SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தோன்றாத் துணையாய் துலங்கும் தேவி

2017-11-14@ 16:44:19

அபிராமி அந்தாதி - சக்தி ரகசியம் - 5

எந்த ஒரு செயலைச் செய்தாலும் மந்திரம் உபதேசித்த குருவையும், உபதேச மந்திர தொடர்பான சாத்திரத்தையும், தேவதையின் உருவத்தையும் உபாசகர்கள் மனதில் எண்ணி தினந்தோறும் செயலை துவங்குவார்கள். அப்படிச் செய்வதால் அன்றைய தினம் நல்ல நேரத்தையும், நல்ல விளைவுகளையும் தரும். அதோடு, தீய விளைவுகளைத் தவிர்க்கும். குழப்பமான சூழலில் மனதிற்கு உறுதியையும் தரும். அவ்வகையில் குருவை வழித்துணையாகவும்,  சாத்திரத்தை வாக்கியத் துணையாகவும், திருநாமத்தை மொழித்துணையாகவும் கொள்வர்  பெரியோர். இறைவியை  வழித்துணையாகக் கொண்டு அமைந்திருக்கிறது இந்த  அற்புதப் பாடல்:

அறிந்தேன் எவரும் அறியா
மறையை அறிந்து கொண்டு
செறிந்தேன் உனது திருவடிக்கே
திருவே வெருவிப்
பிரிந்தேன் நின்அன்பர் பெருமை
எண்ணாத கரும நெஞ்சால்
மறிந்தே விழும் நரகுக்குற

வாய மனிதரையே (பாடல்:3) துணை ஐந்து வகைப்படும். 1) வழித்துணை, 2) உற்றதுணை, 3) வாழ்க்கைத் துணை, 4) உறுதுணை, 5) தோன்றாத்துணை.

வழித்துணை: பூண்டி பாக்கத்தில் உமையம்மை, கண்கள் இரண்டும் தெரியாத சுந்தரருக்கு காஞ்சிபுரம் செல்வதற்கு வழித்துணையாய் வந்தாள்.

உற்றதுணை: போருக்கு செல்ல முயன்ற முருகப் பெருமானுக்கு உமையம்மை தன் ஆற்றலை எல்லாம் திரட்டி, ஆயுதமாய் முருகப்பெருமான் கையில் வேலாய் திகழ்ந்து வெற்றி பெற துணையானாள் (சிக்கல் சக்திவேல்)

வாழ்க்கைத் துணை: ஆத்மாவாகத் திகழும் (ஆத்மநாத சுவாமிக்கு) இறைவனுக்கு அம்பாள் யோகமாக இருந்து உதவினாள். யோகம் என்பதற்கு ஆன்மாவோடு இரண்டற இணைவது என்று பொருள். பிரிந்து போகின்ற சூழல் இருந்தபோதிலும் துன்பத்திலும், இன்பத்திலும் இறக்கும்வரை உடன் நிற்பதால் கணவனுக்கு, மனைவியுமாய், மனைவிக்கு கணவனுமாய் உடன் இயங்குவது வாழ்க்கைத்துணை.

உறுதுணை (அனுபவ அறிவு):  அனைவரையும் நீங்கி தன்னந்தனியாய், தன்னம்பிக்கையை மட்டுமே மூலதனமாய் கொண்டு, வெளிநாடுகளில் வசிப்பவருக்கு பட்டறிவே துணை.
தோன்றாத்துணை - இந்த அனைத்து துணைக்கும் அப்பாற்பட்டதாய், அனைத்திற்கும், காரணமாய், புலப்படாததுமாய் தன் அருளால் மட்டுமே, தன்னை விளங்கச்செய்வதுமாய் உள்ள உமையம்மையின் அருளே தோன்றாத்துணை. விழிக்குத் துணை மென்மலர் பாதங்கள் மெய்ம்மை குன்றா மொழிக்குத் துணை முருகா வெனும் நாமங்கள்... மயூரமுமே.

