SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உத்யோகம் நிரந்தரமாகும்!

2017-11-14@ 16:58:26

நான் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிக அளவிலான கடன் தொல்லையால் மனம் உடைந்து தீராத கவலையில் உள்ளேன். இதிலிருந்து விடுபட உரிய பரிகாரம் சொல்லவும். குமார், திருச்சி.

திருவோணம் நட்சத்திரம், மகர ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தில் தற்போது சனிதசையில் சனி புக்தி நடந்து வருகிறது. எட்டாம் இடமாகிய விரய ஸ்தானத்தில் இணைந்துள்ள செவ்வாயும், சுக்கிரனும் அதிகப்படியான செலவினத்தை உண்டாக்குகிறார்கள். உங்களுக்காக இல்லை என்றாலும், அடுத்தவர்களுக்காகச் செய்யும் ஆடம்பர செலவுகளால் கடனாளி ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். கூடாநட்பு கேடில் விளையும் என்பதை உணர வேண்டியது அவசியம். உங்களால் ஆதாயம் கண்ட எவரும் பிரச்னைக்கு உரிய நேரத்தில் உதவிக்கு வரப் போவதில்லை.

வருகின்ற டிசம்பர் மாதம் முதல் ஏழரைச்சனியும் துவங்க உள்ளது. மேலும், கடன் வாங்குவதை நிறுத்தி, செலவுகளைக் குறைத்து சிக்கனமாக வாழ்ந்து வாருங்கள். தனக்கு மிஞ்சிதான் தானமும், தர்மமும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வருவதை ஆயுட்காலம் முழுவதும் கடைபிடித்து வாருங்கள். கீழேயுள்ள ஸ்லோகத்தினைச் சொல்லி தினமும் ஆஞ்சநேயரை வணங்கி வருவதால் தொல்லை குறைவதை உணர்வீர்கள்.

“பம்பாதீரவிஹாராய ஸௌமித்ரிப்ராணதாயிநே
ஸ்ருஷ்டிகாரண பூதாயமங்களம் ஸ்ரீஹ நூமதே.”


ஒன்பதாம் வகுப்பு படிக்கும் என் மகனுக்கு மூன்று ஆண்டுகளாக உடலில் அலர்ஜி உண்டாகி தடிப்பும், அரிப்பும் ஏற்படுகிறது. இதனால் படிப்பில் ஆர்வம் இல்லாமல், ஏதோ சிந்தனையில் இருக்கிறான். பார்க்காத வைத்தியம் இல்லை. படிப்பையே வெறுக்கிறான். நல்லதொரு வழி காட்டுங்கள். கல்யாணராமன், சீர்காழி.

உத்திராடம் நட்சத்திரம், மகர ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் பிள்ளையின் ஜாதகப்படி தற்போது சந்திர தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. லக்னாதிபதி செவ்வாயின் நீசபலமும், ராசிநாதனான சனியின் அஷ்டம ஸ்தான அமர்வு நிலையும் இதுபோன்ற பிரச்னையை அவருக்கு உண்டாக்கியுள்ளது. அவருடைய உடல்நிலை ரீதியாக உண்டாகியுள்ள அலர்ஜி பிரச்னை கொஞ்சம், கொஞ்சமாக முடிவிற்கு வந்து வருகின்ற 2018ம் ஆண்டின் இறுதியில் சுத்தமாக மறைந்துவிடும். தினமும் இரவில் படுப்பதற்கு முன்னால் பசும்பால் அருந்தச் செய்யுங்கள். மேலும் அவருடைய ஜாதகத்தில் வித்யா ஸ்தானாதிபதி சனி எட்டில் அமர்ந்து பலவீனமான நிலையைத் தருகிறது. படிப்பிற்காக அவரை வெளியூருக்கு அனுப்புவதும், உங்களை விட்டுப் பிரித்து வைப்பதும் வேண்டாத செயல்.

சதா அவரை ‘படி... படி’ என்று நச்சரிக்காதீர்கள். அவரை சுதந்திரமாக இருக்க அனுமதியுங்கள். 13.12.2018 முதல் அவருடைய நடவடிக்கையில் மாற்றத்தைக் காண்பீர்கள். பத்தாம் இடமாகிய ஜீவன ஸ்தானத்தில் தனாதிபதி குரு அமர்ந்திருப்பதாலும், சுக்கிரன் அவருடைய ஜாதகத்தில் ஆட்சி பலம் பெற்றுள்ளதாலும் அவருடைய எதிர்காலம் மிக நன்றாக உள்ளது. ஆன்மிகம் சார்ந்த பணிகளில் அவரது தொழில் அமையும். திங்கட்கிழமைகளில் சமயபுரம் மாரியம்மன் ஆலயத்திற்கு உங்கள் மகனை அழைத்துச் சென்று தரிசிக்க வைத்து பிரார்த்தனை செய்துகொள்ள உடல்நிலை சீரடையும்.

