SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நிலம், வீடு அமையும் யோகம் எப்படி?

2017-10-11@ 15:26:57

நேரம், காலம், அமைப்பு வரும்போது எல்லாம் தானாக கூடிவரும்  இது காலங்காலமாக படித்தவர் முதல் பாமரர் வரை சொல்லும் ஆறுதலாகும். அது என்ன நேரம், காலம், அம்சம், அமைப்பு, பாக்கியம், யோகம்? இது எல்லோருக்கும் வராதா. சிலர் வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டே காலத்தை கழித்து விடுகிறார்கள். பலருக்கு சாண் ஏறினால் முழம் சறுக்குகிறது. ஒருசிலர் பிறப்பு முதல் இறப்பு வரை சகல சௌபாக்கியங்களுடன் வாழ்ந்து மறைகிறார்கள். இப்படி எல்லா விஷயங்களிலும் நிறை, குறைகள், ஏற்றத்தாழ்வுகள் நம்முடைய வாழ்க்கையில் பின்னி பிணைந்துள்ளன. எல்லா நிகழ்வுகளும் இறைவனால் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டு ஜாதக கிரக அமைப்பின்படி அந்தந்த காலகட்டத்தில் கிரக சக்திகளால் நமக்கு அருளப்படுகிறது. இதை பூர்வ புண்ணிய சுகிர்த விசேஷம். நம் கர்ம வினைக்கேற்ப நாம் வாங்கி வந்த வரம் என்று சொல்லலாம்.

எதுவொன்றும் அவரவர் பிராரப்தப்படி அவரவருக்கு வந்து சேரும் என்பது ஜோதிட வாக்காக மட்டும் அல்லாமல் அனுபவபூர்வ உண்மையாகவும் உள்ளது.
ஜாதகத்தில் நாலாம் வீட்டை சாஸ்திரம் சதுர்த்த கேந்திரம் என்று சொல்கிறது. லக்னம், லக்னாதிபதி மூலம் ஜாதகம் இயக்கப்பட்டாலும் சில இடங்களுக்கு முக்கிய ஆதிபத்தியம் தரப்பட்டுள்ளது. அந்தவகையில் இது சுகஸ்தானம். அதாவது, உடல்நலத்தைக் குறிக்கும் இடம். ஆரோக்கியம்  நன்றாக இருக்கும் பொழுதுதான் அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்படுகிறது. ஆகையால் இந்த நான்காம் வீடு நமக்கு பல்வேறு விஷயங்களை உணர்த்துகிறது.

தாயார், தாய்வழி உறவுகள், பிறந்த இடம், வாழ்விடம், வசிப்பிடம், குடும்ப வரலாறு, வீட்டில் இன்பம், உறவுகளுடன் உள்ள பந்தபாசம், வாழ்வில் வசந்தம், சுகம், பாக்கியம், கல்வி, போஜனம், ஜீரணம், கர்ப்பஸ்தானம், கற்புநெறி, தடுமாற்றம், கவலை, நோய், வாகனம், நிலம், மண், சொத்து, வீடு, தோப்பு துறவு, தோட்டம், எஸ்டேட், விவசாயம், மாடமாளிகை, பங்களா, ஆடு, மாடு, பசு, குதிரை, ஒட்டகம், யானை போன்ற கால்நடைகள் என பல்வேறு முக்கிய அம்சங்கள் இந்த வீட்டில் இருந்து அறியப்படுகிறது. மேலும் வாழ்வின் இறுதி நிலை, ரகசிய வாழ்க்கை, புதையல் (பினாமி சொத்து) உழைப்பில்லாமல் சேரும் செல்வம். தீய நட்பு, தீய பழக்கங்கள் என பல அம்சங்களும் புதைந்து கிடக்கின்றன.

தனயோகம்  வீடு பாக்கியம்


ஜாதகத்தில் ராசி மற்றும் நவாம்சம் ஆகிய இரு கட்டங்களை மையமாக வைத்துத்தான் இப்பொழுது பலன் பார்க்கிறோம். ராசிக்கட்டத்தைவிட நவாம்ச கட்டம் பலமாக, யோகமானதாக இருக்க வேண்டும் என்பது ஜோதிட சாஸ்திர விதியாகும். இதில் லக்னம், லக்னாதிபதி என்ற அம்சங்கள் மிக முக்கியமானவை. இங்கிருந்துதான் ஒருவரின் ஜாதகம் இயக்கப்படுகிறது. பொதுவாக தனயோகம் 1, 2, 5, 9, 11 ஆகிய இடங்கள் மற்றும் அந்தந்த வீட்டின் நாயகர்கள் மூலம் நிர்ணயிக்கப்படுகிறது. இரண்டாம் இடம் தன, வாக்கு, குடும்பஸ்தானம், செல்வ நிலை, வரவு, செலவு பற்றி தெரிவிக்கிறது. 5, 9 வீடுகள் சொத்து, பணம், நகை, அஷ்ட ஐஸ்வர்யங்கள், உயில் சொத்து பினாமி சொத்து, பணம் போன்றவற்றைக் குறிப்பவை.

