SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அனைத்திலும் வெற்றி பெறுவீர்!

2017-11-14@ 16:52:41

‘‘விலை உயர்ந்த நறுமணத் தைலத்தைவிட நற்புகழே மேல். பிறந்தநாளைவிட இறக்கும் நாளே சிறந்தது. விருந்து நடக்கும் வீட்டிற்குச் செல்வதைவிட துக்க வீட்டிற்குச் செல்வதே நல்லது. ஏனெனில், அனைவருக்கும் இதுவே முடிவு என்பதை உயிருடன் இருப்போர் அங்கே உணர்ந்து கொள்வர். சிரிப்பைவிட துயரமே நல்லது. துயரத்தால் முகத்தில் வருத்தம் தோன்றலாம். ஆனால், அது உள்ளத்தைப் பண்படுத்தும். ஞானமுள்ளவரின் உள்ளத்தில் துக்க வீட்டின் நினைவே இருக்கும். மூடரின் உள்ளத்திலோ சிற்றின்ப வீட்டின் நினைவே இருக்கும். மூடர் புகழ்ந்துரைப்பதைக் கேட்பதிலும் ஞானி இடித்துரைப்பதைக் கேட்பதே நன்று.
மூடரின் சிரிப்பு பானையின்கீழ் எரியும் முட்செடி படபடவென்று வெடிப்பதைப்போன்றது. அதனால் பயன் ஒன்றும் இல்லை. இடுக்கண் ஞானியையும் பைத்தியக்காரனாக்கும். கைக்கூலி உள்ளத்தைக் கறைப்படுத்தும். ஒன்றின் தொடக்கமல்ல, அதன் முடிவே கவனிக்கத்தக்கது.

உள்ளத்தில் பெருமை கொள்வதைவிட பொறுமையாய் இருப்பதே மேல். உள்ளத்தில் வன்மத்திற்கு இடம் கொடாதே. மூடரின் நெஞ்சமே வன்மத்திற்கு உறைவிடம். இக்காலத்தைவிட முற்காலம் நற்காலமாய் இருந்தது ஏன்? என்று கேட்காதே. இது அறிவுடையோர் கேட்கும் கேள்வி அல்ல. மரபுரிமைச் சொத்தோடு ஞானம் சேர்ந்திருத்தல் வேண்டும். இதுவே உலகில் வாழும் மக்களுக்கு நல்லது. பணம் நிழல் தருவதுபோல ஞானமும் நிழல் தரும். ஞானம் உள்ளவருக்கு அதனால் வாழ்வு கிடைக்கும். அறிவினால் கிடைக்கும் பயன் இதுவே. கடவுளின் செயலை சிந்தித்துப்பார். அவர் கோணலாக்கியதை நேராக்க யாரால் இயலும்? வாழ்க்கை இன்பமாய் இருக்கும்பொழுது மகிழ்ச்சியோடு இரு. துன்பம் வரும்போது நீ நினைவில் கொள்ள வேண்டியது, அடுத்து என்ன நடக்கும் என்பதை நீ தெரிந்துகொள்ளா வண்ணம் கடவுள் இன்பத்தையும் துன்பத்தையும் மாறி மாறி வரவிடுகிறார்.

என் பயனற்ற வாழ்க்கையில் நான் எல்லாவற்றையும் பார்த்துவிட்டேன். நேர்மையானவர் நேர்மையுள்ளவராய் இருந்தும் மாண்டழிகிறார். தீயவரோ தீமை செய்கிறவராய் இருந்தும் நெடுங்காலம் வாழ்கிறார். நேர்மையாய் நடப்பதிலும் ஞானத்தைப் பெறுவதிலும் வெறி கொண்டவராய் இராதீர். அந்த வெறியால் உம்மையே அழித்துக் கொள்வானேன்? தீமை செய்வதிலும் மூடராய் இருப்பதிலும் வெறி கொண்டவராய் இராதீர். காலம் வரும்முன் நீவிர் ஏன் சாக வேண்டும்? நீவிர் கடவுளுக்கு அஞ்சி நடப்பாரானால் அனைத்திலும் வெற்றி பெறுவீர்.’’  (சபை உரையாளர் 7:118)

நாம் வாழும் இந்த உலகம் நன்மை, தீமை, சுகம், துக்கம் என்ற முரண்பட்ட இருவிஷயங்களுக்கு மத்தியில் நம்மை சிக்க வைத்திருக்கிறது. நாம் இவற்றைக் கடந்து செல்ல வேண்டும். உங்கள் வாழ்க்கையின் ஆணிவேர் நிலையான பரம் பொருளிடத்தில் இருப்பதாகக் கண்டுகொள்ளுங்கள். கற்பனை கடந்து நிற்கும் உண்மைப் பொருள் மீது உங்களுக்குள்ள நம்பிக்கையைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள். பிறகு, நீங்கள் எப்போதும் பூரண அமைதியுடனும், பேரானந்தத்துடனும் இருப்பீர்கள்.

‘‘மணவைப்பிரியன்’’ ஜெயதாஸ் பெர்னாண்டோ

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kuwait_dust_strom

    குவைத்தில் புழுதி புயலால் செந்நிறத்தில் காட்சியளித்த வானம்...மக்கள் கடும் அவதி!

  • ramnathgreece

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம்

  • 18-06-2018

    18-06-2018 இன்றை சிறப்பு படங்கள்

  • 17-06-2018

    17-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • ramalanchennaifestival

    தமிழகம் உள்பட நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் : மசூதிகளில் சிறப்பு தொழுகை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்