SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கல்யாணத்துக்கு உதவும் குருபகவான்?

2017-09-02@ 10:28:31

காரகம் யோகம் தோஷம்

குரு என்ற சொல்லிற்கு அறியாமையை அகற்றுகிறவர் என்று பொருள். ஜோதிட சாஸ்திரத்தின்படி வியாழன் என்றும், பிரகஸ்பதி என்றும் அழைப்பர். தேவர்களின் அரசனாக விளங்கிய காரணத்தால் தேவகுரு என்றும், நுண்ணறிவு மிகப்படைத்து கல்வி, கேள்விகளில் சிறந்தவர் என்பதால் பிரகஸ்பதி என்ற திருநாமங்கள் அமைந்தன. நம் உடலிலும், உள்ளத்திலும் இறைவனுடைய சக்தியை பிரதிபலிக்கிறவராகவும், நம்முடைய வழிபாட்டின் மூலமாக இறைசக்தியை நம்மனத்துள் நிரப்புபவராகவும் உள்ளவர் இவர். இதனாலேயே இவரைத் தெய்வீக அறிவுக்கும் வேதாந்த ஞானத்திற்கும் மூலப்பொருளான காரகன் என்பார்கள். மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத தேவைகள் இரண்டு. ஒன்று பொருட்செல்வம், இன்னொன்று புத்திர யோகம். இந்த இரண்டிற்கும் காரகன் அதாவது, ஆதிக்கம் செலுத்தக்கூடிய கிரகம் குருபகவான்.

அத்துடன் நீர்த்தன்மை வாய்ந்த கிரகம், மறைமிகு நூல்கள், மேதா விலாசம், சாஸ்திர ஞானம், நற்பண்புகள், செல்வம், செல்வாக்கு, சொல்வாக்கு, ஐஸ்வர்யம், தங்கம், தனம், புகழ், கீர்த்தி, பக்தி, ஞானம், மந்திர உபதேசம், தானம், தியானம், தர்மம், புத்திரம், நிதி, நீதி, நீதிபதிகள். வக்கீல், மந்திரி மதபோதகர், மதத்தலைவர், மடாதிபதி, ஆன்மிகத்துறவிகள், அறங்காவலர்கள், ஆசான், ஆசிரியர், வழிகாட்டி, விரிவுரையாளர், பேச்சாளர், பள்ளிகள், கல்லூரிகள், தர்மஸ்தாபனங்கள், சமூக சேவை நிறுவனங்கள், வேதம், வேதபாட சாலைகள், அன்ன சத்திரங்கள், சாஸ்திர ஆராய்ச்சி, தான் சார்ந்த மதத்தில் அதிகமான பற்று, பூஜை, யாகம், ஆகம சாஸ்திர விஷயங்கள் என பல்வேறு விஷயங்களில் குருவின் ஆதிக்கம் உள்ளது. ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தி தத்துவ கோட்பாடுகளை விளக்கி வழிகாட்டுபவர்களை குரு என்று சொல்வார்கள். நமக்குத் தெரியாததைத் தெளிவுபடுத்தி கற்றுத்தருபவர்களை குலகுரு, ஜகத்குரு, ஆசான் என்று அழைக்கின்றோம். குரு இல்லாத வித்தை பாழ் என்று சொல்வார்கள்.

குரு: ஞான வழியை போதிப்பவர், தெளிவை ஏற்படுத்துபவர்.
பரமகுரு: குரு பரம்பரை, குருவிற்கு குருவாக இருப்பவர், மரபுகளை பேணிக்காப்பவர். ஆதிசங்கரர் போன்றவர்கள்.
பராபரகுரு: தத்துவங்கள் தோன்ற காரணகர்த்தாக்கள், மகாகுரு. துவைதம், அத்வைதம்,  விசிஷ்டாத்வைதம் போன்றவற்றை நாம் அறிந்து உணர்ந்துகொள்ள காரணமானவர்கள். இவர்கள்தான் வேதவியாசர் போன்ற மகாரிஷிகள்.
பரமேஷ்டிகுரு: இகபர சுக இன்ப துன்பங்களில் இருந்து நம் கர்ம வினைக்கேற்ப பலாபலன்களை அருளும் மிகமிக உயர்ந்த இறை தூதர்கள், அடியார்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள், மகான்கள். இதன் ஒட்டு மொத்த இறைக்கோலம்தான் சிவனின் தட்சிணாமூர்த்தி அம்சமாகும்.

