SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாழ்வில் வசந்தம் உண்டாகும்!

2017-11-07@ 14:30:21

சினிமாவில் ஒளிப்பதிவாளராக வேலை செய்கிறேன். தாய், தந்தையை இழந்த நான் பல வருடங்களாக துன்பங்களை அனுபவித்து வருகிறேன். எப்பொழுது வேலை நிரந்தரமாகும்? திரைப்பட இயக்குநர் வாய்ப்புக்காக முயற்சி செய்தும் கடைசியில் நழுவிவிடுகிறது. வாழ்வில் சிறப்படைய தீர்வு சொல்லுங்கள். செந்தில் நாயகம், சென்னை  92.

ரேவதி நட்சத்திரம், மீன ராசி, மிதுன லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தில் தற்போது சுக்கிர தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. உங்களுடைய ஜென்ம லக்னாதிபதி புதன் சூரியன்  சுக்கிரன்  செவ்வாயோடு இணைந்து இரண்டாம் இடத்தில் அமர்ந்திருப்பது பலமான நிலையாகும். மேலும், தொழிலைச் சொல்லும் ஜீவனாதிபதி குரு 11லும், தொழில் ஸ்தானத்தில் ராகு  சந்திரன் இணைவும் உங்கள் தொழில் ஸ்தானத்தை மேலும் வலுவூட்டுகிறது. தற்போது நடந்து வரும் சனி புக்தி முடிவடைந்து, புதன் புக்தி துவங்கும் காலத்தில் உங்களுக்கான வழி திறக்கும்.

டைரக்‌ஷன் துறையில் முயற்சிப்பதைவிட ஒளிப்பதிவுத் துறையில் உங்கள் கவனத்தை அதிகமாகச் செலுத்துங்கள். 25.10.2018 முதல் பிற மொழிப் படங்களிலும் பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் வந்து சேரும். மொழியைக் காரணம் காட்டி வருகின்ற வாய்ப்பை விட்டு விடாதீர்கள். வெள்ளிக்கிழமை தோறும் காலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள்ளாக நீங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலுள்ள அம்பிகை ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு வருவதை வழக்கமாகக் கொள்ளுங்கள். வளமான வாழ்வு காத்திருக்கிறது.

ஆறு மாதக் குழந்தையாகிய என் மகன் தற்போது வரை சரியாக தாய்ப்பால் அருந்துவதில்லை. வேறு எந்த உணவும் எடுத்துக் கொள்வதில்லை. அவனுக்கு பசியாற்ற மிகவும் போராட வேண்டி உள்ளது. மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். என் மகன் உடல் ஆரோக்யத்துடன் வாழ பரிகாரம் சொல்லுங்கள். மாரியப்பன், சங்கரன்கோவில்.

சித்திரை நட்சத்திரம், கன்னி ராசி, மகர லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகம் நன்றாக உள்ளது. ஐந்து வயதுவரை அவரது உடல் ஆரோக்கியத்தில் அதீத கவனம் கொள்ளுங்கள். அவருடைய ஜாதகத்தில் தாயாரைக் குறிக்கும் நான்காம் வீட்டில் செவ்வாய் ஆட்சி பலத்துடன் அமர்ந்திருப்பதால் பெற்ற தாய் ஒருவரால் மட்டுமே அவரை நன்கு கவனித்துக் கொள்ள இயலும். பிள்ளையை தினந்தோறும் காலை சூரிய உதய நேரத்தில் சூரிய ஒளி படும்படியான இடத்தில் 15 நிமிடம் வரை வைத்திருங்கள். தினமும் அதிகாலைச் சூரியனின் ஒளி அவர்மீது படும்போது உடலிலுள்ள குறைகள் நீங்கும்.

ஹார்மோன்கள் தூண்டப்படும். இயல்பாகப் பசி எடுத்து குழந்தை அழும். பிள்ளை அழுதால்தான் பசியாற்ற முடியும். பிள்ளை அழாமல் உணவினை திணிக்காதீர்கள். உங்கள் ஊரான சங்கரன் கோவிலிலுள்ள கோமதியம்மன் சந்நதியில் பிள்ளையை கிடத்தி அம்பாளிடம் மனமுருகி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அதே ஆலயத்தில் உள்ள சுப்ரமணியர் சந்நதியில் ஆறு விளக்குகள் ஏற்றி வைத்து பிள்ளையின் உடல் ஆரோக்கியம் சிறக்க வேண்டிக் கொள்ளுங்கள். கீழேயுள்ள தேவாரப் பாடலைச் சொல்லி வணங்கி வாருங்கள். பிள்ளையின் பசியோடு உங்கள் மன உளைச்சலும் தீரும்.

