SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாழ்வு சிறக்கும்!

2017-10-24@ 12:18:45

21 வயது ஆகும் எனது பேத்தி இன்னும் பூப்படையவில்லை. பரிகாரம் சொல்லுங்கள். மலையாத்தாள், உடுமலைப்பேட்டை.

அனுஷம் நட்சத்திரம், விருச்சிக ராசி, மீன லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் பேத்தியின் ஜாதகத்தில் தற்போது புதன் தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜென்ம லக்னத்தில் கேதுவின் இணைவும், ஐந்தாம் வீட்டில் நீச செவ்வாயும், ஐந்திற்கு அதிபதி சந்திரன் நீசம் பெற்றிருப்பதும் பலவீனமான அம்சம் ஆகும். இதுநாள்வரை நடந்து வந்த தசாபுக்தியும் துணை புரியாததால் இந்த நிலை உண்டாகி உள்ளது. ஆயினும், இன்னும் காலம் கடந்து விடவில்லை. 15.03.2018 வரை நேரம் நன்றாக உள்ளதால் உரிய மருத்துவரிடம் காண்பித்து ஆலோசனை பெறுங்கள். பிரதி மாதந்தோறும் வரும் பௌர்ணமி நாளில் பழனிமலையை இரவு 8 மணி வாக்கில் கிரிவலம் வந்து வழிபட்டு வரச் சொல்லுங்கள். பௌர்ணமி சந்திரனின் ஒளி அலையும், பழனிமலை ஆண்டவனின் அருள் அலையும் இணைந்து அவர்மீது படும்போது உடலில் மாற்றம் உண்டாகும். பழனிமலையை கிரிவலம் வரும்போதும், தினமும் வீட்டினில் காலை  மாலை இருவேளையும் முருகப் பெருமானை கீழேயுள்ள துதியினைச் சொல்லி வழிபட்டு வரச் சொல்லுங்கள். பங்குனிக்குள் பருவமடைவார்.

“இலகயில் மயில் முருகா என நினை எனதெதிரே
 பலபல களமணியே பலபல பதமணியே
 கலகல கலவெனமா கவினொடு வருமயிலே
 குலவிடு சிகைமயிலே கொணர்தியுன் இறைவனையே.”


கஷ்டப்பட்டு ராணுவப் பணியில் சேர்ந்த நான் ஒரு பெண் பிரச்னை காரணமாக வழக்கில் சிக்கி கடந்த இரண்டரை வருடமாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறேன். உச்சநீதிமன்ற மேல்முறையீட்டில் வெற்றி பெறவும், மீண்டும் ராணுவப் பணியில் சேரவும், வாழ்க்கை சிறக்கவும் உரிய பரிகாரம் சொல்லுங்கள். பாலமுருகன், பாளையங்கோட்டை மத்தியசிறை.

ரேவதி நட்சத்திரம், மீன ராசி, தனுசு லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தில் தற்போது சந்திர தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. ராகு  கேது மற்றும் சுக்கிரன்  செவ்வாயின் சஞ்சாரநிலை உங்களை இந்தச் சூழலுக்கு ஆளாக்கி உள்ளது. 23.04.2018 முதல் நல்ல நேரம் என்பது உங்களுடைய வாழ்வினில் துவங்குகிறது. அந்த நேரத்தில் உங்கள் மேல்முறையீட்டு வழக்கு உங்களுக்கு சாதகமான பலனைத் தரும். உங்களுடைய ஜாதகப்படி நீங்கள் சிறையிலிருந்து 2018ம் வருட இறுதியில் விடுதலை ஆகி, மீண்டும் பணியில் சேர்வதற்கான வாய்ப்பு பிரகாசமாய் உள்ளது. உங்களுடைய ராசிக்கும், லக்னத்திற்கும் அதிபதியாகிய குருபகவானின் பார்வையால் மட்டுமே உங்கள் பிரச்னைக்கு விடிவுகாலம் பிறக்கும். குரு ஸ்தலமாகிய திருச்செந்தூர் முருகனுக்கு உங்கள் ஊரிலிருந்து பாதயாத்திரையாக வருவதாகவும், பால்காவடி எடுத்து அபிஷேகம் செய்வதாகவும் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். கீழேயுள்ள துதியினை தினந்தோறும் சொல்லி மானசீகமாக செந்தில் ஆண்டவனை பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். விரைவில் விடுதலை ஆவீர்கள்.

“ஓங்கிய சீற்றமே கொண்டு உவணிவில் வேல் சூலங்கள்
 தாங்கிய தண்டமெக்கம் தடிபரசு ஈட்டி யாதி
 பாங்குடை ஆயுதங்கள் பகைவரென் மேலே ஓச்சின்
 தீங்கு செய்யாமல் என்னைத் திருக்கைவேல் காக்க காக்க.”


