SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மனக்கவலை போக்கிடுவார் மருதப்பசாமி

2017-10-28@ 10:12:19

நம்ம ஊரு சாமிகள் - சொக்கநாச்சியாள்புரம், சங்கரன்கோவில்.

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள வளமிக்க கிராமம் பன்னீர் ஊத்து. இங்கு சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து வந்தார் முத்துசேர்வை. இவரது மனைவி மாடத்தி அம்மாள். இவர்களுக்கு அருணாசல சேர்வை, பெருமாள் சேர்வை, மருதப்ப சேர்வை, சிலம்பு அம்மாள், மாடத்தி ஆகிய ஐந்து குழந்தைகள். முத்து சேர்வையின் மூன்றாவது மகன் மருதப்ப சேர்வை வில்வித்தை, வாள்வீச்சு, சிலம்பு முதலான வீர விளையாட்டுகளில் சிறந்து விளங்கினார். வளர்த்தியான உருவமும், நேர்த்தியானதேகமும் கொண்டிருந்தார். முத்துசேர்வை, தான் சொக்க நாச்சியாள்புரத்தில் வாங்கிய நிலத்தில் நீர்வளம் அதிகமாக இருந்ததால், அங்கேயே வீடு கட்டி குடும்பத்துடன் குடியேறினார்.

வாலிப வயதை அடைந்து நின்ற மருதப்ப சேர்வை வம்பு, சேட்டைகளில் ஈடுபட்டு வந்ததால் முத்து சேர்வை மகன் மருதப்ப சேர்வைக்கு திருமணம் முடித்து வைத்தால்தான் மருதப்ப சேர்வைக்கு குடும்ப பொறுப்பு வரும் என்று எண்ணி, சொக்கநாச்சியாள் புரத்திற்கு மேற்கே மூவிருந்தாளி என்ற ஊரைச் சேர்ந்த வௌ்ளையன் கரையாளர் மகள் உடையம்மாளை திருமணம் செய்து வைத்தனர். மருதப்பசேர்வை உடையம்மாளுக்கு திருமணமாகி வெள்ளையன் சேர்வை, வீரபுத்திரன் சேர்வை, அண்ணாமலை சேர்வை, நிறைஞ்சம்மாள், முத்து சேர்வை, மாடத்தியம்மாள், சீனிச்சேர்வை ஆகிய ஏழு குழந்தைகள்.

செல்வநிலையில் வளர்ந்து வந்த மருதப்பசேர்வை, ஆடு, மாடு வளர்ப்பு, விவசாயம் ஆகியவற்றின் மூலம் வருமானம் பார்த்து வந்தாலும், கூடுதலாக அக்கம் பக்கத்து கிராமங்களில் கொடுக்கல், வாங்கல் அதாவது வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்தார். இரவில் தனது மற்றும் உறவினர், தோட்டங்களில் காவல் காக்கும் பணியும் செய்து வந்தார். சொக்கநாச்சியாள்புரத்திற்கு அருகேயுள்ள ஊர் தடியம்பட்டி இங்கு மிகுதியாக வாழ்ந்து வந்த ஒரு பிரிவினர், அந்தணர்களை தவிர மற்ற இனத்தவர்கள் தங்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதித்திருந்தனர். குறிப்பாக அவர்கள் எதிரே வந்தால் தலையில் கட்டிய தலைப்பாகையை  அவிழ்த்து இடுப்பில் கட்டிக்கொள்ள வேண்டும்.

அவர்கள் தெருவில் செருப்புக்காலுடன் செல்லக் கூடாது. தலை நிமிர்ந்தோ, நெஞ்சை நிமிர்த்தியோ போகக் கூடாது என்று சட்ட திட்டங்கள் வகுத்தனர். அதை ஏற்றுக்கொண்டு அந்த ஊர் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த மற்ற இனத்தவர்கள் நடந்து கொண்டனர். ஒரு நாள் காலைப்பொழுதில் தடியம்பட்டி ஊரிலுள்ள வீதியில் மருதப்ப சேர்வை செருப்பு காலுடனும், கையில் கம்புடன் நடந்து வந்து கொண்டிருந்தார். அதைப்பார்த்த அப்பகுதியினர் ‘‘ஏவ், மருதப்ப சேர்வை, என்ன திமிரா, எங்க பகுதிக்குள்ளே இப்படி செருப்பு காலோட வார,’’ என்று கேட்க, ‘‘ஏம்பா, நான் ராக்காவலுக்கு போயிட்டு வாரேன். செருப்ப கழற்றி தலையில வச்சுக்கிட்டா நடக்க முடியும்’’ என்று கேட்க, அப்போது அங்கே வந்த மூன்று பேர், ‘‘என்ன மருதப்பா, விளைஞ்சி, விளைஞ்சி பேசுத, எல்லோருக்கும் என்னதோ, அததான் சொல்லுதோன். உனக்கு மட்டும் தனியா சொல்லலையே!’’ என்றனர். மருதப்ப சேர்வை, நிமிர்ந்து பார்த்தார்.

