SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐஸ்வர்யமருளும் ஆறகழூர் அஷ்ட பைரவர்கள்!

2017-11-11@ 08:53:21

ஆறகழூர் நடுநாட்டு நகரங்களுள் ஒன்று. ஆறகழூரைத் தலைமைத் தானமாகக் கொண்டிருந்த நாட்டுப்பிரிவு மகதை எனப்பட்டது. அதை ஆண்ட வாணர்குல மன்னர்கள் தம்மை மகதைப் பெருமாள் என்று அழைத்துக் கொண்டனர். இந்த ஊர் சோழர் காலத்தில் பெருஞ்சிறப்பு பெற்றிருந்ததுடன், அவர்களது ஆளுகைக்கு உட்பட்ட வாணர்குல குறுநில மன்னர்களின் தலைநகராகவும் விளங்கி வந்துள்ளது. இந்த ஊரைச்சுற்றிக் கொண்டு வசிஷ்ட நதி ஓடுகிறது. ஊரின் நடுவில் பெரிய சிவாலயம் உள்ளது. இதில் வீற்றிருக்கும் சிவபெருமானின் பெயர் காமநாதீஸ்வரர் அம்பிகையின் திருநாமம் பெரியநாயகி என்பதாகும். இக்கோயில் அஷ்டபைரவத் தலமாகப் போற்றப்படுகிறது. பெருந்திரளான மக்கள் இங்கு வந்து வழிபாடு செய்கின்றனர். சோழகாலக் கற்கோயிலான காமநாதீஸ்வரர் ஆலயம் புதிய பொலிவுடன் திகழ்கிறது.

எட்டு பைரவரும் தனித்தனியாகவும் பெரிய திருவுருவுடனும் எழுந்தருளியிருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இக்கோயில் இரண்டு பிராகாரங்களுடன் அமைந்துள்ளது. நுழைவாயிலைக் கடந்து உள்ளே சென்றால் அகன்ற முற்றத்தையும், அதன் நடுவில் கொடிமரம், பலிபீடம், நந்திதேவர் அமைந்துள்ள சிறிய மண்டபம் ஆகியவற்றைக் காண்கிறோம். வடபுறம் பெரியதாகவும் முகமண்டபத்துடன் கூடியதுமான அலங்கார மண்டபம் உள்ளது. இதனை வசந்த மண்டபம் என்கின்றனர். கொடிமரத்திற்குத் தென்புறம் அக்னி முனையில் சுற்றுப் பிராகாரத்துடன் கூடிய தீர்த்தக்குளம் உள்ளது. இதன் வடபுறம் துவஜாரோகண மண்டபமும், அதற்கும் மேற்கில் தற்காலத்தில் அமைக்கப்பட்ட பைரவருக்கான விளக்குகளை ஏற்றும் மண்டபமும் உள்ளன.

இதனையடுத்து நடுவில் நான்கு கால்களைக் கொண்ட சிறிய மண்டபம் உள்ளது. அதன் நடுவில் மேடை அமைக்கப்பட்டு, அதில் ஸ்ரீவிமானத்தில் கபால பைரவர் என்று அழைக்கப்படும் சட்டநாத பைரவருக்கான அபிஷேக ஆராதனைகளைச் செய்யும் மகாபலிபீடம் அமைந்துள்ளது. இந்தச் சிறிய மண்டபத்தைச்சுற்றி நடவாணம் எனப்படும் பிராகாரம் மண்டபத்துடன் உள்ளது. இந்த நடவாணத்தை நான்குபுறமும் நான்கு தூண்கள் தாங்குகின்றன. ஆக இந்த பைரவ பலிபீட மண்டபம் எட்டுத் தூண்களைக் கொண்டதாக உள்ளது. இதில் விநாயகர் வடிவமும் உள்ளது. இந்த மண்டபத்தின் மீது ஏக தள விமானம் ஒற்றைக் கலசத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இதன் கிரீவப் பகுதியில் எட்டு திசைகளையும் நோக்கியவாறு அஷ்ட பைரவர்களின் திருவுருவங்கள் அமைந்துள்ளன. இந்த மண்டபத்திற்கு வலம்புரி மண்டபம் என்பதும் பெயராகும். அன்பர்கள் பீஷ்ண பைரவர் இம்மண்டபத்தில் அருவ நிலையில் இருப்பதாகக் கூறுகின்றனர்.

