SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாகதோஷம் நீக்கும் காளஹஸ்தீஸ்வரர்!

2017-10-28@ 09:47:26

கரிசூழ்ந்த மங்கலம்

கரிசூழ்ந்த மங்கலம் எனும் இத்தலத்தின் திருப்பெயரில் கரி என்றால் யானை என்று பொருள். இப்படி யானைகள் சூழ்ந்து வருகின்ற மங்கலமே கரிசூழ்ந்த மங்கலம் என்றழைக்கப்படுகிறது. பழங்காலத்தில் இங்கு விளைந்த நெல்மணிகளை யானை கட்டி போரடித்த காரணத்தினால் இப்பெயர் வந்தது என்றும் கூறுகின்றனர். கரி என்றால் மேகம் என்றொரு பொருளும் உண்டு. எப்போதும் மேகம் சூழ்ந்து மழை பெய்து கொண்டிருக்கும் ஊர் என்றும் பொருள் கொள்ளலாம். தாமிரபரணிக் கரையில் எட்டு இடங்களில் சிவன் கோயிலை துர்வாச முனிவர் பிரதிஷ்டை செய்தார். அதில் ஒன்றுதான் கரிசூழ்ந்த மங்கலம். இங்குள்ள இறைவன் காளஹஸ்திநாதர் எனும் திருப்பெயரில் அருள்பாலிக்கிறார். துர்வாச முனிவர் தற்போதும் சூட்சுமமாக வாசம் செய்யும் இடமாக இக்கோயில் அமைந்துள்ளது.

கி.பி.1842 ஆம் ஆண்டில் திருநெல்வேலி அருட்கவி நெல்லையப்பக் கவிராயர் எழுதிய “திருநெல்வேலித் தலபுராணத்தில் 30வது சருக்கமாக அமைந்துள்ள துர்வாசேஸ்வர சருக்கம் முதல் முப்பத்தாறு பாடல்கள் கரிசூழ்ந்தமங்கலம் என்னும் தாமிரபரணி கரை கிராமத்தினை பற்றிக் கூறியுள்ளது. துர்வாச முனிவர், தாமிரபரணி சாதாரண நதி அல்ல. இந்த நதி பெருமையுள்ள நதி. நித்ய மங்கல சுமங்கலி என்றென்றும் மகிழ்வுடன் மங்களங்களை அளிக்கும் சுமங்கலி, மலையத்தின் நிலவே, மலையில் தவழும் தென்றலுடன் பிறந்த நாயகியே,  சீரும் சிறப்புமிக்க ஆற்றலுடன் வந்த தாமிரபரணி தாயே! பொருனை நதியே! புத்தம் புதிய அம்ருதம்தனை கொண்ட வானுலக நதியாக விளங்குபவளே! உன்னிடம் அடைக்கலம் அடைகிறேன்” என்று போற்றுகின்றார்.

தன் சீடர்களிடம் கூறும் போது, “புனிதமான கங்கை எப்படி தன்னிடம் நீராடுபவர்களின் கடும் பாவங்களைக் களைந்து நற்கதியருள் கொடுக்கிறாளோ... அதேபோல தன்னை நாடிவருபவர்களுக்கும் நற்கதி தருகிறாள் அன்னை தாமிரபரணி. துர்வாசர் நெற்றியில் நதியின் தென்கரைக்கு வந்தார். ஓரிடத்தில் சிவபெருமானை பிரதிஷ்டை செய்து அவருக்கு ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் என்றும் பெயரிட்டார். திருக்காளத்தியப்பருடைய திருவடிகளில் பணிந்து இனிய குரலில் புனித மந்திரங்கள் பல கூறினார். “முன்னொரு காலத்தில் உனது மாமனாராகிய தட்சனின் அகந்தையால் உன்னை பல விதங்களில் அவமதித்து ஏசிப் பேசி இகழ்ச்சி செய்த போது அவனை அழித்துத் தண்டித்தாய். அதன்பின் அவன் உன்னை அண்டியபிறகு அவனுக்கு வேண்டிய உதவிகளை செய்தாய்.

ஆடற்கலையில் வல்லோன் நீ. நீக்கமற நிறைந்து நிற்கும் சிவபெருமான் நீ... உன்னைத் தரிசித்து தொழுவது எப்படி என்று முறைப்படி தெரியாமல் தயக்கத்துடன் நிற்கிறேன்” என்றார். சோழ மன்னர்களுடைய ஆட்சிக் காலத்தில் முள்ளி வள நாட்டு கலி செய மங்கலம் என்றும்  பெயர் பெற்றுள்ளது. கி.பி. 18ம் நூற்றாண்டில், பாண்டிய மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் கலி செய மங்கலம், கலிசிய மங்கலம், கவி சேகர மங்கலம் என்றெல்லம் பெயர் பெற்றிருந்தது. அதற்குப்பிறகு நாயக்க மன்னர்களின் ஆட்சியின்போது தென் திருவேங்கடம் என்று விளங்கி வந்துள்ளது. மேலும், இந்தப் பகுதியில் பாய்ந்தோடும் தாமிரபரணி நதிக்கு மௌத்திக வாகிணி என்றும் பெயருண்டு.

இங்குள்ள தீர்த்தம் பெயர் துர்வாச தீர்த்தம். இந்த தீர்த்தத்தில் நீராடினால்  மோட்சம் பெறுவார்கள் என்பது ஐதீகம். மேலும் ஆந்திராவிலுள்ள காளஹஸ்திக்குச் சென்று வணங்க முடியாதவர்கள், தாமிரபரணி கரையிலுள்ள இந்த காளஹஸ்தி நாதரை வணங்கி நலம் பெறலாம். மூலவருக்கு காளஹஸ்தீஸ்வரர் என்றும், அம்மைக்கு ஞானாம்பிகை எனும் திருப்பெயரில் அருள்கிறாள். கோயிலுக்குள் நுழைந்தால் நந்தி மண்டபத்தில் கண்ணப்பநாயனாரின் சிலையை தரிசிக்கலாம். துர்வாசமுனிவர் சிவனை பூஜிப்பது போல மற்றொரு சிற்பம் காணப்படுகிறது. கோஷ்டங்களில் சண்டிகேஸ்வரர், தட்சிணாமூர்த்தி போன்றோரும், சனி பகவான் ராகு  கேதுவோடு உள்ளார்.   

சிவனின் நெற்றியில் ராகுவும், அம்மையின் இடுப்பில் கேது ஒட்டியாணமும் இருக்கிறது. சனி பகவான் நாக கொடை பிடிக்க அமர்ந்துள்ளார்கள். இவரின் சிரசிலும் ராகு  கேது உள்ளது. இந்தக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமைதோறும் சர்ப்ப சாந்தி பூஜை நடக்கிறது. சர்ப்ப சாந்தி பூஜை முடிந்து  துர்வாச முனிவர் தீர்த்தகட்டத்தில் மூழ்கி எழுந்தால் நினைத்தது நிறைவேறுகிறது. நெல்லை மாவட்டம் திருநெல்வேலி - பாபநாசம் சாலையில் பத்தமடையில் இருந்து
3 கி.மீ. தொலைவில் கரிசூழ்ந்த மங்கலம் உள்ளது.    

முத்தாலங்குறிச்சி காமராசு, படங்கள்: விக்னேஷ்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 22-10-2018

  22-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 21-10-2018

  21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • dussehraa_11

  நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

 • 20-10-2018

  20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • tirupathivavacha

  திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்