“ஒருமை பெண்மையுடையன் சடையன் விடையூரும் இவனென்ன
அருமையாகவுரை செய்ய அமர்ந்தென துள்ளங்கவர் கள்வன்
கருமைபெற்றகடல் கொள்ள மிதந்ததோர் காலம்இது வென்னப்
பெருமைபெற்றபிர மாபுரம்மேவிய பெம்மானிவனன்றே.”


நான் இதுவரை பட்ட துயரம் சொல்லி மாளாதது. ஆன்மிக ஈடுபாடு கொண்ட என்னை ஆண்டவன் பெரிதும் சோதிக்கிறார். சில ஜோதிடர்கள் எனக்கு அரசியல் வாழ்வு உண்டு என்று கூறுகிறார்கள். வட்டி தொழில் செய்து கிட்டதட்ட ‘லாக்’ ஆனதுதான் மிச்சம். தற்போது உயிர் மட்டும் உள்ளது. அரசியலில் முன்னேற உரிய பரிகாரம் சொல்லுங்கள். கதிர்வேல், ஈரோடு மாவட்டம்.

உழைப்பை  நம்பாமல் குறுக்கு வழியில் முன்னேற  நினைப்பவர்களுக்கு ஆண்டவன் அருள் அவ்வளவு எளிதாகக் கிட்டாது. திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, கும்ப லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தில் தற்போது புதன் தசையில் சுக்கிர புக்தி துவங்கியுள்ளது. உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் தொழில் ஸ்தானத்தில் அமர்ந்துள்ளதால் இந்த நேரத்தில் உங்கள் தொழிலை நிரந்தரம் ஆக்கிக்கொள்ள இயலும். பரம்பரையைச் சொல்லும் ஒன்பதாம் இடத்திற்கு அதிபதி சுக்கிரன், தொழில் ஸ்தானத்தில் செவ்வாயோடு இணைந்திருப்பதால் உங்கள் பரம்பரைத் தொழிலை கையில் எடுத்துக் கொள்ளுங்கள். முன்னோர்கள் செய்த தொழிலை நீங்கள் இன்னும் சிறப்பாக காலத்திற்குத் தகுந்தாற்போல மாற்றிச் செய்ய இயலும்.

உங்கள் ஜாதகத்தில் சூரியன் நீசம் பெற்றிருப்பதால் அரசியலில் நீங்கள் முன்னேற்றம் காண இயலாது. தொழில் ஸ்தானத்தில் சுக்கிரனோடு ஆட்சி பலம் பெற்ற செவ்வாயும் இணைந்திருப்பதால் உழைப்பால் மட்டுமே முன்னேற்றம் காண இயலும். சிறப்பான ஜாதக அமைப்பினை உடைய நீங்கள் உண்மையாக உழைத்தீர்களேயானால் கிரகங்கள் உங்களுக்குத் துணை நிற்கும். பிரதி செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அருகிலுள்ள அம்மன் ஆலயத்தில் கற்பூரம் ஏற்றி வழிபடுங்கள். உங்கள் உழைப்பை நம்புங்கள். உயர்வடைவீர்கள்.

திருமணமாகி ஏழு வருடங்கள் ஆகின்றன. இதுவரை குழந்தை பாக்கியம் இல்லை. நிறைய பரிகாரம் செய்து விட்டோம். மருத்துவம் பார்த்து விட்டோம். எந்தப் பலனும் இல்லை. எங்களுக்கு எப்போது மழலைச் செல்வம் கிட்டும்? உரிய பரிகாரம் கூறுங்கள். கலைவாணி, நாமக்கல்.

உத்திரம் நட்சத்திரம், கன்னி ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தையும், விசாகம் நட்சத்திரம், துலாம் ராசி, கன்னி லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் கணவரின் ஜாதகத்தையும் ஆராய்ந்ததில் புத்திர தோஷம் உள்ளது தெரிகிறது. உங்கள் கணவரின் ஜாதகத்தில் குழந்தை பாக்கியத்தைக் குறிக்கும் ஐந்தாம் வீட்டிற்கு அதிபதியான சனிபகவான், ராகுவுடன் இணைந்து 12ல் அமர்ந்திருப்பதும், உங்கள் ஜாதகத்தில் ஐந்தாம் வீட்டில் சனி இணைந்திருப்பதும் புத்திர தோஷத்தைத் தருகின்றன.

தத்து புத்திர யோகம் உங்கள் இருவர் ஜாதகத்திலும் இருப்பதால் ஒரு ஆண் குழந்தையை தத்து எடுத்து வளர்த்து வாருங்கள். அந்தக் குழந்தை கண்டிப்பாக உங்கள் உறவினர் வழி சார்ந்த பிள்ளையாக இருக்கக் கூடாது. தம்பதியர் இருவரும் சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து வயதான ஏழை தம்பதியர்க்கு உணவளித்து அதன் பின்பு நீங்கள் உணவு உட்கொள்வதை வழக்கமாகக் கொள்ளுங்கள். நீங்கள் இருவரும் காலை  மாலை இருவேளையும் பூஜையறையில் விளக்கேற்றி வைத்து கீழேயுள்ள அபிராமி அந்தாதி பாடலைச் சொல்லி அம்பிகையை வழிபட்டு வர உங்களுக்கு உரிய வாரிசுதனை நீங்கள் அடையாளம் காண முடியும்.

