SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மழலை வரம் அருள்வாள் மலையன்குளத்து இசக்கி

2017-09-09@ 10:15:13

நம்ம ஊரு சாமிகள் - மூன்றடைப்பு, நெல்லை மாவட்டம்

திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு அருகேயுள்ள மலையன்குளத்தில் கோயில் கொண்டுள்ள இசக்கியம்மை, மழலை செல்வம் வேண்டி வருபவர்களுக்கு வரம் அளித்து அருள்பாலிக்கிறாள். திருநெல்வேலி மூன்றடைப்பு அருகேயுள்ள மலையன்குளத்தில் நானூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெரியாங்கோனார், தம்பி சின்னாங்கோனார் மற்றும் அவர்களது உறவினர் கழக்குடி கோனார் ஆகியோர் தங்களுக்கு சொந்தமான செம்மறி மற்றும் வெள்ளாடுகள் என சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்தனர். ஊரில் மழை தண்ணி இல்லாததால் காவல்கிணறு அருகேயுள்ள மாட நாடார் குடியிருப்பில் கிடை மறித்தனர். ஒருநாள் இரவு பெரியாங்கோனார் மலையன்குளத்தில் நல்ல மழை பெய்து குளம் நிறைந்ததுபோல் கனவு கண்டார்.

அதனால் உடனே அங்கிருந்து ஆடுகளை ஓட்டிக்கொண்டு புறப்பட்டனர். அவ்வாறு வரும்போது மாடன்நாடார் தங்கை மாடத்தி வளர்த்து வந்த ஆட்டுக்கிடாவை தங்களது ஆடுகளுடன் சேர்த்து ஓட்டி வந்து விடுகின்றனர். ஆட்டைத் தேடி கால் தடம் பார்த்து வந்த மாடத்தி, கலந்தபனை ஊரில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த பெரியாங்கோனார் மற்றும் ஆடுகளை கண்டாள். அவரிடம் தனது ஆட்டு கிடா குறித்து கேட்க, அவர் நான் உனது ஆட்டை பார்க்கவில்லை. எங்க ஆடுகளோடு வரவில்லை என்று கூறிவிட்டார். இதனால் மனமுடைந்த மாடத்தி, இசக்கியிடம் முறையிட்டு விட்டு அவ்விடத்திலேயே நாக்கை பிடுங்கி மாண்டு போனாள். ஆடுகளுடன் மறுநாள் பொழுது விடிய பெரியாங்கோனார் மற்றும் சின்னாங்கோனார், அவர்களுடன் சேர்ந்த கழக்குடிகோனார் ஆகியோர் மலையன்குளத்துக்கு வந்து சேர்ந்தனர்.

மறுவாரம் குலதெய்வம் ஓடைக்கரை சுடலைமாடசுவாமி கோயிலுக்கு கொடை விழா கொடுக்க ஏற்பாடுகளை செய்தார். பெரியாங்கோனார் தம்பி சின்னாங்கோனாரிடமும், உறவினர் கழக்குடி கோனாரிடமும் கொடைவிழாவிற்கு தேவையான பூஜை சாமான்கள் மற்றும் துள்ளுமறி, பரண் ஆடு என எல்லாவற்றையும் வாங்கி வருமாறு கூறிவிட்டு, பத்தமடையில் தனது தங்கை மகனுக்கு மணமுடித்து கொடுத்திருந்த மகள் சுடலியை அழைத்து வர சென்றார்.
அப்போது அவரது தங்கை, ‘‘அண்ணேன் உன் மகள், ஏழு மாத சூலியாக இருக்கிறா, வளை காப்பு நடத்தி நம்ம வீட்டுல வை, என் மருமகளுக்கு தலைப்பிரசவத்தை நான் பார்த்துக்கிறேன்’’ என்று கூற, தலைப்பிரசவம் தாய் வீட்டுல தான் பார்க்கணும் அடுத்த வாரம் சுடலை கோயில்ல கொடை வச்சுருக்கேன். அதனால நாளைக்கு வளைகாப்பு வச்சு என் பிள்ளைய கூட்டிட்டு போறேன்.

