SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேவனுக்கு ஆரமாய் விளங்கும் தேவாரம்!

2017-09-12@ 16:51:25

மன இருள் அகற்றும் ஞானஒளி - 25

ஆன்மிகம் என்பதே மனம் சார்ந்த ஒன்று. நம்முடைய பேராசைகளுக்கு கடிவாளம் போட்டு நம்மை நல்வழிப்படுத்துவதுதான் ஆன்மிகத்தின் முக்கிய நோக்கம். அதனால் பற்றையெல்லாம் பரம்பொருள் மீது வைக்கச் சொன்னார்கள் பெருமக்கள். அலைபாயும் மனதை அடக்கி அங்குசத்தால் அதைக் கட்டிப்போட்டு கடிவாளம் இட்டு நெறி சார்ந்த கடமை உணர்வோடு இயங்க வைப்பதுதான் ஆன்மிகம். ஆழ்வார்களும் நாயன்மார்களும் ஏனைய குருமார்களும் காலம் காலமாக இதைத்தான் நமக்கு சொல்லிக்கொண்டு வருகிறார்கள். அப்பர் தேவாரத்தில் அற்புதமான ஒரு பதிகம் - திருப்பாதிரிப்புலியூர் பற்றியது. இன்றைய கடலூருக்கு மிக அருகில் உள்ள கோயில். அங்குள்ள சிவபெருமானை புலிக்கால் முனிவர் பூசித்ததாலும், பாதிரி மரம் தலவிருட்சமாக ஆனதாலும் இந்த ஊருக்கு திருப்பாதிரிப்புலியூர் என்று அழைக்கப்படுகிறது. அப்பர் பெருமான் கற்றூணை பூட்டியோர் கடலில் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயமே என்று பாடி கல் தெப்பத்தில் மிதந்து கரையேறிய திருத்தலம் இது. அவர் கரையேறிய குப்பம் என்ற இடம் இன்றும் உள்ளது குறிப்பிடத்தக்கது! நம் உயிரை உருக்குகிற அந்த தேவாரப் பாடல் இதோ...

‘‘ஈன்றாலுமாய் எனக்கு
எந்தையுமாய் உடன்
தோன்றினராய் மூன்றாய் உலகம்
படைத்து உகந்தான் மனத்துள்
இருக்க ஏன்றான் இடையவர்க்கு
அன்பன் திருப்பாதிரிப்புலியூர்த்
தோன்றாத் துணையாய் இருந்தனன்
தன் அடியோங் களுக்கே’’!

இந்த தேவாரப் பதிகத்தின் பொருளை சொல்லித்தான் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. எனக்கு தாயாய், தந்தையாய் நிழல்போல் பின்தொடரும் உடன் வருகிற சகோதர சகோதரிகளாய் இருப்பவனே, மூன்று உலகங்களையும் படைத்தவனே, தேவர்களின் தலைவனே, என் மனதில் குடியிருக்க சம்மதம் தெரிவித்தவனே….பரம்பொருளான பரமசிவன்மீது நெருக்கம் உருக்கம், உள்ளார்ந்த காதல் கலந்த அன்பு இருந்ததால்தான், இப்படிப்பட்ட தேவாரப்பாடல் நமக்கு கிடைத்திருக்கிறது. தேவாரம் என்பதே தேவனுக்கு ஆரம்தானே! பரமனுக்கு அணிவிக்கப்படுகிற தெய்வ நல்மாலைதானே! தேன்தமிழும் தெய்வத்தமிழும் கலந்திருப்பதால்தானே காலம் கடந்தும் அப்பரின் வற்றாத ஜீவநதியாக அவரின் அருள் மணக்கும் தேவாரப் பதிகங்கள் தொடர்ந்து மணம் வீசிக்கொண்டிருக்கின்றன! இந்து மதத்தில் ஏகப்பட்ட கடவுள்கள் ஏகப்பட்ட உருவ வழிபாடுகள், இதற்கெல்லாம் காரணம் என்ன? இந்தக் கேள்விக்கு மிக அர்த்தத்தோடு கூடிய அழகான மிகவும் ரம்மியமான பதிலைத் தருகிறார் ஆதிகவி என்று போற்றப்படுகிற பொய்கை ஆழ்வார்.

‘‘தமர் உகந்தது எவ்உருவம்,
அவ்உருவம் தானே;
தமர் உகந்தது எப்பேர், மற்றுஅப்பேர்
தமர் உகந்து எவ்வண்ணம் சிந்தித்து
இமையாது இருப்பரே
அவ்வண்ணம் ஆழியான் ஆம்.’’