“ககனும் வானும் புவனமும் காணவிற்காமன் அங்கம்
தகனம்முன் செய்த தவப்பெரு மாற்குத் தடக்கையும் செம்
முகனும் முந்நான்கிரு மூன்றெனத் தோன்றியமூதறிவின்
மகனும் உண்டாயதன்றோ வல்லி நீ செய்தவல்லபமே.”


மைனர் பெண்ணை காதலித்து மணம் புரிந்த குற்றத்திற்காக சிறைதண்டனை அனுபவித்து வருகிறேன். தற்போது அந்தப் பெண் திருமணமாகி 2 பிள்ளைகள் பெற்று மகிழ்ச்சியாக வாழ்கிறாள். நான் காதல் செய்த பாவத்திற்காக சிறையில் வாடுகிறேன். சிறையில் இருந்து விடுதலையாகி என் வாழ்வு சிறப்படைய பரிகாரம் சொல்லுங்கள். யுவபிரகாஷ், கோவை மத்தியசிறை.

கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, மிதுன லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தில் தற்போது சுக்கிர தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் சனி அமர்ந்திருப்பதும், ஏழாம் வீட்டின் அதிபதியான குருபகவான் கேதுவுடன் இணைந்திருப்பதும் உங்களை இந்த நிலைக்கு ஆளாக்கியுள்ளது. அதிலும் ஏழரைச் சனியின் பிடியில் இருக்கும் காலத்தில் உங்களது இந்த செயல் வாழ்க்கையில் கரும்புள்ளியை அழுத்தமாகப் பதித்திருக்கிறது. இளம் வயதில் இத்தனை பெரிய தண்டனையை நீங்கள் அனுபவிப்பது விதிப்பயனே.

ஏழரைச் சனியின் காலம் இன்னமும் மூன்று ஆண்டுகளுக்கு தொடர்ந்தாலும், தற்போது டிசம்பர் மாதத்தில் நடைபெற உள்ள சனிப் பெயர்ச்சி உங்களுக்கு சாதகமான பலனைத் தரும். விரைவில் ‘பெயில்’ கிடைத்துவிடும். எனினும் உங்கள் வழக்கு முடிவிற்கு வருவதற்கு இன்னமும் மூன்று ஆண்டுகள் பிடிக்கும். சனியின் தாக்கத்திலிருந்து விடுபட, சிறையில் இருந்தாலும் வயது முதிர்ந்த மற்றும் நோய்வாய்ப்பட்டிருக்கும் கைதிகளுக்கு உங்களால் இயன்ற உடலுதவியைச் செய்யுங்கள். கீழேயுள்ள துதியினைச் சொல்லி ஆஞ்சநேய ஸ்வாமியை மானசீகமாக வணங்கி வாருங்கள். 32வது வயது முதல் உங்களுடைய வாழ்வில் வசந்தம் உண்டாகும்.

“பக்தரக்ஷணசீலாய சர்வஜன சோக ஹாரிணே
ஜகத்பாவக நேத்ராய மங்களம் ஸ்ரீஹநூமதே.”


நான் என் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுத் தனிமையில் வாழ்கிறேன். பெற்றோர் கிடையாது. அண்ணன், தங்கை வழியில் எவர் ஆதரவும் இல்லை. என்னை ஒருவர் இரண்டாவது திருமணம் செய்து கொள்வதாகக் கூறி எனக்கு எல்லா உதவியும் செய்கிறார். என்னால் அவர் குடும்பத்தில் பிரச்னை வருகிறது. நான் அவர் குடும்பத்தோடு ஒற்றுமையாக வாழ பரிகாரம் கூறுங்கள். ரேவதி, விருத்தாசலம்.


ரேவதி நட்சத்திரம், மீன ராசி, கன்னியா லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தின்படி தற்போது சந்திர தசை துவங்கியுள்ளது. உங்கள் ஜாதகத்தில் லக்னாதிபதி புதன் சூரியன்  ராகுவோடு இணைந்து 11ல் அமர்ந்திருப்பதும், தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன் அமர்ந்திருப்பதும் பலமான நிலையாகும். முதலில் நீங்கள் எவர் துணையுமின்றி  சொந்தக் காலில் நிற்கப் பழகிக் கொள்ளுங்கள். வேலை பார்த்து சுயமாக சம்பாதிப்பது என்பது உங்கள் ஜாதகத்தில் பலமான அம்சமாக உள்ளது. உங்கள் ஊரிலிருந்து சென்னை போன்ற மாநகரத்திற்கு இடம் பெயர்ந்து உத்யோகத்தை ஸ்திரமாக்கிக் கொள்ளுங்கள்.