11ம் இடம் லாபம், வருவாய் பெருக்கம் போன்றவற்றைப் பேசும். ஜாதகக் கட்டத்தில் சில கிரகங்கள் நல்ல நிலையில் கூடியிருக்கும்போதும், நீச நிலையில் பார்த்துக்கொண்டிருக்கும்போதும் பலவிதமான உச்ச உயர்நிலை பாக்கிய அம்சங்கள் பிறக்கும்போதே அமைந்துவிடுகின்றன. சில மகா பாக்கியவான்கள் பிறக்கும்போதே மிட்டா, மிராசுதார், ஜமீன்பரம்பரையில் பிறக்கிறார்கள். சிலர் அளப்பரிய சொத்துகள் உள்ள பெரிய செல்வந்தர் வீட்டில் பிறக்கிறார்கள். சிலர் பெரிய தொழிலதிபர்களின் வாரிசுகளாக பிறக்கிறார்கள். இன்னும் சிலருக்கு பெரிய கோடீஸ்வரர் வீட்டில் தத்துப்புத்திரனாக செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. பூர்வ புண்ணிய பாக்கிய பலம் காரணமாக பூர்வீகச் சொத்து, பிதுரார்ஜித சொத்து அமைகிறது. பலருக்கு மனைவி வந்த வேளை சொத்து சேருகிறது. பிள்ளைகள் சம்பாத்தியம் மூலம் சிலருக்கு சொந்த வீட்டில் வாழும் பாக்கியம் கிடைக்கிறது.

கேந்திர ஸ்தானங்கள்

ஒரு ஜாதகத்தில் விதி, மதி, கதி என்று மூன்று அமைப்புகள் உண்டு. அதாவது, விதி என்றால் நாம் பிறந்த லக்கினம், மதி என்றால் நாம் பிறந்த ராசி, கதி என்றால் சூரியன் இருக்கும் ராசி. இதில் பிரதானமாக லக்னம் மூலம்தான் மற்ற பாவங்களை பார்த்து பலன் அறிகிறோம். லக்னம் என்பது முதல் கேந்திரம். லக்னம், லக்னாதிபதி பலம் பெறுவது மிகவும் அவசியம். ஒருவரின் அறிவு, ஆற்றல், புகழ், கீர்த்தி, நடத்தை போன்ற பலப்பல விஷயங்கள் இங்கிருந்துதான் வெளிப்படுகின்றன. அடுத்தது சதுர்த்த கேந்திரம் எனும் நான்காம் இடம். ஒருவரின் உடல்நலம், சுகம், கல்வி, தாய், வீடு, வயிற்றுப்பசி ஆகியன இங்கிருந்து அறியப்படுகின்றன. அடுத்தது சப்தம கேந்திரம் எனும் ஏழாம் இடம். ஒருவரின் திருமணம், மனைவி, பயணங்கள், காமம் ஆகியனவற்றை அறிவிப்பது. கடைசியாக தசம கேந்திரம் எனும் பத்தாம் இடம். இது ராஜ்யஸ்தானம், ஜீவனஸ்தானம், கர்மஸ்தானம், வியாபாரம், வேலை ஜீவனபசி என பல முக்கிய விஷயங்களை இங்கிருந்து அறிந்துகொள்ளலாம். இந்த நான்கு கேந்திரங்களும் மிக முக்கியமானவை. ஒன்றுடன் ஒன்று தொடர்பு உடையவை.

