SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கண் திருஷ்டி தோஷமும், ஜாதகமும்?

2017-09-21@ 09:37:11

ஒருவர் மற்றவரின் மிகச்சிறந்த நடத்தை, திறமை, செல்வம், செல்வாக்கு, புகழ், சாதனை, சொத்து, பட்டம், பதவி, சௌபாக்கிய யோகம் மிகவும் உச்சமான உயர்தட்டு வாழ்க்கை ஆகியவற்றை பெறமுடியாமல் போகும்போது, தனக்கு கிடைக்கிறதோ இல்லையோ அது அடுத்தவனுக்கு கிடைக்கக் கூடாது என்ற வயிற்றெரிச்சல், மனக்குமுறல், பொறாமை, வஞ்சகம், துரோகம், விரோதம், காழ்ப்புணர்ச்சி ஆகிய துர்குணங்களின் கூட்டுக்கலவையை, ஒரே வார்த்தையில் கண்திருஷ்டி என்கிறோம். சில பாக்கியவான்கள் எல்லாவகையான சௌபாக்கிய யோகத்துடன் பிறக்கிறார்கள். சிலர் அடிமட்டத்திலிருந்து கொஞ்சம், கொஞ்சமாக உயர்கிறார்கள். சிலருக்கு விபரீத ராஜ யோகம், நீசபங்க ராஜ யோகம் என்ற அமைப்பின்படி எல்லாம் கிடைக்கின்றன.

சிலர் பெருமுயற்சியுடன் பல சுகபோகங்களை அனுபவிக்கிறார்கள். சிலருக்கு எதுவுமே காலதாமதமாக கிடைக்கிறது. பலருக்கு சில காலம் பலன் தருகிறது. யோகமும், அவயோகமும் வளர்பிறை, தேய்பிறை போல் சிலருக்கு மாறிமாறி வருகின்றன. சிலருக்கு வேண்டியது கிடைக்காவிட்டால், மனச்சிதைவு ஏற்படுகிறது. நமக்கு கிடைக்காதபோது ஏற்படும் துயரத்தைவிட, அது மற்றவருக்குக் கிடைக்கும்போது அதிக மனஉளைச்சல், பொறாமை என உருவெடுத்து, மொத்தமாக நம் பார்வை மூலம் ‘திருஷ்டி’யாக வெளிப்படுகிறது.

கண் திருஷ்டி  கல்லடி

கல்லடி பட்டாலும் படலாம். கண்ணடி படக்கூடாது. இது முன்னோர்கள் அனுபவ மொழியாகும். கெட்ட எண்ணங்களின் ஒட்டுமொத்த தாக்குதலே கண் திருஷ்டியாகும். இதனை கண்ணேறு என்றும் சொல்வார்கள். மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் ஆடு, மாடு, செடி, கொடி, மரம், தோப்பு என்று எல்லாவற்றிற்கும் திருஷ்டி தோஷம் உண்டு.

ஜாதகமும்  தோஷமும்

செய்வினை, பில்லி, ஏவல், சூன்யம், ஸ்தம்பனம் இவையெல்லாம் மாந்திரீக, தாந்திரீக முறைகளை செயல்படுத்தி, துர்தேவதைகளை உபாசனை செய்து குட்டிச்சாத்தான் போன்ற சில அமானுஷ்ய சக்திகளை தன்வசம் வைத்திருப்பவர்கள் செய்கின்ற மந்திர அஸ்திர சஸ்திர ஜாலம். இதை மறுக்க முடியாது. ஆனால் அதை பெரிய அளவில் செய்கின்ற ஆட்கள் மிகவும் குறைவு. ஜாதக அமைப்பின்படி பலம் குறைந்த தீய, நீச, ருண, ரோக, சத்ருஸ்தான தசாபுக்திகள், சாதகமற்ற கோச்சார அமைப்பு இருக்கும்போது நம் கர்மவினைப்படி நமக்கு கண்திருஷ்டி, துர்சக்திகளின் செயல்கள் நமக்கு தீமை விளைவித்து நம் அன்றாட நடைமுறை வாழ்க்கையை ஸ்தம்பிக்க வைக்கும் என பழம்பெரும் ஜோதிட நூல்களான உத்திர காலாமிர்தம், காக்கையர் நாடி போன்றவை விரிவாகச் சொல்கின்றன. சக்தி வாய்ந்த ராஜயோக அம்சம், சுபகிரக பார்வையுள்ள

