SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குரு, தட்சிணாமூர்த்தி இருவரில் மூக்குக்கடலை மாலையை யாருக்கு சாத்துவது?

2017-09-04@ 17:10:37

வருடந்தோறும் வருகின்ற குருப்பெயர்ச்சி சமயத்தில் இதுபோன்ற சந்தேகங்கள் ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. அவற்றுக்கு உரிய விளக்கங்களும் வெளிவந்துகொண்டுதான் இருக்கின்றன. முதலில் குருபகவான் வேறு, தட்சிணாமூர்த்தி வேறு என்பதை மிகச்சரியாகப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள் என்பது உங்கள் கேள்வியில் இருந்தே தெரிகிறது. நவகிரஹங்களில் உள்ள குருபகவானுக்கு உரிய தானியமாக மூக்குக்கடலை என்று அழைக்கப்படும் கொண்டைக்கடலையை வகுத்து உள்ளார்கள். இந்த மூக்குக்கடலைக்கும், தட்சிணாமூர்த்திக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நவகிரஹங்களில் உள்ள குருபகவானுக்கு உரிய தானியம் கொண்டைக்கடலை என்பதால் அதனை மாலையாகக் கோர்த்து முதலில் குருபகவானுக்கு அணிவித்தார்கள்.

தட்சிணாமூர்த்தியை குருபகவானாக எண்ணி வணங்கியதால் நாளடைவில் அந்த மாலை அவருக்கும் அணிவிக்கப்பட்டு வருகிறது. குருபகவானுக்கு உரிய தானியம் கொண்டைக்கடலை என்பது போல், சனி பகவானுக்கு உரிய தானியம் எள்ளு ஆகும். ஆனால் இந்த தானியம் உருவத்தில் சிறியதாக இருப்பதால் இதனை யாரும் மாலையாகக் கோர்த்து சனிபகவானுக்கு அணிவிக்க முயற்சிக்கவில்லை. தானியங்கள் என்பது இறைவன் நமக்கு அளித்த பிரசாதம். இந்த தானியங்களைக் கொண்டு உணவு தயாரித்து அவற்றை இறைவனுக்கு நைவேத்யம் செய்து எல்லோருக்கும் வழங்க வேண்டும்.  இதற்காகத்தான் பெரியோர்களால் இந்த தானியங்கள் இந்த கிரஹத்திற்கு உரியது என்று வகுக்கப்பட்டிருக்கிறது. யாரோ ஒருவர் இறைவனை அலங்கரித்துப் பார்ப்பதற்காக கொண்டைக்கடலையை மாலையாகக் கோர்த்து அணிவித்ததால் அதுவே தற்போது பெரும்பாலானோரின் பழக்கமாக மாறிவிட்டது.

கொண்டைக்கடலையை மாலையாகக் கோர்ப்பதற்கு பதிலாக அதனை அவித்து சுண்டலாக சமைத்து, அதனை இறைவனுக்கு நைவேத்யம் செய்து எல்லோருக்கும் விநியோகம் செய்தால் அதுவே இறைவனுக்கு முழுமையான சந்தோஷத்தைத் தரும். இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்கிறோம், காய்கறிகளால் அலங்காரம் செய்கிறோம், பழங்களால் அலங்கரிக்கிறோம், வளையல்களை அடுக்கி அலங்கரித்து அழகு பார்க்கிறோம், இதையெல்லாம் செய்து கண்குளிர தரிசித்து மீண்டும் அவற்றை பிரசாதமாக எடுத்துக்கொள்கிறோம். ஆனால் இங்கே நூற்றுக்கணக்கான கொண்டைக்கடலை மாலைகளை அணிவித்து, மறுநாள் அவற்றையெல்லாம் தூக்கி எறிந்துவிடுகிறோம். நிர்மால்யமாகக் குப்பையில் போடுவதற்கு பதிலாக அவற்றைச் சுண்டலாக்கித் தொப்பையில் போடுவது என்பது உசிதமானதுதானே! நவகிரஹங்களில் உள்ள குருவிற்கு உரிய தானியம் கொண்டைக்கடலை. இதனை மாலையாக தட்சிணாமூர்த்திக்கு அணிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.

