SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கணக்கு கனியாய் இனிக்கும்!

2017-10-13@ 15:30:37

பதினொன்றாம் வகுப்பில் ‘பயோமேத்ஸ்’ குரூப் எடுத்து படித்து வரும் எனக்கு கணக்குப் பாடம் சுத்தமாகப் புரியவில்லை. நான் தேர்வில் அதிகமதிப்பெண் பெற ஏதேனும் பரிகாரம் கூறுங்கள். லாவண்யா, பெருங்கட்டூர்.

தேர்வினைச் சரியாக எழுதாமல், பரிகாரம் மட்டும் செய்தால் அதிக மதிப்பெண்களைப் பெற இயலாது. பாடத்தினைப் புரிந்து படிக்க என்னவழி என்று தேடாமல் நேரடியாக அதிக மதிப்பெண்களைப் பெறுவதற்கு மட்டும் பரிகாரம் தேடி உங்களைப் போன்று பல மாணவ, மாணவிகளும் கடிதம் எழுதி வருவது வருத்தம் அளிக்கிறது. பரணி நட்சத்திரம், மேஷ ராசி, மிதுன லக்னத்தில் பிறந்துள்ள உங்களுக்கு அடிப்படையில் கணிதம் சார்ந்த அறிவு நிச்சயமாக உண்டு. ஜென்ம லக்னத்தில் குரு, ராகுவின் இணைவும், லக்னாதிபதி புதன் நான்காம் வீட்டில் உச்சம் பெற்றிருப்பதும் உங்களுக்கு கணிதப் பாடத்தில் நல்ல அறிவினைத் தரவல்லவை. கணக்கு என்றாலே கஷ்டம் என்று எண்ணும் தோழியரிடம் இருந்து விலகி நில்லுங்கள்.

உங்கள் நண்பர்களின் கருத்துக்களை பெரிதாக எண்ணாமல் ஆசிரியர் சொல்லித் தரும் வழிமுறைகளில் கவனம் செலுத்துங்கள். உங்களுக்கு தற்போது நடந்து வரும் சூரியதசையும் சாதகமாகவே உள்ளது. நீங்கள் விரும்பினால் கணக்குப் பாடத்திற்கு என்று தனியாக டியூஷன் செல்லுங்கள். உங்களுடைய ஜாதகம் வலிமை மிக்கதாக உள்ளது. ஜாதகம் நன்றாக இருக்கிறது என்ற எண்ணத்தில் முயற்சி எடுக்காவிடில் பலன் கிடைக்காது. தினசரி அதிகாலை சூரிய உதய நேரத்தில் பிராணாயாமம் எனும் மூச்சுப் பயிற்சியில் ஈடுபட்டு வாருங்கள். மூளை சுறுசுறுப்பாவதோடு கணக்குப் பாடம் கனியாய் இனிக்கும்.

எங்கள் செல்லக் குழந்தைக்கு நான்கு வயது ஆகியும் இன்னமும் நடக்க மற்றும் உட்கார இயலவில்லை. தடுமாற்றம் ஏதுமின்றி நன்றாகப் பேசுகிறாள். வேறு எந்தப் பிரச்னையும் இல்லை. நரம்பியல் மருத்துவரிடம் காண்பித்தும், பணம் எவ்வளவோ செலவழித்தும் பலனில்லை. பரிகாரம் வேண்டி தங்களிடம் முறையிடுகிறோம். தாத்தா நாராயணசாமி, நாராயணபுரம்.

ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, கும்ப லக்னத்தில் (மகர லக்னம் என்று தவறுதலாக குறிப்பிட்டுள்ளீர்கள்) பிறந்துள்ள உங்கள் பேத்தியின் ஜாதகத்தில் தற்போது புதன் தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. லக்னாதிபதி சனி உச்ச பலத்துடன் சஞ்சரிப்பதால் அவருடைய பிரச்னையை சரிசெய்ய முடியும். எட்டாம் வீட்டில் புதன்  சுக்கிரன் இணைவும், ஆறில் சந்திரன்  செவ்வாயின் இணைவும் சற்று பலவீனத்தைத் தந்துள்ளது.  

