SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆவுடையார் கோவிலில் அன்னபூரணி

2017-11-04@ 09:52:33

தேனினும் இனிய திருவாசகத்தை அருளிச் செய்த மாணிக்கவாசகரைச் சிவபெருமான் ஆட்கொண்டு அருள்பாலித்த திருத்தலம், திருப்பெருந்துறையாகும். இந்நாளில் அது ஆவுடையார் கோயில் என்று அழைக்கப்படுகிறது. இக்கோயில் அமைப்பிலும் வழிபாட்டு முறையிலும் தனக்கெனப் பல தனித்தன்மைகளைக் கொண்டதாகும். இங்கு கருவறையில் அருவ வடிவில் சிவபெருமான் எழுந்தருளியிருந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றார். அவரை ஞானிகள் மட்டுமே கண்ணாறக் காண முடியும். நாம் அவர் எழுந்தருளியிருக்கும் பீடத்தை மட்டுமே கண்டு வணங்க முடியும். அவரைச் சுற்றி இருபத்தேழு நட்சத்திரங்களும், படைத்தல், காத்தல், அழித்தல் தொழில்களைச் செய்து வரும் மும்மூர்த்திகளும் விளக்குகளில் தீப ஒளியாக எழுந்தருளி வைக்கப்பட்டுள்ளனர்.

இத்தலத்தில் கருவறைக்கு முன்பாக அர்த்த மண்டபமும் அதற்கும் முன்பாக மகா மண்டபமும் உள்ளன. கருவறையை ஆனந்த சத்சபை என்றும், அர்த்த மண்டபத்தை சிற்சபை என்றும் மகாமண்டபத்தை சத்சபை என்றும் அழைக்கின்றனர். மகாமண்டபமான சத்சபையின் நடுவில் நான்கு கால்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் இடையே ஒரு கல்லாலான மேடை அமைந்துள்ளது. ஏறத்தாழ பத்தடிக்குப் பத்தடி பரப்பும் ஒரு அடி உயரமும் கொண்டதாக இம்மேடை அமைந்துள்ளது. இதில் அன்னபூரணியாக பராசக்தி அருவ வடிவில் எழுந்தருளியுள்ளாள். இந்த மேடையைப் படைகல் என்கின்றனர். தினமும் பூஜையின்போது இந்தக் கல்லின் மீது புழுங்கலரிசியை வடித்துக் கொண்டு வந்து அப்படியே கருவறையில் கொட்டி ஆவி பறக்க சுவாமிக்கு நிவேதிக்கின்றனர். முன்னாளில் படைகல் முழுவதுமாக சோற்றைக் குவித்து நிவேதிக்கும் வழக்கம் இருந்ததாகக் கூறுகின்றனர்.

இங்கு இந்த அன்னமே (சோறே) அன்னபூரணியாகக் கொள்ளப்படுகிறது. அந்தச் சோற்றுடன் பாகற்காய் போட்டு வைத்த புளிக்குழம்பையும் சேர்த்தே நிவேதிக்கின்றனர். பூஜை முடிந்ததும், சோற்றைக் குழம்புடன் கலந்து பிசைந்து நிவேதனமாக அளிக்கின்றனர். இதை உண்பதால் சக்தி வளரும். நோய்கள் அணுகாது என்று நம்புகின்றனர். இப்படி அன்னபூரணியைப் படைகல் வடிவில் எழுந்தருளச் செய்திருப்பதும், அதன்மீது சோற்றைப் பரப்பி அருவ நிலையில் விளங்கும் பெருமானுக்கு நிவேதிப்பதும், அதைப் பாகற்காய் புளிக் குழம்புடன் அளிப்பதும் வேறெங்கும் காண முடியாத அதிசயக் காட்சியாகும்.
இப்படி கருவறைக்கு முன்பாக படைகல் வடிவில் எழுந்திருக்கும் அம்பிகை அன்னபூரணி, அம்பிகை சந்நதிக்கு முன்பாகவும், பிராகாரத்தில் தென்மேற்கு முனையில் விநாயகருடனும் அழகிய திருமேனியுடன் காட்சி தருகிறாள்.