ஜோதிடத்தில் குருவின் செயல்கள்


ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒவ்வொரு விதமான அம்சம், ஆளுமை, காரகத்துவம் உள்ளன. நமக்கு நடைபெறும் பலாபலன்கள் பிறந்த ஜாதக கட்டத்தின் அடிப்படையில் அந்தக்காலத்தில் நடைபெறும் தசாபுக்திகள்தான் காரணமாகின்றன. ஒருவருக்கு நன்மை செய்யும் கிரகம் மற்றொருவருக்கு தீமை செய்யும். ஒருவருக்கு நல்ல யோகத்தை தரும் தசாபுக்தி, மற்றவருக்கு பாதகமான பலனை செய்யும். ஒருவருக்கு நல்ல ராஜயோக வசதி வந்தால் சுக்கிர தசை அடிக்கிறது என்பார்கள். ஒருவர் மிகவும் கஷ்ட நிலையில் இருந்தால் அதற்கு சனி காரணம் என்று வீண்வதந்தி பரப்புவார்கள்.  இந்த வகையில் தேவகுரு என்று சாஸ்திரத்தில் சிறப்பித்து கூறப்பட்டுள்ள முழு சுபகிரகமான குருவிற்கு சுப, அசுப, தோஷ பலன்கள் உண்டு. இவருக்கு மற்ற கிரகங்களைப்போலவே மறைவு ஸ்தானம், நீச்சம், வக்ரம், ஆட்சி, உச்சம் என்று கலவையான அம்சங்கள் உண்டு.

குரு சுபகிரகமாக இருப்பதால் அவருக்கு பார்வை பலம் சுபமாக உள்ளது. குருவின் பார்வை பல தோஷங்களை போக்கும் என்பது சாஸ்திர விதி. குரு பார்வைதான் சிறப்பாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதுவும் குரு எந்த நிலையில் இருந்து பார்க்கிறார், எந்த வீட்டில் பார்வை படுகிறது குருவின் ஆதிபத்தியம் என்ன என்று பல்வேறு விஷயங்கள் உள்ளன. குரு எந்த வீட்டில் இருந்தாலும் ஏதாவது ஒரு கிரகத்துடன் சேர்க்கை பெற்று இருப்பது நல்லது. அப்படி இல்லாமல் தனித்த குருவாக இருந்தால் அந்த ஸ்தானம் சுகப்படாது என்பது சாஸ்திர விளக்கம் மட்டுமல்ல, அனுபவத்திலும் பொருந்தி வருவது. குரு சில முக்கியமான வீடுகளில் தனியாக இருந்தால் அந்தக் குறிப்பிட்ட ஸ்தானம் பலம் குறைந்துபோகும்.

அந்த வகையில் லக்னம், இரண்டு, ஐந்து, ஏழு, பத்து போன்ற வீடுகளில் இருக்கும்பொழுது சில விஷயங்கள் வாழ்க்கையில் பிரச்னைகளையும், தடுமாற்றங்களையும் ஏற்படுத்தி விடுகின்றது. ஒவ்வொரு லக்னத்திற்கும் ஒவ்வொரு ஆதிபத்தியம் வருவதால் அந்தவகையிலும் சில சங்கடங்கள் உருவாகி விடுகின்றது. லக்னத்தில் குரு: குரு லக்னத்தில் இருப்பது பொதுவாக ஜாதகரை மிகப்பெரிய குழப்பவாதியாக்கும். சுயமாக முடிவு எடுக்கமுடியாமல் திணறுவார். கொள்கை, கோட்பாடுகளை அடிக்கடி மாற்றிக்கொள்வார். எடுப்பார் கைப்பிள்ளை என்றும் சொல்லலாம். ஆனாலும் இப்படிப்பட்டவர்களுக்கு குருவின் பார்வை 5, 7, 9 ஆகிய இடங்களில் படுவதால் பூர்வ புண்ணிய யோக அதிர்ஷ்ட பாக்கியங்கள் கிடைக்கும்.