- கந்தரலங்காரம்
அருணகிரிநாதர் இறைவனுடைய முழு உருவத்தை தன் இதயத்தில் தியானம் செய்வதை துணை என்கிறார். அதுபோலவே பாசாங்குசத்துடன் கூடிய ‘திரிபுரசுந்தரி’ உருவ தியானத்தையே துணை என்று அபிராமிபட்டர் கூறுகிறார் இதையே ‘தோன்றாத் துணை’ என்று அறிக பொதுவாக அனைத்து தெய்வங்களையும் வணங்குகிற செயலை தொழுவது என்கிற சொல்லால் குறிப்பிடுவது வழக்கம்.

இந்த இடத்தில் அவ்வாறு குறிப்பிடவில்லை. தொழும் தெய்வம் என்பது உபாசனை தெய்வத்தையே குறிக்கும். குருவின் மூலமாக மந்திர தீட்சை பெற்று அதைத் தொடர்ந்து நடைமுறைபடுத்தும் வகையில் வணங்கப்படும் தெய்வமே தொழும் தெய்வம் என்று கூறப்படுகிறது. இங்கு தொழும் என்ற வார்த்தைக்கு, பொதுவான ‘தெய்வத்தை தொழுதல்’ என்று பொருள் அல்ல. உபாசனை தெய்வத்தை தொழும் தெய்வம் என்று வலியுறுத்தி கூறி இருக்கிறார் அபிராமி பட்டர்.

 ‘‘பின்னே  திரிந்து நின் அடியாரை பேணி’’ (பாடல்- 25)  என்று குருவருளைப் போற்றியதையும்,  ‘‘மன்னியாது உன் திரு மந்திரம்’’ (பாடல்-16) என்று மந்திரத்தை சொல்வதையும்,  ‘‘பன்னியது என்றும் உன் பரமாகம பத்ரததியே’’ (பாடல்-6) என்று ஆகமங்களின் வழி வழிபாடு செய்ததையும், ‘‘தலைமேல் வலிய வைத்து ஆண்டுகொண்ட நேசம்’’ (பாடல்-32) என்று இறைவியே தீட்சை அளித்ததையும் தெளிவாகக் குறிப்பிட்டிருப்பதிலிருந்து அவர் உபாசகர் என்பது தெள்ளத் தெளிவாகிறது.

மந்திரத்தால் எந்த தெய்வத்தை அபிராமிபட்டர் உபாசனை செய்தார்? திரிபுரசுந்தரி என்ற தேவதையை வணங்கினார் என்பதை இந்த பாடல் வரிகள் உறுதி செய்கின்றன: ‘சுந்தரி நின் அருள்’ (27), ‘சுந்தரி எந்தை துணைவி’ (8), ‘சீந்தூரானை சுந்தரியே’ (7), ‘நாமம் திரிபுரை’ (73), ‘அம்புயமேல் திருந்திய சுந்தரி’ (5), ‘இன்சொல் திரிபுர சுந்தரி’ (43), ‘அல்லல் எல்லாம் தீர்க்கும் திரிபுரையாள்’ (85), ‘சிவகாம சுந்தரி’ (68), ‘திரிபுரசுந்தரி ஆவது அறிந்தனமே’ (2) என்பதன் மூலம், ‘திரிபுரசுந்தரி’ என்ற தேவதா உபாசனை முறையே அறிந்து தொழுதார், என்பது புலனாகிறது.

