SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எண்ணியதை நிறைவேற்றுவார் வண்ணார மாடன்!

2017-11-04@ 10:53:57

நம்ம ஊருசாமிகள் - வல்லன்குமாரவிளை, குமரி மாவட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் வல்லன்குமாரவிளையில் கோயில் கொண்டுள்ள வண்ணாரமாடன் தன்னை வணங்கும் பக்தர்களுக்கு எண்ணியதை யாவும் நிறைவேற்றி தருகிறார். திருநெல்வேலியில் சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்பு நெல்லையப்பர் கோயிலில் காரியஸ்தராக இருந்தார் வடமலையப்ப பிள்ளை. இவர் காசிக்கு புனித யாத்திரை மேற்கொண்டிருந்தார். அங்கு அவருக்கு பணிவிடை செய்து அறிமுகமானார் சிவனாண்டி. சலவை தொழிலாளியான சிவனாண்டி, சிவன் மீது கொண்ட பற்றின் காரணமாகவும், குடும்ப வாழ்க்கையின் மீதிருந்த வெறுப்பின் காரணமாகவும் பல தலங்கள் நடந்து காசிக்கு சென்றிருந்தார். தனது நிலையை வடமலையப்பரிடம் கூறியவர். தனது மகன், மற்றும் மகள், மருமகன் நாஞ்சில் நாட்டிலுள்ள பூதப்பாண்டி ஊரில் இருப்பதாகவும் எனது குடும்பத்தினருக்கு தாங்கள் உதவி செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

சந்தர்ப்பம் வரும் போது நிச்சயம் முடிந்த உதவியை செய்கிறேன் என்று சிவனாண்டியிடம் உறுதி கொடுத்த வடமலையப்பபிள்ளை ஒரு மாத கால காசி யாத்திரை முடிந்து நெல்லை திரும்பினார். அந்த காலம் பஞ்சம் நிலவியது. சேந்தமங்கலம் மற்றும் அதன் சுற்றுப்புறத்தை சேர்ந்த ஏழு ஊர்களில் விவசாயம் பாழ்பட்டு மக்கள் வேதனைப்பட்டனர். இதையறிந்த வடமலையப்பபிள்ளை நெல்லையப்பர் கோயிலுக்கு பாத்தியப்பட்ட ஆயிரம் கோட்டை நெல் விளையும் விவசாய நிலங்களை பயிர் செய்து பிழைத்துக் கொள்ளுமாறு ஏழு ஊருக்கு நாட்டாண்மையாக திகழ்ந்த செம்பரக்குடும்பனிடம் பட்டயம் போட்டு கொடுத்தார். விளைச்சலில் ஒரு பகுதியை கோயிலுக்கு கொடுக்க வேண்டும் என்றும், அந்த ஏழு ஊர்களில் யாரையும் என்னிடம் கேட்காமல் புதியதாக குடியமர்த்த கூடாது என்றும் நிபந்தனை விதித்தார்.

அதை ஏற்றுக்கொண்டார் செம்பரக்குடும்பன். அந்த ஊர்களில் துணி துவைத்துக் கொண்டிருந்த சலவை தொழிலாளி பஞ்சம் பிழைக்க வேறு ஊருக்கு இடம் பெயர்ந்து விட்டார். இதனால் ஏழு ஊருக்கும் துணி துவைக்க ஆள் தேவைப்பட்டது. புதிதாக யாரையும் குடியமர்த்த கூடாது என்று வடமலையப்பபிள்ளை உத்தரவிட்டிருந்ததால் துணி துவைக்க ஆள் வேண்டும் என்பதை அவரிடமே முறையிடுவோம் என்று எண்ணிய செம்பரக்குடும்பன், பிள்ளையிடம் சென்று கூறுகிறார். வடமலையப்பபிள்ளை நாஞ்சில் நாட்டிலுள்ள பூதப்பாண்டி ஊரில் வசிக்கும் சிவனாண்டி மகன் நீலவண்ணாரின் தங்கையும் அவரது கணவரையும் வரவழைத்து தங்க வீடும், மூன்று வேளை உணவும் கொடுத்து துவைப்பதற்கான கூலி தினமும் கொடுங்கள் என்று கூறுகிறார்.

அதனை ஏற்றுக்கொண்ட செம்பரக்குடும்பன் மற்றும் அவனது தம்பிகள் ஏழு பேர் பூதப்பாண்டி சென்று நீலவண்ணாரை பார்த்து அழைக்க, அவர் தனது தங்கைக்கும், மைத்துனருக்கும் வேலை இல்லை எனவே அவர்களை அழைத்து செல்லுங்கள் என்று கூறி தங்கை மாடி அம்மாளையும் அவரது கணவர் மாட வண்ணாரையும் அனுப்பி வைத்தார். நாஞ்சில் நாடான கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியிலிருந்து நெல்லை மாவட்டம் சேந்தமங்கலத்திற்கு வந்து மாட வண்ணாரும், மாடி அம்மாளையும் குடியேறினர். உறைவிடமும், உணவுக்கும் செலவில்லாததால் வாங்கும் கூலி சேமிப்பானது, அவர்கள் வாழ்வும் உயர்ந்தது. ஆனால் ஒரே ஒரு குறை அவர்களுக்கு குழந்தையில்லையே என்பது தான்.