அபிஷேக நீர், கும்பாபிஷேக நீர், கங்கைப் புனித நீர், ஏழையின் வியர்வை நீர் இவற்றில் சிறந்தது எது? ஏன்? எப்படி? - டி.என். ரங்கநாதன், திருவானைக்காவல்.

கங்கைப் புனித நீரே சிறந்தது. நீங்கள் குறிப்பிட்டுள்ளவற்றில் முதல் மூன்றை ஒரு பிரிவாகவும், கடைசியில் உள்ள ஏழையின் வியர்வை நீரை ஒரு பிரிவாகவும் பிரித்துக் கொள்வோம். முதலாவது பிரிவில் அபிஷேக நீர், கும்பாபிஷேக நீர் ஆகிய இந்த இரண்டும் ஆன்மிக வகையைச் சார்ந்தவை. கங்கை நீர் என்பது இயற்கையில் உருவாவது. கங்கை நீர் என்றதும் கங்கை ஆற்றில் ஓடிவரும் நீர் என்று மேலோட்டமாகப் பொருள் கொள்ளக்கூடாது. இந்த பூலோகத்தின் மையப்பகுதியாக புவியியல் விஞ்ஞானிகள் கருதும் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் அமைந்துள்ள திருக்குளத்தையும் ‘சிவகங்கை’ என்றே அழைப்பார்கள். நமது பாரத பூமியிலிருந்து கிடைக்கும் நீர் மொத்தமும் கங்கை நீருக்குச் சமானமே. ஆறு, ஏரி, குளம், கிணறு என நமது நாட்டில் உள்ள அத்தனை நீர்நிலைகளிலும் கங்கைநீர், பூமியின் அடிவழியாக ஊடுருவிக் கலந்திருக்கும்.

அவ்வளவு ஏன், கடல் நீரிலும் கங்கையின் புனித நீர் கலந்திருக்கும் என்பது நிதர்சனமான உண்மை. அதனால்தான் ஜலத்திற்கு தோஷமில்லை என்று ஆன்மிகப் பெரியோர்கள் சொல்கிறார்கள். நமது இந்திய தீபகற்பம் முழுவதும் கங்கையின் நீர் உள்ளுக்குள் ஊடுருவி எல்லா நீர் நிலைகளிலும் கலந்திருக்கிறது என்பதை யாராலும் மறுக்கமுடியாது. இந்த நீர்தான் நமது வாழ்வின் ஜீவாதாரம். அபிஷேக நீர், கும்பாபிஷேக நீர் என்று நீங்கள் குறிப்பிட்ட ஆன்மிக வகையைச் சார்ந்த இந்த இரண்டு நீரும் ஏதேனும் ஒரு நீர்நிலையிலிருந்து எடுக்கப்பட்ட கங்கையின் புனித நீரே ஆகும். அனைத்துவிதமான பூஜைகளிலும் துவக்கத்தில் ‘கங்கேச யமுனேசைவ கோதாவரி சரஸ்வதி, நர்மதே சிந்து காவேரீ ஜலேஸ்மின் சந்நிதிம் குரு’ என்ற மந்திரத்தை உச்சரிப்பார்கள்.

அதாவது இங்கு வைக்கப்பட்டுள்ள ஜலத்தில் கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவேரி முதலான புண்ணிய நதிகளின் சாந்நித்தியம் வந்து சேரட்டும் என்று சொல்வதாக அர்த்தம். இவ்வாறு இத்தனை புண்ணிய நதிகளின் சாந்நத்தியம் கொண்ட தீர்த்தம்தான் இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது, இந்த தீர்த்தம்தான் கும்பாபிஷேகத்திற்கும் பயன்படுகிறது. ஆக, அபிஷேக நீருக்கும், கும்பாபிஷேக நீருக்கும் கங்கையின் புனித நீரே ஆதாரம் என்பதால் இங்கு கங்கை நீரே முதல் சிறப்புப் பெறுகிறது.

