SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உங்களால் முடியும்!

2017-11-08@ 15:18:45

பதினான்கு வயது மகனுக்குத் தாயாகிய எனது மனைவியை கடந்த ஆண்டு சாலை விபத்தில் பறிகொடுத்து விட்டேன். என் மகனின் நல்வாழ்விற்காக, எனது  மாமனார், மாமியார் ஆசியுடன் மறுமணம் செய்து கொள்ள நினைக்கிறேன். உரிய பரிகாரம் சொல்லுங்கள். - பரமேஷ், காஞ்சிபுரம்.

சித்திரை நட்சத்திரம், கன்னி ராசி, தனுசு லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தில் தற்போது சனிதசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. மனைவியைப் பற்றிச் சொல்லும் களத்திர ஸ்தானமாகிய ஏழாம் வீட்டிற்கு அதிபதி புதன் மூன்று கிரகங்களுடன் இணைந்து ஆறாம் வீட்டில் அமர்ந்திருப்பது அத்தனை உசிதமில்லை. மறுமணம் செய்துகொண்டாலும் உங்களுடைய எதிர்பார்ப்பு நிறைவேறாது. மறுமணம் செய்து கொள்வதால் உங்கள் ஜாதகப்படி மேலும்  சிரமத்தையே அனுபவிப்பீர்கள். உங்கள் மாமியார் உங்கள் வீட்டில் இருந்து கொண்டு தன் பேரனை பார்த்துக் கொள்கிறார் என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.

அவரது அரவணைப்பில் பிள்ளை நல்லபடியாக வளர்வான். கவலைப்படாதீர்கள். மறுமணம் செய்து கொள்வதால் நீங்கள் எதிர்பார்க்கும் அன்பும், அமைதியும் உங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பு இந்த சனிதசையில் உருவாகாது. மறுமணம் குறித்த எண்ணத்தினை விடுத்து பிள்ளையின் எதிர்காலம் குறித்து யோசியுங்கள். இறைவன் இந்தப் பிறவியில் நமக்கு அளித்திருக்கும் மிகப்பெரிய வரப்பிரசாதம் என் மகன் என்ற எண்ணத்தினை வளர்த்துக் கொள்ளுங்கள். பரிகாரம் எதுவும் தேவையில்லை.

மகன் பிறந்தபின் என் தொழிலில் அடிமேல் அடி. இனிமேலாவது என் வாழ்வும், உழைப்பும் வீண் போகாமல் இருக்க நீங்கள்தான் அருள்புரிய வேண்டும்.  நம்பிக்கையுடன் உங்கள் வார்த்தையை எதிர்பார்க்கிறேன். - பாலச்சந்திரன், பெருந்துறை.

மகன் பிறந்த நேரம் தான் உங்கள் தொழில் வீழ்ச்சி அடைந்தது என்று நீங்கள் எண்ணுவது உங்கள் அறியாமையைக் காட்டுகிறது. ஒரு மனிதனின் ஜாதகம் தந்தை,  தாய், சகோதரன், சகோதரி ஆகியோரை பாதிக்கும் அல்லது சிறப்பாக வாழவைக்கும் என்று சொல்வது முற்றிலும் முட்டாள்தனம். ஒருவருடைய ஜாதகம்  மற்றொருவரின் ஜாதகத்தில் எந்தவிதமான தாக்கத்தினையும் உருவாக்காது. முதலில் இதுபோன்ற எண்ணத்தினை கைவிடுங்கள். உங்களுடைய ஜாதகத்தினை  நன்கு கற்றறிந்த ஜோதிடரிடம் காண்பித்து பலனை அறிந்து கொள்ளுங்கள். உங்கள் தொழில் வீழ்ச்சி அடைந்ததற்கு நீங்கள்தான் காரணமே அன்றி உங்கள்  பிள்ளை அல்ல.

உங்கள் ஜாதகத்தில் நடக்கின்ற நேரத்தின் அடிப்படையில்தான் நீங்கள் பலனை அனுபவித்து வருகிறீர்கள். அதற்கு சிறுபிள்ளை ஆகிய உங்கள்  மகன் என்ன செய்வான்? மகம் நட்சத்திரம், சிம்ம ராசி, மகர லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகம் நன்றாகவே உள்ளது. அவனுடைய 20வது வயது  முதல் குடும்பம் வளர்ச்சிப் பாதையில் செல்லும். அரசாங்க உத்யோகத்தில் உங்கள் பிள்ளை அமர்வதற்கான வாய்ப்பு நன்றாக உள்ளது. பிரதோஷநாள் அன்று அருகிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று வழிபட்டு வருவதை வழக்கமாகக் கொள்ளுங்கள். உங்களுக்கு உண்டான இடையூறுகள் காணாமல் போகும்.

