SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நோய்களை அகற்றும் மருந்தீஸ்வரர்

2017-09-13@ 08:48:08

மருங்கப்பள்ளம்

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் தஞ்சையை ஆண்ட இரண்டாம் சரபோஜி மன்னர் மருந்துப் பள்ளம் என்ற கிராமத்தின் அருகே நடைபெற்றுக் கொண்டிருந்த கட்டுமானப் பணிகளைப்  பார்வையிடுவதற்காக இங்கே  வந்து  தங்கியிருந்தார். அப்போது அவருக்கு அருகே இருந்த ஒரு ஆலயம் பற்றியும் அங்கு அருள்பாலிக்கும் இறைவனின் சக்தி பற்றியும் ஆலயத்தைச் சுற்றி விளைந்து கிடந்த பச்சிலைகள் பற்றியும் சொல்லப்பட்டது. தீராத நோயால் தவித்து வந்த மன்னர் ஆலய திருக்குளத்தில் நீராடி இறைவன் மருந்தீஸ்வரரையும் இறைவி பெரியநாயகியையும் ஆராதித்து வணங்கி வந்தார். அத்துடன் அங்கு இருந்த ஒரு சித்த வைத்தியர் ஆலோசனைப்படி பச்சிலைகளையும் உட்கொண்டார். மன்னரின் நோய் படிப்படியாக, முற்றிலுமாகத் தீர்ந்தது.

மனம் மகிழ்ந்த மன்னர் மருந்துப் பள்ளம் கிராமத்தை ஆலயத்திற்கு தானமாக வழங்கினார். அந்தப் பெயர் மருவி தற்போது மருங்கப் பள்ளம் என அழைக்கப்படுகிறது. நோய் தீர்க்க உதவுவது மருந்து. மருந்து என்றால் வடமொழியில் ஔஷதம் என்று பொருள். நோய் தீர்க்கும் இறை மருத்துவர் என இந்த இறைவன் ஔஷதீஸ்வரர், மருந்தீஸ்வரர் என்று போற்றப்படுகிறார். ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் உள்ள ராஜகோபுரத்தைக் கடந்ததும் பிள்ளையார் பீடம், நந்தி மண்டபம் ஆகியவை உள்ளன. அடுத்து உள்ள வசந்த மண்டபத்தின் வலதுபுறம் இறைவி பெரிய நாயகியின் சந்நதி உள்ளது. இந்த அன்னைக்கு நான்கு கரங்கள். மேல் இரு கரங்களில் தாமரை மலர்களைச் சுமந்தபடியும் கீழ் இரு கரங்களில் அபய, வரத முத்திரைகளுடனும் நின்ற கோலத்தில் புன்னகை தவழ அன்னை அருள்பாலிக்கிறாள். வசந்த மண்டபத்தின் வலதுபுறம் திறக்கப்படாத சுரங்கப்பாதை ஒன்று உள்ளது.

வசந்த மண்டபத்தை அடுத்து மகாமண்டபம். அடுத்துள்ள அர்த்த மண்டப நுழைவாயிலில் துவார பாலகர்களின் திருமேனிகள். வலதுபுறம் அனுக்ஞை விநாயகர் அருள்பாலிக்கிறார். அடுத்து, கருவறையில் இறைவன் மருந்தீஸ்வரர் லிங்கத் திருமேனியில் கீழ்திசை நோக்கி அருள்பாலிக்கிறார். ஆலயம் பல நூறு ஆண்டுகள் பழமையானது. இந்த ஆலயத்தைக் கட்ட உதவியவர் பிரமாதி ராயர் எனப்படுகிறார்.  அவரது திருமேனிச் சிலை நந்தி மண்டபம் அருகிலேயே உள்ளது. தேவ கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, மகா கணபதி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் திருவருள் புரிகிறார்கள். திருச்சுற்றில் முருகன் - வள்ளி - தெய்வானை ஆகியோர் மேற்கிலும், கிழக்கில் சனி பகவான், பைரவர், லட்சுமி நாராயணன் ஆகியோரும் பக்தர்களின் குறைகளைக் கேட்டு அவற்றை நிவர்த்திக்கக் காத்திருக்கிறார்கள். இங்கு சனி பகவானுக்கு மட்டுமே சந்நதி உள்ளது; நவகிரகங்கள் இங்கு கிடையாது. இந்த சனி பகவான் சக்திவாய்ந்தவர் என்கின்றனர் பக்தர்கள்.

சனிக்கிரக பாதிப்பு உள்ளவர்கள் இவருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து எள் சாதம் சமைத்து பிரசாதமாக வழங்கி வருகின்றனர். தோஷம் விலக ஆலய திருக்குளத்தில் நீராடி 108 முறை வெளிப்பிராகாரத்தை சுற்றிவர, அந்தப் பாதிப்பின் வேகம் குறைகிறது என்கின்றனர். சிவராத்திரி, பௌர்ணமி, திருவாதிரை, மாசிமகம், நவராத்திரி நாட்களில் இறைவனுக்கும் இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கும், தட்சிணாமூர்த்திக்கும் வியாழக்கிழமைகளிலும், துர்க்கைக்கு செவ்வாய் ராகுகால நேரத்திலும், விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தியன்றும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சூழ, அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. மாசி மகம் அன்றும் சிவராத்திரி அன்றும் பஞ்சமூர்த்திகள் வீதியுலா வருகிறார்கள்.

திருவாதிரை அன்று நடராஜர் -  சிவகாமி வீதியுலா வருவர். திருவாதிரை அன்று மூலவரை காலைக் கதிரவன்தன் பொற்கதிர்களால் ஆராதனை செய்வது கண்கொள்ளா காட்சியாகும். ஆலயத்தின் தல விருட்சம் பாதிரி மரம்.ஆலயத் திருக்குளத்தில் செந்தாமரை, வெண்தாமரை இரண்டும் மலர்ந்து காணப்படுவது அபூர்வ காட்சியாகும். ஆலயம் காலை 7.30 முதல் 11 மணிவரையிலும். மாலை 5 முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். தன்னை வணங்கும் பக்தர்களின் நோய்களைப் படிப்படியாகக் குறைத்து அவர்கள் பரிபூரண குணம் பெற இத்தல இறைவன் மருந்தீஸ்வரர் அருள்புரியக் கூடியவர் என்பதில் சந்தேகமே இல்லை. தஞ்சை மாவட்டம் பேராவூரணியிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள மருங்கப்பள்ளம் என்ற கிராமத்தில் உள்ளது மருந்தீஸ்வரர் ஆலயம்.

- ஜெயவண்ணன்

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • trans_porattam

  ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான படுகொலையை கண்டித்து பிணம் போல் படுத்து திருநங்கைகள் நூதன போராட்டம்

 • neru_park_chinnamalai11

  நேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா!

 • stalin_dmk11

  தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் சாலை மறியல்

 • PlasticawarenessLondon

  லண்டன் பூங்காவில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி

 • stalin_arrestkaithu11

  தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மதுராந்தகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் கைது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்