இங்கு கருவறையான ஆனந்த சபைக்கு வடமேற்கு முனையில் அம்பிகை சந்நதி அமைந்துள்ளது. உயர்த்திக் கட்டப்பட்டுள்ள மேடை மீது சந்நதி அமைந்துள்ளது. சந்நதிக்குள் அம்பிகையின் திருப்பாதங்கள் (பாதக் குறடுகள்) எழுந்தருளி வைக்கப்பட்டுள்ளன. அம்பிகையும், இங்கு அருவ நிலையிலேயே வழிபடப்படுகிறாள். அம்பிகையின் பாதச் சுவடுகளை ஒரு மூவட்டத் தாமரைக்குள் அமைந்த யந்திரத்தின் மீது எழுந்தருளி வைத்துள்ளனர். அம்பிகையின் பெயர் சிவயோக நாயகி என்பதாகும். அம்பிகைக்கு நேர் எதிரில் வாயில் அமைக்கப்படவில்லை. பெரிய ஜன்னலை அமைத்துள்ளனர். ஜன்னலின் வழியாகவே அவளைத் தரிசிக்க வேண்டும். இந்த ஜன்னலின் முன்பாக அன்னபூரணியின் அழகிய திருவுருவம் அமைக்கப்பட்டுள்ளது. சந்நதிக்குள் பாதத்தை மட்டும் காட்டி அருவ நிலையில் சிவயோகத்தில் வீற்றிருக்கும் அம்பிகையே இங்கு ஜன்னலின் முன்புறம் அன்பர்கள் கண்ணாறக் கண்டு மகிழ அன்னபூரணியாகக் காட்சி தருகிறாள்.

இவளுக்கு இருபுறங்களிலும் அமைந்த மாடங்களில் வாணி, ரமா என்னும் துவார பாலகியர்கள் உலோகத் திருமேனிகளாக அமைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அருகில் சுவரில் காளியும் துர்க்கையும் புடைப்புச் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளனர். விநாயகரும் சுப்ரமணியரும் புடைப்புச் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளனர். ஜன்னலின் முன்புறம் அமைந்த இந்த அன்னபூரணியின் வடிவம் அழகாக இருக்கிறது. இவளுக்குச் சிறப்பு நாட்களில் வழிபாடு செய்யப்படுகிறது. அடுத்ததான அன்னபூரணி இரண்டாம் பிராகாரத்தின் தென்மேற்கு முனையில்  விநாயகரோடு வீற்றிருப்பதைக் காண்கிறோம். இவளுடைய பீடத்தில் பெரிய அன்னபாத்திரம் வைக்கப்பட்டுள்ளது. தென்னகத்தில் அன்னதானச் சாலைகளில் விநாயகரை எழுந்தருளச் செய்வது வழக்கம். இவரை அன்னதான விநாயகர் என்பர். இங்கு அன்னதான விநாயகர் அன்னபூரணியுடன் வீற்றிருப்பது அரிய காட்சியாக இருக்கிறது.

பிராகாரத்தில் விநாயகருடன் ஒரே ஆசனத்தில் அமர்ந்தவாறும், அம்பிகை சந்நதியின் முன்புறம் அமைந்த ஜன்னலின் முன்புறம் அழகிய சுந்தரியாகவும், கருவறைக்கு முன்பாகப் பெரிய படைகல்லின் வடிவமாகவும் அன்னபூரணியைத் திருப்பெருந்துறையில் கண்டு மகிழ்கிறோம். இத்தகைய அமைப்பு வேறெங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. மேலும், ஆவுடையார்கோவில் எல்லையில் ஒரு திறந்தவெளி சிற்றாலயம் உள்ளது. இங்கு சதுரத்தின் மீது அமைந்த வட்டமான பலிபீடம் அமைந்துள்ளது. அதன் பின்புறம் புடைப்புச் சிற்பமாக அன்னபூரணியின் வடிவம் காட்டப்பட்டுள்ளது. அன்னை சுகாசனத்தில் வீற்றிருக்கின்றார். பீடத்தில் அன்ன பாத்திரம் இருக்கிறது. அவள் வலது கையில் ஏந்தியுள்ள கரண்டியில் பாத்திரத்திலுள்ள உணவை எடுக்கும் கோலத்தில் இருக்கிறாள்.

இடது கையை இடது முழங்காலின் மீது நட்டிக் கொண்டிருக்கிறார். தலை மீது முடியை எடுத்துக் கட்டியுள்ளாள். எஞ்சிய முடிகள் இருபுறமும் தாழ்ந்துள்ளன. இது அவள் தவக்கோலத்தில் வீற்றிருப்பதைக் குறிக்கிறது. அவள் வீற்றிருக்கும் இடம் காம கோட்டம் (அறச்சாலை) என்பதைக் காட்ட சிறிய மண்டபத்தில் வீற்றிருப்பது போல் அமைத்துள்ளனர். அந்த மண்டபம் புடைப்புச் சிற்பமாகக் காட்டப்பட்டுள்ளது. மண்டபத்தின் மீது ஒரு மரம் காட்டப்பட்டுள்ளது. சிலர் மாமரமென்றும், சிலர் கற்பக மரமென்றும் கூறுகின்றனர். சிவபெருமான் குருத்த மரமாக இருக்க, அதன் கீழ் அன்னபூரணியாக வீற்றிருந்து சிவசக்தியர் அருள்பாலிப்பதையே இந்தச் சிற்பம் குறிப்பதாகவும் கூறுகின்றனர்.

- பூசை அருணவசந்தன்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 22-10-2018

  22-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 21-10-2018

  21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • dussehraa_11

  நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

 • 20-10-2018

  20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • tirupathivavacha

  திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்