34 வயதாகும் என் மகளுக்கு இன்னும் வரன் கிடைக்கவில்லை. அந்த ஈசன் என் உயிரை எடுத்துக்கொண்டு என் மகளுக்கு ஒரு நல்லவரன் கொடுக்க வேண்டும் என்றுபிரார்த்தனை செய்கிறேன். சில நேரங்களில் நான் ஏன் திருமணம் செய்து கொண்டேன் என்று வருத்தப்படுகிறேன். என் மகளுக்கு திருமணம் நடைபெற அருள்வாக்கு சொல்லுங்கள். - மதுரைப் பிள்ளை, சேலம் மாவட்டம்.

இது என்ன விபரீதப் பிரார்த்தனை? முதலில் உங்கள் எதிர்மறையான எண்ணத்தினை கைவிடுங்கள். நல்லதையே பேசுங்கள். நல்லதையே நினையுங்கள். உங்களைச் சுற்றி நல்லெண்ண அதிர்வலைகள் சூழ்ந்திருந்தால்தான் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். பெண் பிள்ளை என்றும் பாராமல் உங்கள் மகளை மருத்துவத்துறையில் உயர்கல்வியைப் படிக்க வைத்திருப்பது எத்தனை பெரிய சாதனை..? உங்கள் பிறவிப்பயன் இதன் மூலம் நிறைவேறி இருக்கிறதே..

சித்திரை நட்சத்திரம், துலாம் ராசி, கன்னியா லக்னத்தில் பிறந்த உங்கள் மகளின் ஜாதகத்தில் திருமண வாழ்வினைப்பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி குரு பகவான் கேதுவுடன் இணைந்து மூன்றாம் வீட்டில் அமர்ந்திருப்பது சற்று பலவீனமானஅம்சம் என்றாலும், இந்தநிலை திருமண வாழ்வினை முற்றிலுமாக தடை செய்து விடாது. அவருடைய ஜாதகப்படி தற்போது நல்ல நேரம் துவங்கியுள்ளது. 14.08.2018க்குள் அவரது திருமணம் நடந்து விடும். பிரதி திங்கட்கிழமை தோறும் அருகிலுள்ள சிவாலயத்தில் உள்ள அம்பாளின் சந்நதியில் விளக்கேற்றி வைத்து உங்கள் மகளை பிரார்த்தனை செய்து வரச் சொல்லுங்கள். கீழேயுள்ள ஸ்லோகத்தினை காலை மாலை இரு வேளையும் சொல்லி வரச் சொல்லுங்கள். விரைவில் அவரது திருமணம் நடைபெறும்.

“மங்களே மங்களாதாரேமாங்கல்யே
மங்களப்ரதே
மங்களார்த்தம் மங்களேசி மாங்கல்யம் தேஹிமேஸதா.”


2009ல் திருமணம் ஆன நாள் முதலாக மாப்பிள்ளையும், அவரது பெற்றோரும் பிரச்னை செய்து வந்து கடந்த 2014ல் என் மகளை வீட்டை விட்டு விரட்டி  விட்டார்கள். கடந்த மூன்று வருடங்களாக மாப்பிள்ளை விவாகரத்து வழக்கு போட்டு நடத்தி வருகிறார். என் மகளுக்கு பரிகாரம் சொல்லி நல் வழிகாட்டுங்கள். - சிவகாமி, சிவகங்கை மாவட்டம்.

அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகளின் ஜாதகத்தையும், விசாகம் நட்சத்திரம், துலாம் ராசி, மகர லக்னத்தில்  பிறந்துள்ள உங்கள் மாப்பிள்ளையின் ஜாதகத்தையும் ஆராய்ந்ததில் பிரச்னை என்பது உங்கள் மகளின் ஜாதகத்தின்படியே உருவாகியுள்ளது. ஆறாம் வீட்டில் ஐந்து  கிரகங்களின் இணைவு, 8ம் வீட்டினில் இரண்டு கிரகங்களின் இணைவு, 12ம் வீட்டில் சந்திரனின் அமர்வு என மொத்தமுள்ள ஒன்பது கிரகங்களில் எட்டு
கிரகங்களின் சாதகமற்ற அமர்வு நிலை அவரது வாழ்வினில் பிரச்னையைத் தந்திருக்கிறது.

