SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரதோஷ நாயகர்!

2017-11-01@ 07:28:44

பிரதோஷ காலங்களில் கோயிற் பிராகாரத்தில் வலம் வருவதற்காக அமைந்துள்ள உற்சவ மூர்த்தியே பிரதோஷ நாயகர் என்று அழைக்கப்படுகின்றார். இவர் அளவால் சிறிய மூர்த்தியாவார். ஏறத்தாழ ஒன்றரை அடி உயரத்திற்கு உட்பட்டதாகவே இவர் வடிவம் அமைக்கப்பட வேண்டும் என்பது மரபாகும். இந்த மூர்த்தி சந்திரசேகரரைப் போலவே தோற்றமுடையவர். பின்னிரு கரங்களில் மான் மழுவும், முன்னிரு கைகளில் அபய, வரத முத்திரை தாங்கியவராய் நின்ற நிலையில் விளங்குகின்றார். தலையில் ஜடா மகுடம் விளங்க அதில் வெண்பிறை, சங்கை, ஊமத்தை மலர், கொக்கிறகு ஆகியவற்றைத் தரித்தவராய் மூன்று கண்ணும் கருத்தகண்டமுடையவராய் எல்லையில்லா மகிழ்ச்சி பொங்கும் முகத்துடன் அமைந்துள்ளார். அவரது இடப்புறத்தில் அம்பிகை தனது வலக்கரத்தில் நீலோத்பல மலர் ஏந்தி இடது கரத்தைத் தொங்கவிட்ட நிலையில் நின்றவாறு காட்சியளிக்கின்றாள்.

பொதுவாக இருவரையும் தனித்தனியே ஒரே பீடத்தில் நின்றவாறே அமைப்பதுதான் வழக்கம் என்றாலும் காலப்போக்கில் கலைஞர்கள் சில மாறுதல்களை ஆகம அடிப்படையில் செய்யத் தொடங்கினர். சிவன் விடமுண்ண முற்பட்டதைக் கண்டு தேவி அஞ்சினாள். அவளுடைய பயத்தைப் போக்கும் வகையில் அவர் அவளை அணைத்துக் கொண்டார். இந்த அடிப்படையில் முதல் நிலையில் இறைவன் அம்பிகையை தனது இடக்கரத்தால் அணைத்துக்கொண்டிருப்பது போன்று பிரதோஷ நாயகர் உருவம் அமைக்கப் பெற்றது. இந்த மூர்த்தியை உமா ஆலிங்கன மூர்த்தியென்றும், அணைத்தெழுந்த நாதர் என்றும் அழைக்கின்றனர். இரண்டாவது நிலையில் இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்த நிலையில் எழுந்தருள்கின்றனர். இந்த மூர்த்தியை பரஸ்பர ஆலிங்கன மூர்த்தி என அழைக்கின்றனர்.

சென்னை பெசன்ட் நகர் ரத்தினகிரீஸ்வரர் ஆலயத்தில் உள்ள பிரதோஷ நாயகர் ‘‘உமா ஆலிங்கன மூர்த்தியாகவும் சென்னையை அடுத்த மண்ணிவாக்கம் எனும் ஊரில் உள்ள மூர்த்தி  பரஸ்பர லிங்கனமூர்த்தி’’யாகவும் விளங்குவதைக் காணலாம். பிரதோஷ தினத்தில் மாலையில் இந்தப்பிரதோஷ மூர்த்தியை இடப வாகனத்தில் வைத்து அலங்கரித்து கோயிலின் உட்பிராகாரத்தில் வலம் வருகின்றனர். திரயோதசி நாளில் பிரதோஷ காலத்திற்கு மூன்றே முக்கால் நாழிகைக்கு முன்னதாகவே மூலவருக்கும் உற்சவமூர்த்திக்கும் ஸ்ரீருத்ரம் முதலான மந்திரங்களால் பலவகைப் பொருட்களைக் கொண்டு திருமுழுக்காட்ட வேண்டும். தமிழில் பூசிப்பவர்கள் ‘‘நீலகண்டப் பதிகம்’’, திருக்கடவூர். திருப்பாசூர் பதிகங்கள் முதலியவற்றைப் பாராயணம் செய்யலாம். பின்பு, மூலவரை அலங்கரித்து தூப, தீப நிவேதனங்களால் ஆராதிக்க வேண்டும். பின்னர் உலாத் திருமேனியை இடப வாகனத்தில் வைத்து மலர்களால் அலங்கரித்து உட்பிராகாரத்தில் மும்முறை வலம் வரச்செய்ய வேண்டும்.

இவ்வாறு வலம் வரும் போது ஒவ்வோரு முறையும் கருவறையை நோக்கி அமைந்துள்ள பிரதான நந்தி (கொடி மரத்தின் அருகில் உள்ளவர்)யின் அருகில் சுவாமியை வடக்கு நோக்கியவாறு நிறுத்தி உலாத்திருமேனிக்கும், நந்திக்கும், மூலவருக்கும் ஒரேநேரத்தில் தீப ஆராதனை செய்ய வேண்டும். மூன்றாவது சுற்று வரும்போது மட்டும் ஈசான (வடகிழக்கு) திசையில் பெருமானை தெற்கு நோக்கியவாறு நிறுத்தி சிறப்பு வழிபாடு நடத்த வேண்டும். இந்த ஈசான திக்கில் நடைபெறும் வழிபாட்டினைக் காண்பது சிறந்த புண்ணியமாகக் கருதப்படுகின்றது. சிவபெருமான் விஷத்தை அருந்தி மயங்கியது போலக் கிடந்தபோது எப்போதும் மகிழ்ச்சியில் திளைத்து விளையாடி மகிழும் அவருடைய கண்களான பூதக்கணங்கள் தாமும் மயங்கி வீழ்ந்து வருந்தின.

பின்னர் அவர் திருநடனம் புரிந்தபோது தாமும்  மகிழ்ந்து தாமும் விளையாட்டு நடனங்களை நிகழ்த்தின. இவை ‘‘பூத நிருத்தம்’’ எனப்படும். இதனால் பூதர்கள் வாழும் ஈசான திசையில் பிரதோஷ வேளையில் சுவாமியின் முன்பு பூத நிருத்தம் நடத்தப்படுகின்றது. இதற்கான வாத்திய அமைப்பு ராகம், தானம் ஆகியன உள்ளன. பின்னர், உலாத்திருமேனிக்கு உரிய உபசாரங்களைச் செய்து அவருடைய இருப்பிடத்தில் சேர்க்க வேண்டும். பிரதோஷ நாயகருக்கு வில்வ மாலைகளை அணிவிப்பது பெரும்புண்ணியம் தருவதாகும். பன்னீர் அபிஷேகம் செய்தல், வடைகளை நிவேதனம் செய்தல் ஆகியனவும் சிறப்புடையதாகும்.

பூசை. அருணவசந்தன் 

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • Dinakaran_Education_Expo

  சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது

 • mald123

  உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!

 • Marijuana420Festival

  போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்

 • milkcenterchennai

  சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்

 • 21-04-2018

  21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்