பூமி யோகம்

ஜாதக கட்டத்தில் வசிப்பிடம், சொந்த வீடு, என்பதைப் பற்றி  லக்னத்திற்கு நான்காம் வீடான சுகஸ்தானம் உணர்த்துகிறது. சொந்த வீட்டில் சகல வசதிகளுடன் வாழ்க்கையை அனுபவிப்பதற்கு நமக்கு பாக்கியம் தேவை. சிலர் சொந்த வீடு பிளாட் வைத்திருப்பார்கள். ஆனால், அதை வாடகைக்கு விட்டு விட்டு வேறு இடத்தில் வாடகைக்குக் குடியிருப்பார்கள். செவ்வாய் பூமிக்காரகன். நமக்கு பலவகையில் சொத்து சேரவேண்டும் என்றால் நம் ஜாதகத்தில் செவ்வாயின் பரிபூரண அருள் தேவை. பூமி செவ்வாய் என்றால் அந்த நிலத்தின் மேல் கட்டப்படும் கட்டிடம் சுக்கிரன். ஆகையால் சுகபோக பாக்கியங்களை அருளும் சுக்கிரன் ஜாதகத்தில் நன்றாக இருக்கவேண்டியதும் மிக அவசியம். உங்கள் லக்னத்திற்கு நான்காம் அதிபதி எந்த கிரகமோ அந்த கிரகம் ராசி, நவாம்ச கட்டங்களில் நல்ல பலத்துடன்  இருந்தால் எல்லா சுகங்களும், நலன்களும் கிடைக்கும்.  

கிரகங்கள் பல சேருவதால் வரும் யோகத்தைவிட, கிரக பரிவர்த்தனையால் வரும் பாக்கியத்தைவிட, கிரக உச்ச, ஆட்சியால் வரும் ராஜயோகத்தைவிட, கிரகங்கள் குறிப்பிட்ட சொந்த வீட்டைப் பார்க்கின்றபோதுதான் சகல சௌபாக்கியங்களையும் ஒருவரால் பெறமுடிகிறது. லக்னத்திற்கு நான்காம் வீட்டிற்குரிய கிரகம் கேந்திர, திரிகோணங்களில் இருந்தால் சுகபாக்கிய யோகம். லக்னத்தில் 4ம் அதிபதி இருந்தால் ராஜ யோகம். மனைவி மூலம் சொத்து சேரும். இரண்டாம் இடத்தில் இருந்தால் வாடகை வருமானம் கிடைக்கும். மூன்றாம் இடத்தில் இருந்தால் திடீர் யோகம் மூலம் சொத்து குவியும்.

நான்காம் இடத்தில் இருந்தால் நிலபுலன்கள், விவசாய வருமானம் வரும். ஐந்தாம் இடத்தில் இருந்தால் மாமன், மாமனார் மூலம் சொத்து சேரும்; பிள்ளைகளால் உயர்வடைவார்கள். ஏழாம் இடத்தில் இருந்தால் கேந்திர யோகம். சொத்து சுகம் எப்போதும் உண்டு. 7ம் வீடு, 4ம் வீட்டிற்கு 4ம் வீடு என்பதால் மனைவி பெயரில் வீடு மற்றும் சொத்து வாங்குவார்கள். மனைவி மூலம் சொத்து ேசரும். ஒன்பதாம் இடத்தில் இருந்தால் தகப்பனார் மூலம் பாகப்பிரிவினை சொத்து கிடைக்கும். பத்தாம் இடத்தில் இருந்தால் தொழில், வியாபாரம் மூலம் சொத்து சேரும். உயில் சொத்து கிடைக்கும். தாய்வழி சொத்து வரும்.

விபரீத ராஜயோகம்


நான்கு, ஐந்து, ஒன்பது ஆகிய ஸ்தானங்களில் அல்லது அதன் அதிபதிகளின் சாரம் அல்லது’ அந்த கிரகங்களுடன் 6, 8, 12ம் அதிபதிகள் சேரும்போது, பரிவர்த்தனை அல்லது ஒருவரை ஒருவர் சமசப்தமமாகப் பார்க்கும்பொழுது அந்த தசா யோக அம்சத்தில் இருந்தால் திடீரென்று செல்வம், செல்வாக்கு, சொத்து குவியும். நீசகிரகம் நீச்ச பங்கமாகி சையை நடத்தும்போது அதேபோன்று ராஜயோக பலன்கள் கிடைக்கும். பெரிய செல்வந்தர்களுக்கு பினாமியாகும் வாய்ப்பு உண்டாகும். கோடி ரூபாய் கொடுத்து கார் வாங்க முடியாவிட்டாலும், அந்த காரின் ஓட்டுநராக இருக்கும் பாக்கியம் கிடைக்கும். பல நூறு ஏக்கர் காப்பி, தேயிலை தோட்டங்களை சொந்தமாக வாங்க முடியாவிட்டாலும் அதை நிர்வாகம் செய்து அனுபவிக்கிற பாக்கியம் அமையும். நமக்கு சொந்தமாக அமைவது ஒருவகை பாக்கியம். அடுத்தவருக்கு அமைவதை நாம் அனுபவிப்பது ஓர் அதிர்ஷ்டம்.