மணற்பாங்கான பகுதியில் (ஆறுகளின் மையப் பகுதியாக இருப்பது நல்லது) குழந்தையின் இடுப்புப் பகுதி வரை பள்ளம் எடுத்து, அதில் குழந்தையை நிற்க வைத்து ஆற்று மணலைக் கொண்டு பள்ளத்தை நிரப்புங்கள். தினந்தோறும் அரைமணி நேரம் வரைஅவ்வாறு நிற்க வைப்பது நல்லது. 22.03.2019க்குள் உங்கள் பேத்தியின் உடல்நிலை முற்றிலும் குணமாகிவிடும். ஏதேனும் ஒரு புதன்கிழமை நாளில் குழந்தையை குருவாயூருக்கு அழைத்துச் சென்று குளத்தில் ஸ்நானம் செய்து குருவாயூரப்பனை தரிசித்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். கீழேயுள்ள ஸ்லோகத்தைச் சொல்லி தினமும் வணங்கி வருவதும் நல்லது.

“பாபபவதாபபர கோபசமனார்த்தா
ச்வாஸகரபாஸம் ருது ஹாஸ ருசி ராஸ்யம்
ரோகசய போகபய வேகஹரமேகம்
வாத புர நாதமிமமாத நுஹ் ருதப் ஜே.”


2008ல் கர்ப்பப்பையை அகற்றியதில் இருந்து ‘ஸ்ட்ரெஸ்’ பயங்கரமாக உள்ளது. கடுமையான ஒற்றைத் தலைவலி, டென்ஷன், நெஞ்சு படபடப்பு, பதட்டம் அதிகமாக உள்ளது. அதிகாலை நேரத்தில் தாங்க முடியவில்லை. எப்போதும் பயமாகவே உள்ளது. எனக்கு ஒரு நல்ல பரிகாரம் சொல்லுங்கள். ஸ்ரீலதா, கோவை.

உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தில் தற்போது சுக்கிரதசை நடந்து வருகிறது. லக்னாதிபதி செவ்வாய் ஆட்சி பலத்துடன் லக்னத்தில் அமர்ந்திருந்தாலும், அவர் வக்ரகதியில் இருப்பதும், சந்திரனுடன் ராகு இணைந்து ஐந்தில் அமர்ந்திருப்பதும் உங்களுக்கு மாற்று சிந்தனைகளைத் தந்து கொண்டிருக்கிறது. எந்தவொரு விஷயத்தைக் கையில் எடுத்தாலும், முதலில் அதிலுள்ள பாதகமான அம்சங்கள் மட்டுமே உங்கள் கண்களுக்கு பூதாகாரமாகத் தென்படுகிறது. முதலில் இந்த எண்ணத்தினை மாற்றிக் கொள்ளுங்கள். “எல்லாம் நன்மைக்கே” என்ற வரிகள் மட்டுமே திரும்பத் திரும்ப உங்கள் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்க வேண்டும்.

யோகாசனம், தியானப் பயிற்சி இவற்றால் மட்டுமே உங்கள் பிரச்னையை முற்றிலுமாக சரி செய்ய இயலும். தினமும் அதிகாலை நான்கு மணி முதல் ஐந்து மணிவரை தனியறையில் அமர்ந்து மனதினை ஒருமுகப்படுத்தி தியானப் பயிற்சியில் ஈடுபடுங்கள். துவக்கத்தில் சரியான குருவின் துணையோடு உங்கள் பயிற்சி அமையட்டும். திங்கள் மற்றும் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் சந்நதியில் விளக்கேற்றி வைத்து வழிபட்டு வாருங்கள். கீழேயுள்ள ஸ்லோகத்தினைச் சொல்லி அனுமனை தினமும் வழிபட்டு வருவதும் நல்லது.

