SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருஷ்டி படப்போகுதய்யா, எந்தன் கணவரே…!

2017-09-18@ 09:48:42

வாசலில் ஆட்டோ வந்து நின்றது. குலோத்துங்கனை பரபரப்பு தொற்றிக்கொண்டது. ஆட்டோவைக் காக்கவைக்க முடியாது. வெயிட்டிங்கில் மீட்டர் ஓடும் என்பதால் மட்டுமல்ல, ஆட்டோ ஓட்டுநரின் வெறுப்புக்கும் ஆளாகவேண்டாமே என்பதாலும்தான். தினமும் காலை உணவை முடித்த கையோடுஆப்ப் மூலம் ஆட்டோ புக் பண்ணிவிட்டு அலுவலகம் போகும் வழக்கம் குலோத்துங்கனுக்கு. கடந்த ஆறு மாதங்களாக இப்படித்தான். மாலையில் வீடு திரும்ப, முன்னே பின்னே நேரம் ஆனாலும் ஏதேனும் ஆட்டோ பிடித்துக்கொண்டு வருவதும் அவன் வழக்கம். பதினைந்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள அலுவலகத்துக்குச் சென்றுவரும் கணவனுக்காக மதிய உணவு மற்றும் மாலை டிபன் என்றும் கொடுத்தனுப்புவாள் உலகநாயகி. மாலையில் வீடு திரும்ப தாமதமானாலும் அதுவரை தாங்குவதற்காகத்தான் மாலை டிபன்.

அதோடு மாலை டிபனுக்காக ஓட்டலுக்குப் போகவும் தேவையில்லை. இப்போதைய எஸ்.ஜி.எஸ்.டி, ஸி.ஜி.எஸ்.டி என்று இரட்டிப்பு வரியால் டிபன் விலையும் ஏகத்துக்கு ஏறிப்போக, இந்த வரிவிதிப்புக்கு முன்னாலிருந்தே மேற்கொண்டிருந்த வழக்கப்படி, இப்படி மனைவி கை டிபனே தேவாமிருதமாகவும், சிக்கனமாகவும் இரட்டை லாபம் தந்தது! என்னதான் ஆட்டோவில் பாதுகாப்பாக வீடு திரும்புகிறான் என்றாலும், உலகநாயகிக்கு அவன் இயல்பான தெம்புடன் இல்லை என்றே தோன்றியது. சொந்தமாக ஸ்கூட்டர் இருந்தாலும், இப்போதைய போக்குவரத்து நெரிசலை அனுசரித்துப் போகமுடியாததால் அதைத் தொடவேவேண்டாம் என்ற முடிவுக்கு வந்திருந்தான் குலோத்துங்கன். உலகநாயகியும்.

சரி, ஸ்கூட்டரை விட்டுவிட்டு பேருந்து, ரயில் என்று பிடித்துக்கொண்டு போகலாம் என்று பார்த்தால், அதே நேரத்தில் தத்தமது அலுவலகங்களுக்கும், வேறு பகுதிகளுக்கும் போகும் கூட்ட நெரிசல் தாங்க முடியாததாக இருந்தது. ஒருசமயம் சட்டைப் பையில் வைத்திருந்த மொபைல் போன் திருடப்பட்ட அவலமும் சேர்ந்துகொண்டது. பெரும்பாலும் நின்றுகொண்டே பயணிக்க வேண்டியிருந்ததால், வீடு திரும்பும்போது உடல் மொத்தமும் களைப்பில் நொந்துவிட்டிருக்கும். அதன் விளைவாக தேவையே இல்லாமல், சம்பந்தமே இல்லாமல் உலகநாயகியுடன் வாக்குவாதம், கோபம் என்று ஏற்பட்டு பல இரவுகள் அவளுடைய விம்மலும், விசும்பலுமாகக் கழிந்திருக்கின்றன. சரி, கால் டாக்ஸியில் போகலாமென்றால், பொருளாதாரம் இடம் கொடுக்கவில்லை. இறுதியாக, டாக்ஸியில் பாதியளவுக்கு வசூலிக்கப்படக்கூடிய ஆட்டோவில் போவது என்று முடிவு செய்தான் குலோத்துங்கன்.
 
எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஒருநாள் முன்னிரவில் வீடு திரும்பிய குலோத்துங்கன், ‘‘எனக்கு என்னவோ பசியே இல்லை. சாப்பாடு வேண்டாம்,’’ என்றான். ‘‘ஃப்ரண்ட்ஸோட வெளியே ஓட்டல்ல சாப்பிட்டீங்களா?’’ உலகநாயகி, சராசரி மனைவியாக சந்தேகக் கேள்வி கேட்டாள். ‘‘நீ வேற! இப்பல்லாம் சரியா பசியே எடுக்கமாட்டேங்குது. காலையில டிபன் சாப்பிட்டது என்னவோ நாள்பூரா செரிக்காத மாதிரியே இருக்கு. வயித்திலே உப்பிசமா இருக்குமோன்னு நினைக்கறேன். அது அஜீர்ணம் மாதிரியும் தெரியலே. ஏன்னா காலைக்கடன்லாம் பிரச்னையில்லாம நடக்குது. ஆனா ஏனோ பசிக்கவே மாட்டேங்குது…’’ தன் வேதனையைச் சொன்னான் குலோத்துங்கன்.‘‘அப்படின்னா, மதியத்துக்கு சாப்பாடு கட்டிக்கொடுக்கறேனே, சாயந்திரம் டிபனும் செய்துத் தரேனே, அதையெல்லாம் சாப்பிடறதேயில்லையா, யாருக்கானும் தூக்கிக் கொடுத்திடறீங்களா?’’ கவலையுடன் கேட்டாள் உலகநாயகி.

‘‘சாப்பிடாட்டிப் போனா தெம்பா இருக்காதுன்னு அந்தந்த நேரத்துக்கு அதையெல்லாம் சாப்பிட்டுடறேன். ஆனா என்னவோ வயிறு உப்பினா மாதிரி இருக்கு. நிறைய ஏப்பம் வருது. தண்ணியும் தேவைப்பட்ட அளவுக்குக் குடிக்கத்தான் செய்யறேன், என்ன பிரச்னைன்னே தெரியலே…’’‘‘எனக்குப் புரிஞ்சுபோச்சு,’’ உலகநாயகி சொன்னாள். திகைப்புடன் அவளைப் பார்த்தான் குலோத்துங்கன். ‘‘என்ன புரிஞ்சுது, உனக்கு?’’‘‘உங்ககிட்டயும் கோளாறு இல்லே, நான் சமைச்சுத் தர்ர சாப்பாட்டாலேயும் கோளாறு இல்லே. எல்லாம் கொள்ளிக்கண்ணு கோளாறுதான்…’’ சற்றே வெறுப்புடன் பதிலளித்தாள் அவள்.
‘‘கொள்ளிக்கண்ணா? அது என்ன புதுசா என்னவோ சொல்றே?’’‘‘நானும் உங்ககிட்ட சொல்லவேண்டான்னுதான்னு நினைச்சேன். ஆனால் நாலஞ்சு மாசமா கவனிச்சுகிட்டுதான் வர்ரேன்…’’