உன் சொந்தத்துல உள்ளவங்களுக்கு சொல்லிடு. விருந்துக்கு தேவையான காய்கறி, மளிகை சாமான்களை தம்பி சாயந்திரம் கொண்டு வந்து இறக்கிருவான் என்று கூறிவிட்டு வீட்டுக்குச் செல்கிறார். மறுநாள் காலை உறவினர்களுடன் தங்கை வீட்டுக்கு சென்று மகளுக்கு வளைகாப்பு நடத்துகிறார். மகளை அழைத்துச்செல்ல முற்படும்போது, அண்ணேன் நான் பொல்லாத கனவு கண்டேன். என் மருமகளை அழைத்துச் செல்ல வேண்டாம் என தடுத்த தங்கையின் வார்த்தைகளை மீறிவில்லுவண்டி கட்டி மகள் சுடலியை திங்கள் கிழமை அழைத்து வந்தார். மூன்றுநாள் கடந்த நிலையில் வெள்ளிக்கிழமை ஓடைக்கரை சுடலைமாடசுவாமி கோயிலில் கொடை விழா நடக்கிறது. வீட்டில் மகளையும், துணைக்கு தனது சின்னாத்தாவையும் வைத்துவிட்டு பெரியாங்கோனார், மனைவி, தங்கையர்கள் உள்பட உறவினர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு கோயிலுக்கு செல்கின்றார்.

பூஜை நேரத்தில் பரண் ஆடு பலி கொடுக்க, கிடாவை எங்கே என்று கேட்க, சின்னாங்கோனார் சொல்கிறார் ‘‘எண்ணேன், சொள்ளமுத்து மச்சான், இன்னும் கிடா கொண்டு வரலையே’’ என்று கூற, ‘‘சரி, சரி  உடனே நம்ம ஆட்டோடு நிக்கிற மாடன் நாடார் தங்கச்சி மாடத்தியோட கிடாவ பிடிச்சிட்டு வா’’ என்று சத்தம் போடுகிறார். மாடத்தியின் கிடாவை கொண்டு வந்து பரண்மேல் ஏற்றுகிறார்கள். மல்லாந்து படுக்க வைத்து அதன் வாயை பொத்தி அலங்காரத்தேவர் ஆட்டுக்கிடாவை நெஞ்சுகீற முற்படும்போது கிடா அம்மே… அம்மே… என்று மூன்று முறை கத்தியது. மறுகணமே ஒரு பனை உயரத்திற்கு மேலே சென்று கீழே விழுந்தார் அலங்காரத்தேவர். அவர் தனது தெய்வத்தை கையெடுத்து வணங்கி, ஆட்டை பலி கொடுத்தார்.

ஆட்டுகிடா சத்தம் போட்டதும், மாட நாடார் குடியிருப்பில் இருந்து ஆங்காரம் கொண்டு தாயான இசக்கியம்மை, வாராளே மலையன்குளம் நோக்கி, பெரியாங்கோனார் வீட்டிற்கு அவரது ரூபத்தில் சென்று சுடலி, சுடலி என்று அழைக்க, தனது தந்தை கோயில் சாமான் எடுக்க வந்திருப்பாரோ என்று எண்ணி சுடலி கதவை திறந்தாள். வீட்டிற்குள் வந்த இசக்கி, சத்தமே இல்லாமல் சூலியான சுடலியை பலி வாங்கிவிட்டு சென்று விட்டாள். கொடை முடிந்து வீட்டுக்கு வந்த பெரியாங்கோனார் மற்றும் உறவினர்கள் சுடலியின் உடலைக்கண்டு கதறி அழுதனர். மறுநாள் சுடலியின் உடலை தகனம் செய்ய வேண்டும். சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்கின்றனர். கர்ப்பிணி பெண் இறந்து போனால் வயிற்றுப்பாரத்தோடு தகனம் செய்யக்கூடாது என்பதால் வயிற்றை கீறி குழந்தையை வெளியே எடுக்க சுடுகாட்டிற்கு சுடலைமுத்து பண்டுவனை அழைத்து வருகின்றனர்.

அவன் வந்து மந்திரித்த மையை நெற்றியில் வைத்துக்கொண்டு இறந்து போன சுடலியின் வயிற்றை கீறி உயிரற்று இருந்த அவளது குழந்தையை எடுக்கிறார். பின்னர் தாய், சேய் இருவரது உடல்களும் தகனம் செய்யப்படுகிறது. அது முடிந்த பின் பண்டுவன், சுடுகாடு பகுதியிலிருந்த கிணற்றில் இறங்கி, கை, கால்களை அலம்புகிறான். அப்போது தண்ணீர் பட்டு அவனது நெற்றியில் இருந்த மை அழிகிறது. உடனே கிணற்றிலிருந்து வெகுண்டெழுந்த இசக்கி, பண்டுவனை கொல்ல முற்படுகிறாள். அப்போது, ஆத்தா இசக்கி, என்னை எப்படியும் பழி எடுத்திருவ, எனக்கு, உன் இடத்தில் நிலையம் வேண்டும். என்று கேட்க, என் கோட்டையில் இடமில்லை, என் பார்வையில் இருக்க இடம் தருகிறேன் என்று கூறியவாறு பண்டுவனை இசக்கி வதம் செய்தாள்.

