SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புரட்டாசி மாதம் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள்?

2017-09-15@ 10:17:07

வித்தைக்கும், அறிவிற்கும், கணிதத்திற்கும் உரிய புதனின் உச்ச மனையாகிய கன்னி ராசியில் சூரியன் உட்புகும் நாளே புரட்டாசி மாதப் பிறப்பு ஆகும். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் அறிவு, ஆற்றல், விவேகம், சமயோசித புத்தி, யுக்தி கொண்டவர்கள். எதையும் ஆழ்ந்து சிந்தித்து மிக துரிதமாகக் கற்றுக்கொள்ளக் கூடியவர்கள். தமக்கு சம்பந்தம் இல்லாவிட்டாலும் எதையும் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருப்பார்கள். அரிய, பெரிய நூல்கள், விளக்கங்கள், தத்துவங்கள் எல்லாம் அறிந்து வைத்திருப்பார்கள். இவர்கள் மெத்தப்படித்த அறிவாளிகளாகவும், அதேசமயம் படிக்காவிட்டாலும் மேதைகளாகவும், அனுபவ அறிவுச் சுரங்கமாகவும் திகழ்வார்கள். வாதம், பிரதிவாதம் செய்வதில் ஈடு இணையற்றவர்கள். இவர்களிடம் ஒளிவுமறைவு இருக்காது. அதே நேரத்தில் பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்லத் தெரிந்தவர்கள். புரியாத, புதிரான விஷயங்களை பிறர் எளிதில் புரிந்து கொள்ளும்படி சொல்வதில் சமர்த்தர்கள்.

இவர்கள் கற்பூர புத்திக்காரர்கள். ஒரு விஷயத்தை சட்டென்று புரிந்து கிரகித்திக் கொள்ளும் ஆற்றல்மிக்கவர்கள். இவர்களில் பெரும்பாலானோரிடம் எது இருக்கிறதோ இல்லையோ வீடு முழுக்க புத்தகங்களை சேமித்து வைத்திருப்பார்கள். ஒரு புத்தகத்தை முழுவதுமாக மனப்பாடமாகத் தெரிந்து கொள்ளாமலேயே அதன் உட்கருத்தைத்தாமும் புரிந்துகொண்டு, பிறருக்கும் விளக்கவல்லவர்கள். மிகச்சிறந்த தூதுவர்கள். இடம், பொருள், சூழ்நிலை, சந்தர்ப்பம் அறிந்து காய் நகர்த்தி வெற்றி காண்பார்கள். இவர்களின் முகபாவங்களை பார்த்து இவர்களுடைய மனதை அறிவது கடினம். ஆனால் இவர்கள் மற்றவர்களின் எண்ண ஓட்டங்களை சுலபமாகப் புரிந்துகொள்வார்கள். பழகுவதற்கு இனியவர்கள். வலிய வந்து உதவும் மனப்பாங்கு உடையவர்கள்.

பிறர் மனம் புண்படாத வகையில் நடந்து கொள்வார்கள். அதேநேரத்தில் அதிக கௌரவம் பார்க்கக்கூடியவர்கள். பிறரை பணிந்து துதி பாடுவது, இல்லாததை இருப்பதாக சொல்வது, காக்காய் பிடிப்பது, குறுக்கு வழியில் சுயலாபம் தேடுவது போன்றவை இவர்களுக்கு பிடிக்காது. ஏற்றம்இறக்கம், இன்பம்துன்பம், நிறைகுறை, உயர்வுதாழ்வு என எல்லா விஷயங்களையும் அதனதன் போக்கில் எடுத்துக் கொள்ளக்கூடிய பக்குவமுடையவர்கள். இவர்களிடம் வயதிற்கு மீறிய விஷயஞானம் கொட்டிக் கிடக்கும். வேகமும், சுறுசுறுப்பும் வரப்பிரசாதமாகக் கொண்டவர்கள். காலநேரத்தை விரயம் செய்யாமல் செய்வனவற்றை திருந்தச் செய்து வெற்றி பெறுவார்கள். ஆளுமை, நிர்வாக திறமை எல்லாம் இவர்களின் உடன்பிறந்தவை. புதன், சுக்கிரன், குரு கிரகங்கள் சாதகமாக, பலமாக அமையப் பிறந்தவர்கள். மிகப்பெரிய சாதனையாளர்களாக, ஆற்றல் மிக்கவர்களாக, வெற்றியாளர்களாக தேசபக்தர்களாக, பொதுநலனில் அக்கறை உள்ளவர்களாக விளங்குவார்கள்.

