SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கரம் கூப்ப வரமருளும் அறம் வளர்த்த நாயகி

2017-10-21@ 10:29:09

நம்ம ஊரு சாமிகள் - குமரி மாவட்டம் சுசீந்திரம்

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் கோயில் கொண்டுள்ள தாணுமாலயன் ஆட்கொண்ட அறம் வளர்த்த நாயகி, தன்னை கரம் கூப்பி தொழுவார்க்கு வரம் அளித்து காத்தருள்கிறாள். அத்ரி முனிவரின் பத்தினி அனுசூயையின் கற்பை சோதிக்க வந்த மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மா மூவரும் ஞான கான வனத்தில் ஒரே அம்சமாக எழுந்தருளினர். தாணு மால் அயன் என்பதே தாணுமாலயன் ஆனது. அகலிகை மேல் கொண்ட மோகத்தால் கௌதம முனிவரிடம் மேனியெங்கும் யோணியாக சாபம் பெற்ற இந்திரன், தாணுமாலயனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றான். இதனால் இந்த இடம் சுசீந்திரம் (சுசி  விருப்பம், இந்திரன் தான் விரும்பியதை வேண்டி பெற்றதால்) சுசிஇந்திரன் என்பதே சுசீந்திரம் ஆனது.

சுசீந்திரம் ஊரின் வடக்கே இரண்டு கி.மீ. தொலைவில் உள்ளது தேரூர். சுமார் அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள ஆலடி வீட்டில் வசித்து வந்தார் மாராயக்குட்டி பிள்ளை. வேளாண்மை செய்து வந்த இவர் பேரும், புகழுடன் திகழ்ந்தார். இவரது மனைவி பள்ளியறை நாச்சியார் விருந்தோம்பலில் சிறந்து விளங்கினார். ஆலய வழிபாடுகளிலும் ஆர்வம் கொண்டிருந்தார். இவர்களது மகள் அறம் வளர்த்தாள். சிறு வயதிலேயே தனது தாயுடன் சுசீந்திரம் கோயிலுக்குச் சென்று வந்தாள். அவள் வளர, வளர தாணுமாலயன் மீது அளவற்ற பக்தியை வளர்த்துக் கொண்டாள். வேறெந்த ஆலயத்திற்கும் செல்ல விரும்பாது அறம் வளர்த்தாள், தும்மல் வந்தாலும் தாணுமாலயன் நாமத்தை கூறி வந்தாள். சதா, அவரது நாமம் சொல்லியே வளர்ந்தவள், தாணுமாலயனை இறைவன்
என்றும் அவரை தன் மனதுள் எண்ணி வந்தாள்.

மகளின் செயலில் மாற்றம் கண்ட அவரது பெற்றோர்கள், அறம் வளர்த்தாளை இனி நீ தாணுமாலயன் கோயிலுக்கு போக வேண்டாம் என்று தடை விதித்தனர். பெற்றோரின் கட்டளையை ஏற்று கோயிலுக்கு போகாமல் இருந்தாலும் தாணுமாலயன் மீது கொண்ட காதலை அறம் வளர்த்தாள் விடவில்லை. வீட்டிலிருந்து பின்புறம் உள்ள தனது வயல் பகுதிக்கு வருவாள். ஓங்கி உயர்ந்து கம்பீரமாக நிற்கும் கோபுரத்தை பார்த்து தாணுமாலயன் நாமத்தை உரக்கக்கூறி அழைத்து வணங்கி மகிழ்வாள். நாட்கள் பல நகர்ந்தும் அறம் வளர்த்தாள் மனதிலும், செயலிலும் மாற்றமில்லை. உண்ணும் உணவை வெறுத்தாள், காய், கனிகளை உண்டாள். துயிலை துறந்தாள். பிறை சூடிய பெருமான் மேல் பித்தம் கொண்டாள். பருவம் வந்ததால் மகளை இனி மணமுடித்து கொடுத்து விடலாம் அப்படியாவது அவள் மனம் மாறாது.

