SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வருமானத்திற்கு வழிபிறக்கும்!

2017-09-19@ 12:47:22

என் மகனுக்கு 33 வயது ஆகிறது. ராசிக் கட்டத்தில் 7ல் செவ்வாய், சனி உள்ளது. திருமணம் இன்னும் கூடிவரவில்லை. மிகவும் மன வேதனைக்கு ஆளாகி உள்ளேன். நல்லது கூறுங்கள். சசிகலா, இலுப்பூர்.

மூலம் நட்சத்திரம், தனுசு ராசி, மேஷ லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது சந்திர தசை நடக்கிறது. திருமண வாழ்வினைச் சொல்லும் 7ம் வீட்டில் செவ்வாய், சனி இணைந்திருப்பதால் திருமணம் கூடுவதில் தடை உண்டாவதாக கவலைப்படுகிறீர்கள். 7ம் வீட்டிற்கு அதிபதி சுக்கிரன், சுப கிரகங்களின் இணைவுடன் 9ல் அமர்ந்திருப்பதால் இவருக்கு நிச்சயம் திருமணம் நடக்கும். லக்னாதிபதி செவ்வாயும் 7ல் அமர்ந்திருப்பதால் அவரது மனதிற்கு பிடித்தமான பெண் அமைவார். தொலைதூரத்தில் பெண்ணைத் தேடாமல் உங்கள் சொந்த ஊரைச் சுற்றியுள்ள பகுதியிலேயே முயற்சியுங்கள்.

வசதியில் உங்களை விடச் சற்று குறைவான இடத்தில் பெண்ணைப் பாருங்கள். உறவினர்கள் அதிகம் நிறைந்த பெரிய குடும்பத்தில் இருந்து உங்களுக்கு மருமகள் வந்து சேர்வார். மாதந்தோறும் வருகின்ற சிவராத்திரி நாளில் அருகில் உள்ள சிவாலயத்தில் சோமாஸ்கந்தர் சந்நதியில் ஐந்து விளக்குகள் ஏற்றி வைத்து வழிபட்டு வரச் சொல்லுங்கள். கீழேயுள்ள ஸ்லோகத்தினைச் சொல்லி வணங்குவதால் திருமணத்தடை விலகும்.

“காமேஸ்வராயகாமாயகாமபாலாயகாமிநேநம:
காமவிஹாராயகாமரூபதராய ச,
மங்களே மங்களாதாரேமாங்கல்யமங்களப்ரதே
மங்களார்த்தம் மங்களேசி மாங்கல்யம் தேஹிமேஸதா.”


அரசுப் பணியில் இருந்த என்னை மேலதிகாரி செய்த தவறுக்காக அவருடன் சேர்த்து சற்றும் தொடர்பில்லாத என்னையும் பணிநீக்கம் செய்து விட்டார்கள். கடந்த 3 வருடங்களாக காவல் நிலையம், நீதிமன்றம் என அலைந்து வருகிறேன். என் பிரச்னை தீரவழி சொல்லுங்கள். ரமேஷ், பல்லடம்.

உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, மேஷ லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தின்படி தற்போது சுக்கிர தசையில் கேது புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் வக்ரகதியில் சஞ்சரிக்கும் சனியின் புக்தி நடைபெற்ற காலத்தில் பிரச்னை உண்டாகி இருக்கிறது. உங்கள் மேலதிகாரியின் வாக்கு மூலமும், கௌரவம்மிக்க பதவியில் உள்ள மற்றொருவரின் துணையும் உங்களை இந்த வழக்கிலிருந்து விடுவிக்கும். இன்னும் ஒரு வருடத்திற்குள் உங்கள் வழக்கு முடிவிற்கு வந்துவிடும். உங்கள் குடும்பத்தினரின் ஜாதகங்கள் நன்றாக உள்ளது.

கவலை வேண்டாம். வருகின்ற கார்த்திகை மாதத்தில் சபரிமலைக்கு மாலை அணிந்து 48 நாட்கள் முறையாக விரதம் இருந்து பெரும் பாதையில் நடந்து சென்று சுவாமி ஐயப்பனை தரிசித்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அருகிலுள்ள ஐயப்பன் கோயிலில் மாதப் பிறப்பு நாளில் உங்களால் இயன்ற அளவில் அன்னதானம் செய்து வருவதும் நல்லது. கீழ்காணும் ஸ்லோகத்தினை தினமும் 18 முறை சொல்லி ஐயனை வணங்கிவர உங்கள் பிரச்னைகள் தீரும்.