இரண்டில் குரு: தனம், குடும்பம், வாக்கு, நேத்ரம் என்ற இந்த ஸ்தானத்தில் தனித்த குருவால் பல குறைகள் இருக்கும். சதா வாக்குவாதத்தில் ஈடுபட வைப்பார். பலநேரங்களில் பணத்தட்டுப்பாடுகள் வரலாம், கடன் கொடுத்த பணத்தை வசூலிப்பது மிகவும் சிரமம். பேச்சில் தடுமாற்றம், திக்குவாய் வரலாம். திருப்தியற்ற நிலை, சொன்ன வாக்கை காப்பாற்ற முடியாமல் போகும். கண் சம்பந்தமான குறைபாடுகள் வரலாம்.

ஐந்தில் குரு: இந்த இடத்தில் தனித்த குரு இருப்பதால் ஜாதகர் ஏதாவது சிந்தனை செய்துகொண்டே இருப்பார். சாஸ்திர மறதி ஏற்படும். குழந்தை பாக்கிய பிரச்னைகள் இருக்கும். புத்திர தோஷம், புத்திர சோகம், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலை, கொள்கை, தத்துவ, மரபுகளை மீறுவது, சாஸ்திர விரோத மார்க்கம் என இருக்கும்.

இரண்டாம் இடம், ஐந்தாம் இடம் இந்த இரண்டும் தனம், புத்திரம் ஆகிய இரண்டிற்கு ஆதாரமாக உள்ளவை. குருவின் முக்கிய அம்சமே தன, புத்திரகாரகன் என்ற அமைப்பாகும். மேலும் இதை அஸ்திவாரம் என்றும் சொல்லலாம். இந்த இரண்டு இடங்களில் குருவின் தனித்த நிலை ஏதாவது ஒன்றில் இருக்கும்போது மற்ற கிரக யோக பலம் மற்றும் பூர்வ கர்ம புண்ணிய பலம் காரணமாக செல்வம் செழித்து லட்சுமி தாண்டவமாடினாலும் அந்த ஜாதகர் எல்லாம் இருந்தும் எதையும் அனுபவிக்க முடியாத நிலை இருக்கும். குடும்பத்தோடு இருப்பார். ஆனால், பற்றற்ற மனநிலை இருக்கும். இதேபோல் புத்திரஸ்தானத்தில் குரு தனித்து நிற்கும்போது பூர்வ புண்ணிய  சுகிர்த விசேஷத்தினால் புத்திர பாக்கியம் கிடைத்தாலும், எதாவது குறை ஏற்பட்டு விடும். புத்திரர்களால் அவப்பெயர் வரக்கூடும். தக்க சமயத்தில் பிள்ளைகளின் அன்பு, ஆதரவு கிடைக்காது. காசு, பணம், பிள்ளைகள் என்று இருந்தாலும் முதியோர் இல்லத்தில் முடங்கிக் கிடக்க வேண்டியிருக்கும். ‘காரகோ பாவ நாஸ்தி’ என்ற ஸ்லோகப்படி தன, புத்திரகாரகன் காரகத்தில் அந்த குறிப்பிட்ட காரகாம்சம் கெட்டு விடுகின்றது.

ஏழில் குரு: லக்னத்திற்கு 7ம் இடமான சப்தம கேந்திரம் களத்திர ஸ்தானமாகும். சுபகிரக ஆதிக்கம் உள்ள குருவிற்கு இங்கு கேந்திராதிபத்திய தோஷம் உண்டு. இந்த இடத்தில் குரு தனித்து இருப்பதால் மணவாழ்க்கை வளர்பிைற, தேய்பிறைபோல் போராட்டமாக அமையும். எதிலும் ஒரு நிச்சயமற்ற தன்மை இருக்கும். புரிந்துகொள்ளுதல் இருவருக்கும் சரியாக வாய்க்காது. குடும்ப உறவில்தான் இப்படி சிக்கல்கள் இருக்கும். ஆனால், வெளிவட்டாரத்தில் ஜாதகருக்கு அந்தஸ்து, கௌரவம், புகழ், செல்வாக்கு எல்லாம் குருவால் கிடைக்கும்.