அக்கம் பக்கத்தினர் கூறியதன்பேரில் குழந்தை வரம் வேண்டி சங்கரன்கோவிலுக்கு மாதம் தோறும் கடைசி வெள்ளிக்கிழமை தம்பதியர் இருவரும் நடந்தே சென்று ராத்தங்கி வழிபட்டு வந்தனர். இருபத்தி ஒன்றாவது மாதம் வெள்ளிக்கிழமை இரவு பூஜையின் போது மாடி அம்மாள் சங்கர நயினார் சந்நதியில் கண்ணீர் விட்டு அழுதாள். அப்போது அவ்விடம் வந்த துறவி ஒருவர் குழந்தாய், இங்கே வா, சங்கரநாராயணன் அருளால் இன்றிலிருந்து பத்தாவது மாதம் உனக்கு ஆண் பிள்ளை பிறக்கும் அறிவுக்கூர்மையோடு திகழும் அவனுக்கு இருபத்தியோராவது வயதில் கண்டம் ஏற்படும் அதை தாண்டி விட்டால் நூறு வயது மிஞ்சி வாழ்வான் என்றுரைத்து திருநீறு கொடுத்தார்.

அன்றிரவு மாடி அம்மாளின் கனவில், நாராயணன் சிவனிடம் தம்மை நாடி வந்த பக்தனுக்கு குழந்தை வரம் கொடுக்க வேண்டும் என்று கேட்க, அவர்களுக்கு பிள்ளைப்பேறு இல்லாதது இருவரும் போன ஜென்மத்தில் செய்த கர்மவினை என்கிறார் சிவன். அதற்கு நாராயணன், பக்தனை ஏமாற்ற விரும்பவில்லை என்றார். அப்படியானால் நீயே அவர்களுக்கு குழந்தையாக பிறந்து விடு என்று சிவன் கூறுவது போன்று கனவு கண்டார். துறவி சொன்னபடி மாடி அம்மாள் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள். அவனுக்கு வாசமுத்து என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். அறிவுக் கூர்மையோடு வளர்ந்து வந்த வாசமுத்து, தன்னுடைய பதினாறாவது வயதில் பூதப்பாண்டியிலுள்ள தாய் மாமன் வீட்டுக்கு வருகிறார். அப்போது மாமாவோடு வெளியே செல்கிறார். மாமா தொழிலுக்கு போகிறேன். நீ வீட்டில் இரு என்கிறார். என்ன தொழில் நானும் வருகிறேன் என்று வாசமுத்து மாமாவுடன் செல்கிறார்.

அப்பகுதியிலுள்ள ஒரு வீட்டில் கழிப்பு(தீட்டு) கழித்தல் என்ற மாந்திரீகத்தை நீலவண்ணார் செய்கிறார். அதை பார்த்த வாசமுத்துவுக்கு தானும் மாந்திரீகம் படிக்கவேண்டும் என்ற ஆவல் எழுந்தது. இதை தனது தாய்மாமாவிடம் கூற, அவர் எனக்கு இது மட்டும்தான் தெரியும். நீ வசியம், முதலான எல்லா மாந்திரீகத்தையும் நன்கு கற்றுவா என்று கூறி, திருவனந்தபுரத்திலுள்ள தனது நண்பரிடம் அனுப்பி வைக்கிறார்.  மாந்திரீகம் நல்ல முறையில் கற்று வந்த வாசமுத்து, சேந்தமங்கலம் மற்றும் சுற்று வட்டாரத்தில் மாந்திரீகத்தில் நல்ல பெயரோடு திகழ்ந்தான்.

கண் திருஷ்டி கழித்தல், பேய் விரட்டுதல், வியாபார வளர்ச்சிக்கு வழிவகுத்தல், காணாமல் போன பொருட்களை மைபோட்டு பார்த்தல் என பலவிதமான மாந்திரீகத்தில் கை தேர்ந்து விளங்கினான் வாசமுத்து. மருமகனின் வளர்ச்சியை கண்டு பெருமை கொண்ட நீலவண்ணார் தனது மகள் சாத்தி அம்மாளை திருமணம் செய்து வைத்தார். மாந்திரீகத்தில் சிறந்து விளங்கினாலும் மற்ற நேரங்களில் தனது பெற்றோர்களுடன் துணி வெளுப்பதிலும் கவனம் செலுத்தி வந்தான் வாசமுத்து. நற்பெயரோடும், புகழோடும் வாசமுத்து, சாத்தி அம்மாள் தம்பதியர் வாழ்ந்து வந்தனர். அவர்கள் வாழ்வில் புயல் வீச துவங்கியது.

- சு.இளம் கலைமாறன் படங்கள் உதவி: வி.மகேஷ்

(தொடரும்)

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kabul_terror_43

    காபுலில் சொகுசு ஓட்டலுக்குள் புகுந்து தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு : பலி எண்ணிக்கை 43 ஆக உயர்வு

  • Christiansmanila

    மணிலாவில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புனித நீர்தெளிப்பு திருவிழா : ஏராளமானோர் பங்கேற்பு

  • 22-01-2018

    22-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-01-2018

    21-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • Hungarystudentsstruggle

    ஹங்கேரியில் கல்வி தரத்தை உயர்த்த கோரி ஆயிரக்கணக்கணக்கான மாணவர்கள் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்