SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இடையூறுகளை அகற்றுவார் இளைய பெருமாள்

2017-11-11@ 09:00:02

நம்ம ஊரு சாமிகள் - வல்லன்குமாரவிளை, குமரி மாவட்டம்

திருநெல்வேலி சேந்தமங்கலம் மற்றும் அதன் சுற்றுப்புறத்தை சேர்ந்த ஏழு ஊர்களில் துணி துவைத்துக் கொண்டிருந்த சலவைத் தொழிலாளி மாட வண்ணாரும், அவரது மனைவி மாடிப்பிள்ளையும் தவமிருந்து சங்கரநயினார் அருளுடன் பெற்றெடுத்த பிள்ளை வாசமுத்து. தாய் மாமன் நீல வண்ணார் உதவியுடன் அவரது நண்பர் மூலம் மந்திரம், தந்திரம், கூடுவிட்டு கூடு பாயும் வித்தைகள், மாந்திரீகம் முதலானவற்றை கற்றுக்கொண்ட வாசமுத்து சேந்திமங்கலம் மற்றும் சுற்று வட்டாரத்தில் மாந்திரீகத்தில் நல்ல பெயரோடு திகழ்ந்தான். கண் திருஷ்டி கழித்தல், பேய் விரட்டுதல், வியாபார வளர்ச்சிக்கு வழிவகுத்தல், காணாமல் போன பொருட்களை மைபோட்டு பார்த்தல் என பலவிதமான மாந்திரீகத்தில் கை தேர்ந்து விளங்கினான் வாசமுத்து.

மருமகனின் வளர்ச்சியை கண்டு பெருமை கொண்ட நீலவண்ணார் தனது மகள் சாத்தியம்மாளை அவனுக்கு திருமணம் செய்து வைத்தார். மாந்திரீகத்தில் சிறந்து விளங்கினாலும் மற்ற நேரங்களில் தனது பெற்றோர்களுடன் துணி வெளுப்பதிலும் கவனம் செலுத்தி வந்தான் வாசமுத்து. வாசமுத்துவின் நெருங்கிய நண்பர் புதியவன். புதியவனுக்கு மணமுடித்து வைக்க வேண்டும் என்று அவரது பெற்றோர் விரும்பினர். வாசமுத்துவோடு நட்பு வைத்திருந்த காரணத்தை காட்டி புதியவனுக்கு அவர்கள் சமூகத்திலும், சொந்தத்திலும் யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை. இதை வாசமுத்துவிடம் கூறி ஆதங்கப்பட்டான் புதியவன்.
ஏழு ஊர் தலைவர் செம்பரக்குடும்பனுடன் பிறந்தவர்களில் ஏழு தம்பிமார்களும், சோணமுத்து என்ற ஒரு தங்கையும் உண்டு. ஒரே தங்கை என்பதால் சோணமுத்துவை அண்ணன்மார்கள் செல்லமாக வளர்த்து வந்தனர்.

ஒருநாள் செம்பரக்குடும்பன் வீட்டுக்கு வெளுத்த துணியை கொடுக்கச் சென்றான் வாசமுத்து. வீட்டில் யாரும் இல்லாததால் சோணமுத்து வந்து துணியை வாங்க வீட்டுக்கு வெளியே வருகிறாள். உறவினர்களை தவிர வேற்று ஆண்கள் யாரையும் பார்த்திடாத பருவம் வயது பதினாறு நிரம்பிய சோணமுத்து  முதன் முதலாக வாசமுத்துவை காண்கிறாள். முதல் பார்வையிலே அவனுக்கு காதல் வலை வீசினாள். பார்வையின் அர்த்தம் புரிந்த வாசமுத்து, தனக்கு திருமணம் முடிந்ததை கூறினான். அவனது மீசை குறித்து பேசிய சோணமுத்து தனது ஆசையையும் எடுத்துக்கூறினாள். அறிவுரை கூறியும் கேட்க மறுத்த அவளது பேச்சை மனசுக்குள் அசைபோட்டபடி வாசமுத்து தனது வீடு நோக்கி நடந்தான். எதிரில் அவனது நண்பன் புதியவன் தென்படுகிறான்.