பத்தில் குரு: லக்னத்திற்கு பத்தாம் இடம் என்பது தசம கேந்திரம். ஆகையால் கேந்திராதிபத்திய தோஷம் காட்டும். வியாபார, தொழில், உத்யோக, ஜீவனஸ்தானத்தில் குரு தனித்து இருக்கும்போது வியாபாரம், தொழிலில் தொடர்ந்து ஏதாவது பிரச்னைகள் இருந்துகொண்டே இருக்கும். அடிக்கடி தொழிலை மாற்றுவார்கள். பல தொழில்கள் செய்தாலும் எதிலும் நிறைவு இருக்காது. தொழில் செய்யும் இடங்களில் வழக்குகள், அரசாங்க குறிக்கீடுகள் இருக்கும். உத்யோக வகையில் பல நிர்ப்பந்தங்கள் இருக்கும். வேண்டா வெறுப்பாக வேலை பார்ப்பார். ஊர் மாற்றம், இலாகா மாற்றம், பதவி உயர்வில் தடங்கல்கள் வரும். இந்தளவிற்கு இடைஞ்சல் தர காரணம் முழுச் சுபகிரகமான குரு தனித்து 10ல் இருப்பதுதான். இதனால்தான் ஜோதிட சாஸ்திர வழிமுறைப்படி பத்தில் பாம்போ அல்லது சூரியனோ இருப்பது சிறப்பு.

குரு சண்டாள யோகம்: ராகுகேது இருவரும் தாம் இருக்கின்ற இடம், பார்க்கின்ற கிரகம், சேருகின்ற கிரகம், சாரபலம் போன்றவை மூலம் பல யோகங்களை, தோஷங்களை தரவல்லவர்கள். சுபகிரகங்களுக்கு கேந்திராதிபத்திய தோஷம் உண்டு. ஆனால் ராகு, கேதுவிற்கு கேந்திர, திரிகோணங்களில் அதிக யோகபலம் உண்டு. ராகுவை, யோககாரகன், போககாரகன் என்று சாஸ்திரம் சிறப்பித்துக் கூறுகிறது. இப்படிப்பட்ட ராகு பவித்திரமான குருவுடன் சேரும்போது எதிர்பாராத விஷயங்கள் கூடிவந்துவிடுகிறது. ஒருவகையில் குருவும் போககாரகனாகும். குரு சண்டாள யோகம் ஒருவருக்கு பரிபூரணமாக பலன் தரும்போது நடக்குமா, நடக்காதா, கிடைக்குமா, கிடைக்காதா என்று ஏங்கித் தவித்த விஷயங்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக நடைபெறும்.

உயர் பதவிகள், அதிகார மையங்களின் தொடர்புகள், ஒரு காலத்தில் சாதாரண நிலை, இன்று நினைத்துப் பார்க்க முடியாத  மிரள வைக்கும் அசுர வளர்ச்சி, போக இச்சை, வன்முறை, அடக்குமுறை, அடியாள், கட்ட பஞ்சாயத்து, கொடுஞ்செயல்கள், அதிகார துஷ்பிரயோகம் என்று பல்வேறு வகைகளில் கொடிகட்டிப் பறப்பார்கள். அரசியலில் உயர்பதவிகள் தேடிவரும். லட்சுமிதேவியின் அருள் தானாக வந்து தழைக்கும். பொன்னும், பொருளும், முத்து சிவிகையும் கிடைக்கும் என்கிறது புலிப்பாணி பாடல். இந்த காலத்தில் மிக உயர்ந்த  நான்கு சக்கர வாகனம். ராகுவின் மூலம் வரும். செல்வம், யோகம் எல்லாம் நிழலான, மறைவான, சட்டத்திற்கு புறம்பான வகையில்தான் கிடைக்கும் என்பது சாஸ்திர நியதியாகும்.