இங்கிருந்து பார்த்தால் நேரே ரிஷிகோபுரம் எனப்படும் ஸ்ரீகோபுரத்தின் தெற்கு முகத்தில் அமைந்துள்ள கபால பைரவர் சந்நதியைக் கண்டு மகிழலாம்.
இனி ரிஷிகோபுரம் எனப்படும் பைரவக் கோபுர வாயில் வழியாக உள்ளே செல்லலாம். இந்தக் கோபுர வாயிலின் குடவரையில் தென்பகுதியில் மேற்கு நோக்கியவாறு சண்ட பைரவரும், தெற்கில் மேற்கு நோக்கியவாறு குரோத பைரவரும் எழுந்தருளியுள்ளனர்.  இவர்களுடைய வடிவங்கள் அளவால் சிறியதாக உள்ளன. இனி உட்பிராகாரத்தை வலம் வரலாம். இக்கோயிலின் கருவறை மண்டபங்கள், உட்பிராகார திருமாளிகைப் பத்தி ஆகியவை கருங்கல்லால் கட்டப்பட்டவைகளாகும்.

பிராகாரத்தின் திருமாளிகை பத்தியில் தென்பகுதியின் மையத்தில் நெடிய சூரியனின் வடிவமும் அவருக்கு அருகில் மேற்கு நோக்கியவாறு ருருபைரவரின் வடிவமும் அமைந்துள்ளன. இவரை வணங்கி சப்த மாதர்கள், கன்னிமூல கணபதி, பஞ்ச லிங்கங்கள், ஷண்முகர், ஆலிங்கன சந்திரசேகரர், கஜலட்சுமி, வீரபத்திர
சுவாமி ஆகியோரை வணங்கி மகிழலாம். வடக்குத் திருமாளிகைப் பத்தியில் அறுபத்து மூவர் தெற்கு நோக்கி எழுந்தருளியுள்ளனர். இவ்வரிசையின் முடிவில் மேற்கு நோக்கியவாறு ஏறத்தாழ நான்கடி உயரமுள்ள பெரிய காலபைரவர் எழுந்தருளியுள்ளார். இவரே இங்கு அஷ்ட பைரவர்களில் முதன்மை பெற்ற பைரவராகப் போற்றப்படுகின்றார். சிறப்பு அபிஷேக ஆராதனைகள் அலங்காரங்கள் இவருக்கே செய்யப்படுகின்றன.

இவரை வணங்கி தொடர்ந்து வலம் வரும்போது தெற்கு நோக்கியவாறுள்ள நடராஜர் சந்நதியில் சிவகாமசுந்தரி உடனாய நடராஜப் பெருமானைக் கண்டு வணங்கலாம். இவரை அடுத்து நவகிரகங்களும், அவர்களுக்குக் கிழக்கில் உன்மத்த பைரவரும் சனீஸ்வரரும் எழுந்தருளியுள்ளனர். இவ்வடிவம் அழகியதும் பெரியதும் ஆகும். கருவறைக் கோட்டங்களில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மதேவர், துர்க்கை ஆகியோரும், கோமுகிக்கு அருகில் தெற்கு நோக்கியவாறு சண்டீஸ்வரரும் எழுந்தருளியுள்ளனர். இவர்களை வணங்கி, மகாமண்டபம் கடந்து இடைநாழி மண்டபத்தை அடைகிறோம். இங்குள்ள வாயிலில் நெடிய துவார பாலகர்கள் இருக்கின்றனர். வலப்புறமுள்ள துவாரபாலகரின் அருகில் மேற்கு நோக்கியவாறு அஸிதாங்க பைரவர் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.

இவரை வணங்கியபின் கருவறையில் வீற்றிருக்கும் காமநாதீஸ்வரப் பெருமானை வணங்கி அருள் பெறலாம். சிவபெருமான் காமனை அழித்து மீண்டும் உயிர்ப்பித்ததை மகாபுராணங்கள் கூறுகின்றன. நெற்றிக் கண்ணைத் திறந்து அனல்  விழியால் நோக்கிய வேளையில் சிவபெருமான் பைரவராக விளங்கினார். அவரை காமதகனர் என்று அழைப்பர். பின்னர் சிவபெருமான் ரதியின் வேண்டுதலை ஏற்று மன்மதனை உயிர்ப்பித்தார். மன்மதனும் ரதியும் சிவபெருமானை வணங்கிப் போற்றினர். மதன் ரதிதேவியுடன் வழிபட்ட இறைவனே காமநாதீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார் என்கின்றனர். காமநாதீஸ்வரப் பெருமானை வணங்கி வலம் வந்து தேவகோட்டத்துத் தட்சிணாமூர்த்தியை வணங்கி அவருக்கு அருகில் அமைந்துள்ள படிகளில் ஏறி ரிஷிகோபுரத்தில் வீற்றிருக்கும் கபால பைரவரைத் தரிசிக்கச் செல்லலாம்.