இப்படியே விட்டால் பித்து பிடித்தவளாகி விடுவாளோ என்று குழப்பம் கொண்ட அவளின் தந்தை மாராயக்குட்டிபிள்ளை என் மகளை நீயே காப்பாற்று என்று தாணுமாலயனை மனதில் வேண்டிக்கொண்டு மனைவி, மகளுடன் சுசீந்திரம் கோயிலுக்கு வருகிறார். கோயிலை சுற்றி வலம் வருகின்றனர். மூன்றாவது முறை வலம் வந்து சுவாமியை தரிசிக்கும் போது மகள் அறம் வளர்த்தாளை காணவில்லை. அங்கும் இங்குமாக கோயில் முழுக்க தேடினர் தாயும், தந்தையும், மகளே! அறம் வளர்த்தா, எங்க இருக்க, என்னாச்சு உனக்கு என்று ஓலமிட்டு கதறினர். அப்போது கோயிலின் மூலவர் சந்நதியிலிருந்து அசரீரி ஒலித்தது. ‘‘அறம் வளர்த்தாளை யாம் ஆட்கொண்டோம்’’ இப்படி கேட்டதும் பெற்றவர்கள் பரவசமடைந்தனர். தாணுமாலயனை வணங்கி மகிழ்ந்தனர்.

இந்தச் சம்பவம் கி.பி.1443ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி தமிழ் ஆண்டு 619 மாசி 17ம் தேதி நடந்தது. கி.பி.1758ம் ஆண்டு (தமிழ் ஆண்டு) மாசி 5ம் தேதி கோயிலில் மாசி திருக்கல்யாணம் நடத்த வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கோயிலுக்கு நிலங்களை தானமாக வழங்கினர். அன்று முதல் இன்றும் ஆண்டு தோறும் மாசி மாதம் திருக்கல்யாண வைபோகம் நடக்கிறது. திருக்கல்யாண திருவிழா 10 நாள் விழாவாக நடைபெறுகிறது. இவ்விழாவிற்கு அறம் வளர்த்தாள் வீட்டிலிருந்து அவர் வம்சா வழியினர் ஒரு தாம்பூல தட்டில் பட்டாடை, சந்தனம், குங்குமம் முதலான அனைத்து வகை சீதனங்களும் தாய் வீட்டிருந்து வழங்குவது போன்று கோயிலுக்கு கொடுக்கின்றனர்.

திருக்கல்யாண திருவிழா அன்று காலை 8 மணிக்கு காக்கமூர் வழியாக தேவியை பல்லக்கில் எழுந்தருளச் செய்து சுசீந்திரம் ஊரின் தென்மேற்கே இருக்கின்ற வேட்கைக்குளக்கரையில் அமைந்திருக்கும் காசி விஸ்வநாதர் ஆலயப் படித்துறையில் தேவிக்கு திருநீராட்டு வைபவம் நடத்தப்படுகிறது. பின்பு மண்டபத்தில் எழுந்தருளும் தேவிக்கு சிறப்பு பூஜைகள் செய்து பல்லக்கில் தேவி ஆஸ்ரமம் ஊருக்கு எடுத்து வருகின்றனர். அங்குள்ள விநாயகர் கோயிலில் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தி, பக்தர்கள் அனைவருக்கும் திருக்கல்யாண சாப்பாடு வழங்கப்படுகிறது.

பந்தி முடிந்ததும் மணமகளாக அலங்கரித்து தேவியை பல்லக்கில் எடுத்து மணமகன் இல்லமான தாணுமாலயன் கோயிலுக்கு வருகின்றனர். அங்கு வைத்து திருக்கல்யாண வைபோகம் நடக்கிறது. ஆண்டாளை ஆட்கொண்ட ரங்கமன்னார்போல், அறம் வளர்த்தாளை ஆட் கொண்டார் தாணுமாலயன். சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலில் ஆஞ்சநேயர் சந்நதிக்கு மேற்புறம் அறம் வளர்த்தாள் தனிச்சந்நதி கொண்டுள்ளாள். நின்ற கோலத்தில் அருள் புரியும் அறம் வளர்த்த நாயகி, தன்னை கரம் கூப்பி தொழுவார்க்கு வேண்டிய வரம் அளித்து காக்கிறாள். இக்கோயில் நாகர்கோவிலிலிருந்து கன்னியாகுமரி செல்லும் சாலையில் சுசீந்திரத்தில் அமைந்துள்ளது.

சு. இளம் கலைமாறன், படங்கள்: சுசீந்திரம் எஸ். ராஜன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • BiharProtestBrainFever

  பீகாரில் மூளைக்காய்ச்சல் காரணமாக தொடரும் குழந்தைகளின் உயிர்பலி: அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்- புகைப்படங்கள்

 • YamagataEarthQuake18

  வடமேற்கு ஜப்பானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்..: ரிக்டர் அளவுக்கோலில் 6.8 ஆக பதிவானதால் மக்கள் பீதி!

 • RaptorsShootingToronto

  கனடாவில் லட்சக்கணக்கானோர் கூடியிருந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் திடீரென நடைபெற்ற துப்பாக்கிச்சூடு..: 4 பேர் காயம்!

 • 19-06-2019

  19-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • bji

  முன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்