‘‘எதை கவனிச்சுகிட்டு வர்ரே?’’‘‘அக்கம்பக்கத்துக்காரங்களைத்தான்.’’‘‘அவங்க என்ன பண்ணினாங்க?’’‘‘எதையாவது பண்ணத்தான் வேணுமா? பார்த்தாலேயே போதுமே!’’‘‘என்ன ஆச்சு உனக்கு? அக்கம்பக்கத்தாரோட சுமுகமாகத்தானே இருக்கே? இப்ப என்ன திடீர்னு இப்படி ஒரு சந்தேகம்?’’
‘‘ஒரு கண்ணுபோல ஒரு கண்ணு இருக்காதுங்க…. நீங்க, இந்த அறுபத்தஞ்சு வயசிலே, ஆபீஸுக்கு தினமும் ஆட்டோவிலே போயிட்டு, ஆட்டோவிலே வர்ரீங்களா, அது அவங்களுக்குப் பொறுக்கலே. நாமளும் எங்கயாவது போறதானா ஆட்டோவைப் பிடிக்கறோமா, இதையெல்லாம் கவனிச்சுகிட்டு மனசுக்குள்ள கரிச்சுக்கொட்டறாங்க…’’‘‘இதப்பார், நீயா எதையாவது கற்பனை பண்ணிக்காதே. அப்படியெல்லாம் இருக்காது. அவங்கவங்களுக்கு வேலை இல்லையா என்ன, இதைப்போய் பெரிசா கவனிச்சுகிட்டு, அதைப் பத்தி உங்ககிட்ட பேசிகிட்டா இருப்பாங்க…?’’

‘‘உங்களுக்கு இதெல்லாம் தெரியாதுங்க…’’‘‘சரிதான் போ. வேண்டாத கற்பனையை வளர்த்துக்கறே. நீ சொல்றபடியே இருந்தாலும், எனக்கு திருஷ்டி சுற்றிப் போட்டுடு. சரியாகிடும்…’’‘‘அப்படியெல்லாம் உடனே சரியாகக்கூடிய விஷயமில்லீங்க இது. யாராவது ஜோசியரைப் பார்த்து அவர் சொல்ற பரிகாரத்தைச் செய்தால்தான் சரியாகும். ஏன்னா இது உடம்பு பத்தின விஷயம். கண் திருஷ்டியால ஏற்பட்ட பாதிப்புக்கு அதே திருஷ்டியாலதான் தீர்வு பார்க்கணும்…’’
பில்லி, சூனியம்னு ஏடாகூடமாகப் போய் தாயத்து, கறுப்புக் கயிறு, பரிகாரம் என்று ஆயிரக்கணக்கில் மனைவி செலவு வைத்துவிடுவாளோ என்று கவலைப்பட ஆரம்பித்தான் குலோத்துங்கன். ‘இவருக்கு என்ன தெரியும்? எதிர்வீட்டுப் பொம்பளை, அவபாட்டுக்கு அவளோட வேலையைப் பார்த்துகிட்டுப் போகவேண்டியதுதானே!

மெனக்கெட்டு நேரா வீட்டுக்கே வந்து ‘பரவாயில்லையே, உங்கள் வீட்டுக்காரரு இந்த வயசிலேயும் ஆபீசுக்குப் போய் வர்ராரே, அதுவும் தினமும் ஆட்டோவிலேயே போய் ஆட்டோவிலேயே வர்ராரே? அவர் ஆபீஸ்ல அலவன்ஸ் நிறைய கொடுப்பாங்க போல?’ என்று கண்களில் உஷ்ணத்துடன் கேட்டது இவருக்குத் தெரியுமா? ஆட்டோ வந்து நின்னதுமே அக்கம்பக்கத்து ஜன்னல்கள்லாம் திறக்க அங்கேயிருந்து பொறாமைக் காற்றலை அடிப்பதை இவர் எங்கே கவனிக்கிறார்? அதேபோல காலையில் இவர் ஆபீசுக்குப் போகிற நேரமாகப் பார்த்து, வாசலுக்கு வந்து குப்பையைப் போடுகிற சாக்கில் ஆட்டோவில் ஏறுகிற இவரைப் பார்க்கிற பார்வையிலதான் எத்தனை பொறாமை, எரிச்சல்….’  உலகநாயகி
மனசுக்குள் நினைத்துக்கொண்டாள்.