அடுத்ததாக ஏழையின் வியர்வை நீர் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். வியர்வை நீருக்கு ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் கிடையாது. ஏழைக்கு மட்டும்தான் வியர்க்கும், பணக்காரனுக்கு வியர்க்காது என்று அறிவியல் சொல்லாது. உழைப்பவனுக்கு வியர்க்கும் என்று வேண்டுமானால் சொல்லலாம். உண்மையாக உழைப்பவன் எப்பொழுதும் ஏழையாகவே இருப்பதில்லை என்பதே நிஜம். வியர்வை நீர் என்பது மனித உழைப்பின் வெளிப்பாடு. நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைத்தால்தான் உணவு கிட்டும் என்ற உண்மையை மறுப்பதற்கில்லை. அதேநேரத்தில் உடலுக்குள் நீர்ச்சத்து என்பது இருந்தால்தான் வியர்வை என்பதே வெளியேறும். இந்த நீர்ச்சத்தினை நம் உடலுக்குள் புகுத்துவது பூமியிலிருந்து கிடைக்கும் கங்கை நீரே என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். வியர்வை நீருக்கும் கங்கை நீரே ஆதாரம் என்பதால் எல்லா வகையிலும் சிறந்தது கங்கையின் புனித நீரே என்று அறுதியிட்டுச் சொல்லலாம்.

‘மாங்கல்யம் தந்துனானேந...’ என்ற மந்திரம் ஓதிதான் தாலி கட்ட வேண்டுமா? - த.சத்தியநாராயணன், அயன்புரம்.

மந்திரம் என்பது வேறு, சம்பாஷணை என்பது வேறு. சமஸ்கிருத மொழியில் உச்சரிக்கப்படும் அனைத்து சம்பாஷணைகளையும் நாம் மந்திரங்கள் என்று புரிந்துகொண்டிருக்கிறோம். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இந்த வரிகள் மந்திரம் அல்ல, அது ஒரு ஆசிர்வாத வசனம். மணமகன், மணமகளை அதாவது தனக்கு மனைவியாகப்போகிறவளுக்கு மாங்கல்யக் கயிற்றினைக் கட்டி தனக்கு பந்தமாக்கிக் கொள்ளும்போது சொல்லும் உறுதிமொழி இது.

“மாங்கல்யம் தந்துநானேந மம ஜீவன ஹேதுநா, கண்டே பத்நாமி சுபகே த்வம்ஜீவ சரத: சதம்” - ‘மங்களகரமான பெண்ணே, நான் வாழ்வதன் நோக்கம் நிறைவேறுவதற்காக, அதாவது தர்மமான முறையில் எனது வாழ்க்கை அமைவதற்காக இந்தக் கயிற்றினை உனது கழுத்தினில் அணிவிக்கிறேன், நீ நூறு ஆண்டுகள் வாழ்வாயாக’ என்று மணமகளை ஆசிர்வதித்து மங்கல நாணை மணமகன் அவளது கழுத்தில் முடிச்சிடுகிறான். இத்தனை சிறப்பு வாய்ந்த இந்த வரிகளை புரோஹிதர் மட்டும் சொன்னால் போதாது, புரோஹிதர் ஒவ்வொரு வார்த்தையாகச் சொல்லிக் கொடுக்க மணமகன் மணமகளைப் பார்த்து அக்ஷரம் பிசகாமல் இந்த வரிகளைச் சொல்லி மங்கலநாணை அணிவிக்கவேண்டும். அப்பொழுதுதான் தாலிகட்டும் சம்பிரதாயம் முழுமை பெறும்.

கோயிலில் ஆண்டவனை நாம் பார்க்க வேண்டுமா, ஆண்டவன் நம்மைப் பார்க்க வேண்டுமா? ஒரு நொடி தரிசனம் போதுமானதா? - கே.விஸ்வநாத், அல்சூர்.