‘‘ஏலே, இப்போ உங்களுக்கு என்னல செய்யணும்…நீங்க அஞ்சு பேரு, நான் ஒத்த மனுஷன் வாங்கல … ’’என்ற படி கோபத்துடன் கத்த, அங்கு வந்த கோயில் பூசாரி, ‘‘என்ன மருதப்பா, நடுத்தெருவுல வம்பு பண்ணிட்டிருக்க’’ ‘‘சாமி, நான் செவனேன்னு போயிட்டிருக்கேன், என்ன செரத்துட்டு சேட்டை பண்ணுகானுக...’’ என்று சொல்ல, நீ போ மருதப்பா, ஏ, போங்கப்பா, நீங்க ஆளு முகம் தெரியாம பிரச்னை பண்ணிக்கிட்டு, போறேளா இல்ல உங்க தோப்பனார்கள் கிட்ட சொல்லணுமா’’ என்ற கேட்க, இளைஞர்கள் ஐந்து பேரும் அவ்விடம் விட்டு கலைந்தனர். மருதப்ப சேர்வையும் வீடு நோக்கி நடைபோட்டார்.

மறுநாள் மாலை தடியம்பட்டிக்கு மேற்கேயுள்ள புதுக்குளம் கம்மாக்கரையில் சாமிக்கதிர்(திணை பயிர்களில் ஒன்று) காவலுக்கு மருதப்ப சேர்வை கையில் வேல்கம்புடன் புறப்பட்டார். அப்போது அவரது மனைவி உடையம்மாள், தான் தீய கனவு கண்டதாகவும், அதனால் இன்றிரவு நீங்கள் காவலுக்கு போக வேண்டாம். வீட்டிலேயே இருங்கள் என்றும் கூறினார். அதை பொருட்படுத்தாமல் மருதப்ப சேர்வை காவலுக்கு புறப்பட்டார். தனது உதவியாளர் நெல்லையப்பனுடன்.
தடியம்பட்டி வீதியில் மருதப்ப சேர்வையுடன் பிரச்னை செய்தவர்கள், ஊரில் உள்ளவர்களிடம் மருதப்ப சேர்வை நமது இனத்து பெண்களை கவர்ந்து விடுகிறான். அவனை இப்படியே விட்டு வச்சா, நாளைக்கு நம்ம வீட்டு அடுக்களையில் வந்து உக்காருவான் நாம பார்த்துக்கிட்டு இருக்க வேண்டியது தான் என்று மருதப்ப சேர்வையின் மீது அவதூறு பரப்பி, மருதப்ப சேர்வைக்கு எதிராக ஆட்களை ஒன்று திரட்டினர்.

இளவட்டமான பத்து பேர் திரண்டனர். மருதப்ப சேர்வையை இன்று கொன்று விட வேண்டும். அவனது இறப்பு மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமையும் என்று எண்ணினர். காவலுக்கு வந்த மருதப்ப சேர்வை பனை நார் கட்டிலில் மேற்கு தலையும், கிழக்கே காலும் நீட்டியபடி படுத்திருக்க, தடியம்பட்டி காரர்கள் உளவு பார்க்க அனுப்பிய தாதக்குடும்பன், மருதப்ப சேர்வையிடம் வருகிறான். அவனது காலடி சத்தம் கேட்டு எழுந்த மருதப்ப சேர்வை, ‘‘யாரு அங்க, என்று கேட்க, ‘‘ஐயா, நான் தான் தாதக்குடும்பன் ஒரு வெத்தல கொடுங்க போத்தி’’ என்று கேட்க, அவரும் வெற்றிலை பாக்கு, சுண்ணாம்பு கொடுக்கிறார். அதை வாங்கிக்கொண்ட தாதக்குடும்பன் அவரிடம் போத்தி, நான் போயிட்டு வாரேன் என்று கூறிச்சென்றான். (போத்தி என்றால் மணமுடித்து பேரப்பிள்ளைகள் பெற்றவர். நல் வாழ்வு வாழ்ந்தவர். போற்றுதலுக்குரிய பெரியவர் என்பர்).