34 வயதாகும் என் தங்கைக்கு இன்னும் திருமணம் கைகூடவில்லை. நூற்றுக் கணக்கான ஜாதகங்கள் பார்த்தும் ஏதோவொரு காரணத்தால் திருமணம் தடைபடுகிறது. பெற்றோரை இழந்து தவிக்கும் எங்களுக்கு உங்கள் பதிலும், பரிகாரமும் வழிகாட்டுதலாக அமையும் என்ற நம்பிக்கையில் உள்ளேன். ஸ்ரீவித்யா, பெங்களூரு.

கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, மேஷ லக்னத்தில் பிறந்த உங்கள் தங்கையின் ஜாதகத்தில் திருமண வாழ்வினைப்பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி சுக்கிரன் நீசபலத்துடன் ஆறாம் வீட்டில் அமர்ந்திருப்பதும், ஏழாம் வீட்டில் சூரியன்  சனி இணைந்திருப்பதும் சற்று பலவீனமான அம்சமாகும். கடந்த ஆண்டில் வலிய வந்த வரனை வேண்டாம் என்று விட்டுவிட்டு தற்போது அவதிப்படுகிறீர்கள். உங்கள் தங்கையிடம் மணமகன் குறித்த எதிர்பார்ப்பினை குறைத்துக் கொள்ளச் சொல்லுங்கள். உங்கள் தங்கையின் தகுதியைவிட குறைந்த தகுதியை உடைய ஒரு மனிதர்தான் அவருக்கு கணவராக அமைவார்.

ஆசைப்படுவதெல்லாம் கிடைப்பதில்லை, கிடைப்பதைக் கொண்டு ஆசையாய் வாழவேண்டும் என்ற அடிப்படையான வாழ்க்கைத் தத்துவத்தை உங்கள் தங்கைக்குப் புரிய வையுங்கள். அவர் உத்யோகம் பார்க்கும் இடத்திலிருந்தோ அல்லது அவரது துறையைச் சார்ந்தவராகவோ உள்ள, வாழ்க்கையை இழந்த ஒரு மனிதரை விரைவில் அவர் சந்திப்பார். மனம் ஒத்துப்போகும் பட்சத்தில் எந்தவித ஆட்சேபணையும் செய்யாமல் திருமணத்தை நடத்தி முடியுங்கள். கீழேயுள்ள ஸ்லோகத்தினைச் சொல்லி தினமும் ஏழுமலையானை வணங்கி வரச் சொல்லுங்கள். மணமாலை கழுத்தில் விழும்.

“கல்யாணாத்புத காத்ராயகாமிதார்த்த ப்ரதாயிநே
ஸ்ரீமத்  வேங்கடநாதாய ஸ்ரீ நிவாஸாயமங்களம்.”


ஒன்பது வயதுள்ள இரட்டைப் பெண் குழந்தைகளின் தாயாகிய, அமெரிக்காவில் உள்ள என் மகளுக்கு விவாகரத்து ஆகிவிட்டது. அவளுடைய கண்பார்வை மங்கிக்கொண்டு வருகிறது. நல்ல கண் பார்வைக்கும், மறுமணத்திற்கும் உரிய பரிகாரம் கூற வேண்டுகிறேன். கணேசன், திருவனந்தபுரம்.

மிருகசீரிஷ நட்சத்திரம், மிதுன ராசி, மகர லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகளின் ஜாதகத்தின்படி தற்போது சனிதசை துவங்கியுள்ளது. அவரது ஜாதகத்தில் கண்பார்வையைக் குறிக்கும் இரண்டாம் இடத்திற்கு அதிபதி சனிபகவான் சூரியனுடன் இணைந்திருப்பது பலவீனமான நிலையாகும். மிதுன ராசியில் பிறந்திருக்கும் இவர் நரம்பியல் சார்ந்த பிரச்னைகளுக்கு உள்ளாகி இருக்கிறார். கண்பார்வையில் நரம்பு சார்ந்த கோளாறுகளால் அவதிப்படுகிறார். உரிய மருத்துவரை அணுகி விரைவில் அறுவை சிகிச்சை செய்து கொள்வது நல்லது. 01.12.2017க்குப் பின் ஏதேனும் ஒரு வியாழக்கிழமை நாளில் அறுவை சிகிச்சை செய்து கொள்ளச் சொல்லுங்கள்.