ஜாதகம் அமைந்தவர்களுக்கு எந்தவிதமான துஷ்டபார்வை, பணி, பீடை பெரிய அளவில் பாதிக்காது. மேலும் சப்தரிஷி நாடிகளில் பரிகார காண்டம், சாந்தி காண்டம் போன்றவற்றின் மூலம் நிவாரணம் பெறுவதற்கும் வழிமுறைகள் உள்ளன. நமக்கு கண் பார்வை மற்றும் நீச கிரகங்களின் சேஷ்டை, பார்வை காரணமாக சூன்யமாக இருப்பது, அடிக்கடி உடல்நலம் கோளாறு குடும்பத்தில் குழப்பம், மனக்கஷ்டம், பொருள் விரயம், குறிப்பாக கணவன்மனைவியிடையே செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பெரும் வாக்குவாதம், அடிக்கடி பணம், நகை தொலைந்து போவது, ஏமாற்றம், வீண் விரயங்கள், நிம்மதி குறைவு, குழந்தை பாக்கிய தடை, வம்பு, வழக்கு, சுபநிகழ்ச்சிகள் தடைபடுவது, முகத்தில் கரும்படலம், புள்ளிகள், குடும்பத்தில் யாருக்காவது தொடர்ந்து மருத்துவச் செலவுகள் மனதில் இனம் புரியாத பயம், இல்லாததை கற்பனை செய்துகொள்வது, விரக்தி, தனிமையில் இருப்பது, தனக்குத்தானே பேசிக்கொள்வது.

நெருங்கிய உறவுகளிடையே காரணமில்லாமல் பகை, தொழில், வியாபாரம் முடக்கம், போட்டி என பல இடையூறுகள், கெட்ட கனவுகள், தூக்கமின்மை, கவனச்சிதறல், மருத்துவ பரிசோதனைகளில் எந்த கோளாறும் தெரியாவிடினும், உடல் சோர்வு, வயிற்றுவலி, மூட்டுவலி, உணவு உட்கொள்ள முடியாமல் போவது, தாம்பத்திய உறவில் வெறுப்பு, எங்கும் எதிலும் தடை, தோல்வி போன்ற இந்த விஷயங்கள் எல்லாமே நம்முடைய ஜெனன ஜாதகத்தில் நடைபெறும் தீய, நீச கிரக, தசாபுக்திகளின் தன்மை காரணமாக செய்வினை மற்றும் துர்குணம், பொறாமை எண்ணங்கள் கொண்டவர்களின் கண்திருஷ்டி காரணமாக ஏற்படுபவையாகும்.

