SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பக்தர்களைக் காக்கும் பன்னீர் இலை பிரசாதம்

2017-10-11@ 15:29:58

திருச்செந்தூர்

‘கடற்கரையாண்டி’ பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? திருச்செந்தூரில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்குத்தான் இப்படி ஒரு செல்லப்பெயர். கடற்கரையோரம் நின்று அருட்பாலிப்பதால் இப்படி அழைக்கிறார்கள் பக்தர்கள். மூலவர் பெயர் பாலசுப்பிரமணியர். முருகனுக்குரிய அறுபடை வீடுகளில் இது இரண்டாம்படை வீடு. பதினாறாம் நூற்றாண்டில் நெல்லை மாவட்டம் திருவாங்கூர் மன்னர் ஆட்சிக்குட்பட்டிருந்தபோது, இந்தக் கோயில் சீரமைக்கப்பட்டது என்பதற்கான கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. எனினும் தற்போது நாம் காணும் கோயிலை உருவாக்கியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் மூவர் சுவாமிகள்: காசி சுவாமிகள், மௌன சுவாமிகள் மற்றும் ஆறுமுகசுவாமிகள். இவர்கள் மூவரும் தத்தமது காலங்களில் கோயிலைச் சுற்றி மண்டபங்களையும், கோபுரங்களையும் அமைத்துள்ளனர்.

இவர்கள் மூவரும் இத்தலத்திலேயே ஜீவசமாதியும் அடைந்துள்ளனர். இவர்களது சமாதிகள் இன்றும் கடற்கரையை ஒட்டி காணப்படுகின்றன. இவர்களுக்கு பின்னர் வந்த தேசிக மூர்த்தி சுவாமிகள் ராஜகோபுரத்தை கட்டியதாக கூறப்படுகிறது. இந்தத் திருக்கோயிலில் வள்ளி, தெய்வானை, மூலவர் கோயில்களுக்கு போத்திகளும், ஆறுமுகப்பெருமான், நடராஜர், சனீஸ்வரர் கோயில்களுக்கு சிவாச்சாரியார்களும் பூஜை செய்கின்றனர். வெங்கடாசலப்பெருமாள் கோயிலில் வைணவ ஆச்சாரியார்கள் பூஜை செய்கின்றனர். கோயில் திருப்பணி செய்த மூவர் சமாதிகளில் ஓதுவார்கள் பூஜை செய்கின்றனர். மூலவரின் இடது பாதத்தின் அருகே தங்கச் சீபலி வைக்கப்பட்டுள்ளது. வலது பாதத்தருகே வெள்ளியாலான சீபலி உள்ளது. இந்த சீபலி மூலவரைப் போலவே உள்ள ஒரு சிறு விக்ரகம்.

தினமும் கோயில் பிராகாரங்களில் வலம்வந்து எல்லா சந்நதிகளுக்கும் சென்று அந்தந்த கடவுளர்களுக்கு முறையாக நிவேதனம் செய்யப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கும் பொறுப்பு இந்த சீபலிக்கு உண்டாம். தன் கோயிலில் தன்னுடனேயே உறையும் பிற கடவுளர்களுக்கே படியளக்கும் இந்த பாலகுமாரன், தன்னை நாடும் பக்தர்களை எவ்வாறெல்லாம் பரிவுடன் பார்த்துக்கொள்வான் என்ற நிறைவு இந்தச் சீபலியைக் கண்டவுடனேயே தோன்றுகிறது. கேரள மன்னர் மார்த்தாண்டவர்மன் இவற்றை கோயிலுக்கு வழங்கியுள்ளார். முன்னூறு ஆண்டுகளுக்கு முன் திருவாவடுதுறை ஆதீனத்தை சேர்ந்த தேசிகமூர்த்தி சுவாமிகளின் கனவில் திருச்செந்தூர் முருகன் தோன்றி கோயில் திருப்பணியை மேற்கொள்ளும்படி ஆணையிட்டாராம்.

