SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கெட்டி மேளம் கொட்டும்!

2017-09-25@ 12:33:54

வாழ்க்கையில் தொடர்ந்து ஏமாற்றத்தை சந்தித்து வரும் நான் யாரை நம்ப வேண்டும்? ராமன் சீதையையா, சிவன்  பார்வதியையா, அம்மா அப்பாவையா, என் காதலனையா அல்லது மேலே போக வேண்டுமா? நீங்கள் சொல்கிற பதிலில்தான் என் வாழ்க்கை உள்ளது.  கோமதி, விருத்தாசலம்.

முதலில் நீங்கள் உங்களை நம்ப வேண்டும். “நான் ஒரு ராசி இல்லாதவள், அதிர்ஷ்டம் இல்லாத மூதேவி, உலகத்தில் மிகமிக மோசமான பெண்”
என்றெல்லாம் உங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். உங்கள் மீதே உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் எதைப் பார்த்தாலும் சூன்யமாகத்தான் தோன்றும், யாரைப் பார்த்தாலும் நம்பிக்கை இல்லாமல்தான் போகும். திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசியில் நீங்கள் பிறந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். திருவாதிரை என்பது பரமேஸ்வரனின் நட்சத்திரம். சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரத்தில் பிறந்துள்ள நீங்கள் இவ்வாறு நம்பிக்கையற்ற நிலையில் யோசிப்பதே தவறு.

காதலன் ஏமாற்றுகிறான் என்று தெரிந்தும் ஏன் தொடர்ந்து ஏமாந்து கொண்டிருக்கிறீர்கள்? ஜாதி வித்தியாசம் பார்க்கும் அவரை விட்டு விலகுங்கள். காதலைத் தவிர இந்த உலகத்தில் சாதிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. 26 வயது வரை உங்களை வளர்த்திருக்கும் உங்கள் பெற்றோருக்கு என்ன கைமாறு செய்திருக்கிறீர்கள்? முத்தான கையெழுத்தினைப் பெற்றிருக்கும் நீங்கள் அதன் துணைகொண்டு ஒரு வேலையைத் தேடிக் கொள்ளுங்கள். வாழ்வினில் சுவாரசியம் பிறக்கும். தொடர்ந்து 11 திங்கட் கிழமைகள் விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தை 11 முறை வலம் வந்து வணங்குங்கள். மனம் தெளிவடையும்.

பன்னிரண்டாம் வகுப்பில் ஸ்டேட் ரேங்க் எடுத்த என் மகன் கல்லூரியில் சேர்ந்த பின் சகவாச தோஷம் மற்றும் ஒருதலை காதலினால் மனம் உடைந்து குடி மற்றும் கஞ்சாவிற்கு கடந்த எட்டு வருடங்களாக அடிமை ஆகிவிட்டான். வங்கியில் பணி புரிந்து கை நிறைய சம்பளம் வாங்கியும் வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமல் இருக்கிறான். அவன் நல்வாழ்வு பெற என்ன செய்ய வேண்டும்? பெயர் வெளியிட விரும்பாத சென்னை வாசகி.

சிம்ம லக்னத்தில் உங்கள் பிள்ளை பிறந்திருப்பதாக நீங்கள் அனுப்பியுள்ள ஜாதக நகல் சொல்கிறது. துல்லியமாகக் கணக்கிட்டுப் பார்க்கும்போது அவர் கடக லக்னத்தில், புனர்பூச நட்சத்திரம், மிதுன ராசியில் பிறந்துள்ளார் என்பது தெளிவாகிறது. அவரது ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் அமர்ந்துள்ள கேது அவருடைய மனதில் விரக்தியான எண்ணத்தினைத் தோற்றுவித்துள்ளது. எனினும் குருசந்திர யோகமும், சூரியன்புதன்செவ்வாய் ஆகியோரின் இணைவும், சுக்கிரனின் ஆட்சி பலமும் அவரை நல்ல நிலையிலேயே வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

அருமையான வாய்ப்பையும், வாழ்க்கையையும் பயன்படுத்திக் கொள்ளத் தெரியாத அளவிற்கு போதை அவர் கண்ணை மறைக்கிறது. தற்போது புதன் தசை துவங்கி உள்ளதாலும், புதன் உச்ச வலிமை பெற்று, சுக்கிரனின் சாரத்தில் சஞ்சரிப்பதாலும் விரைவில் மீண்டு வருவார் என்று நம்புவோம். அதற்கு முன்பாக நீங்கள் குறிப்பிட்டுள்ள பித்ரு கர்மா, குலதெய்வ வழிபாடு முதலானவற்றை குறைவின்றி செய்து முடியுங்கள். எல்லாவற்றிற்கும் கணவரை மட்டும் குறை சொல்லாதீர்கள். திங்கட்கிழமை தோறும் பிள்ளையார் கோயிலில் ஏழு அகல் விளக்குகள் ஏற்றி வைத்து வழிபட்டு வருவதோடு, அமாவாசை நாட்களில் ஆதரவற்ற தம்பதியருக்கு அன்னதானம் செய்து வாருங்கள். 13.02.2019க்குள் உங்கள் பிள்ளை போதையிலிருந்து மீண்டு நல்வாழ்வினைப் பெறுவார்.