கிரக பார்வை தோஷங்கள்

நல்ல பரந்த மனப்பான்மை உள்ளவர்களுக்கு நல்ல எண்ணம் இருக்கும். இவர்களை கைராசிக்காரர்கள் என்று சொல்வார்கள். இவர்கள் எந்த துவேஷமும் கொள்ளாமல், மனதார வாழ்த்துபவர்கள். இப்படிப்பட்டவர்கள் தொடங்கி வைக்கின்ற எந்த சுபவிஷயமும் ஒன்றுக்குப் பத்தாகப் பல்கிப் பெருகும். கிரகங்களுக்கும் பார்வைபலம் உள்ளது. மற்ற அம்சங்களைக் காட்டிலும் பார்வைபலம் மிகச் சிறப்பானது. ஜாதகத்தில் சுபகிரக பார்வைகள் ராஜயோகத்தை தரும். சந்திரனுக்கு, லக்னத்திற்கு கேந்திர, கோணத்தில் உள்ள கிரகங்கள் வலிமை பெறும். சந்திரனுக்கு பல்வேறு யோகங்களைத் தரும் ஆற்றல் உள்ளது. குரு பார்வை சகல யோக விருத்தி என்று சொல்வார்கள். குரு பார்க்க தோஷநிவர்த்தி உண்டு. அதேபோல் நீச கிரக பார்வை 6, 8, 12ம் அதிபதிகளின் சேர்க்கை பார்வை பலகெடுபலன்களைத் தரும். சனீஸ்வரரின் பார்வையை மிகவும் பலமுள்ளதாக சாஸ்திர நூல்கள் சித்திரிக்கின்றன. தோஷ ஆதிபத்தியம் பெற்ற சனிபார்வையால் பல தடைகள், இடையூறுகள் ஏற்படும். உச்ச பலம் பெற்ற கிரகத்தின் பார்வை யோகத்தை செய்யும், நீச பலம், தீய சேர்க்கை உள்ள கிரகத்தின் பார்வை தோஷத்தை கொடுக்கும். இதன்மூலம் பார்வை பலம் என்ன என்பதை நாம் உணரலாம்.

ஜாதக அமைப்பும்  திருஷ்டியும்


எல்லாம் சரியாக நடந்துகொண்டிருக்கும்போது நமக்கு செய்வினை, திருஷ்டி தோஷங்கள் எதுவும் தெரியாது. ஏதாவது நாம் உணராதபடி, சிறிய அளவில் பாதிப்பு காட்டிவிட்டு போய்விடும். சாதகமில்லாத தசாபுக்திகள், கோச்சார நிலைகள் மாறும்போது ஒவ்வொன்றாக தடைகள், பிரச்னைகள் வரத்தொடங்கும். அப்பொழுதே நாம் தெரிந்துகொள்ளலாம், கோளாறான கோள்களின் ஆட்டம் இது என்று. பொதுவாக 6, 8, 12ம் தசைகள் வரும்போது சில மாற்றங்கள் உண்டாகும். அதேபோல் ராகு, கேது, சந்திரன், சனி ஆகியவை சாதகமில்லாத வீடுகளில் இருந்துகொண்டு தசா நடத்தும்போது கெடுபலன்கள் அதிகம் இருக்கும். கண்திருஷ்டி, பொறாமை, சூன்யம் ஏவல் எல்லாம் இந்த காலக்கட்டத்தில்தான் வேலை செய்யும். லக்னம், லக்னாதிபதி, சந்திரன் ஆகிய மூன்று விஷயங்களில் பலம் குறைந்த ஜாதகங்கள்தான் மிக அதிகமாக பாதிக்கப்படுகின்றன.

லக்னம்ராசி இந்த இரண்டும் பாதிக்கப்பட்டு நீச தீய கிரக சேர்க்கைகளுடன் தசாபுக்தி நடைபெறும்போது மனரீதியான பாதிப்புக்கள் இருக்கும். எதிலும் தடை, சோர்வு, மாறுபட்ட எண்ணங்கள், நிம்மதியற்ற தன்மை உண்டாகும். இரண்டாமிடமாகிய தன, வாக்கு, குடும்பஸ்தான அமைப்பு பாதகமாகும்போது குடும்பத்தில் நிச்சயமற்ற தன்மை, வீண்விரயங்கள், இடமாற்றம், சொந்த, பந்தங்கள் விரோதம் பிரிவினைகள் என உண்டாகும். மூன்றாம் வீட்டில் அமைப்பு சரியில்லாதபோது உடல் தளர்ச்சி, மனத்தளர்ச்சி, குடும்பப் பிரச்னைகள், நரம்புக்கோளாறுகள், பாக்கியத்தடை ஏற்படும். நான்காம் வீடு சம்பந்தப்படும்போது பூர்வீக சொத்தில் பிரச்னை, உடல்நல பாதிப்பு, இடமாற்றம், கல்வியில் தடை, வாகன விபத்து, மருத்துவ செலவுகள் ஏற்படும்.

