Daily News
 • autumnfestivalchina

  சீனாவில் இலையுதிர் காலம் நிறைவு விழாவையடுத்து வண்ண விளக்குகளால் ஜொலித்த நகரங்கள்

 • drumpsusma

  நியூயார்க் ஐ.நா. தலைமையகத்தில் 73வது பொதுக்குழு கூட்டம் : உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு

 • rahulgandhiamedi

  உத்தரபிரதேசத்தில் 2வது நாளாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுற்றுப்பயணம்

 • usstromattack

  ஃபுலோரன்ஸ் புயல் தாக்கத்திற்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பி வரும் அமெரிக்கா

 • pandathirtysix

  36வது பிறந்த நாளை கொண்டாடிய உலகின் வயதான பாண்டா கரடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்