இவர் கோபுரத்தின் கிரீவப்பகுதியில் தென்மேற்கில் தெற்கு நோக்கி அமைந்துள்ள கோட்டத்தில் எழுந்தருளியுள்ளார். இவர் இரண்டு திருக்கரங்கள் கொண்டவர். வலதுகரத்தில் கபாலம் ஏந்தி இடதுகரத்தை தண்டத்தின் மீது ஊன்றியுள்ளார். தலையில் முடியை வட்டமாக முடிந்துள்ளார். இது சுதையாலான வடிவமாகும். இவர் உயரத்தில் வீற்றிருப்பதால் ஆகாச பைரவர் என்றும், தண்டத்தினைத் தாங்கியுள்ளதால் தண்டபாணி என்றும், கபாலத்தை ஏந்தியுள்ளதால் கபால பைரவர் என்றும், நீண்ட சட்டையைத் தரித்திருப்பதால் சட்டநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். கங்காளம் என்னும் கபாலத்தை ஏந்தியிருப்பதால், கங்காளநாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.

இவரை வணங்கிய பின் சிவ சந்நதிக்கு இணையாக அதன் வடக்கில் சுற்றுப்பிராகாரங்களுடன் விளங்கும் தனி ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் அன்னை பெரிய நாயகியை வணங்கி வரம் பெறலாம். ஆறகழூர் அஷ்டபைரவத் தலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இங்கு மகா மண்டபத்தில் துவார பாலகருக்கு அருகில் முதலாவதான அஜிதாங்க பைரவரும், தெற்குப் பிராகாரத்தில் இரண்டாவதான ருரு பைரவரும், கோபுரக் குடவரையின் வடக்கு அறையில் மூன்றாவதான குரோதனரும் தெற்கு அறையில் நான்காவதான சண்டரும், நவகிரகங்களுக்கு அருகில் ஐந்தாவதான உன்மத்தரும், வலம்புரி மண்டபத்தில் அருவ நிலையில் ஆறாவதான பீஷ்ண பைரவரும் ஏழாவதான கபால பைரவர் ராஜகோபுரத்தின் தெற்குக் கிரீவத்திலும் எட்டாவதான கால பைரவர் வடக்குப் பிராகாரத்திலும் உள்ளனர்.

இங்கு தேய்பிறை அஷ்டமி பெரும் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. அனைத்து வழிபாடுகளும் கால பைரவருக்கே செய்யப்படுகின்றன. அவர் எட்டுக் கரங்களுடன் நாய் வாகனத்துடன் திகழ்கிறார். இவருக்கு வெள்ளிக்கவசம் அணிவித்து அலங்காரங்களைச் செய்து வழிபடுகின்றனர். மிளகு தீபம் ஏற்றுதல், செந்நிற அலரி மாலைகளைச் சூட்டுதல், சிவந்த மலர்களைக் கொண்டு அர்ச்சித்தல் முதலிய பிரார்த்தனைகள் அன்பர்களால் செய்யப்படுகின்றன. தேய்பிறை அஷ்டமி நாளில் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து வழிபாடு செய்கின்றனர். அஷ்டபைரவருக்குரிய சிறந்த பிரார்த்தனைத் தலமாக இத்தலம் விளங்குகிறது. இக்கோயிலில் பைரவரின் அழகிய சிறிய உலாத்திருமேனி உள்ளது. தலையின்மீது ஜ்வாலைகள் சுடர்விட, நான்கு கரங்களில் டமரு, பாசம், சூலம், கபாலம் ஏந்தியவராக இவர் காட்சி தருகின்றார். இவர் பவனி வருவதற்கென சிறிய மரத்தாலான நாய் வாகனம் உள்ளது. தேய்பிறை அஷ்டமி நாளில் இவர் பிராகாரங்களில் வலம் வந்து அன்பர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கள்ளக்குறிச்சி  ஆத்தூர் சாலையில், சேலம் போகும் வழியில் சின்னசேலம் வி  கூட்டு ரோடிலிருந்து 2 கி.மீ. தொலைவில் ஆலயம் உள்ளது.

பூசை.ச.அருணவசந்தன்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 22-10-2018

  22-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 21-10-2018

  21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • dussehraa_11

  நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

 • 20-10-2018

  20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • tirupathivavacha

  திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்