ஐந்தாம் வீடு சம்பந்தப்படும்போது பிள்ளைகளால் வருத்தம், சோகம், புத்திர தோஷம், வீட்டில் திருடுபோவது, மனோவியாதி, பல வகையில் நஷ்டங்கள் என்று இருக்கும். ஆறாம் இடத்து தசாபுக்தி சரியில்லாதபோது தீராத நோய், வம்பு, வழக்கு, விரயங்கள், மருத்துவ செலவுகள், அறுவை சிகிச்சை, நிம்மதியில்லாத நிலை உண்டாகும். ஏழாம் இடத்து தசாபுக்தி சம்பந்தப்படும்போது குடும்பத்தில் பிரிவு, நண்பர்களால் பிரச்னைகள், வழக்குகள், பயண விபத்துகள், விவாகரத்து, அறுவை சிகிச்சை என ஏற்படும். எட்டாம் இடத்து தசாபுக்தி சம்பந்தப்படும் போது கடன், எதிரி, ரோகம், விபத்து, களவுபோகுதல், முடக்கம் ஏற்படும். ஒன்பதாம் இடத்து தசாபுக்தி சம்பந்தப்படும்போது பூர்வீகச் சொத்தில் பிரச்னைகள், தந்தை உடல்நலம் பாதிப்பு, வீண் விரயங்கள், தோல்வி, தடைகள் உண்டாகும்.

பத்தாம் இடத்து தசாபுக்தி சம்பந்தப்படும்போது பதவி இறக்கம், நிம்மதியற்ற தன்மை, தொழில் பாதிப்பு, கடன் பாதிப்பு, சூழ்ச்சி,வஞ்சகத்தின் மூலம் பாதிப்பு காட்டும். பதினொன்றாம் இடத்து தசாபுக்தி சம்பந்தப்படும்போது சகோதரர்களால் பிரச்னைகள், வருமானம் பாதிப்பு, கடன் பிரச்னைகள், குடும்ப வழக்குகள் என்று இருக்கும். பனிரெண்டாம் இடத்து தசாபுக்தி சம்பந்தப்படும்போது சொத்துகள் விரயம், நிம்மதி குறைவு, தூக்கமின்மை, அயன, சயன, போக பாக்கிய தடை உண்டாகும். பொதுவாக மாந்தி என்ற கிரகத்தை யாரும் கவனிப்பதில்லை. தென் தமிழகம் மற்றும் கேரளாவில் மாந்தியை பார்க்காமல் ஜோதிடம் சொல்ல மாட்டார்கள். சகலவிதமான நீச, கெட்ட அம்சங்கள் இந்த மாந்தியின் மூலம்தான் ஏற்படுகிறது. அவரவர் ஜாதகத்தில் மாந்தி இருக்கும் இடத்திற்கேற்ப விவரம் அறிந்த ஜோதிடர்களிடம் தக்க ஆலோசனை பரிகாரம் செய்வது பல திருஷ்டி தோஷங்களில் இருந்து நம்மை காப்பாற்றும்.

விளக்கின் தத்துவம்

தினசரி காமாட்சி விளக்கு அல்லது குத்து விளக்கு அல்லது ஏதேனும் ஒரு விளக்கை நெய்யிட்டு, திரியிட்டு ஏற்றும்போது  அதில் நவகிரகங்களின் அம்சம் கொண்டிருக்கிறது. ஒளியைத் தரும் ஆன்மகாரகன் சூரியன்தான் விளக்கிற்கு ஆதாரம். அதாவது விளக்கு என்றால் சூரியன், நெய்  சந்திரன், திரி  புதன். விளக்கு ஏற்றியவுடன் தெரியும் ஜோதி செவ்வாயாகும். அதனைச் சுற்றி தெரியும் மஞ்சள் வண்ணம், குரு. திரிக்கு அருகே தோன்றும் கருநிழல், ராகு. எண்ணெயில் அடியில் தெரியும் நிழல், சனி. திரி கொஞ்சம், கொஞ்சமாக எரிந்து குறைந்துகொண்டே வருவது சுக்கிரன் அம்சம். ஜோதியிலிருந்து பரவுகின்ற ஒளி, ஞானமோட்சத்தைத் தரக்கூடிய கேது. இப்படிப்பட்ட அரிய தத்துவ விளக்கத்தை அருளியவர் காஞ்சி மகாசுவாமிகள். ஆகையால் தினசரி பசு நெய்யால் விளக்கேற்ற சகல கிரக தோஷ, திருஷ்டி தோஷங்கள் விலகும் என்பதில் ஐயம் இல்லை.