‘‘தொழும் தெய்வமும்’’ என்ற வார்த்தையால் ‘திரிபுரசுந்தரி’ தேவதையை மந்திரத்தின் வழி குருவின் துணை கொண்டு ‘பரமாகமம்’ என்ற சாக்த தந்திரத்தின் வழி. தீட்சை பெற்று தாம் உபாசனை செய்வதையே குறிப்பிடுகிறார். பெற்ற தாயும் - தாயானவள் மூன்று வகையாவாள். ஒன்று பெற்றதாய், இரண்டு செவிலித்தாய், மூன்று தாய் ஒத்தவள். பெற்ற தாய் என்பது, தொப்புள் கொடி வழியாய் மகன் அல்லது மகளால் சொல்லப்படுகிற உறவின் பெயர். செவிலித்தாய்: வளர்த்த அன்னை. தாயை ஒத்தவள்: பத்து பிள்ளைகளை பெற்ற மனைவி, தாயின் தங்கை, கணவனின் தாய் (மாமியார்), உயிர்காத்து உதவிய மருத்துவச்சி, மூத்த சகோதரன் மனைவி, உணவிட்டு உயிர் காத்தவள், மன்னனின் மனைவி.
மேற்கண்ட தாயின் வகைகளில் மிகவும் சிறந்தது.

பெற்ற தாயே (தொப்புள் கொடி உறவு) ஸ்ரீவித்யா உபாசகர்கள் உமையம்மையை பெற்ற தாயாக நினைந்து வழிபட வேண்டும் என்பது மரபு. அப்படி வழிபட்டால் உமையம்மையானவள், பலநிலையில் பல்வேறு வடிவான தாயாக, முழுவதுமாய் அனுகிரகம் தருவதற்கு பெற்ற தாய்போல் தோன்றுவாள். நாம் என்ன குற்றம் செய்தாலும் அதை பொறுத்துக்கொண்டு, நம்மை நேசிப்பவளாகவும், நாம் விரும்பியதை நமக்கு அருள்பவளாகவும், இருக்கிறாள் என்பதை ‘‘ஸ்ரீ மாதா’, ‘ஜனனி’ என்று லலிதா ஸஹஸ்ரநாமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தன் பாடல் 33ல் ‘உன்னையே அன்னையே என்பன்’ என்கிறார் பட்டர்.

ஸ்ரீவித்யா உபாசனையில், பெற்ற தாய் என்றால் சிவலிங்கத்திற்கு உள்ள மனோன்மணி தேவியாரை மட்டுமே குறிக்கும். பிற உமையம்மை வடிவங்களை குறிக்காது. அந்தவகையில், திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரர் உடனுரை அபிராமியை மட்டுமே குறிக்கும். அசரீரியாக, செவிக்கும், உள்ளத்துக்கும் மட்டுமே புலப்படும் வகையில் இறையருள் ஞானிகளுக்கு மட்டும் கேட்கும். இந்த அருள் ஒலியே ஸ்ருதி எனப்படும். அவற்றின் பதிவே இப்போது வேதம் எனப்படுகிறது. அதை உணர்த்திய ஞானிகளையே ரிஷிகள் என்கிறார்கள்.

அந்த அருள் ஒலியே இறைவனின் குர்ல் என்கிறார்கள். அப்படிப்பட்ட சிறப்பை கொண்ட ஸ்ருதியானது பலவாகும், அதை சாமானிய மக்களால் முழுவதும் அறிய முடியா வண்ணமும், அந்த அருள் ஒலியின் பயனை பெற முடியா வண்ணமும் முன்னர் இருந்தது. மகாவிஷ்ணுவானவர் வேதத்தை நான்காகத் தொகுத்தார். ‘வியாச விஷ்ணு ரூபாய’, ‘வியாச ரூபாய விஷ்ணவே.’ வியாசம் என்ற சொல்லிற்கு தொகுத்தல் என்று பொருள். எண்ணிட இயலாததாக இருந்ததை அளவிற்கு உட்படுத்தி நான்காகத் தொகுத்தார் - ரிக், யஜுர், சாமம், அதர்வணம். பின்னர் சாமான்ய மக்களும் பயன்படுத்தும் வகையில் ஒவ்வொரு வேதமும் பல சாகைகளாக (கிளை) பிரிக்கப்பட்டது.