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் நபரின் மனைவி விசாக நட்சத்திரம், துலாம் ராசியில் பிறந்தவர். அவரது ஜாதகமும், உங்கள் ஜாதகமும் என்றும் ஒத்துப் போகாது.  நீங்கள் இருவரும் ஒற்றுமையாக இணைந்திருப்பதற்கு சாத்தியமில்லை. அதேபோல நீங்கள் குறிப்பிட்டிருக்கும் நபரின் ஜாதகத்தில் லக்னத்தில் ராகுவும், மனைவி ஸ்தானத்தில் அசுப கிரகங்களான சூரியன், செவ்வாய், கேது இணைந்திருப்பதால் அவரை நம்பி உங்கள் வாழ்க்கையை ஒப்படைப்பது அத்தனை உசிதமில்லை. அவரோடு நீங்கள் இணைந்து வாழுகின்ற பட்சத்தில் வீண்பழிக்கும், அவமானத்திற்கும் ஆளாக நேரிடும். உங்கள் ஜாதகம் பலம் பொருந்தியது என்பதால் எவர் துணையும் இன்றி உங்களால் வாழ முடியும். இறையருள் துணை புரியும்.

என் மகளுக்கு ஜாதகம் பார்த்ததில் ராகு  கேது தோஷம், மாங்கல்ய தோஷம் இருப்பதாகச் சொல்கிறார்கள். சிலர் தோஷம் இல்லை என்கிறார்கள். எதை எடுத்துக்கொள்வது என்று புரியவில்லை. நிறைய வரன்கள் வந்து தட்டிப் போகிறது. அவளுக்கு திருமணம் கூடிவர பரிகாரம் சொல்லுங்கள். செல்வி, நெய்வேலி.

ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, கன்னி லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகளின் ஜாதகத்தின்படி தற்போது ராகு தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தில் வாழ்க்கைத் துணைவரைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி குரு பகவான் ராகுவுடன் இணைந்து குடும்ப ஸ்தானமாகிய இரண்டாம் வீட்டில் அமர்ந்திருப்பதும், மாங்கல்ய ஸ்தானமாகிய எட்டாம் வீட்டில் கேது அமர்ந்திருப்பதும் சற்று பலவீனமான நிலையாகும். எனினும், குருவின் பார்வை இருப்பதால் தோஷ நிவர்த்தி ஆகிவிடுகிறது. மேலும், மாங்கல்ய ஸ்தானாதிபதி செவ்வாய் சந்திரனுடன் இணைந்து ஒன்பதில் அமர்ந்திருப்பது நல்ல நிலையே.

அதனால், நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஜென்ம லக்னாதிபதி புதன் ஆட்சி பலத்துடன் அமர்ந்திருப்பதால் எந்தவித தோஷமும் ஜாதகரை அண்டாது. உங்கள் மகளை தொடர்ந்து ஏழு வாரங்களுக்கு வியாழன் தோறும் அரசமரத்தடி நாகருக்கு பால் அபிஷேகம் செய்து மஞ்சள்  குங்குமம் பூசி அரச மரத்தையும், நாகரையும் 18 முறை சுற்றி வந்து வணங்கிப் பிரார்த்தனை செய்து கொள்ளச் சொல்லுங்கள். 20.10.2018க்குள் உங்கள் மகளின் திருமணம் நடந்து விடும். திருமணம் முடிந்த கையோடு அருகிலுள்ள சுப்ரமணிய ஸ்வாமி ஆலயத்திற்கு மணமக்களை அழைத்துச் சென்று அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். உங்கள் மகள் தீர்க்க சுமங்கலியாக வாழ்வார்.

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா்  திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா


வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை, பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் தினகரன் ஆன்மிக மலா் 229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம். பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • bathnatural

  சர்வதேச இயற்கை மருத்துவத் தினத்தை முன்னிட்டு மணல் குளியல் விழிப்புணர்வு

 • puegovolconoerupt

  கவுதமாலாவில் பியூகோ எரிமலை வெடித்து சிதறியது : 4,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சம்

 • delhiproblem

  டெல்லியில் நிலவும் பனிப்புகை மூட்டத்தால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி

 • colombiacarfestival

  கொலம்பியாவில் 29வது கார் திருவிழா : தானியங்கி வாகங்களில் மக்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு

 • vietnamramnathgovind

  வியட்நாமில் தேசிய சபை தலைவர் நிகுயென் தி கிம் நிகானுடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்