குரு தர்ம பாக்கிய யோகம்

ராகுகேது இருவருக்கும் எதிர்மறையான குண இயல்புகள் உண்டு. ராகு மூலம் எது கிடைத்தாலும் அதில் எதிர்மறை நீச்சத்தன்மை இருக்கும். ஆனால், கேது மூலம் ஏற்படுகின்ற அமைப்புகள் சீரும் சிறப்பும் உடையதாக இருக்கும். குருவிற்கும், கேதுவிற்கும் ஜோதிட அமைப்புகளில் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. குரு, தவம், ஞானம், மந்திர சித்தி, மகான்கள், நீதி, மதம் போன்றவற்றை தன்னகத்தே கொண்டவர். கேது, ஞானம், மதம், குருஸ்தானம், மருத்துவம், ஞான மோட்சகாரகன் என்ற அமைப்பைப் பெற்றவர். குருவும்கேதுவும் சம்பந்தப்படுவது நல்ல அமைப்பாகும். குரு கேதுசாரம், கேதுவுடன் சேர்க்கை, சார பரிவர்த்தனை, ஒருவருக்கொருவர் கேந்திரம், பார்வை என்று எந்த வகையிலாவது சம்பந்தம் ஏற்பட்டால் மதம், மதக்கோட்பாடு, இறைசக்தி, வேதாந்த ஞானம், கௌரவம், செல்வாக்கு, தலைமைப்பதவி, சாதனை படைப்பது, நல்லோர் சேர்க்கை நாடாளும் யோகம் என ராஜயோக பலன்கள் ஏற்படும்.

குருவுடன், கேது சேர்க்கை பெற்று, அந்த குருவிற்கும், கேதுவிற்கும் ஒன்பதாவது வீட்டில் புதனும், சுக்கிரனும் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும். அல்லது இருவரில் ஒருவராவது இருக்க வேண்டும். இத்தகைய அமைப்புள்ள ஜாதகம் எந்த வகையிலாவது கோடீஸ்வர ராஜயோகத்தை அனுபவிக்கும். ஜாதகத்தில் எந்த வகையிலாவது குருகேது சம்பந்தப்பட்டு இந்த இருவரின் தசா, புக்தி காலங்களில் அவரவர் கர்ம பூர்வ புண்ணிய சுகிர்த விசேஷத்திற்கேற்ப குபேர சம்பத்தை ஜாதகர் அனுபவிப்பார். ஆன்மிக விஷயங்களில் ஜாதகரை ஈடுபட வைப்பார். மத போதகர், மதப்பிரசாரகர் மற்றும் கதை, காலட்சேபம், சொற்பொழிவு போன்றவற்றில் முன்னிலைப்படுத்துவார். மகான்களின் ஆசி பெறுவர்.

மடாதிபதி, அறநிலையத்துறை, கோயில் தக்கார், அறங்காவலர்கள் போன்ற பதவிகள் கிட்டும். கோயில் கட்டுதல், புனரமைத்தல், குளம் வெட்டுதல், கும்பாபிஷேகம் போன்றவற்றை முன்நின்று நடத்தும் பேறு பெறுவர். பெரிய தர்மஸ்தாபனம், கட்டளைகள் அறச்செயல்கள், கல்விச்சாலைகள், வேத பாடசாலைகள், நிதிநிறுவனங்கள் அமைக்கும் பாக்கியம் கிடைக்கும். ஜோதிடம், சாஸ்திர ஆராய்ச்சி, இஷ்ட தெய்வ உபாசனை. குறி சொல்லுதல் போன்றவற்றில் தேர்ச்சியும், ஞானமும் கிடைக்கும். இயல், இசை, நாடகம், நடனம், நாட்டியம், சங்கீதம், பாட்டு ஆகியவற்றில் சிறப்படைவர்.