கோயிலுக்குச் செல்வது என்பது ஆண்டவனை நாம் பார்க்கத்தான். ஆண்டவன் நம்மைப் பார்க்க நாம் கோயிலுக்குச் செல்லவேண்டிய அவசியமில்லை. ஆண்டவன் எப்போதும் நம்மைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறான். ஒரு நொடி தரிசனம் போதுமா என்று கேட்டிருக்கிறீர்கள். உள்ளத்தில் உருவத்தைப் பதிவு செய்தால் இறைவனை தரிசிப்பதற்கு ஒரு நொடிகூட தேவையில்லை. ஆண்டவனின் சந்நதிக்குச் செல்லும் வேளையில் மனதை அங்குமிங்கும் அலைபாய விடாமல் ஒருமுகப்படுத்தி தரிசனம் செய்துபாருங்கள். ஒருநொடி தரிசனம்கூட உங்கள் உள்ளத்தில் புத்துணர்ச்சியைப் புகுத்தும்.

தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்களே, இதனை சாஸ்திரம் சம்மதிக்கிறதா? - கே.ஆர்.எஸ்.சம்பத், திருச்சி-17.

சாஸ்திரம் என்பது வேறு, சம்பிரதாயம் என்பது வேறு. இதுபோன்று நேர்த்திக்கடன் செலுத்துவது, சம்பிரதாயத்தில் வருவது. உடலை வருத்தி நேர்த்திக்கடன் செலுத்துவதை நாம் வழக்கத்தில் கொண்டிருக்கிறோம். தீ மிதித்தல், அலகு குத்துதல், மண்டியிட்டு மலைப்படிகள் ஏறுதல், பாதயாத்திரை செல்லுதல், ஆணிச்செருப்பு அணிதல், பால்குடம் எடுத்து வெயிலில் பாதணியின்றி நடந்து செல்லுதல், தலையில் தேங்காய் உடைத்தல், அங்கப்ரதட்சிணம் செய்தல் என்று ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாக வேண்டிக்கொள்கிறார்கள்.

உடலை வருத்திச் செய்தல் என்பது ஒருவிதமான விரதம். விரதம் என்றால் மனஉறுதி. மனதைக் கட்டுப்படுத்தினால் இறைவனைக் காணஇயலும் என்பது நம் நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் வெளிப்பாடுதான் இதுபோன்ற வேண்டுதல்கள். இவ்வாறு நம் உடலை வருத்தி முழு நம்பிக்கையோடு ஒரு செயலைச் செய்யும்போது அந்தச்செயலால் நமக்கு எந்த பாதிப்பும் நேராமல் இறைவன் நம்மைக் காப்பான் என்ற எண்ணமே மேலோங்குகிறது. இறைவனின்பால் கொண்டிருக்கும் அசையாத நம்பிக்கையினால் செய்யும் இதுபோன்ற நேர்த்திக்கடன்களை மூடநம்பிக்கையாகக் கருத முடியாது.

எங்கள் குலதெய்வமான அய்யனார் கோயில் கும்பாபிஷேகத்தில் பிரசாதமாக சுவாமியின் படத்தைக் கொடுத்தார்கள். ஒரு சிலர் அய்யனார் படத்தை வீட்டில் வைத்து பூஜிக்கக் கூடாது என்கிறார்கள். தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.- எம்.அரசப்பன், குரும்பூர்.

உங்கள் குலதெய்வமான அய்யனார் சுவாமியின் படத்தை நீங்கள் பூஜை அறையில் வைத்து தினசரி வணங்கி வரலாம். இதில் எந்தத் தவறும் இல்லை. அய்யனார் ஸ்வாமி, சாஸ்தாவின் அம்சம். ஹரிஹரபுத்ரனான ஐயப்பன் படத்தை வீட்டில் வைத்து பூஜை செய்கிறோம் அல்லவா, அதுபோலத்தான் இதுவும். தெய்வாம்சம் பொருந்திய அனைத்து தேவதைகளின் திருவுருவங்களையும் வீட்டில் வைத்து பூஜிக்கலாம். அதிலும் உங்களுக்கு குலதெய்வமே அய்யனாரப்ப ஸ்வாமிதான் என்பதாலும், அவரது ஆலய கும்பாபிஷேகத்தில் பிரசாதமாய் பெற்றுக் கொண்ட படம் என்பதாலும் அந்தப் படத்தை நீங்கள் அவசியம் உங்கள் வீட்டுப் பூஜையறையில் வைத்து தினசரி வணங்கி வரவேண்டும். இதில் எந்த சந்தேகமும் கிடையாது.

ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு உருவ சின்னம் உள்ளது. அந்த ராசியில் பிறந்தவர்களின் குண நலன்களை இதன் மூலம் அறிய முடியுமா? மகர ராசியின் உருவம் என்ன?- ப.த.தங்கவேலு, பண்ருட்டி.

ராசிக்கு உள்ள உருவச் சின்னத்தைக் கொண்டு அவர்களது குணநலன்களை வரையறுக்க முடியாது.  உதாரணத்திற்கு ரிஷப ராசிக்கு உரிய உருவம் காளை என்பதால் ரிஷப ராசிக்காரர்கள் காளையின் குணத்தைக் கொண்டிருப்பார்கள் என்று சொல்வது தவறு. உண்மையில் ரிஷப ராசிக்காரர்கள் மென்மையானவர்கள் மட்டுமல்ல, அதிர்ஷ்டசாலிகளும் கூட. விருச்சிக ராசிக்கு உரிய உருவம் தேள் என்பதால் விருச்சிக ராசிக்காரர்கள் தேள் போன்று கொட்டும் குணத்தினை உடையவர்கள் என்று சொல்வது முற்றிலும் தவறு. கும்ப ராசிக்கு குடம் என்பது உருவச்சின்னமாக உள்ளது என்றால் இவர்கள் குடம் போன்று எல்லாவற்றையும் உள்ளடக்கி வைத்திருப்பவர்கள் என்றும் சொல்லக்கூடாது.

இவ்வாறு நாமாகச் சொல்லிக் கொள்ளும் விளக்க உரைகள் அனைத்தும் நமது அனுமானத்தின் பேரில் சொல்லப்படுகின்ற கற்பனையே. ராசிகள் மட்டுமல்ல, நட்சத்திரத்திற்கும் கூட உருவச்சின்னம் என்பது உண்டு. உதாரணத்திற்கு அஸ்வினி நட்சத்திரத்திற்கு குதிரைச் சின்னமும், பரணி நட்சத்திரத்திற்கு யானையும், கிருத்திகைக்கு ஆடு உருவமும் குறிப்பிடப்பட்டிருக்கும். அஸ்வினி என்று நாம் அழைக்கும் நட்சத்திரம் உண்மையில் ஒரேயொரு நட்சத்திரம் கிடையாது. பல்லாயிரக்கணக்கான நட்சத்திரங்களின் தொகுப்பினைத்தான் ஒரு நட்சத்திரமாக நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம். இந்த நட்சத்திரக் கூட்டத்தினை ஒன்றிணைத்து தொலைவிலிருந்து பார்க்கும் நம் கண்களுக்கு அது குதிரை வடிவத்தில் தென்படுகிறது.