அதன்படி அவர் இங்கு தங்கி கோபுரம் கட்டி முடித்திருக்கிறார். அவ்வாறு கோபுரம் கட்டியபோது அந்தப் பணியில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு கூலி கொடுக்க அவரிடம் பணமில்லை. மனதார முருகனை வேண்டிக்கொண்டு, அவர் பிரசாதமான விபூதியை இலையில் மடித்து ஒவ்வொருவருக்கும் கொடுத்தார். தூண்டுகை விநாயகர் கோயிலைக் கடந்து சென்றதும் அந்த இலையைப் பிரித்துப் பார்க்குமாறு கூறினார். பணியாளர்களும் அப்படியே பார்த்தபோது தங்களுக்கான ஊதியம் அந்த இலை விபூதிக்குள் இருந்தது கண்டு அதிசயத்தனர். அதாவது அவரவர் செய்த வேலைக்கேற்ப ஒவ்வொருவருக்கும் தனித்தனியே தங்கக் காசுகளாக ஊதியம் கிட்டியது. ஆனால், கோபுரத்தின் ஆறாம் நிலை கட்டுமானப் பணி மேற்கொள்ளப்பட்டபோது இந்த அற்புதம் நின்றுவிட்டது. சுவாமிகள் மிகவும் வருந்தினார். ஆனால் அன்றிரவே முருகன் அவரது கனவில் தோன்றி காயல்பட்டினத்தில் வசிக்கும் சீதக்காதி என்னும் வள்ளலிடம் சென்று பொருள் பெற்று வருமாறு பணித்தார்.

ஆனால் வள்ளலோ, சுவாமிகள் கொடை கேட்டவுடனேயே ஒரு மூட்டை உப்பை எடுத்துக் கொடுத்தார். சுவாமிகளுக்கு ஏமாற்றமாகப் போய்விட்டது. பணத்தை எதிர்பார்த்தால் உப்பு கிடைக்கிறதே என்று வருந்தினார். ஆனாலும் எந்த மறுப்பும் சொல்லாமல் உப்பு மூட்டையை வாங்கிச் சென்றார். திருச்செந்தூர் வந்து சுவாமிகள் மூட்டையை திறந்து பார்த்தால் அதற்குள் தங்கக் காசுகள் இருந்ததைக் கண்டு வியந்தார். மிகுந்த மகிழ்ச்சியுடன் அதைக் கொண்டு கோபுரத்தைக் கட்டி முடித்தார் சுவாமிகள். சூரபத்மன் தனது குருவான சுக்கிராச்சாரியாரிடம் உபதேசம் பெற்று தனக்கு சர்வ வல்லமை வேண்டி சிவபெருமானை நோக்கி கடுந்தவம் மேற்கொண்டான். சிவபெருமான் அவனுக்கு காட்சி கொடுத்து தமது சக்தியன்று வேறு எந்த சக்தியாலும் அவனுக்கு மரணம் கிடையாது என்று வரம் அருளினார். அதன் பிறகு சூரபத்மனின் அட்டகாசத்திற்கு அளவே இல்லாமல் போனது. அவனால் துன்பத்திற்கு ஆளான தேவர்கள் பலரும் சிவனிடம் முறையிட்டனர்.

சூரனை அழிக்கவே சிவபெருமான் தனது ஞானக்கண்ணிலிருந்து ஆறு சுடர்களை உருவாக்கினார். அந்த ஆறு சுடர்களும் ஆறு குழந்தைகளாக உருவெடுத்தன. பார்வதிதேவி அந்த குழந்தைகளை எடுத்து ஒரே உருவமாக்கினார். ஐப்பசி மாதம் அமாவாசையை அடுத்த 6ம் நாள், முருகன் சூரனை வென்றான். இதுவே கந்த சஷ்டி என்று திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. சூரபத்மனின் தளபதிகளான யானைமுகன், சிங்கமுகன், சூரபன்மன் ஆகிய மூன்று அரக்கர்களை ஒழித்தான் முருகன். இக்காலத்திலும் இம்மூன்று அரக்கர்களும் மாயை, கன்மம், ஆணவம் ஆகிய குணங்களாக மக்களிடம் குடியிருக்கிறார்கள்; இவர்களை ஒழிக்கவும் திருச்செந்தூரான் அருள்பாலிக்கிறான். இந்த மூன்று துர்குணங்களையும் விட்டொழித்தால் சூரனைப்போல இறுதியில் இறைவனை அடைய முடியும்.