தாதக்குடும்பன் தடியம்பட்டி வந்து மருதப்ப சேர்வை காவலுக்கு வந்திருக்கிறார். தனித்து தான் இருக்கிறார். இந்தா பாருங்க, அவருகிட்ட நான் வாங்கிட்டு வந்த வெத்தலைய என்று வெற்றிலையை காட்டி பேசுகிறார். உடனே பத்துபேரும், தாதக்குடும்பனும் வேல்கம்பு, அரிவாள் ஆகிய ஆயுதங்களுடன் வருகிறார்கள். மருதப்ப சேர்வை படுத்திருந்த இடத்திற்கு. அவர் தூங்கிக்கொண்டிருந்த நேரம் அவரை கடுமையாக தாக்கினர். மயக்கமுற்று கிடந்த அவரை இறந்து விட்டார் என முடிவு செய்து சென்றுவிடுகின்றனர். அவர்கள் சென்றபின் மருதப்ப சேர்வை தனது உதவியாளர் நெல்லையப்பனை அழைக்கிறார். குரல் கேட்டு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்த நெல்லையப்பன் அங்கே வருகிறான். ரத்தம் சொட்ட சொட்ட கிடந்த மருதப்ப சேர்வையை பார்த்த நெல்லையப்பன் ஓடோடிச்சென்று ஊருக்குள் இருந்த அவரது அண்ணன் தம்பி மற்றும் உறவினர்களிடம் கூறுகிறான்.

அவர்கள் வந்து மருதப்ப சேர்வையை தூக்கிக்கொண்டு வண்டி கட்டி போகும்போது சங்கரன்கோவில் கிழக்கே இரண்டு கி.மீ தொலைவிலுள்ள சீராந்தல் என்ற இடத்தில் வைத்து அவர் உயிர் பிரிந்தது. உடனே அவரது உடலை கொண்டு வந்து சொக்கநாச்சியாள்புரத்தில் ஊருக்கு தென்புறத்தில் அடக்கம் செய்தனர்.
மருதப்ப சேர்வை இறந்த எட்டாவது நாள் தொடங்கி நாற்பத்தி ஓராவது நாள் வரை அவரை கொலை செய்தவர்களில் ஒருவர் பின் ஒருவராக மாண்டனர். அவர்களது உறவினர்கள் மருதப்ப சேர்வை குடும்பத்தினரிடம் பேசி அவரது ஆவியை சாந்தப்படுத்துங்கள். எங்கள் குடும்பத்தினருக்கு பயமாக உள்ளது என்று முறையிட, அவரை அடக்கம் செய்த இடத்தில் மருதப்ப சேர்வையின் வாரிசுகள் அவருக்கு கோயில் கட்டி வழிபட்டனர். மருதப்ப சேர்வையின் உயிர் பிரிந்த சீராந்தல் என்ற இடத்தில் அவரின் உதவியாளராக இருந்த நெல்லையப்பன் வாரிசுகள் நடுகல் அமைத்து வழிபட்டு வருகின்றனர். அங்கே நெல்லையப்பனுக்கும் நடுகல் உள்ளது.

சொக்கநாச்சியாள்புரத்திலுள்ள கோயில் மருதப்பசாமி கோயில் என்றும் போத்தி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. ஆண்டுகள் சில கடந்த நிலையில் அவரது மூத்த மகன் வெள்ளையன் சேர்வை இறந்தார். அவர் இறக்கும் முன் தனக்கும் தனது அப்பா மருதப்பசாமி கோயிலில் சிலை அமைத்து கோயில் கட்டி வழிபாடு நடத்தவேண்டும் என்று கூறினார். தனது பாசமகன் மூத்த மைந்தன் வெள்ளையன்சேர்வை இறந்த துக்கத்தில் அவரது தாயும் மருத்தப்ப சேர்வையின் மனைவியுமான உடையம்மாளும் உடனே இறந்தாள். வெள்ளையன் சேர்வைக்கும் அவரது தாயும் மருதப்ப சேர்வையின் மனைவியுமான உடையம்மாளுக்கும் மருதப்பசாமி கோயிலில் தனிச்சந்நதி உள்ளது. வெள்ளையன்சேர்வை தாய் உடையம்மாளுடன் நின்றபடி அருளாட்சி புரிகிறார். இக்கோயிலில் ஆண்டு தோறும் வைகாசி அல்லது ஐப்பசி மாதங்களில் கொடைவிழா நடத்தப்படுகிறது. இக்கோயில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ளது.

சு. இளம் கலைமாறன் படங்கள்: ரா. பரமகுமார், சங்கரன்கோவில் சரவணன்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • MummifiedFoal

  42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்த குதிரையின் உடலில் உறைந்த ரத்தம்..: ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

 • SriLankaHomage

  இலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு உலகச் சமூகங்கள் அஞ்சலி: பிரான்சின் ஈபிள் டவரில் விளக்குகள் அணைப்பு!

 • selphiGorilla

  கொரில்லாக்களையும் விட்டு வைக்காத செல்ஃபி மோகம் : குஷியான போஸ்கள்

 • QingdaoNavalParade

  சீனாவில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட கப்பல் அணிவகுப்பை ஒட்டி துறைமுகம் வந்தடையும் பல்வேறு நாடுகளின் போர்க்கப்பல்கள்!

 • CaucaLandslide

  கொலம்பியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி..: மீட்பு பணிகள் தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்