“அஸ்மத் குலேச்வரம் தேவம் அஸ்மத் சத்ரு விநாசநம்
அஸ்மதிஷ்டப்ரதாதாரம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்.”


என் மகளுக்கு திருமணமாகி நல்ல நிலையில் இருக்கிறாள். எனது மகன் காதல் திருமணம் செய்ததில் மாப்பிள்ளைக்கு விருப்பம் இல்லை. அதிலிருந்து அவர் எங்களுடன் பேசுவதில்லை. எங்கள் வீட்டு விசேஷங்களில் என் மகளையும் கலந்து கொள்ள அனுமதிப்பதில்லை. அவர்கள் வீட்டு விசேஷத்திற்கும் எங்களை அழைப்பதில்லை. எங்கள் மாப்பிள்ளையின் கோபம் எப்போது தீரும். இந்நிலை மாற தகுந்த பரிகாரம் கூறுங்கள். அனந்தநாயகி, தஞ்சாவூர்.

சதயம் நட்சத்திரம், கும்ப ராசி, தனுசு லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மருமகனின் ஜாதகத்தில் தற்போது சனிதசையில் சந்திர புக்தி நடந்து வருகிறது. எந்தவொரு விஷயத்தையும் மூடி மறைக்காமல் நேரடியாகப் பேசும் குணத்தைக் கொண்டவர். தன்னைப்போலவே மற்றவர்களும் உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர். உண்மையை விரும்பும் மனிதர்களிடம் கோபம் இருக்கத்தான் செய்யும். உங்கள் மகன், அதாவது அவருடைய மைத்துனன் காதல் திருமணம் செய்துகொண்டதில் அவருக்கு ஆட்சேபணை இருக்காது.

ஆயினும் இந்த விஷயம் தெரிந்தும் ஆரம்பத்திலேயே நீங்கள்அவரிடம் தெரிவிக்கவில்லை என்ற கோபம் இருக்கலாம். தனக்குரிய கௌரவம் குறைந்து விட்டதாக அவர் எண்ணியிருக்கக் கூடும். அவருடைய ஜாதகப்படி, தனது மனைவியின் குடும்பத்தார்மீது அவருக்கு அளவுகடந்த அன்பு உண்டு. அவருக்குத் தெரியாமல் எந்தவொரு விஷயத்தையும் செய்யாதீர்கள். அவரது ஜாதக ரீதியாக எந்தவொரு குறையும் இல்லை. உங்கள் மகளுக்கு தற்போது நடைபெறவுள்ள பிரசவத்தின் மூலம் இரு குடும்பங்களும் ஒன்றிணையும். மருமகனின் எண்ணத்திற்கு ஏற்றவாறு நடந்து கொள்ளுங்கள். தனியாக பரிகாரம் ஏதும் அவசியமில்லை.

என் மகனுக்குத் திருமணமான நான்கு ஆண்டுகளாக ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பிரச்னையை சொல்லி மருமகள் வாழ மறுக்கிறார். கடந்த ஆறு  மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். சமாதானம் செய்து வைக்க முயற்சித்தும் பலன் இல்லை. யாருடைய ஜாதகத்தில் பிரச்னை உள்ளது? மனநிம்மதியுடன் குடும்பம் நடத்த தகுந்த பரிகாரம் கூறுங்கள். சிவராமன், தஞ்சாவூர்.

திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, துலாம் லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகத்தையும், பூச நட்சத்திரம், கடக ராசி, துலாம் லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மருமகளின் ஜாதகத்தையும் ஆராய்ந்ததில், உங்கள் மருமகளின் ஜாதகத்தில் பிரச்னை உள்ளதை அறிய முடிகிறது. அவருடைய ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் சனிகேதுவின் இணைவும், திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் பாவத்தில் செவ்வாய் சுக்கிரன் ராகுவின் இணைவும் பிரச்னையைத் தோற்றுவிக்கிறது. அதோடு சுக்கிரனும், சனியும் வக்ரகதியில் சஞ்சரிப்பதும் சற்று சிரமத்தைத் தருகிறது.