முருகனுக்கு அருகிலேயே அவனுக்கு மயிலாகவும், சேவலாகவும் உருமாறி சூரன் பணிவிடை செய்வது போன்ற பெரும் பேற்றினை அடையமுடியும். இந்த சூரசம்ஹார சம்பவத்தைச் சித்திரிக்கும் வைபவம் கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ நடக்கும். தீராத நோய் நீங்க வேண்டும் என்றும் பிள்ளைப்பேறு வேண்டியும், பல பக்தர்கள் சஷ்டி விரதம் மேற்கொள்கின்றனர். திருச்செந்தூரில் வியப்புக்குரிய ஓர் அம்சம், நாழிக்கிணறு. கடற்கரையை ஒட்டி வெகு அருகில் அமைந்துள்ள சிறிய கிணறு இது. இந்தக் கிணற்றிலிருந்து கிடைக்கும் நீர் உப்பு கரிப்பதில்லை என்பதும், இறைக்க இறைக்க வற்றாமல் நீர் அதே அளவில் சுரப்பதும் விடை காண முடியாத அதிசயமாகும். இது இயற்கை நீரூற்று.

இதன் அருகிலேயே உள்ள நீள்சதுர கிணற்றின் நீர் கந்தக நெடியுடன், கலங்கிக் காணப்படுவதிலிருந்து நாழிக் கிணற்றின் தெய்வாம்சத்தைப் புரிந்துகொள்ளலாம். கடலில் நீராடிய பக்தர்கள் இந்த நாழிக்கிணற்றில் குளித்து செல்வது வழக்கம். சூரபத்மனை போரில் வீழ்த்திய முருகன் தம் படையினரின் தாகம் தணிக்க கடற்கரையில் ஓரிடத்தில் தன் வேலால் குத்தி நீர் வரச்செய்தார். முருகனே உருவாக்கிய பெருமையுடையது இந்த நாழிக்கிணறு என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன. கோயிலின் வடபுறத்தில் வள்ளி குகை அமைந்துள்ளது. இங்கு திரிசுதந்திரர்கள் பூஜை செய்கின்றனர். குகைக்குள் நுழையும் வாயில் 4 அடி உயரமே உள்ளது. குனிந்துதான் செல்லவேண்டும். குகைக்குள் வள்ளியம்மன் சிலை சுவரையொட்டி அமைந்துள்ளது. முருகன் வள்ளியை சிறையெடுக்க வந்தபோது வள்ளியின் தந்தை நம்பிராசன் முருகனை துரத்தினான்.

முருகன், வள்ளியை இக்குகையில் ஒளிந்திருக்கச் சொல்லி, பிள்ளையாரை காவல் வைத்துவிட்டு போருக்குச் சென்றதாக புராணம் சொல்கிறது. தெய்வானையை திருமணம் முடித்து வருவதைக்கண்ட முதல் மனைவியான வள்ளி, முருகன் மீது கோபம் கொண்டு இக்குகையில் வந்து ஒளிந்து கொண்டதாகவும் ஒரு கதை கூறப்படுகிறது. இக்கோயிலில் இலை விபூதி பிரசாதம் வேறெங்கும் கிடைக்காதது. பன்னீர் மர இலைகளில் பன்னிரண்டு நரம்புகளுள்ள இலைகளாகத் தேர்ந்தெடுத்து அதனுள் விபூதியை வைத்து மடித்து கட்டு கட்டாக வைத்திருப்பர்.  நோயால் பாதிக்கப்பட்ட முனிவர் விசுவாமித்திரருக்கு அந்நோய் நீங்க ஆறுமுகப்பெருமான் தம் பன்னிரண்டு கைகளாலும் இலை விபூதியை வழங்கி அவரை முற்றிலும் குணப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