இச்சம்பவம் நடந்த மறுநாளில் இருந்து ஊரில் உள்ளோர்க்கு வாந்தி, வயிற்றுப்போக்கு என பிணி உருவானது. பெரியாங்கோனார் ஆடுகளில் கிடாக்கள் சில ஒவ்வொன்றாக மடிந்தது. இவற்றுக்கெல்லாம் காரணம் என்ன என்று அறிய நெல்லை நகருக்கு சென்று வள்ளி என்ற குறி சொல்லும் பெண்ணிடம் விபரம் கேட்டனர். அவள் மாட நாடார் குடியிருப்பு ஊரிலிருந்து மாடத்தியின் கிடாவை அபகரித்து கொண்டு வந்து சுடலைக்கு பலி கொடுத்ததாலும், மாடத்தியின் சாபத்தாலும் இசக்கி கொண்ட கோபம்தான் காரணம் என்று விளக்கம் கூறினாள். என்ன செய்வதென்று கேட்க, ஊரம்மன் கோயிலான நல்லமுத்தம்மன் கோயில் முன்பு சிறு சொளவில் ஐந்து வாழைப்பழமும், தேங்காய் மற்றும் வெற்றிலை பாக்குடன் எலுமிச்சை கனி வைத்து அதை கொண்டு சென்று வரும் வெள்ளிக்கிழமை பூஜை முடிந்து கோயில் நடை அடைத்த பின் வைத்து விட்டு வந்துவிடுங்கள்.

மறுநாள் காலை அந்த சிறு சொளவு எங்கு வந்து இருக்கிறதோ  அந்த இடத்தில் இசக்கியம்மனுக்கு கோயில் கட்டி வழிபடுங்கள் என்றுரைத்தாள். அதன்படி சிறுசொளவு நல்லமுத்தம்மன் கோயில் முன்பு வைக்கப்பட்டது. அந்த சொளவு மறுநாள் காலை மலையன்குளம் ஊருக்கு மேற்கே குளத்தின் கரையில்  ஆலமரத்து மூட்டில் இருந்தது. அந்த இடத்தில் இசக்கியம்மனுக்கு கோயில் கட்டப்பட்டது. மாட நாடார்குடியிருப்பில் இருந்து பிடிமண்ணும், முப்பந்தலில் இருந்து ஆவாஹனம் செய்யப்பட்ட மஞ்சளும் கொண்டு வந்து மண் உருவம் செய்து நிலையம் இட்டு இசக்கியம்மனை பூஜித்து வந்தனர். மதித்து வணங்குபவர்க்கு தாயாகவும், அவமதிப்பவர்க்கு நீலியாகவும் மாறிவிடுவாள் இசக்கி. மலையன்குளத்து இசக்கி, மழலை வரம் வேண்டி மனமுருகி வழிபடும் பக்தர்களுக்கு வரமளித்து காத்தருள்கிறாள்.

மலையன்குளத்து இசக்கியம்மன் கோயிலில் சுடலைமாடன், முண்டன், சிவனணைந்த பெருமாள், பாதாளகண்டி, பேச்சி உள்ளிட்ட இருபத்தியோரு தெய்வங்கள் அருள்பாலிக்கின்றன. கோயில் கட்டிய பெரியாங்கோனாருக்கு அம்மனின் எதிரில் மண் பீடம் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டு தோறும் ஆடிமாதம் கடைசி வெள்ளிக்கிழமை இரண்டு நாள் கொடைவிழா நடைபெறுகிறது. இக்கோயில் திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவில் செல்லும் சாலையில் மூன்றடைப்பு என்ற இடத்திலிருந்து கிழக்கே தோட்டாக்குடியை அடுத்த மலையன்குளம் கிராமத்தில் அமைந்துள்ளது.

சு. இளம் கலைமாறன் படங்கள்: மும்பை
எஸ்.எஸ்.மணி, இ.எஸ்.சுகந்தன்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-04-2019

  20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • iyesumakal11

  இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

 • 19-04-2019

  19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-04-2019

  18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • chinaautoshow

  சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்