“அஞ்சனா தனயம் வீரம் ராமதூதம் மஹாமதிம்
ஹனுமந்தம் நமாமித்வாம் பலம்புத்திம் ப்ரயச்சமே.”


நான் பிறந்தது முதல் கஷ்டத்தை அனுபவித்து வருகிறேன். சிறிய அளவில் காய்கறி, மளிகைக் கடைநடத்தி வருகிறேன். ஆறு லட்சம் வரை கடன் சுமை இருக்கிறது. மனதில் நிம்மதி இல்லை. இரவில் தூக்கம் வரவில்லை. கடன் சுமை குறைந்து தொழில் நன்றாக நடக்க நல்ல பரிகாரம் சொல்லி வாழ வழி காட்டுங்கள். கந்தசாமி, தூத்துக்குடி.

மகம் நட்சத்திரம், சிம்ம ராசி, மகர லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தில் தற்போது செவ்வாய் தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. லக்னாதிபதி சனி நீசம் பெற்றிருப்பதும், எட்டில் சந்திரன் அமர்ந்திருப்பதும் சற்று பலவீனமான அம்சம் ஆகும். நீங்கள் ஒரு கடுமையான உழைப்பாளி என்பதை உங்கள் ஜாதகத்தின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. மளிகை, பலசரக்கு போன்றவற்றில் உங்கள் முதலீட்டினை குறைத்துக்கொண்டு, அன்றாடம் அழிகின்ற பொருட்களாகிய காய்கறி, பழவகைகளில் உங்கள் கவனத்தை செலுத்துங்கள். கொஞ்சம், கொஞ்சமாக காய்  கனி வியாபாரத்தைப் பெருக்க முயற்சியுங்கள்.

உதவியாளர்களைக் கொண்டு தள்ளுவண்டி வியாபாரத்தின் மூலமாகவும் உங்கள் வியாபாரத்தைப் பெருக்க இயலும். பழவகைகள் உங்களுக்கு பலம் சேர்க்கும். இன்னும் மூன்றரை ஆண்டுகளில் உங்கள் கடன் பிரச்னை முற்றிலுமாக முடிவிற்கு வரும். உங்கள் கடையினில் சிறிய அளவிலான விநாயகர் சிலையை வைத்து, அவர்தம் கரத்தினில் சிறிய அளவிலான வேலாயுதத்தினையும் வைத்து ‘வேல்பிள்ளையாராக’ வழிபட்டு வாருங்கள். கீழ்காணும் ஸ்லோகத்தினைச் சொல்லி ‘வேல்பிள்ளையாரை’ வணங்கிவர கடன் பிரச்னை விரைவில் தீரும்.

“தாரகஸ்யவதாத் பூர்வம் குமாரேணப்ரபூஜித:
ஸதைவ பார்வதீ புத்ர: ருணநாசம் கரோதுமே.”


என் மகளுக்கு 29 வயது ஆகியும் இன்னும் திருமணமாகவில்லை. தங்கைக்கு திருமணம் செய்த பின்பு தானும் திருமணம் செய்து கொள்வேன் என்று என் மகனும் காத்திருக்கிறான். என் மகளின் திருமணம் விரைவில் நடந்தேற நல்லதொரு பரிகாரம் சொல்லுங்கள். சாந்தி, திருச்சி.

கிருத்திகை நட்சத்திரம், மேஷ ராசி, துலாம் லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகளின் ஜாதகத்தில் தற்போது ராகுதசையில் சனி புக்தி நடந்து வருகிறது. உங்கள் மகளின் ஜாதகப்படி 22வது வயதில் திருமண யோகம் வந்திருக்கிறது. வந்த வாய்ப்பினை தட்டிக் கழித்ததால் தற்போது அவதிப்படுகிறீர்கள். ‘எதைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்ற கணக்கில் பரிகாரங்கள் அனைத்தும் செய்திருப்பதாக எழுதியுள்ளீர்கள். நாகதோஷம் உட்பட எந்தவிதமான தோஷமும் உங்கள் மகளின் ஜாதகத்தில் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