கணவரைப்பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி சந்திரன் ஆறில் அமர்ந்திருப்பதும், ஏழாம் வீட்டில் ராகு அமர்ந்திருப்பதும் பலவீனமான அம்சமாகும். மறுமணம் செய்து கொண்டாலும் தற்போதைய சனி தசையில் மணவாழ்க்கை சுகமாய் அமையாது என்பதால் அதைப்பற்றி சிந்திக்க வேண்டாம். அவருடைய உத்யோக ஸ்தானம் சிறப்பாக உள்ளதால் அவரது வாழ்வியல் நிலையைப்பற்றிய கவலை தேவையில்லை. பெண் பிள்ளைகளை நல்லபடியாக வளர்த்து சிறப்பான நிலைக்குக் கொண்டு வருவார். மணக்காடு ஆட்டுக்கல் பகவதிஅம்மன் ஆலயத்திற்குச் சென்று உங்கள் மகளின் கண்பார்வை சீரடைய வேண்டி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இந்தியாவிற்கு வரும்போது உங்கள் மகளை பகவதி அம்மன் ஆலயத்திற்கு அழைத்துச் சென்று தரிசிக்க வையுங்கள். நல்லதே நடக்கும்.

திருமணமாகி ஒரு வருடம் ஆகியும் எங்களுக்குள் ஒத்துப் போவதில்லை. நான் பேசினாலே அவருக்குப் பிடிப்பதில்லை. என்னை என் பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டார். ஜோதிடர் என் கணவருக்கு இரு தாரம் என்றும், நானே என் கணவருக்கு மறுமணம் செய்து வைப்பேன் என்றும் கூறிவிட்டார். என்னால் தனியாக வாழ இயலுமா? எனக்கு ஒரு நல்லவழி காட்டுங்கள். திருநெல்வேலி மாவட்ட வாசகி.


ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தின்படி தற்போது சுக்கிர தசையில் சந்திரபுக்தி நடந்து வருகிறது. உங்கள் கணவரின் ஜாதகம் என்று நீங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள தகவல்களுடன் அனுப்பியிருக்கும் ஜாதகம் மாறுபடுகிறது. தவறான ஜாதகத்தை அனுப்பியுள்ளீர்கள். அவருடைய ஜாதகம் எப்படி இருந்தாலும் உங்களுடைய ஜாதகத்தின்படி உங்கள் கணவரின் மறுமணத்திற்கு எந்தக் காலத்திலும் சம்மதம் தெரிவிக்காதீர்கள். இளம்வயதில் உங்கள் திருமணத்தை நடத்தியுள்ளார்கள். குடும்ப வாழ்வு குறித்த புரிதல் உங்கள் இருவருக்கும் இன்னும் வரவில்லை என்றே தோன்றுகிறது.

படித்த பெண்ணாகிய நீங்கள் முதலில் உங்கள் சொந்தக் காலில் நிற்க முயற்சியுங்கள். உங்கள் ஜாதகப்படி 29.01.2018க்குப் பின் உங்கள் கணவர் உங்களை நாடி வருவார். சாதூர்யமாகப் பேசி உங்களால் ஆதாயம் காண முயற்சிப்பார். தாயும், பிள்ளையும் ஆனாலும், வாயும் வயிறும் வேறுதான் என்பதைப் புரிந்து கொண்டு நடந்து கொள்ளுங்கள். விவாகரத்திற்கு சம்மதிக்காதீர்கள். சொந்தத்தில் நடந்த உங்கள் திருமணம் 25வது வயது முதல் இனிமையான பாதையில் செல்லும். அதுவரை பொறுத்திருங்கள். திங்கட்கிழமை நாளில் நெல்லையப்பரையும், காந்திமதி அம்மனையும் தரிசித்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். உங்கள் மணாளன் மனம் திருந்தி வந்து சேர்வார்.

2008ம் ஆண்டிலேயே எம்.பில். படிப்பு முடித்தும் இதுவரை நிலையான உத்யோகம் கிடைக்கவில்லை. தற்காலிக விரிவுரையாளர் பணிதான் கிடைக்கிறது. மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள என் குடும்பத்தைக் காப்பாற்ற உரிய பரிகாரம் கூறுங்கள். வசந்தி, மாண்டியா.

பூரட்டாதி நட்சத்திரம், கும்ப ராசி, மகர லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தின்படி தற்போது நவம்பர் மாதம் 8ம் தேதியில் இருந்து புதன் தசை துவங்கி உள்ளது. இரண்டாம் இடமாகிய தன ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் புதன் இனி வரும் நாட்களில் உங்கள் வருமானத்தைப் பெருக்குவார். மேலும், உங்கள் ஜென்ம லக்னத்தில் குரு அமர்ந்திருப்பதும், வாக்கு ஸ்தானத்தில் சூரியன் - சந்திரன்  புதன் ஆகியோர் இணைந்திருப்பதும் ஆசிரியர் பணியில் உங்களை அமரச் செய்யும். ஜென்ம லக்னாதிபதி சனி ஜீவன ஸ்தானத்தில் உச்சபலத்துடன் அமர்ந்திருப்பதும் பலமான நிலையாகும்.

