SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் எலவனாசூர்கோட்டை ஸ்ரீபிரஹன்நாயகி அர்த்தநாரீஸ்வரர்

2017-11-03@ 11:53:46

விழுப்புரம் மாவட்டம் எலவனாசூர்கோட்டையில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பழமையான ஸ்ரீபிரஹன்நாயகி சமேத அர்த்தநாரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. முதலாம் ராஜராஜன் காலத்தை சேர்ந்ததாக கல்வெட்டுகள் தெரிவிக்கிறது. இறைவாசநல்லூர் என்பதே காலப்போக்கில் மாறி எலவனாசூர் என்றும் தற்போது எலவனாசூர்கோட்டை எனவும் அழைக்கப்படுகிறது. சோழ, பாண்டிய, விஜயநகர மன்னர்கள், சிற்றரசர்கள் பலரும் கோயில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்துள்ளனர். இந்த கோயில் மாடக்கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. யானை ஏற முடியாத மேடை பகுதியை அடிப்படையாக கொண்டு கட்டப்பட்டுள்ளது.

கோயிலின் முகப்பு பகுதியில் உள்ள ராஜகோபுரம் ஆறு அடுக்குகளை கொண்டது. அதன் அருகில் நூறுகால் மண்டபமும், கட்டுமான பணிகள் அனைத்தும் கீழ் பகுதியில் கருங்கல் கொண்டும், மேல் பகுதி செங்கல் கொண்டும் கட்டப்பட்டுள்ளது. சிவன்கோயில்கள் மூலவர்  கிழக்கு நோக்கியபடியே இருக்கும். ஆனால் எலவனாசூர்கோட்டை அர்த்தநாரீஸ்வரர் சுயம்பு லிங்கவடிவில் மேற்கு நோக்கி அருள் பாலிக்கிறார். கருவறையின் அருகில் 3 நந்தி சிலைகளும், சைவ குறவர் நால்வரும் பீடத்தின் மேல் பகுதியில் அமைந்துள்ளது. மேல் மாடத்தில் இரண்டாவது சுற்றில் தண்டபாணிசுவாமி சிலை உள்ளது.

சுயம்பு லிங்கமாக காட்சி அளிக்கும் சிவபெருமான் மூலவரின் அடிப்பகுதியில் உள்ள பீடம் வட்டமாகவும் இல்லாமல், சதுரமாக உள்ளது. மூன்றாவது சுற்றில் நால்வர் சன்னதி, மகாகணபதி, வல்லப கணபதி, ஆத்மலிங்கம் ஆகியவை அடுத்தடுத்து அமைந்துள்ளது.  சோமஸ்கந்தர் சன்னதியும், ஸ்ரீமுருகன் சன்னதி, அகத்தியலிங்கம், இரணலிங்கேசுவரர், காசிவிஸ்வநாதர், விசாலாட்சி, நடராஜர் சன்னதிகள் உள்ளது. மூலவருக்கு தென் மேற்கு பகுதியில் தனி கோயிலாக கிழக்கு பார்த்தபடி அம்பாள் ஸ்ரீபிரஹன்நாயகி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். ராஜராஜன் காலத்து கல்வெட்டு ஒன்றில் அமரபுயங்கரதேவர், ஊர்பாகங்கொண்டருளிய மகாதேவர், சிகரசிகாமணிநாதர், சிகரமணிசுடர், அரசவனத்திறை, மங்கையொருபாகன், சோதிலிங்கநாதன், அரசவனத்தான், அர்த்தநாரீஸ்வரர் என்றும் கல்வெட்டுகளில் கூறப்படுகிறது.

கோயிலின் ஸ்தல விருட்சமாக பலாமரம் கடந்த காலங்களில் இருந்துள்ளது. தற்போது இல்லை. தற்போது அர்த்தநாரீஸ்வரருக்கு பிரதோஷபூஜைகளும், தண்டபாணிசுவாமிக்கு கிருத்திகைபூஜையும், பிரஹன்நாயகிக்கு தைமாதத்தில் முதல் ஞாயிறு அன்று சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் மகாதீபாராதனைகள் நடந்து வருகிறது. பிரம்மஹத்தி தோஷம் மற்றும் திருமணத்தடை உள்ளவர்கள் இந்த கோயிலின் மாடத்தில் உள்ள சுயம்பு வடிவமாக காட்சி அளிக்கும் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரரை வழிபட்டால் அனைத்து தோஷங்களும் நீங்கும். உடனடியாக திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் நடைபெறும் என கூறப்படுகிறது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலில் சுபமுகூர்த்த தினங்களில் எலவனாசூர்கோட்டை மற்றும் சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் குலதெய்வமாக வழிபட்டு திருமணம், காது குத்துதல் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளை செய்து வருகின்றனர்.