அந்த சம்பவம் இன்றும் நடைமுறையாகி இருக்கிறது. எந்த நோயினால் பீடிக்கப்பட்டாலும், இந்த இலை விபூதி பிரசாதம் நலமளிக்கும் என்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நம்புகிறார்கள். இக் கோயிலில் தனி சந்நதியில் அருட்பாலிக்கிறார், ஆறுமுகப்பெருமான். ஒரு காலத்தில் கேரளத்தவர்கள் இச்சிலையைக் கடத்திச் சென்றுவிட்டதாகவும் பிறகு குமரி மாவட்டம் பறக்கை என்ற ஊரில் இருந்த செட்டியார்கள் அதை மீட்டதாகவும் சொல்கிறார்கள். அவ்வாறு மீட்கப்பட்ட ஆறுமுகப் பெருமானுக்கு அவர்கள் தோசையும், சிறு பருப்பு கஞ்சியும் நிவேதனமாகப் படைத்திருக்கிறார்கள். இன்றும் ஆறுமுகப் பெருமானின் உதயமார்த்தாண்ட நைவேத்தியத்தில் தோசையும், கஞ்சியும் தவறாமல் இடம் பெறுகின்றன. கேரள மன்னர்களின் ஆளுகைக்குட்பட்ட காலத்தில்தான் இக்கோயில் பிரபலமடையத் துவங்கியது என்கிறார்கள். ஆகவே, கேரள முறைப்படி இங்கு போத்திகள் மூலஸ்தானத்தில் பூஜை செய்கிறார்கள்.

அவர்கள் கோயிலுக்குள்ளேயே தங்கி பூஜை காரியங்களில் ஈடுபடுகின்றனர். இக்கோயிலில் இன்னும் பூஜை புனஸ்காரங்கள் கேரள முறைப்படியே நடப்பதால், தரிசனத்திற்கு செல்லும் ஆண்கள் கோயிலுக்குள் சட்டை அணியாமல்தான் செல்ல வேண்டும். கேரளக் கோயில்களில் மேற்கொள்ளப்படும் துலாபார பிரார்த்தனை இங்கும் மேற்கொள்ளப்படுகிறது. கோயிலில் தினமும் உச்சிக்கால பூஜையின்போது மூலவருக்கு பாலாபிஷேகம் நடக்கும். முன்பு இதற்காக திருச்செந்தூரில் ஒவ்வொரு வீடாகச் சென்று பிச்சையெடுத்து பாலை வாங்கிவருவார்கள். இதற்கென இரண்டு ஊழியர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். இவர்களுக்கு தலா ஆறுமாதம் பால் பிச்சையெடுப்பது மட்டுமே வேலை. இப்படி வீடுவீடாக பிச்சையெடுத்து பாலாபிஷேகம் செய்வதால் இதனை பிச்சைப்பால் அபிஷேகம் என்றே சொல்கிறார்கள். ஆனால், தற்போது பக்தர்கள் தாமே கோயிலுக்கு நேரடியாக பால் கொடுத்து விடுவதால், பிச்சையெடுக்கும் வழக்கம் இல்லை.

கோயில் கோபுரத்தின் ஏழாவது நிலையில் மிகப்பிரமாண்டமான மணி ஒன்று உள்ளது. கட்டபொம்மன் காலத்திற்கு முன்பே இந்த மணி அமைக்கப்பட்டதாக கூறுகிறார்கள். இங்கு உச்சிகால பூஜையின் போது இந்த மணி ஒலிக்கும். திருச்செந்தூரிலிருந்து பாஞ்சாலங்குறிச்சி வரை பல்வேறு இடங்கள் மணிகளுடன் கூடிய மண்டபங்களை கட்டபொம்மன் கட்டியிருந்தார். திருச்செந்தூர் கோயில் பூஜையின்போது இந்த மணி ஒலித்ததும் அருகிலுள்ள மண்டபத்தில் உள்ள ஊழியர் ஒருவர் அங்கிருக்கும் மணியை அடிப்பார். அடுத்து சற்று தூரத்தில் உள்ள இன்னொரு மண்டபத்தில் அந்த ஒலியைக் கேட்டு, இங்கிருக்கும் மணியை ஒலிக்கச் செய்வார்கள்.  இந்த ஒலி அடுத்த மண்டபத்துக்குப் போகும். இங்கும் ஒலியெழுப்புவார்கள். இப்படியே ஒலிப் பயணம் பாஞ்சாலங்குறிச்சியை வந்தடையும்.