உங்கள் வாழ்வின் முதற்பாதியில் சிரமத்தினை சந்தித்திருந்தாலும் இரண்டாம் பாதியில் மிக உயர்ந்த நிலையை அனுபவிக்க உள்ளீர்கள். வீட்டில் இருக்கும் நேரத்தில் ஏழை மாணவர்களுக்கு டியூஷன் வகுப்புகள் மூலம் உங்களால் இயன்ற கல்வி அறிவினை ஊட்டி வாருங்கள். அரசுத்துறை சார்ந்த தேர்வுகளை தொடர்ந்து எழுதி வருவதும் நல்லது. பிரதி புதன்கிழமை தோறும் அருகிலுள்ள பெருமாள் கோயிலில் ஐந்து விளக்குகள் ஏற்றி வைத்து வழிபட்டு வாருங்கள். தினந்தோறும் கீழேயுள்ள ஸ்லோகத்தினைச் சொல்லி ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவரை வணங்கி வருவதால் வெகுவிரைவில் நிரந்தர உத்யோகத்தில் அமர்வீர்கள்.

“ஓம் ஹயக்ரீவஹயக்ரீவஹயக்ரீவேதிவாதினம்
நரம் முஞ்சந்திபாபானிதரித்ரமிவ யோஷித.”


நாற்பது ஆண்டுகளுக்கு முன் மூன்று கிரவுண்டு இடம் வாங்கினேன். அதை வேறு நபர் போலி பத்திரம் மூலம் அபகரித்து பட்டா வாங்கியுள்ளார். இப்போது காவல்துறை மூலம் விசாரணை செய்து கடந்த ஆறு ஆண்டு காலமாக விசாரணை நடைபெறுகிறது. பல வருடங்களாகப் போராடும் எனக்கு என் இடம் திரும்ப கிடைக்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? தியாகராஜன், சென்னை.

விசாகம் நட்சத்திரம், துலாம் ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தின்படி தற்போது சுக்கிர தசையில் கேது புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் செவ்வாய், புதன், சனி ஆகிய மூன்று கிரகங்கள் வக்ரகதியில் அமர்ந்திருப்பது பலவீனமான அம்சமாகும். புதன் தசையில் நீங்கள் வாங்கியுள்ள இந்தச் சொத்து பலனைத் தராமல் அலைகழித்து வருகிறது. சட்டரீதியான உங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வாருங்கள். ஜென்ம லக்னத்தில் அமர்ந்திருக்கும் குரு பகவான் உங்கள் போராட்டத்திற்கு துணை நிற்பார்.

பொள்ளாச்சி நகருக்கு அருகில் உள்ள ஆனைமலை மாசாணியம்மன் ஆலயத்திற்குச் சென்று சீட்டு எழுதி வைப்பதோடு அங்குள்ள கல்லில் மிளகாய் அரைத்துப்பூசி அம்மனிடம் உங்கள் மனக்குறையைச் சொல்லுங்கள். வருகின்ற 23.05.2018க்கு மேல் உங்களுடைய சொத்து இடமாக திரும்பக் கிடைக்காவிடிலும், அதற்குரிய தொகை பணமாக உங்களை வந்தடையும். கீழேயுள்ள ஸ்தோத்திரத்தைச் சொல்லி வீட்டினில் தினந்தோறும் துர்க்கையை வழிபட்டு வாருங்கள். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.

“அயிரண துர்மத சத்ரு வதோதித துர்தரநிர்ஜரசக்தி ப்ருதே
சதுரவிசார துரீணமஹாசிவ தூதக்ருத ப்ரமதாதிபதே.”


வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா்  திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா


வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை, பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் தினகரன் ஆன்மிக மலா் 229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம். பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • longestseabridge

  உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

 • delhi_strikepetrol18

  டெல்லியில் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்: கால் டாக்சி, ஆட்டோ சேவைகள் முடக்கம் !

 • solarcar_race

  சூரிய மின்சக்திகளால் இயங்கும் கார்களுக்கான பந்தயம் சிலி நாட்டில் கொண்டாட்டம்!

 • hondurans_americatrump

  ஹோண்டராஸில் இருந்து அமெரிக்கா நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அகதிகள் !

 • snowfall_kedarnthpics

  கேதார்நாத், பத்ரிநாத்தில் உருவாகியுள்ள பனிப்பொழிவின் புகைப்படங்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்