காதல் திருமணம் புரிந்த என் கணவர் 17 வருடங்களுக்குப் பிறகு எனக்கு மாங்கல்ய தோஷம் உள்ளதாகக் கூறி, கணவனைப் பிரிந்த 19 வயது மகனை உடைய ஒரு பெண்ணுக்கு தாலிகட்டி தொடர்பு வைத்துள்ளார். ஜோதிடராகிய என் கணவர் அந்தப் பெண்ணை விட்டு விலகி வருவாரா? என் கணவர் நல்லபடியாக வாழ உரிய பரிகாரம் கூறுங்கள். கோயமுத்தூர் வாசகி.


துரோகம் செய்கின்ற கணவர் நல்லபடியாக வாழவேண்டும் என்று எண்ணும் உங்கள் நல்ல மனதிற்கு இறைவன் அருளால் ஒரு குறையும் வராது. அனுஷ நட்சத்திரம், விருச்சிக ராசி, மேஷ லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தையும், ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, மேஷ லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் கணவர் ஜாதகத்தையும் ஆராய்ந்ததில் உங்கள் ஜாதகத்தில் மாங்கல்ய தோஷம் ஏதுமில்லை என்பது தெளிவாகிறது. ஏழாம் வீட்டிற்கு அதிபதியாகிய சுக்கிரன் ஜென்ம லக்னத்திலேயே அமர்ந்திருப்பதால் உங்கள் கணவரை, உங்களது பார்வையிலேயே வைத்திருப்பதுதான் அவருக்கு நல்லது.

அவருக்கு தற்போது நடைபெற்று வரும் தசாபுக்தி சரியில்லாத நிலையில் இருப்பதால் சற்று பொறுமையாக இருங்கள். ஜோதிடராகிய உங்கள் கணவர் இந்தப் பிரச்னையில் இருந்து எப்படி வெளியே வர வேண்டும் என்பதை நன்கு அறிந்திருப்பார். நீங்கள் அவரை விட்டுப் பிரிந்தால் அவரது வாழ்வு காணாமல் போய்விடும். வெள்ளிக்கிழமை தோறும் காரமடை ரங்கநாதர் கோயிலுக்குச் சென்று தாயார் சந்நதியில் விளக்கேற்றி வைத்து கீழேயுள்ள  ஸ்லோகத்தினைச் சொல்லி மனமுருகி பிரார்த்தனை செய்து வாருங்கள். 23.04.2018க்குள் உங்கள் கணவர் மனம் திருந்தி மீண்டு வருவார்.

“யாதேவீஸர்வபூதேஷூ மாங்கல்யரூபேண
சம்ஸ்திதா
நமஸ்தஸ்யைநமஸ்தஸ்யைநமஸ்தஸ்யை
நமோ நம: ”


நான் பூனாவில் இட்லி வியாபாரம் செய்து வருகிறேன். என் மகன் பி.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்திருந்தும் வேறு வேலைக்குச் செல்லாமல் இதே வியாபாரத்தைச் செய்து வருகிறான். இதனால் பெண் வீட்டார் பெண் தர மறுக்கிறார்கள். அவனது திருமணம் விரைவில் நடக்க நல்ல பரிகாரம் கூறுங்கள். பால்துரை, பூனா.

உத்திராடம் நட்சத்திரம், மகர ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் பிள்ளையின் ஜாதகத்தில் தற்போது ராகு தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் ஐந்தாம் இடத்திற்கு அதிபதி குருபகவான், புதனுடன் இணைந்து ஏழாம் பாவத்தில் அமர்ந்திருக்கிறார். உங்கள் சொந்த ஊரில் பெண் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் தற்போது வியாபாரம் செய்யும் ஊரிலேயே, அந்த ஊரையே பூர்வீகமாகக் கொண்ட, உங்கள் மகனின் மனதிற்குப் பிடித்தமான வகையில் ஒரு வடஇந்தியப் பெண்ணே மணமகளாக அமைவார்.