தற்போது நடைபெற்றுள்ள குருபெயர்ச்சி அவருடைய ராசிக்கு சாதகமாக இருப்பதால் முழுமுயற்சியுடன் மாப்பிள்ளை தேடுங்கள். தொலைதுரத்தில் பணி செய்யும் மாப்பிள்ளை வெகுவிரைவில் அமைவார். தொடர்ந்து ஆறு வாரங்களாக செவ்வாய்க்கிழமை தோறும் வயலூர் சுப்ரமணிய ஸ்வாமி ஆலயத்திற்குச் சென்று இரட்டை அகல் விளக்குகளை ஏற்றி வைத்து உங்கள் மகளை பிரார்த்தனை செய்யச் சொல்லுங்கள். கீழேயுள்ள ஸ்லோகத்தைச் சொல்லி தினமும் காலை, மாலை இருவேளையும் சுப்ரமணியரை வழிபட்டு வர விரைவில் உங்கள் இல்லத்தில் மங்கள இசை ஒலிக்கும்.

“ஸ்ரீகௌரீகர்ப்பஜாதாயஸ்ரீகண்டதநயாய ச ஸ்ரீகாந்தபாகினேயாயஸ்ரீமத்ஸ்கந்தாய மங்களம்
ஸ்ரீவல்லீரமணாயாதஸ்ரீகுமாராயமங்களம் ஸ்ரீதேவஸேநாகாந்தாயஸ்ரீவிசாகாய    மங்களம்.”


அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனராகப் பணி செய்து வந்த எனக்கு கடந்த 2014ம் ஆண்டில் விபத்து ஏற்பட்டு வலது கால் மூட்டில் அடிபட்டு விட்டது. சிகிச்சை மேற்கொண்டும் பஸ்ஸில் தொடர்ச்சியாக நின்றுகொண்டு நடத்துனர் பணி செய்ய இயலவில்லை. மாற்றுப் பணிக்கு மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. கடந்த சிலமாதங்களாக சம்பளமின்றி அவதிப்படும் எனக்கு மாற்றுப்பணி கிடைக்க உரிய பரிகாரம் சொல்லி உதவிடுங்கள். மனோகரன், ராமநாதபுரம்.

சுவாதி நட்சத்திரம், துலாம் ராசி, துலாம் லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தின்படி தற்போது கேது தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. ஏழரைச் சனியும், பாதகமான தசையும் சேர்ந்து உங்களுக்கு அதிக சிரமத்தைத் தந்திருக்கிறது. தற்போது ஏழரைச் சனி உங்களை விட்டு விலகும் நேரம் என்பதால் உங்களுக்கான மாற்றுப்பணி விரைவில் கிடைத்து விடும். உத்யோக ஸ்தானத்தில் ராகு அமர்ந்திருப்பதும், ஜீவனஸ்தானாதிபதி சந்திரன் ஜென்ம லக்னத்தில் அமர்ந்திருப்பதும் உங்கள் பணியை உறுதி செய்கிறது.

2020 ஏப்ரல் மாத வாக்கில் பணி நிறைவு செய்து ஓய்வு பெற்ற பின்பும், வீட்டினில் ஓய்வாக அமர்ந்திருக்காமல் தனியார் துறையில் வேறுபணியைத் தேடிக்கொண்டு தொடர்ந்து பணி செய்வீர்கள். உங்கள் உடல்நிலை அதற்கு முழுமையாக ஒத்துழைக்கும். வாழ்வின் இறுதி மூச்சுவரை உழைக்கத் தயாராக இருக்கும் நீங்கள் இந்தத் தற்காலிக சோதனையைக் கண்டு அஞ்சத் தேவையில்லை. தேவிபட்டிணம் சென்றுகடலில் குளித்து நவகிரக வழிபாடு செய்யுங்கள். திங்கட்கிழமை தோறும் அருகிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று வழிபட்டு வாருங்கள். மாற்றுப்பணியோடு சம்பள நிலுவையும் வந்து சேரும்.