நீங்கள் பொய் சொல்லி ஏமாற்றி திருமணம் செய்து வைத்து விட்டதாக உங்கள் மாப்பிள்ளையும், அவரது வீட்டாரும் கருதுவதுபோல் தெரிகிறது. பிரச்னையை  வளர்ப்பதைவிட விவாகரத்து வாங்கிக் கொள்வதே அவரது எதிர்காலத்திற்கு நல்லது. சதய நட்சத்திரம், கும்ப ராசியில் பிறந்துள்ள உங்கள் பேத்தியின் ஜாதகம்  நன்றாக உள்ளதால், அவர் வளர வளர உங்கள் மகளின் மனம் ஆறுதல் அடையும். உங்கள் ஊரிலுள்ள சிவன் கோயிலில் தினந்தோறும் அர்த்தஜாம  பூஜையின்போது உங்கள் மகளை தரிசனம் செய்து வரச் சொல்லுங்கள். கீழேயுள்ள அபிராமி அந்தாதி பாடலைச் சொல்லி வணங்கி வருவதும் நல்லது. உங்கள்  மகள் மனநிம்மதி காண்பார்.

“சின்னஞ் சிறிய மருங்கினில் சாத்திய செய்யபட்டும்
பென்னம் பெரிய முலையும் முத்தாரமும் பிச்சிமொய்த்த
கன்னங்கரிய குழலும் கண் மூன்றும் கருத்தில் வைத்துத்
தன்னந்தனி இருப்பார்க்கிது போலும் தவமில்லையே.”


என் தந்தைக்கு கடந்த 2014ல் நடந்த விபத்தில் நரம்பு துண்டாகி வலதுகை செயலிழந்து விட்டது. மருத்துவ சிகிச்சை செய்தும் பலனில்லை. விபத்து இழப்பீடு  வழக்கில் தீர்ப்பு இன்னும் வரவில்லை. மிகுந்த கஷ்டத்தில் இருக்கும் எங்கள் குடும்பத்திற்கு உரிய பரிகாரம் கூறி உதவிடுங்கள். - திவ்யபாரதி, புதுக்கோட்டை.

உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசியில் உங்கள் தந்தை பிறந்திருப்பதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பிறந்த தேதி மற்றும்  நேரத்தின் அடிப்படையில் கணித்துப் பார்த்ததில் இந்தத் தகவல் தவறாக உள்ளது. உத்திர நட்சத்திரம், கன்னி ராசியில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தினை  கணித்துப் பார்த்ததில் வருகின்ற 25.04.2018க்குப் பின் உங்கள் குடும்பத்திற்குத் தேவையான செல்வம் வந்து சேர்வதற்கான வாய்ப்பு நன்றாக உள்ளது. 14 வயதில்  இத்தனை பொறுப்புடன் கடிதம் எழுதியிருக்கும் நீங்கள் உங்கள் கல்வியில் கவனத்தை செலுத்துங்கள்.

உங்கள் தந்தைக்கு வலது கை செயல் இழந்ததை எண்ணி வருந்திக் கொண்டிருக்காமல் அவரது வலதுகரமாக நீங்கள் செயல்படுங்கள். நன்றாகப் படித்து அவரது கனவினை நிறைவேற்றுங்கள். அதற்கான முழுத்திறமையும் உங்களிடம் நிறைந்துள்ளது. உங்கள் ஜாதகப்படி நீங்கள் அரசுத்துறையில் மிகப்பெரிய பதவியில் அமர்வீர்கள். வீட்டின் பூஜையறையில் காலை - மாலை இருவேளையும் விளக்கேற்றி வைத்து கீழேயுள்ள ஸ்லோகத்தினைச் சொல்லி வணங்கி வாருங்கள். குடும்பத்தின் கஷ்டம் தீருவதோடு செல்வமும் சேரும். கவலை வேண்டாம்.

“தாரித்ர்ய சைல தம்போளி:க்ஷூத்ர பங்கஜ சந்த்ரிகா
ரோகாந்தகார சண்டாம்சு: பாபத்ரும குடாரிகா.”


குடிப்பழக்கம் உள்ள என் கணவரை அவரது குடும்பத்தார் கைகழுவி விட்டனர். என் குடும்பத்திலும் யாரும் இவரை மதிப்பதில்லை. என் மனஅமைதிக்காக நான்  விவாகரத்து வாங்கிக் கொள்ளலாமா? உரிய ஆலோசனை சொல்லி உதவிடுங்கள். - காயத்ரி, தாராபுரம்.

ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, மீன லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தின்படி தற்போது சுக்கிர தசையில் கேது புக்தி நடந்து வருகிறது. பூசம்  நட்சத்திரம், கடக ராசி, மகர லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் கணவரின் ஜாதகத்தில் தற்போது சுக்கிர தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. மனைவியைப்பற்றிச்  சொல்லும் ஏழாம் இடமும், குழந்தையைப் பற்றிச் சொல்லும் ஐந்தாம் இடமும் மட்டுமே வலிமை பெற்றுள்ளது. உங்கள் கணவரை நல்வழிப்படுத்த அவரது  மனைவியாகிய உங்களால் மட்டுமே இயலும். நீங்கள் அவரை விட்டுப் பிரிந்தால் ஆளே காணாமல் போய்விடுவார். இவரது குணத்தினை மனதில்  வைத்துக்கொண்டு குழந்தைப் பேறினை தள்ளிப் போடாதீர்கள்.