அந்த ஞாயிற்றுக்கிழமையே குலோத்துங்கனை வலுக்கட்டாயமாக ஜோசியரிடம் அழைத்துச் சென்றாள் உலகநாயகி. அந்த நிமிடம்வரைக்கும் தன் உடல்நலத்தில் எந்த முன்னேற்றமும் தெரியாததால், அரைகுறை மனசுடன் மனைவிக்கு சம்மதித்து உடன் சென்றான். உலகநாயகி சொன்னதையெல்லாம் ஜோதிடர் கேட்டார். சோர்வாக இருந்த குலோத்துங்கனையும் பார்த்தார். மெல்லத் தலையாட்டிக்கொண்டு, தனக்குள் ஏதோ சொல்லிக்கொண்டார். அவனுடைய ஜாதகக் கட்டங்களையும் ஆராய்ந்தார். பிறகு உலகநாயகியிடம் சொன்னார்: ‘‘பெரிசா பயப்படவேண்டியது எதுவுமில்லேம்மா. திருஷ்டி உங்க வீட்டுக்காரர்மேல மட்டுமில்லேம்மா. உங்க வீட்டுமேலேயும் இருக்கு. அதனால பொதுவா வீட்டுக்கு முன்னால ஒரு திருஷ்டி பூசணிக்காயை வையுங்க. இல்லாட்டி திருஷ்டிப் படம் ஒண்ணை மாட்டிவையுங்க.’’

‘‘இப்பதாங்க ஞாபகத்துக்கு வருது…’’ உலகநாயகி ஆரம்பித்தாள். ‘‘நம்ம வீட்டுக்கு வர்ரவங்க ஜன்னல் திரைச்சீலை, இன்டீரியர், ஹால்ல இருக்கற டிவின்னு எல்லாத்தையும் பார்த்து பெருமூச்சு விடுவாங்க. ‘இது ரொம்ப நல்லாயிருக்கே, என்ன விலை?’ன்னு கேட்கற தொனியிலேயே எத்தனை பொறாமை, வயிற்றெரிச்சல், ஆதங்கம், ஏக்கம்…’’‘‘சரி, சரி, புறப்படு,’’ சற்றுக் கடுமையாகவே சொன்னான் குலோத்துங்கன். ‘‘சாருக்குக் கொடுக்கவேண்டிய ஃபீஸைக் கொடுத்துவிட்டு வா,’’ என்று சொல்லிவிட்டு வெளியே வந்தான். அடுத்த நாளே மார்க்கெட்டுக்குப் போய் தகரத்தில் செய்து வர்ணமடித்திருந்த, பெரிய வட்டமான திருஷ்டி தகட்டினை வாங்கிவந்துவிட்டாள் உலகநாயகி. ‘திருஷ்டி பூசணிக்காயை மாட்டலாம், ஆனா அது வெயில், மழைன்னு பட்டு அழுகிப்போனா மனசுக்கு அச்சான்யமாகப் படும், அதனாலதான் இந்த பொம்மை’ என்று குலோத்துங்கனுக்கு விளக்கமும் கொடுத்தாள்.

ஆனாலும் அடுத்தடுத்த நாட்களில் அவனுக்கு உபாதை குறைந்தாற்போலவே தெரியவில்லை. திடீரென்று உறைத்தது குலோத்துங்கனுக்கு. ‘உலகநாயகி படுத்திய பாட்டில் டாக்டர் என்று ஒருவர் இருப்பதையே மறந்துவிட்டோமே!’திருஷ்டி பொம்மையை மாட்டிவிட்டதாலேயே கணவனுக்கு உடல்நலம் சரியாகிவிடும் என்ற கற்பனையில் ஆழ்ந்திருந்தாள் உலகநாயகி. அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களின் கண்களிலிருந்து ‘திருஷ்டி’ நீங்கிவிட்டதுபோலவும் தெரிந்தது அவளுக்கு.
ஆனால் குலோத்துங்கன் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் மருத்துவரைப் போய்ப் பார்த்தான். அவன் சொன்ன விவரங்கள் எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டார் டாக்டர். ‘‘தினமும் காலையிலும் சரி, மாலையிலும் சரி, டிபன் சாப்பிட்டுவிட்டு ஆட்டோவில் போகிறீர்கள்.