என் மகனுக்கு திருமணமாகி 15 வருடங்கள் ஆகின்றது. இதுவரை சந்தான பாக்கியம் கிடைக்கவில்லை. பிதுர்கர்மா உட்பட எல்லா பரிகாரங்களையும் செய்து விட்டோம். இறைவனுக்கு ஏனோ எங்கள் மீது கருணை பிறக்கவில்லை. என் ஆயுள் முடிவதற்குள் பேரப்பிள்ளையை பார்ப்பேனா? தாங்கள்தான் ஒரு நல்வழி காட்ட வேண்டும். ஓய்வுபெற்ற ஆசிரியர், மணப்பாறை.

ரேவதி நட்சத்திரம், மீன ராசி, மிதுன லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகத்தினையும், அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, மகர லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மருமகளின் ஜாதகத்தையும் ஆராய்ந்ததில் தற்போது சாதகமான கிரகநிலை கூடி வந்துள்ளதாகத் தெரிகிறது. இருவரின் ஜாதகத்திலும் புத்திர ஸ்தானாதிபதி சுக்கிரன் நல்ல நிலையில் அமர்ந்திருந்தாலும், வீர்ய ஸ்தானத்தில் கேதுவின் அமர்வு தடையை உருவாக்கியுள்ளது. எனினும் உங்கள் மருமகளின் ஜாதகப்படி 02.09.2018 வரை நேரம் சாதகமாக உள்ளது. உங்கள் மகனின் ஜாதக பலமும் துணை நிற்கிறது. உரிய மருத்துவ ஆலோசனையைப் பெற்று அதன்படி நடந்துவரச் சொல்லுங்கள். சித்தர்களின் ஜீவசமாதிகளுக்குச் சென்று வழிபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள்.

இது சரியான பரிகாரமே. இதனைத் தொடர்ந்து செய்து வரச் சொல்லுங்கள். திங்கட்கிழமை தோறும் அருகிலுள்ள சிவாலயத்தில் நடைபெறும் அர்த்தஜாம பூஜைக்கு தம்பதியர் இருவரையும் தவறாமல் சென்று வழிபடச் சொல்லுங்கள். வீட்டில் இருந்து பசும்பால் காய்ச்சி, ஏலக்காய் பொடியையும், சர்க்கரையையும் சேர்த்து, ஆலயத்திற்கு எடுத்துச் சென்று அர்த்தஜாம பூஜையில் நிவேதனம் செய்து பக்தர்களுக்கு விநியோகம் செய்வதோடு, இவர்கள் இருவரையும் பால் பிரசாதத்தை உட்கொள்ளச் சொல்லுங்கள். இறைவனின் அருளால் விரைவில் வம்சம் விருத்தியடையும்.

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா் திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை, பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் தினகரன் ஆன்மிக மலா் 229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம். பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • gggooooverrr

  அமெரிக்காவில் கவர்னர் பதவிக்கான போட்டிக் களத்தில் திருநங்கை - தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருநங்கை கவர்னர்

 • affffgaaaaa

  ஆப்கானிஸ்தானில் பள்ளியில் தற்கொலைப்படைத் தாக்குதல் - 48 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

 • iiiiiiiiiiitaaalyyy

  இத்தாலியில் நெடுஞ்சாலைப் பாலம் இடிந்து விழுந்து விபத்து - 39 பேர் பலி

 • keeeraaalaaaa

  கேரளாவில் கனமழை - வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 70ஆக உயர்வு 14 மாவட்டங்களிலும் 'ரெட்' அலர்ட்

 • buildingggggg1234

  சுதந்திர தின விழா - நாடு முழுவதும் அரசு கட்டிடங்கள் மூவண்ண நிறங்களில் ஜொலித்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்