அநாவசியமான சந்தேகங்களும், மனக்குழப்பமும் அவரது நிம்மதியினை குலைக்கிறது. உங்கள் மகனின் ஜாதகப்படி, வருகின்ற 11.11.2017 முதல் நல்ல நேரம் துவங்க உள்ளதால் அதுவரை பொறுத்திருங்கள். அதன்பின்பு அவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் மருமகளின் குணத்தை யாராலும் மாற்ற இயலாது. அவருடைய குணத்திற்கு ஏற்றவாறு உங்கள்பிள்ளை அனுசரித்துச் சென்றால் மட்டுமே குடும்பத்தில் நிம்மதியைக் காண இயலும். வைத்தீஸ்வரன் கோவிலுக்குச் சென்று பாலாம்பிகை சந்நதியில் அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

சினிமாவில் உதவி இயக்குனராக நல்ல அனுபவத்துடன் முயற்சி செய்தும் இதுவரை படம் இயக்க முடியவில்லை. ரியல் எஸ்டேட் துறையில் மீடியேட்டராக இருந்தும் பெரிதாக சம்பாதிக்கவில்லை. பிள்ளைகளின் கல்விக் கட்டணம், கடன் தொல்லை என குடும்பத்திலும், உறவினர் மத்தியிலும் பிரச்னையாக உள்ளது. எனக்கொரு நல்ல தீர்வு கிடைக்க உரிய பரிகாரம் கூறுங்கள். தங்கராஜ், கோவை.

உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, கன்யா லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தில் தற்போது சுக்கிர தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் லக்னத்திற்கும், தொழில் ஸ்தானத்திற்கும் அதிபதியான புதன் 12ல் அமர்ந்திருப்பது அத்தனை சிறப்பான நிலை அல்ல. கலைத்துறையிலேயே உங்கள் முயற்சியைத் தொடருங்கள். டைரக்டர் ஆக வேண்டும் என்ற எதிர்பார்ப்பினை குறைத்துக் கொண்டு குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் பணிக்கு முயற்சி செய்யுங்கள். உங்களது அனுபவமும், கற்பனைத் திறனும் கைகொடுக்கும். உங்கள் கற்பனையை மற்றவர்கள் தங்கள் பெயரில் உபயோகப்படுத்திக் கொண்டு அதற்குரிய சன்மானத்தை மட்டும் உங்களுக்குத் தருவார்கள்.

பெரியதிரை அல்லது சின்னத்திரை இரண்டிலும் நீங்கள் வாய்ப்பு தேட இயலும். 55வது வயதில் உங்களுக்கு உரிய அங்கீகாரம் உங்கள் துறையினர் மத்தியில் கிடைக்கும். ஆயினும் பொதுமக்கள் மத்தியில் உங்கள் பெயர் பரிச்சயம் ஆகாது. பெயர், புகழைப்பற்றி கவலைப்படாது சம்பாத்தியத்தை மட்டும் நினைவில் கொண்டு முயற்சியுங்கள். கலைத்துறையில் உங்களால் சம்பாதிக்க இயலும். புதன்கிழமையில் காரமடை ரங்கநாதர் ஆலயத்திற்குச் சென்று உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். வருமானத்திற்கான வழிபிறக்கும்.

பன்னிரண்டு வருடங்களாக தனியார் துறையில் வேலை செய்கிறேன்.நன்றாகஉழைத்தும் வருமானத்தில் உயர்வு இல்லை. சொந்தமாக தொழில் தொடங்கலாம் என்று ஆசைப்படுகிறேன். ஜாதகம் பார்க்கையில் நிறைய கஷ்டத்தை அனுபவிக்க வேண்டும் என்று கூறுகின்றனர். தொழிலதிபர் ஆக வேண்டும் என்ற எனது ஆசை நிறைவேற என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? அருள்முருகன், விழுப்புரம் மாவட்டம்.