வியாழ வட்டம்

ரிஷபம், சிம்மம், தனுசு, கும்பம் ஆகிய நான்கு ராசிகள் வியாழ வட்டம் என்றும், குருவளையம் என்றும் அழைக்கப்படுகின்றன. நம் ஆட்காட்டி விரல்  குருவிரல் என்றும் அந்த விரலுக்கு கீழே உள்ள மேடு குரு மேடு என்றும் அழைக்கப்படுகிறது. மேற்சொன்ன ராசிகளில் குரு இருக்கப் பிறந்தவர்களுக்கு, குருமேட்டைச் சுற்றி மோதிரம் போன்ற வளையம் தோன்றும். இதற்கு குருவளையம் (சாலமன் ரிங்) என்று பெயர். இத்தகைய அமைப்புள்ள ஜாதகர்கள் மரியாதையும், மாண்புகழும் உடையவர்களாக இருப்பார்கள். நாட்டின் உயர் அந்தஸ்துள்ள பதவிகளில் அமருவர். நிதி, நீதித்துறைகளில் இவர்களின் பங்களிப்பு இருக்கும். வெளிநாட்டுத் தூதுவர்களாக நியமிக்கப்பட இடமுண்டு. சமூகத்தில் இவர்களின் சொல்லிற்கும், பேச்சிற்கும், எழுத்திற்கும் மதிப்பு இருக்கும்.

வெளிநாட்டு சம்பந்தம்

ஜலராசி அமைப்பு என்பது முக்கியமானதாகும். இதில் குருவின் பங்கு மிகவும் முக்கியமானதும், இன்றியமையாததுமாகும். காரணம் கடகம் என்ற ஜலராசியில் குரு உச்சம் பெறுகிறார். மீனம் என்ற ஜலராசியில் குரு ஆட்சி பெறுகிறார். மகரம் என்ற ஜலராசியில் குரு நீச்சம் அடைகிறார். இதில் கடகம், மீனம் ஆகிய இரண்டு ராசிகளிலும் குருவின் நட்சத்திரங்களான புனர்பூசம், பூரட்டாதி அமைகின்றன. மேலே சொன்ன ராசிகளில் குரு இருப்பது அல்லது பார்வை, சம்பந்தம் கொண்டு பிறக்கும் ஜாதகர்கள் வெளிநாட்டில் நிரந்தரமாகத்  தங்குவதற்கான பாக்கியம் இருக்கும். அடிக்கடி கடல்கடந்து சென்று வருவார்கள். தொழில்ஸ்தான அமைப்பு சம்பந்தப்படும்போது ஏற்றுமதி, இறக்குமதி தொழில்கள் கைகொடுக்கும். தண்ணீர் சம்பந்தமான, மீள்வளத்துறை மற்றும் கப்பல், வாணிபம் கூடிவரும்.

சந்திராதி யோகங்கள்

கிரக சேர்க்கை, பார்வை மூலம் பலவகையான யோகங்கள் உண்டாகின்றன. குரு சம்பந்தமாக பல்வேறு யோக அம்சங்கள் நிறைய உள்ளன. யோகங்கள் பெரும்பாலும் லக்னம், சந்திரனை வைத்து செயல்படுகிறது. சந்திரனுக்கு கேந்திரத்தில் அதாவது, ராசிக்கு 4, 7, 10 ஆகிய வீடுகளில் குரு இருப்பது கஜகேசரி யோகம், குருவுடன் புதன் சேர்ந்தால் வித்யா கஜகேசரி யோகம். இந்த அமைப்பு ஜாதகரை உச்சத்திற்கு கொண்டு செல்லும். கல்வியில் பிரகாசிப்பார்கள். செல்வாக்கு, சொல்வாக்கு உண்டு. குருவும் சந்திரனும் ஒரே ராசியில் இருந்தாலும் அல்லது ராசிக்கு 5, 9 ஆகிய இடங்களில் குரு இருந்தாலும் குருசந்திர யோகம் உண்டாகிறது இதனால் நிறைய உயர்வுகள் இருந்தாலும் மனக்குறை இருந்துகொண்டே இருக்கும். பெரும்பான்மையானவர்களுக்குப் படித்த படிப்பிற்கும், பார்க்கும் வேலைக்கும் சம்பந்தம் இருக்காது.

ஜோதிட முரசு மிதுனம் செல்வம்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 22-10-2018

  22-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 21-10-2018

  21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • dussehraa_11

  நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

 • 20-10-2018

  20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • tirupathivavacha

  திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்