இந்த மணியோசை கேட்ட பின்னர்தான் கட்டபொம்மன் தனது அரண்மனையில் பூஜை செய்து உணவருந்துவார். கட்டபொம்மன் அமைத்த இத்தகைய மண்டபங்கள் ஒன்றிரண்டு இன்று சிதைந்த நிலையில் சாட்சிகளாகக் காணப்படுகின்றன.‘தீராவினையெல்லாம் தீர்த்து வைப்பான் திருச்செந்தூர் ஆண்டவன்’ என்பது அனுபவசாலி பக்தர்களின் ஆணித்தரமான நம்பிக்கை. எத்தனையோ அற்புதங்களை இந்தக் குமரன் புரிந்திருக்கிறான். சமீபத்திய உதாரணம் இத்தலத்தை நெருங்காத சுனாமி. ஆமாம், சுற்று வட்டாரமெல்லாம் அலைகடலின் ஆக்ரோஷத் தாக்குதலுக்கு அடிபணிந்தபோது, திருச்செந்தூர் கோயில் பகுதி மட்டும் நிமிர்ந்து நின்றது. ‘இத்தனை நாள் புரண்டு புரண்டு வந்து என் பாதங்களைத் தொட்டு ஆசி பெற்றுத் திரும்பினாயே, இப்போது ஏன் விபரீத வேகத்தில் ஊரையே அழிக்கிறாய்? என்று இந்த பாலசுப்பிரமணியன் கோபித்துக் கொண்டானோ, இங்கு மட்டும் கடல் தன் அலைவரிசையைக் காட்டவில்லை.

இருநூறு ஆண்டுகளுக்கு முந்திச் செல்லலாமா? 1803ம் ஆண்டு நெல்லை மாவட்ட கலெக்டராக இருந்தவர் லூஷிங்டன் என்ற ஆங்கிலேயர். அவர் தம்முடைய அலுவல் காரணமாக திருச்செந்தூரில் முகாமிட்டிருந்தார். ஒருநாள் மாலைப்பொழுதில் தன் அலுவலக ஊழியர் ஒருவருடன் திருச்செந்தூர் ஆலயம் பக்கமாகச் சென்றார். அப்போது ஆலயத்தின் வசந்த மண்டபத்தில் செந்திலாண்டவனை கொலுவமர்த்தி பக்தர்கள் புடைசூழ ஆலய அர்ச்சகர்கள் கவரி வீசிக் கொண்டிருந்தனர். அதைப்பார்த்து கேலியாகச் சிரித்தார் லூஷிங்டன். ‘என்ன பைத்தியக்காரத்தனம் இது? ஒரு சிலைக்குப்போய் விசிறுகிறார்களே! ஜடப் பொருளுக்கு வியர்க்கவா செய்யும்?’ என்ற நையாண்டி அவருக்கு. உடனே கவரி வீசிக்கொண்டிருந்த அர்ச்சகர்களை தன்னிடம் வரச் சொன்னார். அவர்கள் வந்ததும், ‘‘உங்கள் கடவுளுக்கும் வியர்க்குமா என்ன? விசிறி விட்டுக் கொண்டிருக்கிறீர்களே,’ என்று கேலியாகக் கேட்டார்.