ஹஸ்தம் நட்சத்திரம், கன்னி ராசி, துலாம் லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தில் ஜென்ம லக்னாதிபதி சுக்கிரன், தொழில் ஸ்தானத்திற்கு அதிபதி சந்திரன் உட்பட ஐந்து கிரகங்கள் 12ம் வீட்டில் அமர்ந்துள்ளன. இது சிரமத்தைத் தரக்கூடிய அம்சமே. எனினும் லக்னத்தில் அமர்ந்துள்ள குருவும், இரண்டாம் இடத்துச் செவ்வாயும் உங்கள் முயற்சிக்குத் துணை இருப்பார்கள். தொழில்முறையில் நீங்கள் ஓரிடத்தில் அமர்ந்து வியாபாரத்தை பெருக்க இயலாது. அலைந்து திரிந்து செய்யும் தொழிலே உங்களுக்குத் துணை நிற்கும். தின்பண்டங்கள், குளிர்பானங்கள், உணவு சார்ந்த பொருட்கள் ஆகியவற்றை வியாபாரம் செய்யலாம். குறைந்த அளவில் முதலீடு செய்தால் போதுமானது.அதிர்ஷ்டம் என்பது இல்லாதநிலையில் உங்கள் உழைப்பை மட்டுமே நம்பி வியாபாரத்தில் இறங்க வேண்டும்.

வருகின்ற லாபத்தை மீண்டும், மீண்டும் தொழிலிலேயே முதலீடு செய்து கொஞ்சம், கொஞ்சமாக வியாபாரத்தைப் பெருக்க வேண்டும். 45வது வயது முதல் நீங்கள் எதிர்பார்க்கும் சம்பாத்தியத்தைக் காண இயலும். அதுவரை லாபத்தை எதிர்பாராது செயல்பட வேண்டும். மஹாளய அமாவாசை நாளில் பிறந்துள்ள நீங்கள், வருகின்ற மஹாளய அமாவாசை நாளில் ஆதரவற்ற முதியோர்க்கு உங்களால் இயன்ற அளவில் அன்னதானம் செய்யுங்கள். உங்கள் முயற்சியை இப்போதே துவக்குங்கள். உங்கள் உழைப்பு உயர்வினைத் தரும்.

ஐம்பத்து மூன்று வயதாகும் நான் தினக்கூலியாக வேலை செய்து வருகிறேன். பிள்ளைகளின் கல்லூரி படிப்பிற்குக் கூட பணம் கட்ட சிரமப்படுகிறேன். மேலும், அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகிறது. குடும்பத்தில் தினசரி சண்டை சச்சரவு உண்டாகிறது. எனது வறுமையும், மனக்கவலையும் தீர உரிய பரிகாரம் கூறவும். ரவிச்சந்திரன், மதுரை.

மகம் நட்சத்திரம், சிம்ம ராசி, மிதுன லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகப்படி தற்போது ராகு தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் கடக லக்னம் என்று தவறாகக் கணக்கிட்டுள்ளீர்கள். எட்டாம் இடத்தில் சூரியன், செவ்வாய், சனியின் இணைவும், லக்னத்திலுள்ள ராகுவும் அதிக சிரமத்தைத் தருகின்றன. எனினும் சிம்ம ராசியில் பிறந்துள்ள நீங்கள் எதையும் தாங்கும் இதயத்தோடு செயல்பட்டு வருகிறீர்கள். இத்தனை சிரமத்திற்கு இடையிலும் பிள்ளைகளை கல்லூரியில் படிக்க வைக்கும் உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது.

சுவாதி நட்சத்திரம், துலாம் ராசியில் பிறந்துள்ள உங்கள் மனைவி எப்படியோ சமாளித்து குடும்பத்தை நிர்வகித்து வருகிறார். அவருடைய மனநிலையைப் புரிந்து கொண்டால் குடும்பத்தில் சண்டை சச்சரவு தோன்றாது. வறுமை என்பது நிரந்தரமல்ல என்பதை மனதில் நிலை நிறுத்துங்கள். மனதில் நிம்மதி உண்டானால் ஆரோக்யம் மேம்படும். சனிக்கிழமை தோறும் அருகிலுள்ள பிள்ளையார் கோயிலில் சூடம் ஏற்றி வழிபட்டு பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். கூடிய விரைவில் உங்கள் பிள்ளைகள் நல்ல நிலைக்கு உயர்ந்து உங்களுக்கு பெருமை சேர்ப்பார்கள்.

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா் திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை, பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் தினகரன் ஆன்மிக மலா் 229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம். பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • chinaearthquake

  சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

 • meteorshower

  ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

 • indonesiaafterquake

  இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

 • sijaapanda

  சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

 • inpendencedayrehearsal

  செங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்