SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புரியாத புதிராக நீடிக்கும் சீரடி சாய்பாபாவின் அவதாரம்

2017-11-02@ 10:43:40

சீரடி சாய்பாபா, மனித உருவில் வந்த கண்கண்ட தெய்வம் என்பதை எல்லாரும் கருத்து மாறாமல், ஒருமித்த உணர்வுடன் ஒத்துக் கொள்கிறார்கள். 16 வயதுக்குப் பிறகே பாபாவை மக்கள் அறிந்து கொள்ள தொடங்கினார்கள். அதற்கு முன்பு பாபா எப்படி வாழ்ந்தார் என்பதற்கு நிறைய தகவல்கள் இல்லை. இந்து குடும்பத்தில் பிறந்து, இஸ்லாமிய பக்கீரிடம் வளர்ந்து, வேங்குசா என்ற மகானை குருவாக ஏற்று அவர் அரிய சக்திகள் பெற்றார் என்று பாபாவின் தோற்றம் பற்றி எல்லா நூல்களிலும் பொதுவான குறிப்புகள் உள்ளன. வேங்குசாவை குருவாக ஏற்று அவரோடு 12 ஆண்டுகள் வாழ்ந்ததை பாபாவே உறுதிப்படுத்தியுள்ளார்.

அந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு 4 ஆண்டுகள் அவர் முஸ்லிம் பக்கீரிடம் வாழ்ந்தார் என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆனால் அவர் இந்த பூமியில் தோன்றிய அவதார நிகழ்வு மட்டும் புரியாத புதிராக உள்ளது. பாபா பக்தர்களால் புனித நூலாக கருதப்படும் “சாயி சத் சரிதம்” நூலிலும், பாபாவின் தோற்றம் பற்றிய முழு விபரம் இல்லை.

பாத்ரி கிராமத்தில் இந்து குடும்பத்தில் பாபா பிறந்தார் என்ற ஒரே ஒரு வரி மட்டுமே திரும்ப திரும்ப சொல்லப்படுகிறது. அதில் ஒரு தெளிவு ஏற்படும் வகையில், 1990-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ந்தேதி புட்டபர்த்தி சாய்பாபா உரையாற்றிய போது சீரடி சாய்பாபா அவதாரம் பற்றிய ஒரு தகவலை வெளியிட்டார்.

மராட்டிய மாநிலம் பாத்ரி கிராமத்தில் கங்கா பாவத்யா - தேவகிரியம்மா என்ற தம்பதி வசித்து வந்தனர். தீவிர சிவ பக்தர்களான அவர்களுக்கு திருமணமாகி நீண்ட நாட்களாகியும் குழந்தை இல்லை. ஒரு நாள் இரவு பலத்த மழை பெய்ததால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடியது. படகோட்டியான கங்கா பாவத்யா, தன் படகை பத்திரப்படுத்த ஆற்றங்கரைக்கு சென்று விட்டார். வீட்டில் தேவகிரியம்மா மட்டும் இருந்தார்.

அப்போது, வயதான ஒருவர் வந்து கதவை தட்டினார். தேவகிரியம்மா கதவைத் திறந்து “என்ன வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு அந்த முதியவர், “மழை அதிகம் பெய்வதால் இன்றிரவு மட்டும் இங்கு தங்கிக் கொள்கிறேன்” என்றார். “சரி” என்று கூறிய தேவகிரியம்மா திண்ணையில் அவரை படுத்துக் கொள்ள அனுமதித்தார்.

சிறிது நேரம் கழித்து மீண்டும் கதவைத்தட்டி தேவகிரியம்மாவை எழுப்பிய அந்த முதியவர், “பசிக்கிறது, சாப்பிட ஏதாவது தாருங்கள்” என்றார். உடனே அவருக்கு தேவகிரியம்மா சாப்பாடு கொடுத்தார். சிறிது நேரம் கழித்து மீண்டும் கதவைத் தட்டிய அந்த முதியவர், “எனக்கு கால்கள் வலிக்கிறது. சற்று பிடித்து விடு” என்றார். இதைக் கேட்டதும் தேவகிரியம்மா அதிர்ச்சி அடைந்தார்.

பணம் வாங்கிக் கொண்டு யாராவது அவருக்கு கால் பிடித்து விட வருவார்களா என்று தேடிப்பார்த்தார். யாரும் கிடைக்கவில்லை. அடுத்து என்ன செய்வது என்ற குழப்பத்தில் தேவகிரியம்மா தவித்துக் கொண்டிருந்த போது, மீண்டும் கதவுத் தட்டப்பட்டது. இந்த தடவை ஒரு பெண் வெளியில் நின்று கொண்டிருந்தார். அவள், “இந்த முதியவருக்கு நான் பணிவிடை செய்யட்டுமா?” என்றாள்.
மகிழ்ச்சி அடைந்த தேவகிரியம்மா, “சரி செய்யுங்கள்” என்று கூறி பணம் கொடுத்து விட்டு, வீட்டுக்குள் சென்று கதவைப் பூட்டிக் கொண்டார்.