‘ஆமாம்,’ என்று உறுதியாகச் சொன்னார்கள் அர்ச்சகர்கள். ஆங்கிலேயர் அதிர்ந்து போனார். ‘இது எங்கள் சம்பிரதாயம், அதனால் இதை விடாமல் செய்து கொண்டிருக்கிறோம்; முட்டாள்தனம்தான் என்று தெரிந்தாலும் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதால் விட முடியவில்லை’ என்று ஏதாவது மழுப்பலாக சமாதானம் சொல்வார்கள் என்று எதிர்பார்த்தால், இவ்வளவு ஆணித்தரமாக ‘ஆமாம்,’ என்கிறார்களே என்று அவருக்கு வியப்பு. ஆனாலும் தன் வீம்பை விட்டுக் கொள்ளாமல், ‘எங்கே, நான் அந்த வியர்வையைப் பார்க்க முடியுமா?’ என்று கேட்டார். உடனே அர்ச்சகர்கள் சுவாமிக்கு செய்யப்பட்டிருந்த அலங்காரங்களை களைந்தார்கள். வெற்றுச் சிலையாக நின்றிருந்த முருகப் பெருமானுக்கு வெறும் வஸ்திரம் ஒன்றை மட்டும் போர்த்தினார்கள். உலர்ந்த அந்த வஸ்திரம், கொஞ்சம் கொஞ்சமாக ஈரம் உறிஞ்ச ஆரம்பித்தது. அதைப் பார்த்துத் திடுக்கிட்ட லூஷிங்டன், தான் வியர்த்துப் போனார். இது என்ன மாயம்! அது எப்படி முடியும்?

ஆனால், நேரமாக  ஆக அந்த துணி முற்றிலுமாக ஈரமாகிவிட்டது. ஏன், வியர்வை நீர் துணியிலிருந்து சொட்டவும் ஆரம்பித்தது! அந்த அதிகாரி அப்படியே அப்போதே மனதார மன்னிப்பு கேட்டுக் கொண்டார். அதுமட்டுமல்ல, செந்திலாண்டவருக்குக் காணிக்கையாக பல வெள்ளிப் பாத்திரங்களை அளித்தார். அந்தப் பாத்திரங்கள் இன்றும் அந்த முருகன் நிகழ்த்திய அற்புதத்திற்குச் சான்றாக ஆலயத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இன்னொரு அற்புதத்தையும் பாருங்கள்: ஆதிசங்கரரின் மேல் அபிநவ குப்தன் எனும் மாந்திரீகன் பொறாமை கொண்டான். பிறருக்கு தீங்கினை விளைவிக்கக் கூடிய ஆபிசார ஹோமம் என்ற யாகத்தைச் செய்து அவர் மேல் காசநோயை ஏவினான். நோய் ஆதிசங்கரரைப் பற்றியது.

அந்த பாதிப்போடு, மனம் வருந்தியவராக, கோகர்ணேஸ்வரரை தரிசனம் செய்தார் அவர். அன்றிரவு அவருடைய கனவில் கோகர்ணேஸ்வரர் தோன்றி ‘திருச்செந்தூர் சென்று கந்தவேளைப் பாடுக’ என ஆணையிட்டார். அதன்படி திருச்செந்தூர் வந்தார் ஆதிசங்கரர். அதிகாலையில் ஐந்துதலை நாகம் ஒன்று மூலவர் முருகனை வழிபடும் காட்சியை சிலிர்ப்புடன் கண்டார். உடனே சுப்ரமண்ய புஜங்கம் எனும் அதியற்புதமான துதியை மனமுருகிப் பாடினார். அவரது காசநோய் அப்போதே காணாமல் போயிற்று. இந்த சுப்ரமண்ய புஜங்கத்தை படிப்பவர்கள் அனைவரும் தம் துயரெல்லாம் நீங்கி வாழ்வில் எல்லா நலன்களையும் பெறுவார்கள் என்பது ஆன்றோர் வாக்கு.

பிரபுசங்கர்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • chinaearthquake

  சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

 • meteorshower

  ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

 • indonesiaafterquake

  இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

 • sijaapanda

  சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

 • inpendencedayrehearsal

  செங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்