சேந்தமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு ஆட்சி புரிந்து வந்த கோப்பெருஞ்சிங்க காடவராய மன்னர் காலத்தில் இங்குள்ள 100 கால் மண்டபம் கட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதில் அரசவை நிகழ்ச்சிகள் மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகளும் நடந்துள்ளதாக தெரிகிறது. மாமல்லபுரம், காஞ்சிபுரம், மதுரை, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள தொன்மையான வரலாற்று சிறப்புகளை போல் எலவனாசூர்கோட்டையில் உள்ள மாடக்கோயிலான ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் கோயிலும் உள்ளதாக கல்வெட்டுகள் தெரிவிக்கிறது.

வெற்றி விநாயகர்

வல்லபை கணபதி மக்களை துன்புறுத்தி வந்த வல்லபை என்ற அரக்கி  மக்களை கொடுமை படுத்தி வந்ததாகவும், அப்போது அச்சத்தில் இருந்த மக்கள் கணபதியிடம் சென்று முறையிட்ட போது அரக்கர்களை கொட்டி தீர்த்த வல்லபையை தனது தும்பிக்கையால் மக்களை காத்தார் என்பது ஐதீகமாக உள்ளது. இதனால் இந்த வல்லபை கணபதியின் ஒரு புறத்தில் அரக்கியை அடக்கிய காட்சியுடன் இருக்கும் இந்த வல்லப கணபதியை வழிபட்டால் எதிரிகளை எதிர்கொள்ளும் சக்தியும், ஆற்றலும் கிடைக்கும்.நவகிரக சிலைகளில் சனீஸ்வர பகவான் பக்தர்களுக்கு காட்சி அளித்தாலும் இந்த கோயில் வளாகத்தின் பின்பகுதியில் உள்ள மண்டபத்தில் காலபைரவர், சூரியபகவான், வரதராஜபெருமாள், சனீஸ்வரபகவான் என தனித்தனி சிலையாக இருந்து காட்சி அளிக்கிறது. இதே போல் வலஞ்சுழி வினாயகர் சிலை ஒன்றும் பக்தர்களுக்கு தெற்கு நோக்கி காட்சி அளிக்கிறார்.

மேற்கு நோக்கிய நந்தி

திருக்கோவிலூரை தலைமையிடமாக கொண்டு ஆட்சி புரிந்து வந்த தெய்வீகராஜன் சோழமண்டல படையுடன் சண்டையிடுவதற்காக வந்த போது, எலவனாசூர்கோட்டையில்  அதிக அளவு போர்வீரர்கள் இருப்பதை கண்டு அஞ்சிய தெய்வீகராஜன் மாடக்கோயிலுக்கு சென்று அங்குள்ள சிவபெருமானை வழிபட்டு தனது இக்கட்டான சூழ்நிலையை சொல்லும் போது சிவபெருமான், அங்கிருந்த நந்தியிடம் சோழமண்டல படை எங்கே? வருகிறது என பார்க்கும்படி கட்டளையிட்டபோது திரும்பி பார்த்த நந்தி அப்படியே இருப்பதாக கூறப்படுகிறது.

குருபகவான் தட்சணாமூர்த்தி

குருபகவான் தட்சணாமூர்த்தி இந்த தலத்தில் அகலமாக விரிந்த ஜடா மண்டலத்துடன், புன்னகை முகத்துடன், சரிந்த ஆடையும், விரிந்த மார்பில் ஆபரணங்களுடன் இருந்து காட்சி அளிக்கிறார். இது ஒரு அரிய காட்சியாக கூறப்படுகிறது. இது கி.பி.1070-1289 காலத்தை சேர்ந்த சிலையாக இருக்கலாம் என கல்வெட்டு ஆதாரம் கூறுகிறது.

மாடக்கோயில் சிறப்பு அம்சம்

தமிழகத்தில் உள்ள சிவன் கோயில்களில் மாடக்கோயில் என்பது சுமார் 8 கோயில்கள் மட்டுமே உள்ளதாக தெரிகிறது. கூடலூர் ஆளப்பிறந்தான் இராச கம்பீரகாடவராயன் என்ற சிற்றரசன் என மாடக்கோயில் வடிவமையிலை வடிவமைத்தாக கூறப்படுகிறது. ஸ்ரீபிரஹன்நாயகிக்கு தனிக்கோயில் உள்ளது. மூலவர் சன்னதி மேற்கு நோக்கி இருக்கும், அவரை பார்ப்பது போல் அம்பாள் கிழக்கு நோக்கியபடி அமைந்துள்ளது. மேலும் அம்மன் சன்னதியில் மான் வாகனத்தில் சம்ஹார பிரயோகதுர்கை காட்சி அளிக்கிறார். இந்த ஒரு காட்சி அரிய காட்சியாக இந்த கோயிலில் உள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 22-10-2018

  22-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 21-10-2018

  21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • dussehraa_11

  நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

 • 20-10-2018

  20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • tirupathivavacha

  திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்