வரும் 2018ம் ஆண்டிற்குள் அவரது திருமணம் நல்லபடியாக நடந்தேறும். உங்கள் மகன் படித்துவிட்டு இட்லி வியாபாரம் செய்வதற்கு நீங்கள் மிகவும் பெருமைப்பட வேண்டும். நீங்கள் செய்து வந்த வியாபாரத்தை அவர் மேலும் பல கிளைகளாக விரிவுபடுத்துவார். உங்களுக்கு வரவிருக்கும் மருமகளும் அதற்கு பக்க பலமாகத் துணை நிற்பார். அவருடைய திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று திருப்பதி ஏழுமலையானுக்கு பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். திருமணம் முடிந்தவுடன் குடும்பத்துடன் வந்து ஏழுமலையானை தரிசிப்பதாக உங்கள் பிரார்த்தனை அமையட்டும். வருகின்ற சித்திரை மாதவாக்கில் உங்கள் வீட்டில் கெட்டி மேளம் கொட்டும்.

இன்ஜினியராக நல்ல வேலையில் இருக்கும் என் மகள் தினமும் மனநோய்க்கான மாத்திரை சாப்பிட்டு வருகிறாள். இதனால் அவள் திருமணம் தடைபடுமோ என்று அஞ்சுகிறேன். அவள் நோய் ஏதுமின்றி சந்தோஷத்துடன் வாழவும், திருமணம் நல்லபடியாக முடியவும் உரிய பரிகாரம் சொல்லுங்கள். ஈஸ்வரி, வேலூர்.

மகம் நட்சத்திரம், சிம்ம ராசி, மிதுன லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகளின் ஜாதகத்தில் தற்போது சூரிய தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. உங்கள் மகளின் ஜாதகப்படி அவரது மனநோய்க்கான வீரியம் கொஞ்சம், கொஞ்சமாகக் குறைந்து, இன்னும் ஒருசில வருடங்களில் முற்றிலுமாகக் காணாமல் போகும். தற்போதைய சூழலில் அவர் சாப்பிட்டு வரும் மருந்து, மாத்திரைகளின் அளவும் படிப்படியாகக் குறைந்து வரும். 2020ம் ஆண்டிற்குப் பிறகு அவர் சுத்தமாக மாத்திரை சாப்பிட வேண்டிய அவசியம் இருக்காது.

அவருடைய ஜாதகத்தில் திருமண வாழ்வினைக் குறிக்கும் ஏழாம் வீட்டில் செவ்வாய்சனி இணைந்திருப்பது சற்று பலவீனமான நிலை ஆகும். இவர் பணிபுரியும் துறையிலேயே மாப்பிள்ளை தேடுவது நல்லது. உங்களைவிட அந்தஸ்திலும், வசதி வாய்ப்பிலும் குறைவான மாப்பிள்ளையாகப் பாருங்கள். செவ்வாய்க் கிழமைதோறும் முருகப் பெருமானின் ஆலயத்தில் எட்டு விளக்குகள் ஏற்றி வைத்து உங்கள் மகளை மனமுருகி பிரார்த்தனை செய்யச் சொல்லுங்கள். வேலூரை அடுத்த ரத்தினகிரி முருகன் கோயிலில் திருமணத்தை நடத்துவதாக உங்கள் பிரார்த்தனை அமையட்டும். கீழேயுள்ள துதியினைச் சொல்லி தினமும் முருகனை வழிபட்டு வருவதால் திருமணத் தடைநீங்கி 2018 சித்திரைக்குள் வளமான வாழ்விற்கான வழிபிறக்கும்.

“இணையறும் அறுமுகனேஇதசசி மருமகனே
இணரணி புரள்பயனே எனநினைஎனதெதிரே
கணபண அரவுரமே தலைவுற வெழுதருமோர்
குணமுறுமணிமயிலே கொணர்தியுன் இறைவனையே.”


என் மாமனார் இளம் வயதில் பர்மாவிற்கு போய் நேதாஜியின் படையில் சேர்ந்து நாடு விடுதலைக்குப் பிறகு பிளம்பராக வேலை பார்த்திருக்கிறார். பர்மாவிலேயே திருமணம். அகதியாய் திரும்பி சென்னையில் வாசம். ஊர், குலதெய்வம் என்று எதைப்பற்றியும் தெரியப்படுத்தாமல் என் கணவர் சிறுவனாக இருக்கும்போதே மாமனார் இறந்து விட்டார். நாங்கள் வழிபாடு செய்திட எங்கள் குலதெய்வத்தை அடையாளம் காட்டுங்கள். தேவி தம்பிதுரை, சென்னை  37.