தனம்  குடும்பம்  வாக்கு

குடும்பத்தார், உற்றார், உறவினர் என்று எல்லோரையும் அனுசரித்துப்போவார்கள். கொடுத்த வாக்கை எப்படியாவது காப்பாற்றுவார்கள். குரு, சுக்கிரன் சாதகமாக இருக்க பிறந்தவர்கள் நல்ல பாக்கியசாலிகள். பணவிஷயத்தில் கறாராக இருப்பார்கள், கொடுக்கல், வாங்கலில் நேர்மை, நியாயம் இருக்கும். உள்ளொன்று வைத்து புறமொன்று கூறமாட்டார்கள். முடியும், முடியாது என்பதை தீர்மானமாக சொல்லி விடுவார்கள் நம்ப வைத்து கழுத்தறுப்பது இவர்களிடம் இருக்காது. பெண்கள் மூலம் அதிக ஆதாயம் அடைவார்கள். சேமிப்பில் அதிக கவனம் செலுத்துவார்கள். இவர்களிடம் பணம் எப்பொழுதும் சேமிப்பில் இருந்துகொண்டே இருக்கும். தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற பெருந்தன மனப்பான்மை இவர்களிடம் இருக்காது. முக்கிய விஷயங்களை குடும்பத்தாருடன் கலந்துேபசித்தான் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள்.

திட தைரிய வீரியம்

எதிலும் தீர்க்கமாகவும், தெளிவாகவும், திட சித்தத்தோடும் முடிவு எடுப்பார்கள். காரியம் பெரியதா, வீரியம் பெரியதா என்று வரும்போது காரியத்தில் கண்ணாக இருந்து சாதித்துக் காட்டுவார்கள். அதேசமயம் சுயகௌரவத்திற்கு பங்கம் ஏற்படாமல் நடந்து கொள்வார்கள். மனக்குழப்பங்கள், பிரச்னைகளை குடும்பத்தினர் மற்றும் அடுத்தவரிடம் வெளிக்காட்டமாட்டார்கள். இவர்களின் நேர்மையான அணுகுமுறை பலருக்கு ஒத்துவராமல் போக, மனக்கசப்பு ஏற்படலாம். செவ்வாய் பலமாக இருந்தால் ராணுவம், காவல்துறை, தீயணைப்புத்துறை, வனத்துறை போன்றவற்றில் முக்கிய பொறுப்பு வகிப்பார்கள்.

சொத்து  சுகம்

பூர்வீக சொத்துகள், மாமன் வகையில் அனுகூலம், உயில் சொத்து அனுபவிக்கும் பாக்கியம், மனைவி வகையில் செல்வம் என சேரும். அனுபவ அறிவும், படிப்பறிவும் கைகொடுக்கும். உயர் பதவிகள் வகிப்பதாலும், அதிகார மையத் தொடர்பாலும் சொத்து குவியும். சந்திரன் சாதகமாக இருக்கும் பட்சத்தில் தாயார், சகோதரி போன்றோரிடமிருந்து தானமாக  சொத்து கிடைக்கும். இவர்கள் சிந்தனை சக்தி மிகுந்தவர்கள், மூளைக்கு அதிக உழைப்பைத் தருவதால் அடிக்கடி ஒற்றைத் தலைவலி, டென்ஷன், நரம்புத் தளர்ச்சி ஏற்படும். பார்வை, ஜீரண கோளாறுகள் அதிகம் வருவதற்கு வாய்ப்புண்டு. ஆகையால் இவர்கள்
நேரத்திற்கு சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். வயது ஆகஆக மறதிநோய், கை, கால், மூட்டுக்களில் நீர்வீக்கம் என்று உபாதைகள் ஏற்படும். சர்க்கரை நோய் இளம்வயதிலேயே வருவதற்கு வாய்ப்புண்டு. ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமானால் குறைவது மிகவும் கடினம்.

பூர்வ புண்ணியம்  குழந்தைகள்

பிள்ளைகளால் பெருமை அடையும் பாக்கியம் உள்ளவர்கள். இவர்களின் வளர்ப்புமுறை காரணமாக குடும்பத்திற்கு உதவுகின்ற வகையில் புத்திரர்கள் அமைவார்கள். குரு, சனி பலமாக உள்ளவர்களுக்கு பிள்ளைகளால் ஏற்றம் உண்டு. வயோதிக காலத்தில் இவர்களை பாசமாக தாங்கிப் பிடிப்பார்கள். இவர்கள் தொடங்கி வைக்கும் காரியங்கள் ஒன்றுக்குப் பத்தாகப் பல்கிப் பெருகும். வாக்கு பலிதம், மந்திர சித்தி கைகூடும். சாஸ்திர விற்பன்னர்களாக இருப்பார்கள். தவம், யோகம், தியானம், நிஷ்டை போன்றவை எளிதில் கைகூடும். லட்சுமி, காளி, அம்மன், பிரத்தியங்கிரா, துர்க்கை போன்ற பெண் தெய்வ வழிபாட்டில் மனம் லயிக்கும். பெருமாள் வழிபாட்டிலும் ஈடுபடுவார்கள்.

ருணம்  ரோகம்  சத்ரு

திட்டமிட்ட வாழ்க்கை என்பதால் எதிலும் அகலக்கால் வைக்க மாட்டார்கள். எந்த விஷயத்தையும் பலமுறை சிந்தித்த பின்பே செயலில் இறங்குவார்கள். அவசிய, அவசர தேவைக்கு கடன் வாங்க நேர்ந்தால் அதை எப்படியாவது உரிய காலத்தில் திருப்பிக் கொடுப்பதில் குறியாக இருப்பார்கள். இவர்களுக்கு நேர்முக எதிரிகள் இருக்கமுடியாது. மறைமுக எதிர்ப்புக்கள் இருந்தாலும் பெரிய சங்கடங்கள் வரவாய்ப்பில்லை. காரணம் சொந்தபந்தம், மற்றும் பொது விஷயங்களில், எந்தப்
பிரச்னையிலும் அதிகம் மூக்கை நுழைக்காமல் தாமரை இல்லை தண்ணீர் போல் நடந்து கொள்வதுதான்.