என் மகனின் ஜாதகப்படி தாய் விதவைக்கோலம் அடைவார் என்று ஜோதிடர் சொல்கிறார். சிறு வயதிலேயே தாய், தந்தையரை இழந்து துன்பப்பட்ட நான், நல்ல நிலையில் இருக்கும்போது இப்படி ஒரு பயம் வந்துள்ளது. என் கணவர் ஆரோக்கியமாய் இருக்கிறார். உரிய விளக்கம் சொல்லி உதவிடுங்கள் ஐயா. கலைச்செல்வி, ஈரோடு மாவட்டம்.

உத்திராட நட்சத்திரம், மகர ராசி, மீன லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகத்தில் தகப்பனாரைப் பற்றிச் சொல்லும் ஒன்பதாம் இடத்திற்கு அதிபதியான செவ்வாய் எட்டாம் இடத்தில் அமர்ந்திருந்தாலும், குரு பகவானின் பார்வை செவ்வாயின் மீது விழுவதாலும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. மேலும், தீர்க்காயுளைத் தரும் சனியின் பார்வை செவ்வாயின் மீது விழுவதால் ஜாதகருடைய தந்தை தீர்க்காயுளுடன் இருப்பார். மேலும், ஒருவருடைய ஜாதகத்தைக் கொண்டு அவருடைய தாயார் விதவைக் கோலம் பூணுவார் என்று யாராலும் சொல்ல முடியாது. ஒருவருடைய ஆயுளைத் தீர்மானிக்கிற சக்தி கடவுள் ஒருவருக்குத்தான் உண்டே தவிர மற்றவர்களுக்குக் கிடையாது.

மனதில் இருக்கும் வீண் பயத்தால் நல்ல வாழ்க்கையை வீணடிக்காதீர்கள். கவலையைத் தூக்கி தூர வீசுங்கள். கலக்கத்தினை விடுத்து கணவன் மற்றும் குழந்தைகளின் பால் உங்கள் கவனத்தை செலுத்துங்கள். செவ்வாய்க்கிழமை தோறும் முருகப் பெருமானை மனதில் தியானித்து கந்தசஷ்டி கவசம் படித்து வாருங்கள். ஒரு செவ்வாய்க் கிழமையில் சென்னிமலை முருகன் கோயிலுக்கு குடும்பத்தோடு சென்று அபிஷேக ஆராதனை செய்து வழிபடுங்கள். வாழ்க்கை சிறப்படையும்.

திருமணமாகி பத்து வருடம் கழித்து பிறந்த என் மகன் சரியாக சாப்பிடுவதில்லை. பால் மட்டும் சாப்பிடுவான். 2 மாதம் முன்பு தெருவில் விளையாடிக் கொண்டிருந்த போது பைக் மோதி வலது கால் எலும்பு முறிந்து வைத்தியம் பார்த்தோம். எதிர்காலத்தில் இதுபோல் நடக்காமல் என் மகன் நலமுடன் வாழ உரிய வழி சொல்லுங்கள். பத்மலட்சுமி, மதுரை.

கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, மீன லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகத்தில் தற்போது புதன் தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தின்படி அவருக்கு தீர்க்காயுள் உண்டு. ஜென்ம லக்னத்தில் அமர்ந்துள்ள செவ்வாயும், ஆயுள் ஸ்தானத்தில் உச்சபலம் பெற்றுள்ள சனியும் தீர்க்காயுளைத் தருவார்கள். கவலை வேண்டாம். தற்போது நடைபெற்று வரும் தசையின் நாதனாகிய புதன், ஜாதகத்தில் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் இதுபோன்ற நிகழ்வினைச் சந்தித்துள்ளீர்கள். உங்கள் மகனின் பெயர் சாய் அஸ்வந்த் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அஸ்வம் என்றால் குதிரை, அந்த் என்றால் முடிவு என்று பொருள். அதாவது அஸ்வந்த் என்ற பெயருக்கு குதிரையைக் கொல்பவன் என்று பொருள்.