சாக்கா என்பது ஒரு மனிதன் கருவிலே உருவானது முதல் கைலாய பதவி அடைவதுவரை, தனக்காகவும், தன் சமூகத்துக்காகவும், தன் உறவுகளுக்காகவும் அனைத்து நன்மைகளையும் செய்து, இறவா இன்ப நிலையும் (முக்தி), அழியாப் புகழையும் அடைவதற்கு செய்ய வேண்டிய செயல்களை மேற்கொள்ளும்போது சொல்ல வேண்டிய மந்திரங்களின் தொகுப்பாகும். (இது வேதத்திலிருந்து எடுக்கப்பட்ட சிறு பகுதியாகும்) ஒவ்வொரு வேதமும் பல  சாக்கைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதையே அபிராமி பட்டர், பனையும் (சாக்கா) என்று கூறுகிறார்.

இறையருளை அடைய உதவும் இந்த கருத்தையே (சாஸ்திரத்தையே) இறைவி என்று குறிப்பிடுகிறார். ஏனென்றால் இந்த சாத்திர நெறியும் இறைவியை அடையும் சாதனமாகத் திகழ்கிறது. இதை அறிந்தவன் இறையருளை அடைவான் என்பதனால் இறைவி என்ற பொருளில் ‘சுருதிகளின் பணையும்’ என்று ஆகுபெயராக இறைவியையே சூட்டுகிறார். அபிராமி அந்தாதியை பொருத்தவரை அவரவர் சாக்கையுடைய மந்திரத்தையும், அதன் வழி செய்யப்படும் சடங்குகளையும், (சமஸ்காரம்) இறைவி என்றே குறிப்பிடுகின்றார்.

‘வேதம் சொன்ன வழிக்கே வழிபட நெஞ்சுண்டு’  என்று வேத நெறியை ‘சுருதிகளின் பணையும்’ என்ற வார்த்தையால் வேத நெறியை உமையம்மையின் வடிவாக கூறுகிறார். ‘கொழுந்து’ என்ற சொல் சுருதியின் கொழுந்தே என்று குறிக்கும். மரம் அல்லது செடியில் இலையின் துவக்கப் பருவத்தை கொழுந்து என்று கூறுவர். அதுபோல் வேதத்தை இலை என்று கொண்டால் அதை பயில்வதற்கும், பழகுவதற்கும், நமக்கு சொல்லித்தரும் வேத அங்கத்தை கொழுந்து என்று கூறலாம்.

அந்த வகையில், சிக்‌ஷை - பயிற்று முறை, வ்யாகரணம் - இலக்கணம், நிருக்தம் - சொற்பொருள் விளக்கம், சந்தஸ் - யாப்பு, கல்பம் -  முறை, ஜோதிஷம் - கோள்நிலை (காலம்) ஆகிய இவை வேதம் பயில்வதற்கு முன், பயில்பவர் அப்படி பயில்வது என்பது வேதத்தைச் சொல்வதற்கும் அதன் பொருளைப் பிழையின்றி உணர்ந்து கொள்வதற்கும் இன்றியமையாதவையாகும். இதையே ‘‘கொழுந்து’’ என்கிறார்.

1. சிக்‌ஷை - பயிற்றுமுறை
‘தட்சிணாமூர்த்தி ரூபின்யே நம:’ - ஆகமக் கலைகளை பயிற்றுவிக்கும் கடவுளாகவே தட்சிணாமூர்த்தி கருதப்படுகிறார். அப்படிப்பட்ட தட்சிணாமூர்த்தி ரூபத்தில் அம்பாள் பயிற்றுவிக்கின்றாள். அதனாலும், பயிற்றுவித்தலுக்கு எழுத்து மிகவும் முக்கியம். அந்த எழுத்துகளின் வடிவாகவே உமையம்மை திகழ்கிறாள். ‘பஞ்ஜாசத் பீட ரூபின்யே’ என்று 51 வடமொழி எழுத்துகளே உமையம்மையின் வடிவமாகத் திகழ்கிறது.