பயணங்கள்  மனைவி  கூட்டாளிகள்

இயற்கையை மிகவும் விரும்புபவர்கள். எழில் கொஞ்சும் இடங்கள், மலை வாசஸ்தலங்கள், நீர் வீழ்ச்சி இடங்களுக்கு நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சென்றுவருவதில் அலாதி பிரியமுடையவர்கள். கலை, கலாச்சாரம், நாகரிகம், சிற்பங்கள், பழமையான ஸ்தலங்களை பார்ப்பதில் அதிக ஈடுபாடு காட்டுவார்கள். வான்வெளிப் பயணத்தை ரசித்து மேற்கொள்வார்கள். இயற்கையை ஆராதிப்பவர்கள் தம் பயண அனுபவங்களை மற்றவர்களிடம் ஆர்வமாக பகிர்ந்து கொள்வார்கள். விட்டுக்கொடுக்கும் தன்மை, நகைச்சுவை உணர்வு காரணமாக நண்பர்கள், கூட்டாளிகள் சாதகமாக இருப்பார்கள். குரு, சுக்கிரன் சாதகமாக அமைந்தால், இனிய இணக்கமான இல்லறம் அமையும். மதியூகமும், நற்பண்புகளும், நிர்வாகத் திறமையும் உள்ள பெண் வாழ்க்கைத் துணைவியாக அமைவார். பெரும்பாலானோர்க்கு மனைவி வந்தபிறகுதான் யோகம் வரும். மனைவி மூலம் பல யோக, போக, சுக பாக்கியங்களை அனுபவிப்பார்கள்.

தசம ஸ்தானம்  தொழில்

வாழ்வாதாரம், தொழில், வேலை, வியாபாரம் போன்றவற்றில் பெரும் வெற்றியாளர்களாகத் திகழ்வார்கள். சரீர உழைப்பு, கடினமான வேலைகள் உள்ள தொழில் அமைப்பு இருக்காது. மூளைக்கு அதிக உழைப்பு தரக்கூடிய பணியே அமையும். சாமர்த்தியப் பேச்சால் தொழில் செய்யும் தரகர்கள், கமிஷன் ஏஜெண்டுகளாக இருப்பார்கள். எத்துறையில் இருந்தாலும் அத்துறையில் வித்தகர்களாக இருப்பார்கள். பிறருக்கு ஆலோசனை சொல்லக்கூடிய ஆடிட்டர், வக்கீல், ஆர்கிடெக்ட் இன்ஜினியர் பணிகளில் முதன்மை பெரும் யோகம் உண்டு. சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், கவிஞர், நூல் பதிப்பக உரிமையாளராக  இருப்பார்கள். இயல், இசை, நாடகம் போன்ற கலைத்துறைகளில் முத்திரை பதிப்பார்கள். நிதி, நீதித்துறையில் பணியாற்றும் அம்சமும் இருக்கும். பெரிய நிறுவனங்கள், அரசுசார்பு அமைப்புக்கள், நிதிநிறுவனங்கள், அதிகார மையங்கள் போன்றவற்றில் பொறுப்பு வகிப்பார்கள். தலைமைப் பதவியில் இருப்பவர்களுக்கு மதியூக மந்திரியாக, செயல் தலைவராக விளங்கும் தகுதி உடையவர்கள். துணிக்கடைகள், சூப்பர் மார்க்கெட், தங்கம், வெள்ளி வியாபாரம், நவநாகரிக பொருட்கள், ஏற்றுமதி, இறக்குமதி என்று பல்வேறு துறைகளில் கால்பதித்து பெரும் தனம், புகழ், செல்வாக்கு கிடைக்கப் பெறுவார்கள்.

 ஜோதிட முரசு மிதுனம் செல்வம்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • tokyo_olympic_2020

  டோக்கியோ 2020 ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக்ஸ் போட்டிக்கான அதிகாரப்பூர்வ சின்னங்கள் வெளியீடு!!

 • kandhan_savadi11

  கந்தன்சாவடியில் கட்டுமான பணியின் போது சாரம் சரிந்து விபத்து : 2 பேர் பலி ; பலர் படுகாயம்

 • LosAngelesSuperMarketshot

  லாஸ் ஏஞ்சலஸ் நகரின் சூப்பர் மார்க்கெட் கடைக்குள் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி

 • boataccident_19dead

  பிரான்சன் படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மலர் வளையம் வைத்து கண்ணீர் மல்க அஞ்சலி

 • intel_beer_fes

  சர்வதேச பீர் திருவிழா : கலை நிகழ்ச்சிகள், வான வேடிக்கைகள் உடன் 1300 வகையான பீர்கள் விழாவில் அறிமுகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்