இவ்வாறு தீயசக்தியைத் தரும் பெயரினை பிள்ளைகளுக்கு சூட்டக்கூடாது. அவருடைய பெயருடன் இணைந்திருக்கும் ‘சாய்’ என்கிற வார்த்தை அவரைக் காப்பாற்றி வருகிறது. அஸ்வந்த் என்ற பெயரை மாற்றி ‘அஸ்வத்’ என்று வையுங்கள். “சாய்அஸ்வத்” என்ற பெயர் உங்கள் பிள்ளையின் வாழ்வினை வளமாக்கும். சாய் என்றோ அஸ்வத் என்றோ நீங்கள் அவன் பெயரைச் சொல்லி அழைக்கலாம். மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள ஆதிசொக்கநாதர் ஆலயத்திற்கு புதன்கிழமை நாளில் சென்று அபிஷேக ஆராதனை செய்து பச்சை பட்டு வஸ்திரம் அணிவித்து பிள்ளையின் பெயரில் அர்ச்சனை செய்து வழிபடுங்கள். உங்கள் வம்சம் தழைத்து ஓங்கும்.

எனக்கு கடந்த 4 வருடங்களாக கால்வலி உள்ளது. ஒரு நாள் வலது காலும், மறுநாள் இடது காலும் வலிக்கும். வலியின் வேதனையால் உயிரே போய்விடுவது போல் இருக்கும். பல மருத்துவர்களைப் பார்த்தும் எல்லோரும் ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டார்கள். ஊசி போட்டால் ஒருநாள் மட்டும் சரியாகி மறுநாள் வலி வந்துவிடும். உரிய பரிகாரம் சொல்லுங்கள். செல்வராஜ், திருத்தங்கல்.

பரணி நட்சத்திரம், மேஷ ராசி, கன்யா லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தில் தற்போது ராகு தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் லக்னாதிபதி புதன் 12ம் வீட்டில் ஆட்சி பெற்ற சூரியனோடு அமர்ந்திருப்பதும், 11ல் சனியின் அமர்வும் இணைந்து உங்களுக்கு இந்தப் பிரச்னையைத் தோற்றுவித்திருக்கிறது. இது நரம்பியல் சார்ந்த பிரச்னையே அன்றி எலும்பு சார்ந்த பிரச்னை அல்ல. நரம்பியல் சார்ந்த மருத்துவரை சந்தித்து உரிய ஆலோசனை பெறுங்கள்.

மேலும், உங்களுடைய ஜாதகப்படி ஆங்கில மருந்துகளை விட பாரம்பரிய மருத்துவ சிகிச்சை முறை அதிக நன்மையைத் தரும். புதன்கிழமை தோறும் உங்கள் ஊரான திருத்தங்கல் திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் செங்கமலத்தாயார் உடனுறை நின்ற நாராயணப் பெருமாள் ஆலயத்திற்குச் சென்று நெய்விளக்கேற்றி வைத்து வழிபாடு செய்யுங்கள். ஆலய வாசலில் ஆதரவற்ற நிலையில் அமர்ந்திருக்கும் ஊனமுற்றோருக்கு உங்களால் இயன்ற உதவியினைச் செய்து வாருங்கள். கீழேயுள்ள துதியினைச் சொல்லி பெருமாளை வழிபட்டு வருவதும் நன்மையைத் தரும். 01.08.2018க்குப் பின் உங்கள் பிரச்னை முற்றிலும் காணாமல் போகும்.

“தேவதாகார்ய ஸித்யர்த்தம் ஸபாஸ்தம்ப ஸமுத்பவம்
ஸ்ரீமஹாவிஷ்ணும் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே.”


எனக்கு தேவையற்ற மனக்குழப்பம், பயம், விரக்தி உண்டாகிறது. மேலும் அடிக்கடி கோபம் வருகிறது. இது எதனால் ஏற்படுகிறது? உரிய பரிகாரம் சொல்லும்படி அன்புடன் வேண்டுகிறேன். தண்டபாணி, கோவை  27.

ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, மகர லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தின்படி தற்போது சந்திர தசையில் சூரிய புக்தி நடந்து வருகிறது. ஜென்ம லக்னத்தில் அமர்ந்துள்ள ராகு முன்கோபத்தைத் தருகிறார். மேலும், ஜென்ம ராசியில் மனோகாரகனான சந்திரனுடன் கேது இணைந்திருப்பதால் தேவையற்ற மனக் குழப்பம், வீண் பயம், விரக்தியான எண்ணங்கள் ஆகியவை மனதில் உருவாகிறது. தற்போது சந்திரதசை முடியும் தருவாயில் உள்ளதால் மனக் குழப்பம் அதிகமாக உள்ளது. 21.02.2018 முதல் துவங்க உள்ள செவ்வாய் தசை சற்று அலைச்சலைத் தந்தாலும், தன லாபத்தினைத் தரும் வகையில் அமைந்துள்ளது.