2. வ்யாகரணம் - இலக்கணம்
இலக்கணமே உமையம்மையின் அருளால் சிவபெருமான் தன் உடுக்கையை அசைத்து ஆடும்பொழுதில் வெளிப்படுத்திய சாத்திரம். இதையே அபிராமி பட்டர், ‘சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன் புள்ளும்’ (28) என்கிறார்.

3. நிருக்தம் - சொற்பொருள் விளக்கம்
வ்யாகரண சாத்திரத்தை சார்ந்த சாத்திரமே நிருக்த சாத்திரம். வ்யாக்கரண சாத்திரத்தை பதசாஸ்திரம் (சொல் இலக்கணம்) என்றும், அந்த சொல்லின் பொருளை கூறுகின்ற சாத்திரம் நிருக்த சாத்திரம் என்றும் கூறப்படுகிறது. இதையே அபிராமி பட்டர், ‘சொல்லும்’ (பதசாஸ்திரம்), ‘பொருளும்’ (நிருக்த சாஸ்திரம்) என நடமாடும் துணைவருள் ‘புள்ளும்’ என்கிறார்.
இந்த இரண்டு சாத்திரத்திற்கும் உண்டான இணைபிரியா ெதாடர்பையும் மிகத்தெளிவாக ‘புள்ளும்’ என்ற வார்த்தையால் தெளிவுபடுத்துகிறார். இதனால் சொல்லாக, சிவபெருமானும், பொருளாக உமையம்மையும் இணைந்து சொற்பொருளாய் விளங்குவதை தெளிவுபடுத்துகிறார்.

4. சந்தஸ் - யாப்பு
யாப்பு என்பது செய்யுளை அமைக்கும் ஓர் இலக்கணம். இது உச்சரிக்கும் எழுத்து அளவான மாத்திரை, எழுத்துகளின் எண்ணிக்கை அவை எந்த வரிசையில் அமைய வேண்டும் என்ற முறை இவை பற்றியது. இதையே அபிராமி பட்டர், ‘செய்ய பசுந்தமிழ் பாமாலையும் கொண்டு சென்று பொய்யும் பெய்யும் இயம்பவைத்தாய்’ (57) என்பதாகக் குறிப்பிட்டு, யாப்பு இலக்கணத்தை இயம்ப அருள்பாலிப்பவள் அபிராமி என்பதை நிறுவுகிறார்.

5. கல்பம் - முறை
கல்பம் என்பது மிக எளிமையாக சமயக் கருத்துகளை விளக்கி கூறும் செயல்முறை விளக்க நூல் ஆகும். அந்த வகையில் ‘பரமாகமம் பத்ததியே’ (6) என்ற வார்த்தையால், இந்த நூலை முதலாகக்கொண்டே தன் உபாசனையை மேற்கொண்டார். அதன்வழி அவர் அருள் அடைந்தார். அவ்வாறு அடையவைத்த அந்த ஆகமத்தையே இறைவியாக தொழுகிறார்.
‘ஆகமம் ஆகிநின்று அன்னிப்பான் தாள் வாழ்க’ என்கிறார் மணிவாசகர்.

6. ஜோதிஷம் - வழிபாட்டு காலம்
ஜோதிஷம் என்பது இறைவழிபாட்டிற்குரிய காலத்தை குறிக்கிறது. அந்த காலத்தில் வழிபாடு செய்தல் என்பது இறையருளை நமக்கு உறுதியாக பெற்றுத்தரும். இதையே அபிராமி பட்டர், ‘யாமம் வைரவர் ஏத்தும்பொழுது எமக்கு என்று வைத்த சேமம் திருவடி’ ( 73) என்கிறார். இதைப்போலவே சைவத்திலும் ‘பெரும்புலர் காலை மூழ்கி’ (திருக்கடையூர் தேவாரம்) என்பதனால், வழிபாட்டு காலமே இறையருளை சிறப்பாக பெற்றுத் தருவதால், காலத்தையே இறைவியாக குறிப்பிடுகிறார். ‘காளி’ (77) என்ற வார்த்தையால் மனிதர்களுக்கு நல்லதையே செய்து தீயதை நீக்கும் காலத்தின் வடிவானவள் ‘காளி’ என்பதும் தெளிவாகிறது.