ஒரு நாளில் எந்த நட்சத்திரக் கூட்டத்திற்கு நடுவே சந்திரன் பயணிக்கின்றதோ, அதுவே அந்த நாளுக்கு உரிய நட்சத்திரமாக பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல ஒவ்வொரு ராசி மண்டலத்திற்குள்ளும் மூன்றுவிதமான நட்சத்திரக் கூட்டங்கள் இடம் பெற்றிருக்கும். உதாரணத்திற்கு மேஷ ராசி என்று எடுத்துக்கொண்டால் அதற்குள் அஸ்வினி, பரணி, கார்த்திகை (முதல்பாதம்) என்று மூன்றுவிதமான நட்சத்திரக் கூட்டங்களின் தொகுப்பு உள்ளடங்கி இருக்கும். இந்த மண்டலத்தினை ஒன்றிணைத்து தொலைவில் இருந்து காணும்போது அதன் உருவம் ஆடு போல் நம் கண்களுக்குத் தென்படுகிறது. இதனால் மேஷ ராசிக்கு உரிய உருவச்சின்னமாக ஆடு என்று உருவகப் படுத்தி உள்ளார்கள். ராசி மண்டலங்களை தொலைவிலிருந்து நோக்கும்போது நம் கண்களுக்கு தெரியவரும் உருவ அமைப்பினைக் கொண்டு இந்தச் சின்னங்களை வரையறுத்து வைத்துள்ளார்கள். இவற்றைக் கொண்டு அந்த ராசிக்காரர்களின் குண நலன்களை வரையறுக்க இயலாது. மகர ராசிக்கு உரிய உருவம் பற்றி வெவ்வேறு கருத்துகள் நிலவினாலும் பெரும்பாலானோரின் கருத்து முதலை என்பதே. மகர ராசிக்கு உரிய உருவச்சின்னம் முதலை என்பதை வானவியல் ஆராய்ச்சியாளர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

குபேரர் சிலையை வீட்டில் எங்கு வைக்கலாம்? எந்த திசையில் வைக்கலாம்? வியாபாரம் செய்யும் இடத்தில் எந்தவிதமான குபேரர் சிலையை வைக்க வேண்டும்?- இரா.வைரமுத்து, ராயபுரம்.

ஹேப்பிமேன் என்றழைக்கப்படும் சீனத்து பொம்மையினை குபேரர் சிலை என்று நீங்கள் குறிப்பிடுகிறீர்கள் என்று எண்ணுகிறேன். குபேரனுக்கு என்று தனியாக சிலை வழிபாடு வீட்டில் செய்வது கிடையாது. சங்கநிதி-பதுமநிதி சமேத குபேரனுக்கு மகாலட்சுமியிடமிருந்து தனம் கொட்டுகிற வகையில் நிறைய படங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அந்தப் படங்களில் லக்ஷ்மி குபேர மந்திரமும் அச்சடிக்கப்பட்டுள்ளது. ஒருசில படங்களில் மகாலக்ஷ்மி யந்திரமும் பொறிக்கப்பட்டுள்ளது. அதுபோன்ற படங்களை வியாபாரத் தலங்களில் மாட்டி வைக்கலாம். வீட்டுப் பூஜையறையிலும் வைத்து பூஜிக்கலாம். மற்றபடி சிரித்தமுகத்துடன் காணப்படும் ஹேப்பிமேன் பொம்மையினை நீங்கள் வீட்டினில் எங்கு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். அதனைக் காணும்போது மனதில் மகிழ்ச்சி உண்டாவதால் வீட்டிற்குள் இருக்கும் மாடங்களில் ஆங்காங்கே அவற்றை இடம்பெறச் செய்யலாம். குபேரனுக்கு என்று தனியாக சிலை வைத்து வீட்டினில் வழிபடும் முறை நம் வழக்கத்தில் இல்லை.

திருக்கோவிலூர் K.B.ஹரிபிரசாத் சர்மா

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • sushmafrancepm

  பிரான்ஸ் அதிபருடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு : இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை

 • coolingtowersflorida

  அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் குளிர்விப்பு கோபுரங்கள் வெடிவைத்து தகர்க்கப்படும் காட்சிகள்!

 • taiwaneseminimodels

  தைவானிய நுண்பொருள் கலைஞரால் வடிவமைக்கப்பட்ட மிகச்சிறிய மாதிரிகளின் புகைப்படத் தொகுப்பு

 • tentsforchildrenstexas

  அமெரிக்காவில் பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகளுக்காக டெக்சஸில் கூடாரங்கள் அமைப்பு!

 • PresidentGreeceleaders

  அரசு முறைப் பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கிரீஸ் பயணம்: முக்கிய தலைவர்களுடன் சந்திப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்