பரணி நட்சத்திரம், மேஷ ராசி, தனுசு லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் கணவரின் ஜாதகத்தை ஆராய்ந்ததில் சுப்ரமணிய ஸ்வாமியே உங்கள் குலதெய்வமாக அமைந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. சித்தபுருஷர்களால் பூஜிக்கப்பட்ட விசேஷமான திருக்கோயிலாக இருக்க வேண்டும். நீங்கள் எழுதியிருக்கும் குறிப்புகளின் அடிப்படையில் ஆராய்ந்ததில் நாகப்பட்டினத்திற்கும், திருத்துறைப்பூண்டிக்கும் இடையில் அமைந்துள்ள எட்டுக்குடி முருகன்தான் உங்களுடைய குலதெய்வம் என்பதை அறிய முடிகிறது.

ஏதேனும் ஒரு செவ்வாய்க் கிழமை நாளில் குடும்பத்தினருடன் சென்று எட்டுக்குடி முருகனை கண் குளிர தரிசித்து உங்கள் கணவரின் பெயருக்கு அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். சித்ரா பௌர்ணமி சமயத்தில் அங்கு இடைவிடாது நடைபெறும் பாலாபிஷேக விழாவினில் கலந்து கொள்ளுங்கள். இவை இரண்டும் எந்தவிதமான தடையுமின்றி நடந்துவிட்டால் எட்டுக்குடி முருகனே உங்கள் குலதெய்வம் என்பதை நீங்கள் உணர முடியும். முருகனையே குலதெய்வமாகக் கொண்டாடுங்கள். உங்கள் வம்சம் வளமான வாழ்வினைக் காணும்.

2004ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்ட எனக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். 2013ம் ஆண்டு முதல் என் மனைவி என்னுடன் சிறுசிறு சண்டைகள் போட்டுக்கொண்டு பஞ்சாயத்து மற்றும் காவல்நிலையம் மூலமாக சேர்வது என்பது வழக்கமாகி வருகிறது. தற்போது மீண்டும் பிரிந்து உள்ளார். என் குடும்பம் சேர பரிகாரம் சொல்லுங்கள். ரவிசங்கர்.

மகம் நட்சத்திரம், சிம்ம ராசி, கடக லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தினையும், பூசம் நட்சத்திரம், கடக ராசி, மகர லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மனைவியின் ஜாதகத்தையும் ஆராய்ந்ததில் இந்த வருட இறுதிக்குள்ளாக உங்கள் இருவருக்கும் இடையே உள்ள பிணக்கு தீர்ந்துவிடும் என்பது தெளிவாகத் தெரிகிறது. உங்கள் மனைவியின் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் கேது அமர்ந்திருப்பதும், கணவரைக் குறிக்கும் ஏழாம் வீட்டினில் சந்திரனுடன் ராகு இணைந்
திருப்பதும் அவரது மனதில் தேவையற்ற சந்தேகத்தை உருவாக்கி இருக்கிறது.

மனைவியின் மீது உயிரையே வைத்திருக்கும் நீங்கள் சுயகௌரவம் பாராது அந்த சந்தேகத்தினை போக்கியிருக்க வேண்டும். சிம்ம ராசியில் பிறந்துள்ள நீங்கள் மனைவியிடம் கொண்டிருக்கும் உரிமையிலும், அவர் மீது வைத்துள்ள அளவுக்கதிகமான நம்பிக்கையிலும் சொன்ன வார்த்தைகளை அவர் சரிவர புரிந்து கொள்ளாததால் சிரமத்தினை சந்தித்துள்ளீர்கள். தற்போது நடந்து வரும் தசாபுக்தியின்படி 25.12.2017 முதல் உங்கள் மனைவி உங்களை முழுமையாகப் புரிந்து நடந்து கொள்வார். கடக ராசியில் பிறந்தவர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்கள் என்பதைப் புரிந்துகொண்டு நீங்கள் அதற்கு ஏற்றார்போல் நடந்து கொள்ளுங்கள். வேலூர் மாவட்டம், போளூரை அடுத்துள்ள படைவீடு ஆலயத்திற்குச் சென்று ரேணுகா பரமேஸ்வரியை தரிசித்து உங்கள் மனைவியின் பெயரில் அர்ச்சனை செய்யுங்கள். குடும்பம் ஒன்றிணையும்.

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா் திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை, பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் தினகரன் ஆன்மிக மலா் 229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம். பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • chinaearthquake

  சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

 • meteorshower

  ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

 • indonesiaafterquake

  இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

 • sijaapanda

  சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

 • inpendencedayrehearsal

  செங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்