மேற்கண்ட ஆறு சாத்திரங்களும் சேர்ந்து வேதாங்கம் எனப்படும். இவை இறையருளை பெற்றுத்தரும் சாதனங்கள். ஆகவே சாதனத்திற்கு உண்டான பெயர் சாத்தியத்திற்கு ஆகி ஆகுபெயரானது. சுருதிகளின் கொழுந்து என்பது வேதாங்கம் ஆகும். வேதாங்கம் என்பது இறை வடிவம். ‘பதிகொண்ட வேரும்’ (சைவ சித்தாந்தம்). பதி என்ற சொல்லானது சைவ சித்தாந்தத்தில் இறைவனை குறிப்பதாகும். அபிராமியும் சைவ சித்தாந்தபடி அமைந்த கோயிலில்தான் எழுந்தருளியுள்ளார். சக்தி வழிபாட்டிற்கு உடன்பட்டு சாத்திரம் சைவம் என்பதால் அதை அங்கீகரிக்கின்றார்; அதுவும் சக்திதான் என்பதாக நிறுவுகின்றார்.

பதியை முதலாகக் கொண்டது சைவ சித்தாந்தம். அதன்வழி சிவமே பரம்பொருள். அந்த பரம்பொருளுக்கே சக்திதான் ஆதாரம் என்பதை வேதத்தை சிவனாகிற மரமாகவும், அதன் கிளை, கொழுந்து, இலை, வேராக உமையம்மையே திகழ்கின்றாள். அந்த வகையில் ‘பதிகொண்ட வேரும்’ என்ற சொல் சைவ சித்தாந்தத்திலே கூறப்படும் பதிபொருளுக்கு அடிப்படையானவள் உமையம்மை என்பதை உறுதிபடுத்துகிறது.

‘பனிமலர் பூங்கணையும்’ என்பது மலர்களை கணைகளாக (ஆயுதங்களாக) கொண்டவன் மன்மதன். அவனை தன் அழகினால் வென்றதனால் அபிராமி என்று பொருள். காமன் சிவபெருமானை எதிர்க்கிறான். ஆனால், உமையம்மையிடமோ சரணடைகிறான். அப்படி சரண் அடைந்ததற்கு அடையாளமாகத்தான் தன் ஆயுதங்களான கரும்பு வில்லையும், மலர் கணையையும், மென்மையான பாசத்தையும், அங்குசத்தையும், அவளிடம் ஒப்படைத்தான். அந்தவகையில் மன்மதனை வென்ற திருக்கோலம் அபிரம்யம் - காமத்தினால் மகிழ்ந்தவள் - அபிராமி எனப்பட்டாள்.

நான்கு தோள்களும் நன்கு அமையப் பெற்றவள். ‘சதுர்பாஹீ - ஸமன்விதாயை’ (லலிதா ஸஹஸ்ரநாமம்) - ஆசை வடிவ கயிற்றை கொண்டவள். ‘ராஜஸ்வரூப - பாசாட்யாயை’ - கோபவடிவான அங்குசத்தால் மிகுதியாய் ஒளிர்பவள். ‘க்ரோதாகாராங்குசோ ஜ்வலாயை’ - மனவடிவக் கரும்பை வில்லாகக் கொண்டவள். ‘மானோரூ பேக்ஷீ - கோதண்டாயை’ - கோதண்டம் என்பது ராமர் வைத்திருக்கின்ற வில்லின் சிறப்பு பெயர். கரும்பையும், பூவையும் ஆயுதமாய் பயன்படுத்துபவன் மன்மதன் மட்டுமே. அதே வார்த்தையும் லலிதா ஸஹஸ்ரநாமத்தில் காணப்படுவதால் இதை மேலும் உறுதி செய்யலாம்.