அவனிடம் நடந்ததை கூறுகிறான். ‘‘ராணி மாதிரி சோணமுத்து இருக்கிறா, நீ ஏன் ஊரெல்லாம் பொண்ணுக்கு அலையற, அவள உனக்கு முடிக்கலாம் என்று கூற’’ ‘‘எப்படிலே அது சாத்தியமாகும் என்று புதியவன் கேட்க,’’ ‘‘வசிய மை வச்சு அவள உன் பக்கம் மயக்கி தாரேன்.’’ என்று கூறினான் வாசமுத்து.
சில நாட்கள் நகர்ந்த நிலையில் யாரும் இல்லா நேரத்தில் செம்பரக்குடும்பன் வீட்டுக்கு துணி கொடுக்க மீண்டும் சென்ற வாசமுத்து, தான் மறைத்து வைத்திருந்த வசிய மையை, சோணமுத்து புருவத்தில் தடவிவிடுகிறான். மறுகனமே அவனிடம் மயங்கினாள் சோணமுத்து. இருவரும் குளத்து கரையோரம் இருந்த வாசமுத்துவின் தனிமையான குடிசையில் அடிக்கடி சந்தித்து வந்தனர். இதையறிந்த புதியவன் தனக்கு சோணமுத்துவை வசியம் செய்து தருவதாக கூறிய வாசமுத்து, அவனே சேர்த்துக்கொண்டானே என ஆதங்கப்பட்டு அவன் மீது பகை உணர்வு கொண்டான்.

ஒருநாள் மதிய வேளை புதியவன், பனைமரத்தில் பதநீர் இறக்கிக் கொண்டிருக்கும்போது குடிசை வீட்டுக்குள் சோணமுத்துவும், வாசமுத்துவும் செல்வதை பார்க்கிறான். அன்று மாலை தன்னிடம் கள்ளு குடிக்க வந்த செம்பரக்குடும்பனின் தம்பி மார்கள் அளவு குறைவாக இருக்கிறதாக குறை கூறி, இப்படி நீடித்தால் உனது பனையும் இருக்காது. உனக்கு பொழப்பும் இங்கு நடக்காது பாத்துக்கோ என்று மிரட்ட, புதியவன் கோபம் கொண்டு உங்க வீரத்தை எங்கிட்ட காட்டாதீங்க, ஆத்தாங்கரையோரம் ஒத்த குடிசையில சலவைக்காரன் கூட ஒண்ணா இருக்கிற உங்க தங்கச்சிக்கிட்ட காட்டுங்க என்று கூறுகிறார். ஏலே, என்னல சொல்லுத, புதுக்கதை விடுற என்று கூறிய செம்பரக்குடும்பன் தம்பி மார்களிடம் எம்பேருதான் புதியவன், நான் புதுகதையெல்லாம் கட்டமாட்டேன் என்று பதிலுரைத்தான். அவர்கள் கோபம் கொள்கின்றனர். நீ சொல்வது பொய்யாக இருந்தா, உனக்கு தலை இருக்காது என்கின்றனர்.

அப்போது புதியவன் நாளை அந்தி சாயும் முன் வாருங்க, ஆத்தாங்கரையில பதுங்கி இருங்க, நான் மரத்திலிருந்து என் தலை துண்டு துணிய எடுத்து அசைச்சு அறிகுறி காட்டுறேன். அப்புறமா இரண்டு பேரையும் கையும் களவுமா புடிங்க என்று கூறுகிறார். சரி என்று சொல்லிவிட்டு அண்ணன் தம்பி ஏழு பேரும் அவ்விடம் விட்டு செல்கின்றனர். மறுநாள் மாலை பொழுதானது, அவர்கள் புதியவன் சொன்னபடி ஆற்றங்கரைக்கு வருகின்றனர். பனைமரத்தில் புதியவன் இருக்கிறான். அந்த நேரம் வாசமுத்துவும், சோணமுத்துவும் வரும் வினை தெரியாமல் இணைகின்றனர் குடிசைக்குள். உடனே புதியவன் அறிகுறியாக துணியை எடுத்துக்காட்ட, செம்பரக்குடும்பன் தம்பி மார்கள் ஏழுபேரும் திரண்டு குடிசைக்குள் செல்கின்றனர். அவர்களை கண்ட வாசமுத்து பூனையாக மாறி அங்கிருந்து வெளியேறி சுயரூபம் கொண்டு ஓடுகிறான். அவனை பின் தொடர்ந்து சென்ற ஏழு பேரும் அவனை பிடித்து அடித்து உதைக்கிறார்கள். எந்த காயமும், வலியும் வாசமுத்துவுக்கு ஏற்படவில்லை.