திருஷ்டி தோஷத்திற்கு பரிகாரங்கள்


ஒவ்வொருவரின் ஜாதகப்படியான கிரக நிலைகள், தசைகளை அனுசரித்து செய்யப்படும் பரிகார முறைகள், தனிப்பட்ட வகையில் பலன் தரும். பொதுவான பரிகார முறைகள் உள்ளன. இதை எல்லோரும் செய்து கொள்ளலாம். வீடு, கடை, அலுவலகத்திற்கு வருபவர்களின் திருஷ்டிப் பார்வையை, கெட்ட எண்ணங்களை, குரூர சிந்தனைகளை திசைதிருப்புவதற்கு வரவேற்பறையில் பெரிய முகம் பார்க்கும் கண்ணாடி வைக்கலாம். மிக மெல்லிய வாத்ய இசை, மந்திரங்களை ஒலிக்க விடலாம். மீன்தொட்டி வைத்து அதில் சில வண்ண மீன்களை வளர்க்கலாம். வருபவர்களின் சிந்தனையை மாற்றும் வகையில் இயற்கை எழில் கொஞ்சும் படங்களை மாட்டலாம். வாசலில் வேப்ப இலையுடன், மருதாணி இலைக்கொத்தையும் சேர்த்துத் தொங்கவிடலாம். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை அன்று கருப்பு நூலில் எலுமிச்சம்பழம் ஒன்று, ஒன்பது பச்சைமிளகாய் கோர்த்து தொங்க விடலாம்.

அமாவாசை, அஷ்டமி, பெளர்ணமி நாட்களில் தண்ணீருடன் பன்னீர், மஞ்சள்தூள், இந்து உப்புத்தூள் சேர்த்து வீட்டினுள் எல்லா இடங்களிலும் தெளிக்கலாம். ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் சரபேஸ்வரரை வழிபடலாம். செவ்வாய்க்கிழமை துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம்பழ மாலை சாத்தி வணங்கலாம். அமாவாசையன்று வாராகி அம்மனுக்கு தாமரை மலர் சாத்தி வழிபடலாம். பெளர்ணமி அன்று வடிவுடை அம்மனை வழிபட சகல தோஷங்களும் நீங்கும். வியாபார ஸ்தலங்களில் கண்ணாடி டம்ளரில் கல் உப்பு, இந்து உப்பு, மஞ்சள் பொடி கலந்த தண்ணீர் வைக்கலாம். தினசரி அல்லது செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சாம்பிராணி கலந்த தூபம் காட்டுவது தீய சக்திகளை கட்டுப்படுத்தும். திருஷ்டி போக்கும் வேர், பட்டை, குங்கிலியம் போன்ற பொருட்கள் கலந்த பொடி கிடைத்தால், அதை சாம்பிராணியில் கலந்து போட சகல திருஷ்டி, தோஷம் நீங்கி செல்வ வளம், மனநிம்மதி, மகிழ்ச்சி பெருகும்.

ஜோதிட முரசு மிதுனம் செல்வம்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-10-2018

  20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • tirupathivavacha

  திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

 • kulasaidasaraeight

  வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

 • 18-10-2018

  18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • thaneerrr_kaari

  தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்