‘பாசாங்குசமும்’ என்ற வார்த்தையை மென் பசாங்குசம் என்று பயன்படுத்தியிருக்கிறார் பட்டர். அதன் காரணம் என்ன? பாசத்தில் நான்கு வகை உண்டு: நாகபாசம் - வருணனால் தரிக்கப்படுவது, காலபாசம் - எமனால் தரிக்கப்படுவது, பாசம் - கணபதியால் தரிக்கப்படுவது, மென் பாசம் (இராகபாசம்)- மன்மதனால் தரிக்கப்படுவது, மலர்க்கொடியைக் கயிறாகப் பயன்படுத்துவது. இராகபாசம் என்பது சிவந்திருக்கக்கூடிய மென்மையான மலர் கொடி. இதை மன்மதனே ஆயுதமாக பயன்படுத்துகிறார்.

திரிபுரசுந்தரி ஆவது: இறைவனுக்கு உருவம் உண்டு. ஒவ்வொரு உருவத்திற்கு ஒரு தனி சிறப்பு உண்டு. அதை வணங்குவோருக்கு பிரத்தியேகமாய் பயனும் உண்டு. ஒவ்வொரு தனிப் பெயரும் உண்டு என்கிறது சிற்ப சாஸ்திரம். அதில் திரிபுரசுந்தரி என்ற தேவதைக்கு உருவமானது, மேல் இரண்டு கைகளில் வலது இடமாய் பாசம் அங்குசம் தரித்து, கீழ் இரண்டு கைகளில் வலது இடமாய் கரும்பு வில்லையும் மலர் கணையையும் தரித்து, சிவபெருமானுடன் திகழ்பவளும்,

கிரீடம் தரித்தவளும் சுருதிகளாக ஒலிக்கிற பாத சலங்கை தரித்தவளும், மங்களமான பதியை உணர்த்தும் தாலி அணிந்தவளுமாய் கையில் வேதாங்கத்தை விளக்கும் (ஆறு) வளையல்கள் அணிந்தவளாயும் தாய் போன்று காக்கும் விழிகளை கொண்டவளாயும், திரிபுரசுந்தரி என்ற பெயரை உடையவளாகத் திகழ்கிறாள் என்கிறார் அபிராமி பட்டர். காமேஸ்வரனால் கட்டப்பட்ட மங்கலம் உடைய மஞ்சள் கயிற்றை அணிந்த அழகான கழுத்தை உடையவள். ‘காமேஷ பத்த மாங்கல்ய சூத்ர சோபித கந்தராயை’ என்று லலிதா ஸ்ஹஸ்ரநாமம் நமக்கு உறுதி செய்கிறது. அறிந்தனமே இவ்வாறாகத் திகழும் உமையம்மையை நான் அறிந்துகொண்டேன் என்கிறார் அபிராமிபட்டர்.

முனைவர் பா.இராஜசேகர் சிவாச்சாரியார்

(தொடரும்)

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • longestseabridge

  உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

 • delhi_strikepetrol18

  டெல்லியில் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்: கால் டாக்சி, ஆட்டோ சேவைகள் முடக்கம் !

 • solarcar_race

  சூரிய மின்சக்திகளால் இயங்கும் கார்களுக்கான பந்தயம் சிலி நாட்டில் கொண்டாட்டம்!

 • hondurans_americatrump

  ஹோண்டராஸில் இருந்து அமெரிக்கா நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அகதிகள் !

 • snowfall_kedarnthpics

  கேதார்நாத், பத்ரிநாத்தில் உருவாகியுள்ள பனிப்பொழிவின் புகைப்படங்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்