செம்பரக்குடும்பனுக்கு தகவல் தெரிகிறது. அவர் வந்து தம்பிகளிடம் இனி அவனை அடிக்க வேண்டாம். வடமலையப்பரிடம் அழைத்து செல்வோம் என்று கூறி, வாசமுத்துவை இருபத்தியோரு சங்கிலியால் கட்டி கொண்டு சென்று, அவர் முன் கொண்டு நிறுத்துகின்றனர். வடமலையப்பபிள்ளை, வாசமுத்துவை சேந்திமங்கலம் ஆற்றங்கரையோரமுள்ள ஆவரங்காடு தர்ம சாஸ்தா கோயில் முன்பு வைத்து அவனுக்கு மாறு கை, மாறு கால் வாங்கி விடுங்கள் என்று கூறுகிறார். அதன்படி செம்பரக்குடும்பனும், அவனது தம்பி மார்களும் வாசமுத்துவுக்கு மாறு கை, மாறு கால் வாங்க முற்படுகின்றனர். அது முடியாமல் போகிறது. என்ன வென்று யோசிக்க, வாசமுத்து கூறுகிறான். எனது உடலில் கழுத்து, நெஞ்சு, வயிறு ஆகிய இடங்களில் சக்கரம் இருக்கிறது. அதை எடுத்தால் தான் என் உயிர் போகும். நான் நல்வாழ்க்கை வாழ்ந்தேன். ஏதோ எனது கிரகம் என்னை இப்படி ஒரு இழி நிலைக்கு கொண்டு வந்துவிட்டது. இனி நான் உயிர் வாழ விரும்பவில்லை. எனவே முதலில் அந்த சக்கரத்தை எடுங்கள் என்று கூறுகிறான்.

அதன்படி மூன்று சக்கரங்கள் எடுக்க, வாசமுத்துவின் உயிர் பிரிந்தது. அவனது உடலை தகனம் செய்யும் போது, அவனது மனைவி சாத்தியம்மாள் உடன்கட்டை ஏறினாள். அப்போது வீட்டிலிருந்து தலைவிரி கோலமாக ஓடோடி வந்த சோணமுத்துவும் உடன்கட்டை ஏறினாள். மூவரும் இறந்தனர். அன்றிலிருந்து எட்டாவது நாள் செம்பரக்குடும்பனை தவிர, தன்னை கொன்றவர்களை பலி வாங்கினான் வாசமுத்து. தன்னை காட்டிக்கொடுத்த நண்பன் புதியவன் முக்கூட்டு பனையில் கள் இறக்கும்போது வாசமுத்து தடி கொண்டு அடிக்க, கீழே விழுந்து எழுந்திருக்க முடியாத நிலையில் மன்னிப்பு கோருகிறான். நண்பனுக்கு இரக்கம் காட்டிய வாசமுத்து, சரி எழுந்து போ என்று கூற, என்னால் முடியவில்லை என்று பதிலுரைக்கிறார் புதியவன். அப்போது பொந்தன் தடியை கொடுத்து எழுந்து செல் நீ என் நண்பன். வீரனாக இருக்கணும், என்று சொல்ல, செல்ல முயன்றார். முடியவில்லை, உடனே வாசமுத்து, நீ என்ன உன் கூட கூட்டிட்டுபோ, என்னால முடியல என்று கூற, மறுகனமே அவர் உயிர் பிரிந்தது.

இரண்டு பேரும் ஆவிகளாகி அப்பகுதியில் அட்டகாசம் செய்து வந்தனர். இதையறிந்த செம்பரக்குடும்பன் தனது குலதெய்வமான ஆவரங்காட்டு சாஸ்தாவிடம் முறையிட சாஸ்தா, இருவரையும் சாந்தப்படுத்தினார். செம்பரக்குடும்பன் கனவில் தோன்றிய சாஸ்தா, வாசமுத்துவுக்கு சிலைகொடுத்து மந்திரமூர்த்தி என்ற பெயரில் படையலிட்டு பூஜை செய்து வாருங்கள். அவனுடன் இருந்த புதியவனுக்கும் நிலையம் கொடுத்து தடிவீரன் என்றும் புதியவன் என்றும் வழிபட்டு வாருங்கள் என்று கூறினார்.  அய்யனார் கூறியதன்பேரில் அப்பகுதி மக்கள் இருவருக்கும் நிலையம் கொடுத்து வழிபட்டு வந்தனர். மந்திரமூர்த்தி தனது சமூகம் சார்ந்தவர்களால் வண்ணாரமாடன் என்றும் அழைக்கப்படலானார். புதியவன் தடிவீரன் என்றும், இளையபெருமாள் என்றும் அழைக்கப்படலானார். வண்ணார மாடன் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களிலுள்ள பல ஊர்களில் கோயில் கொண்டுள்ளார். இக்கோயில் குமரி மாவட்டம் வல்லன்குமாரவிளையில் உள்ளது. இக்கோயிலில் மூலவராக வண்ணார மாடன், புதியவன் இருவரும் நின்ற நிலையில் அருள்புரிகின்றனர். இக்கோயிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை கொடைவிழா நடைபெறுகிறது.
 
சு.இளம் கலைமாறன் படங்கள்: ரா.பரமகுமார், வி.மகேஷ்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • mo

  அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு

 • 4l

  ஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்

 • c1

  ஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்

 • b

  இடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு

 • to1

  குஷ்னரின் மத்திய கிழக்கு சமாதான திட்டத்திற்கு எதிராக பாலஸ்தீனியர்கள் அணிவகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்