நிலம்வீடுசொத்து வரும் வழி சேரும் நேரம்:

ஜாதக அமைப்பின்படி தற்போது நடைபெறும் காலநேரம்தான் ஒருவருக்கு எல்லா வகையான பாக்கியங்களையும் தருகிறது. திருமணம், குழந்தைப் பேறு, தொழில், வேலை வாய்ப்பு, சொத்து வாங்குவது, சேருவது எல்லாமே யோக தசைகளால்தான் கிடைப்பவை. கோச்சார அமைப்பு என்று சொல்லப்படும் கிரக பெயர்ச்சிகள் மூலம் மிகச்சிறிய அளவில் பயன் கிடைக்கும். உதாரணத்திற்கு குருபலம் வருவதால் திருமணம் கூடிவராது. ராசிக்கு சனி 4ல் வரும்போது இடமாற்றம், ஊர் மாற்றம், சொந்த வீட்டில் பால் காய்ச்சும் யோகம் இருக்கும். 7½ சனி நடக்கும்போது ஒருவருக்கு சுபபலன்கள் கிடைக்கும். தசாபுக்தி சாதகமாக இருந்தால் செல்வ யோகம் உண்டு. தொடர்ந்து சுபசெலவுகள் அமையும். அதேநேரத்தில் சற்று அலைச்சல், அநாவசிய செலவுகள், சில மனக்கசப்புகள் இருக்கத்தான் செய்யும். நிறை அதிகமாக இருக்கும்போது குறைகள் நமக்கு பாதிப்பைத் தராது. பொதுவாக 1, 2, 4, 5, 9, 10  வீடுகள் சம்பந்தப்படுகின்ற தசாபுக்திகளில் ஒருவருக்கு பல நல்ல அம்சங்கள் கூடிவரும். இப்படிப்பட்ட சுபயோக சுப கால நேரங்களில்தான் ஒருவரின் ஜாதகத்தில் உள்ள சிறப்பு வாய்ந்த யோகங்கள் வேலை செய்யும்.
மாதுர்காரகன்

சந்திரன், சதுர்த்த கேந்திரத்தை ஆள்கிறார். ஆகையால் சந்திரன் மூலம் உண்டாகின்ற சந்திராதி யோகங்கள், சொத்து அளிக்கும். அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் கிரக அமைப்புகள் ஏராளமாக உள்ளன. அவற்றில் ஒன்று சந்திரமங்களயோகம். அதாவது, சந்திரனுக்கு கேந்திரத்தில் மங்களன் என்ற செவ்வாய் இருப்பது. அதுபோலவே சந்திரனுக்கு கேந்திரத்தில் சுக்கிரன், லக்னாதிபதி சம்பந்தப்படுவது. கோடிகளில் புரள குருகேது சம்பந்தம் பெற்று இருப்பது. வீடு கட்டுவதற்கான கட்டுமானப் பணிகளில் உள்ளவர்கள், செங்கல், மணல், சிமெண்ட், கம்பி, வீட்டு வரைபடங்கள், உள் அலங்காரங்கள், பிளாட் போட்டு விற்பவர்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி விற்பவர்கள். புரோக்கர்கள், பேச்சுத் தரகு, கமிஷன் பெறுபவர்களுக்கெல்லாம் இதைப்போன்ற கிரக அமைப்புகள் வேலை செய்யும்போது எல்லா வகையிலும் தொட்டது துலங்கும், மண் மனை பிராப்தம் கிடைக்கும். மண்ணில் செய்த முதலீடு பொன், பொருள் செல்வமாக பயன்தரும்.

ஜோதிட முரசு மிதுனம் செல்வம்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • gggooooverrr

  அமெரிக்காவில் கவர்னர் பதவிக்கான போட்டிக் களத்தில் திருநங்கை - தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருநங்கை கவர்னர்

 • affffgaaaaa

  ஆப்கானிஸ்தானில் பள்ளியில் தற்கொலைப்படைத் தாக்குதல் - 48 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

 • iiiiiiiiiiitaaalyyy

  இத்தாலியில் நெடுஞ்சாலைப் பாலம் இடிந்து விழுந்து விபத்து - 39 பேர் பலி

 • keeeraaalaaaa

  கேரளாவில் கனமழை - வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 70ஆக உயர்வு 14 மாவட்டங்களிலும் 'ரெட்' அலர்ட்

 • buildingggggg1234

  சுதந்திர தின விழா - நாடு முழுவதும் அரசு கட்டிடங்கள் மூவண்ண நிறங்களில் ஜொலித்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்