உங்கள் இருவரின் ஜாதகத்தின்படியும் ஒருகுழந்தை பிறந்து விட்டால் வாழ்க்கை இனிமையாகச் செல்லும். மழலையின் ஸ்பரிசம் உங்கள் கணவரின் மனதினை மாற்றும். குழந்தையின் வாசம் குடியினை மறக்கச் செய்யும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்த உங்கள் கணவரை தைப்பூசநாள் அன்று பழனிமலைக்கு அழைத்துச் சென்று முடிகாணிக்கை செலுத்தச் செய்யுங்கள். இறைவனின் மேல் அபிஷேகம் செய்யப்பட்ட விபூதி பிரசாதத்தை உங்கள் உடலில் பூசிக் கொள்ள உங்களுக்கிருக்கும் நோயும் குணமாகும். விவாகரத்து எண்ணத்தினை விடுத்து கணவரை நல்வழிப்படுத்த முயற்சியுங்கள்.

38 வயது ஆகியும் இன்னும் திருமணம் நடக்கவில்லை. எதற்கெடுத்தாலும் கோபமும், அழுகையும் வருகிறது. 17வது வயது முதல் உடல் ஆரோக்கியம்  சரியில்லை. வீசிங், சளித் தொல்லை இருந்து காலப்போக்கில் வலது கையும், காலும் சரிவர இயக்க முடியவில்லை. உரிய பரிகாரம் கூறி எனக்கு  வழிகாட்டுங்கள். - ஹர்ஷிதா, பொள்ளாச்சி.

புனர்பூசம் நட்சத்திரம், மிதுன ராசி, துலாம் லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தின்படி தற்போது புதன் தசையில் குருபுக்தி நடந்து வருகிறது. உங்கள்  ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் ஆகிய பத்தாம் வீட்டில் குருபகவான் உச்சம் பெற்ற நிலையில் அமர்ந்திருப்பது பலமான அம்சமாகும். முதலில் வேலைக்குச் செல்ல  முயற்சியுங்கள். நீங்கள் விரும்பிய வேலை கிடைக்காவிட்டாலும், கிடைக்கும் வேலையை முழு மனதுடன் செய்யுங்கள். வீட்டினில் வெறுமனே அமர்ந்திருந்தால்  தேவையற்ற சிந்தனைகள் மனதில் இடம் பிடிக்கும்.

ஐந்தாம் இடத்தில் அமர்ந்திருக்கும் கேது உங்களுக்கு வீண் குழப்பத்தினைத் தருவார். வேலைக்குச் செல்வதன் மூலம் உடலிற்கும், மனதிற்கும் ஏதேனும் ஒரு பணியைக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். உங்கள் உடல்நிலைக்கு ஒத்துவருகின்ற பணி நிச்சயம் கிடைக்கும். 2012ம் ஆண்டு வாக்கில் வந்த வரனை நீங்கள் தட்டிக் கழித்ததால் தற்போது திருமணத்தடை கண்டு வருகிறீர்கள். 2018ம் ஆண்டின் பிற்பாதியில் உங்கள் மனதினைப் புரிந்து நடக்கும் மணவாளன் கிடைப்பார். புதன்கிழமை தோறும் அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வாருங்கள். கீழேயுள்ள ஸ்லோகத்தினைச் சொல்லி தினமும் இருவேளை பெருமாளை வணங்கிட வளமான வாழ்வினைக் காண்பீர்கள்.

“மஹாபுத்திர் மஹாவீர்யோ மஹாசக்திர் மஹாத்யுதி:
அநிர்த்தேச்யவபு: ஸ்ரீமான் அமேயாத்மா மஹாத்ரித்ருத்.”


வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை, பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் தினகரன் ஆன்மிக மலா் 229, கச்சேரி சாலை, மயிலாப்பூா், சென்னை-600 004 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். பரிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • longestseabridge

  உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

 • delhi_strikepetrol18

  டெல்லியில் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்: கால் டாக்சி, ஆட்டோ சேவைகள் முடக்கம் !

 • solarcar_race

  சூரிய மின்சக்திகளால் இயங்கும் கார்களுக்கான பந்தயம் சிலி நாட்டில் கொண்டாட்டம்!

 • hondurans_americatrump

  ஹோண்டராஸில் இருந்து அமெரிக்கா நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அகதிகள் !

 • snowfall_kedarnthpics

  கேதார்நாத், பத்ரிநாத்தில் உருவாகியுள்ள பனிப்பொழிவின் புகைப்படங்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்