நம்முடைய குழிகள் மிகுந்த சாலைகளில் ஆட்டோ பயணம், நிரந்தர குலுக்கலாகவே அமையும். அதோடு ஆட்டோ ஓட்டிகளும் நேரத்தை சேமிக்கப் படுவேகமாக ஓட்டிச் செல்கிறார்கள். இதனால் உங்கள் வயிற்றில் பலத்த குலுக்கல் தாக்குதல்கள் நிகழ்கின்றன. அப்போதுதான் சாப்பிட்டீர்கள் என்பதால் குலுக்கலால் உணவு செரிமானம் பாதிக்கப்படுகிறது. அதோடு அறுபதைக் கடந்தவர் என்பதால், பொதுவாக உடல் உறுப்புகள் எல்லாம் நலிவடைய ஆரம்பிக்கும். அதனால்தான் இந்த வயதுக்கு மேல் சாத்வீகமான, குறைந்த அளவு உணவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்வார்கள். கோளாறு பிறர் கண் திருஷ்டியில் இல்லை, ஆட்டோ பயணத்தால்தான். ஒரு வாரத்துக்கு சிரமப்பட்டாலும் பரவாயில்லை என்று பஸ், ரயிலில் ஆபீசுக்குப் போய்வந்து பாருங்கள்.

ஆட்டோ குலுக்கலைவிட நிதானமாக நடப்பது வயிற்று உறுப்புகளுக்கு நல்லது….’’ என்றார். பளிச்சென்று தெளிவடைந்தான் குலோத்துங்கன். வீட்டிற்கு வந்து உலகநாயகியிடம் விவரம் சொன்னான். அடுத்து ஒரு வாரம் ஆட்டோ தவிர்த்து வேறு வாகனங்களில் பயணித்தான். மிகப் பெரிய அளவில் குணம் தெரிந்தது. நேர நெருக்கடியை உத்தேசித்து எப்போதாவது ஆட்டோவில் போவது என்று வைத்துக்கொண்டான். இயல்பாகப் பசித்தது, வயிற்று உப்பிசம் குறைந்தது, கோளாறுகள் நீங்கின. ஆனால், எல்லாம் புரிந்தாலும், உலகநாயகி மட்டும் வீம்பாக அடம் பிடித்து, திருஷ்டி பொம்மையை கழற்ற மறுத்தாள். மேலும் ஏதாவது தீவிர பரிகாரம் என்று ஆரம்பித்துவிடுவாளே என்று பயந்து, அதற்கு மறுப்பு சொல்லவில்லை குலோத்துங்கன்.

பிரபுசங்கர்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • KimHorseRide1610

  பயேக்டு பனிமலைகளுக்கு இடையே வெள்ளைக் குதிரையில் பவனி வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்: புகைப்படத்தொகுப்பு

 • NASASpaceSuit

  நிலவு பயணத்தில் பங்கேற்கும் விண்வெளி வீரர்களுக்கான 2 நவீன விண்வெளி உடைகள்: நாசா அறிமுகம்- புகைப்படங்கள்

 • AirQualityDelhi1610

  அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் வேளாண் கழிவுகளால் டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் காற்று மாசு: புகைப்படங்கள்

 • CatalanSpainProtest

  கட்டலான் தலைவர்களின் சிறைத்தண்டனைக்கு எதிர்ப்பு..: ஸ்பெயினின் பல்வேறு இடங்களில் வெடித்தது போராட்டம்!

 • LebanonWildFire1610

  கடுமையான வெப்பம் மற்றும் அனல் காற்றினால் லெபனானில் வரலாறு காணாத காட்டுத்தீ..: சர்வதேச நாடுகள் உதவ கோரிக்கை!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்