வெளியில் இருந்த முதியவரும், பெண்ணும் உண்மையில் பரமசிவனும், பார்வதியும் ஆவார்கள். அவர்கள் இருவரும் தேவகிரியம்மாவின் குறையை தீர்க்க முடிவு செய்தனர். அவர்கள் மீண்டும் கதவைத் தட்டினார்கள். கதவைத் திறந்த தேவகிரியம்மாவுக்கு தன் கண்ணையே நம்பமுடியவில்லை.
வெளியில் பரமசிவனும், பார்வதியும் காட்சி கொடுத்துக் கொண்டிருந்தனர். மகிழ்ச்சியின் உச்சத்துக்கு சென்ற தேவகிரியம்மா இறைவன், இறைவி முன்பு விழுந்து வணங்கினார்.

அவரை ஆசீர்வதித்த இறைவன், “உனக்கு மூன்று குழந்தைகள் பிறக்கும். மூன்றாவது குழந்தையாக நானே உன் வயிற்றில் பிறப்பேன்” என்று ஆசி கூறி மறைந்தனர். தேவகிரி யம்மாவுக்கு நடப்பது கனவு போல இருந்தது. கங்கா பாவத்யா வீடு திரும்பியதும் நடந்ததை கூறினார். ஆனால் கங்கா பாவத்யா அதை நம்பவில்லை.

சில தினங்களில் தேவகிரியம்மா கர்ப்பமடைந்தார். முதலில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ஓராண்டு கழித்து பெண் குழந்தை ஒன்றை தேவகிரியம்மா பெற்றெடுத்தார். மூன்றாவது முறை தேவகிரியம்மா கர்ப்பம் தரித்த போது கங்கா பாவத்யாவுக்கு ஈசன் மீது நம்பிக்கை ஏற்பட்டது. தேவகிரியம்மாவுக்கு காட்சி கொடுத்த ஈசன் தனக்கும் காட்சி தர வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் அவர் வீட்டை விட்டு வெளியேறினார். தேவகிரியம்மா அவரைப்பின் தொடர்ந்தார்.

தம்பதியர் இருவரும் காடு - மேடுகளில் அலைந்து திரிந்தனர். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தேவகிரியம்மாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் அதை கண்டு கொள்ளாமல் கங்கா பாவத்யா சென்று கொண்டிருந்தார். இதனால் தேவகிரியம்மா அந்த குழந்தையை அரசமர இலைகளில் சுற்றி காட்டுக்குள்ளேயே போட்டு விட்டு கணவரை பின் தொடர்ந்து சென்று விட்டார்.

முஸ்லிம் பக்கீர் ஒருவர் அந்த குழந்தையை கண்டெடுத்து மன்வாத் கிராமத்தில் உள்ள தன் வீட்டுக்கு கொண்டு சென்றார். அவர் பாலபாபாவை 4 ஆண்டுகள் வளர்த்தார். பிறகு அவர் அந்த சிறுவனை வேங்குசாவிடம் ஒப்படைத்தார். அந்த குழந்தைதான் சீரடி சாய்பாபா! இவ்வாறு புட்டபர்த்தி சாய்பாபா கூறிய நிகழ்வு சில நூல்களில் உள்ளது.

இதை சிலர் ஏற்கிறார்கள். சிலர் மறுக்கிறார்கள். சாய்பாபாவின் அவதார மூலத்தை கண்டுபிடித்து விட அன்று தொடங்கி இன்று வரை எத்தனையோ பேர் முயன்று பார்த்து விட்டனர். யாராலும் ஒரு துகள் அளவு தகவலை கூட பெற முடியவில்லை.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-10-2018

  24-10-18 இன்றைய சிறப்பு படங்கள்

 • FoamFightScotland

  முதலாம் ஆண்டு மாணவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்ற ஸ்காட்லாந்து பல்கலைக்கழம்: புகைப்படங்கள்

 • SALTMarchRashtrapti

  ராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் உருவ சிலைகள்: மாணவர்கள் கண்டுகளிப்பு

 • NagoroJapanVillage

  ஜப்பானில் உள்ள தீவில் வெறிச்சோடிய கிராமத்தை பொம்மைகளால் உயிரூட்டிய பெண்: குவியும் சுற்றுலா பயணிகள்

 • FallFoilageWorld

  உலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்