செவ்வாய் தசைக்கு உரிய காலத்தில் சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டியிருப்பதால் இதுபோன்ற எண்ணங்களுக்கு மனதில் இடமிருக்காது. நேரம் கிடைக்கும்போது மருதமலைக்குச் சென்று பாம்பாட்டி சித்தரின் சந்நதியில் விளக்கேற்றி வைத்து வழிபாடு செய்வதோடு சந்நதியின் எதிரே சிறிது நேரம் தியானத்தில் அமருங்கள். மருதமலையானை தரிசித்து உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்துகொண்டு மனமுருகி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். கீழேயுள்ள ஸ்லோகத்தினைச் சொல்லி அனுதினமும் மருதமலை ஆண்டவனை மனதில் தியானித்து வழிபட்டு வாருங்கள். மனதில் உற்சாகம் ஊற்றெடுப்பதோடு வாழ்வும் சிறப்பான பாதையில் செல்லும்.

“நாரதாதி மஹாயோகி ஸித்த கந்தர்வ
ஸேவிதம்
 நவவீரை: பூஜிதாங்க்ரிம் தேஹிமே விபுலாம் ச்ரியம்.”


எனக்கு மூன்று மகள்கள். கல்லூரியில் படித்து வரும் மூத்த மகளின் ஜாதகத்தை இரண்டு ஜோசியர்களிடம் காண்பித்ததில் ஒருவர் அவள் தவறான வழியில் சென்றுவிடுவாள் என்றும், மற்றொருவர் அவள் இப்போதுதான் காதலிக்க ஆரம்பித்துள்ளார் என்றும் கூறினர். அவள் தலையெடுத்துதான் குடும்பம் முன்னேற வேண்டும். நல்லதொரு பரிகாரம் சொல்லுங்கள். தீபலட்சுமி, தர்மபுரி.

மிருகசீரிஷம் நட்சத்திரம், மிதுன ராசி, மகர லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகளின் ஜாதகத்தின்படி தற்போது ராகு தசையில் சூரிய புக்தி நடந்து வருகிறது. உங்கள் மகளின்மீது உங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். பிறகு ஏன் இந்த வீண் பயம்? உங்கள் மகளின் ஜாதகத்தில் லக்னத்தில் கேதுவும், திருமண வாழ்வினைச் சொல்லும் ஏழாம் வீட்டினில் ராகுவும் அமர்ந்திருப்பதால் ஜோதிடர்கள் அவருக்கு நாகதோஷம் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்கள். வாலிப வயதில் பிள்ளைகள் காதல் கொள்வது என்பது சகஜம்தான் என்பதை மூன்று பெண்களின் தாயாகிய உங்களுக்கு அடுத்தவர் சொல்லி புரியவைக்க வேண்டிய அவசியமில்லை.

காதலிப்பதாலேயே தவறான வழியில் சென்றுவிடுவார்கள் என்று நினைப்பது தவறு. உங்களுடைய மூத்த பெண் குடும்ப பொறுப்புகளை சுமக்கத் தயாராக உள்ளவர். 20 வயது வரை அவர் மனம் சஞ்சலத்திற்கு உள்ளாகும் என்றாலும், அவற்றையெல்லாம் தாண்டி வெற்றிகொள்ளும் பக்குவம் உங்கள் மகளிடம் உள்ளது. மேலும் அவருக்கு அமைய உள்ள கணவனும் உங்கள் குடும்பத்தை தன் குடும்பமாக எண்ணி உதவும் குணம் கொண்டவராக இருப்பார். வீண் கவலையை விடுத்து அவ்வப்போது மகளிடம் மனம் விட்டுப் பேசி வாருங்கள். இறைவன் அருளால் எல்லாம் நல்லபடியாக நடக்கும்.

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா் திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை, பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் தினகரன் ஆன்மிக மலா் 229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம். பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • longestseabridge

  உலகில் எங்கும் இல்லாத தனிச்சிறப்புடன் கட்டி முடிக்கப்பட்ட உலகின் நீளமான கடல் பாலம்

 • delhi_strikepetrol18

  டெல்லியில் பெட்ரோல் பங்குகள் ஸ்டிரைக்: கால் டாக்சி, ஆட்டோ சேவைகள் முடக்கம் !

 • solarcar_race

  சூரிய மின்சக்திகளால் இயங்கும் கார்களுக்கான பந்தயம் சிலி நாட்டில் கொண்டாட்டம்!

 • hondurans_americatrump

  ஹோண்டராஸில் இருந்து அமெரிக்கா நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அகதிகள் !

 • snowfall_kedarnthpics

  கேதார்நாத், பத்ரிநாத்தில் உருவாகியுள்ள பனிப்பொழிவின் புகைப்படங்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்