இதன் பொருள்:குறிப்பிட்ட வடிவத்திற்குள்ளோ பெயருக்குள்ளோ அடக்க முடியாத பெருமை உடையவன் இறைவன். இருந்தபோதிலும், தன் பெருமையைப் பற்றி நினைக்காமல் பக்தர்கள் அதாவது அடியார்களுக்குப் பிடித்த, அவர்களுக்கு உகந்த உருவம், பெயர் முதலியவற்றையே உவப்புடன் ஏற்றுக்கொள்கிறான். அவர்கள் விரும்பிய உருவமே அவன் உருவம், அதாவது இறைவனுடைய உருவமாக இருக்கிறது. நினைப்பவர் மனத்தையே தன் கோயிலாகக் கொண்ட இறைவன், அவர் என்ன நினைக்கிறானோ அதுவாகவே ஆகிவிடுகிறான். நீ அவனை கிருஷ்ணனாகப் பார்க்கிறாயா? கிருஷ்ண பரமாத்மாகவே உனக்கு அவன் காட்சி கொடுப்பான். நீ அவனை ராமனாகப் பார்க்கிறாயா அவன் உனக்கு ராமனாகவே காட்சிளிப்பான். பார்வையின் தன்மையைப் பொருத்ததுதான் பரம்பொருளின் தோற்றம். தனக்கென ஓர் உருவமும் ஒரு நாமமும் இல்லாதவன் இறைவன் அத்தகையவனுக்கு பல வடிவங்களையும், பெயர்களையும் வைத்து வணங்குவதும், அழைப்பதும் நமது மரபு.

இறைவனுடைய தோற்றப் பொலிவை இதைவிட யாரால் தெளிவாகச் சொல்லமுடியும்? மனதில் எந்தக்  குழப்பமும் வேண்டாம். இன்னும் ஒருபடி மேலே போய் பகவத்கீதையில் பகவான் கண்ணன் சொல்கிறானே! ‘நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்’ என்ற  இந்த வாக்கியத்திற்கு பொய்கை ஆழ்வாரின் கற்கண்டுப் பாசுரம்தான் எத்தகைய அழகான விளக்கத்தை தந்துள்ளது. எம்பெருமான் மீது உண்மையான அன்பு இருந்தாலே போதும். காதலாகி கசிந்து கண்ணீர் மல்க வேண்டும். அப்படி உணர்வுகள் ஒன்றுபட்டால்தான் இறையுணர்வை நாம் உண்மையாக அனுபவிக்க முடியும். நம்மில் பலரும் நுனிப்புல் மேய்கிறோம். போகிறபோக்கில் பார்த்துவிட்டு குசலம் விசாரித்துவிட்டுப் போவதற்கு இறைவன் ஒன்றும் நமது பிஸினஸ் பார்ட்டனர் கிடையாது.

நம்மை அவனிடம் நாம் ஒப்படைக்க வேண்டும் நமக்கு (Big Boss) பிக்பாஸ் அவன்தான். இஸ்லாம்கூட இறைவன் மிகப்பெரியவன் என்று உரத்த குரலில் சொல்கிறது. முடிந்தவரை அறம் சார்ந்த வாழ்க்கையை நாம் வாழவேண்டும், வாழ முற்படவேண்டும். பொய்யாமொழிப் புலவர் திருவள்ளுவர் ‘‘அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் புறத்தே புகழும் இல.’’- என்கிறார். அறநெறியில் வாழ்வதால் வரும் பயனே உண்மையான இன்பம். மற்ற குறுக்கு வழிகளில் வரும் பயன் ஒருநாளும் இன்பத்தை நல்காது. சமீபத்தில் குருவாயூருக்குப் பக்கத்தில் ஒரு இளம் ஜோடி திருமணம் செய்துகொண்டனர். திருமணம் முடிந்தவுடன் புது மனைவி தன் கணவரிடம், மூன்றாமவர் ஒருவனைச் சுட்டிக்காட்டி, ‘இதோ நிற்கிறானே, இவன்தான் என் அன்புக்காதலன்.

நான் இவனோடுதான்  வாழ விரும்புகிறேன்’ என்று துணிவாகச் சொல்ல, இருதரப்பிலும் கைகலப்பு. கல்யாண மண்டபமே ரகளைக்காடாகிப்போனது. கடைசியாக எட்டு லட்ச ரூபாய் கொடுத்துவிட்டு உங்கள் பெண்ணை அழைத்துச் செல்லுங்கள் என்று ஒரு முடிவுக்கு வந்தார்கள். கணவன் கட்டிய தாலியோடு, தன் முன்னாள் காதலனோடு போய்விட்டாள் அந்தப் பெண். இதற்கெல்லாம் என்ன காரணம்? கட்டுப்பாடற்ற ஆசைகளும் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்கிற மன ஓட்டமும்தான் முக்கிய காரணம். மனம் ஒருமைப்படுவதற்காகவாவது நாம் தேவார திவ்யப் பிரபந்தங்களைப் படிப்போம். முடிந்தவரை அதன்படி நடந்தால் நாளும்  இன்பமே, துன்பம் இல்லை.

ஆழ்வார்க்கடியான் மை.பா.நாராயணன்

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • trans_porattam

  ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான படுகொலையை கண்டித்து பிணம் போல் படுத்து திருநங்கைகள் நூதன போராட்டம்

 • neru_park_chinnamalai11

  நேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா!

 • stalin_dmk11

  தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் சாலை மறியல்

 • PlasticawarenessLondon

  லண்டன் பூங்காவில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி

 • stalin_arrestkaithu11

  தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மதுராந்தகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் கைது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்