SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெற்றித் திருமகள் துணையிருப்பாள்!

2017-08-29@ 15:33:22

முப்பத்தைந்து வயதாகும் என் மகன் கம்ப்யூட்டர் பட்டப்படிப்பு முடித்தும் இது வரை எந்த வேலைக்கும் போகவில்லை. மனநலம் பாதித்ததுபோல் வீட்டிலேயே இருக்கிறான். மற்றவர்களிடம் நன்கு பேசுபவன் பெற்றோரை மட்டும் வெறுக்கிறான். இந்நிலை மாறி அவன் எதிர்காலம் சிறக்க நல்லதொரு பரிகாரம் சொல்லுங்கள். நிர்மலா, தொட்டியம்.

ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, மகர லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் பிள்ளையின் ஜாதகப்படி தற்போது 24.12.2017 வரை சந்திர தசையில் சந்திர புக்தி நடக்கிறது. அவரது ஜாதகத்தில் கிரகங்களின் அமர்வு நிலை நன்றாகவே உள்ளது. அவருடைய 14வது வயதில் அவர் சந்தித்த அனுபவம் ஒன்று அவரது புத்தியை தடுமாறச் செய்துள்ளது. அந்தச் சம்பவத்திற்கு பெற்றோரை மூல காரணமாக அவர் எண்ணுவதால் பிரச்னை உண்டாகி உள்ளது. மருத்துவரிடம் காண்பித்து அது என்ன என்பதை அறிந்துகொண்டு அதற்குரிய தீர்வினைக் காண முயற்சியுங்கள். அவருடைய திருமணத்தைப் பற்றி வினா எழுப்பியுள்ளீர்கள்.

உங்கள் உறவுமுறையிலுள்ள ஒரு பெண்ணை அவருக்கு மணம் முடிக்க இயலும். முதலில் குறைந்த சம்பளமாகிலும் அவரை ஒரு வேலைக்கு அனுப்ப முயற்சியுங்கள். தொடர்ந்து 17 வாரங்களுக்கு பிரதி திங்கட்கிழமை தோறும் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன் சந்நதியில் நெய் விளக்கேற்றி வழிபட்டு வரச் செய்யுங்கள். பதினேழு வாரங்கள் முடிவதற்குள் மனத் தெளிவு காண்பதோடு அவரது வாழ்வும் மலரத் துவங்கும். கீழேயுள்ள ஸ்லோகத்தினை தினமும் சொல்லி அம்பிகையை வணங்கி வர நன்மை உண்டாகும்.

“நமோஸ்து ஹேமாம்புஜ பீடிகாயை நமோஸ்து பூமண்டலநாயிகாயை
நமோஸ்து தேவாதிதயாபராயை நமோஸ்து சார்ங்காயுதவல்லபாயை.”


எனது மகனுக்கு கடந்த ஆண்டு நடந்த சாலை விபத்தில் வலது காலை எடுக்க வேண்டியதாகி விட்டது. தற்போது செயற்கை கால் பொருத்தப்பட்ட நிலையில் அவருக்கு திருமணம் செய்து வைக்க இயலுமா? உரிய பரிகாரத்தினை தெரிவிக்கவும். கணபதி, திருச்சி.


முப்பத்தேழு வயது முடிந்த நிலையில் அவருக்குத் திருமணம் செய்து வைக்க  இயலுமா என்று கேட்டிருக்கிறீர்கள். கடந்த ஆண்டு நடந்த சாலை விபத்திற்கான மூலகாரணம் என்ன என்பதை எண்ணிப் பாருங்கள். உங்கள் வினாவிற்கான விடை கிடைக்கும். உத்திராடம் நட்சத்திரம், மகர ராசி, மகர லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் பிள்ளைக்கு அவரது இளம் வயதிலேயே திருமண யோகம் என்பது வந்து சென்று விட்டது. அவரது ஜாதகத்தின்படி வருகின்ற 22.09.2017 முதல் குருதசை துவங்க உள்ளது. குரு தசை என்றாலும், 3 மற்றும் 12 இடங்களுக்கு அதிபதியான குருபகவான், செவ்வாய் சனியின் இணைவினைப் பெற்று எட்டாம் இடத்தில் அமர்ந்திருப்பது திருமண யோகத்தினைத் தராது.

மேலும், குரு பகவான் கேதுவின் சாரம் பெற்றும், கேது ஜென்ம லக்னத்தில் அமர்ந்திருப்பதும் அவருடைய மனநிலையில் ஆன்மிக நாட்டத்தினைக் கொண்டு வரும். ஆன்மிகத்தில் கொள்ளும் ஈடுபாட்டினால் பொது காரியங்களில் ஈடுபடத் துவங்குவார். ஆன்மிக சேவையே அவர் மனதிற்கு முழுமையான சந்தோஷத்தினைத் தரும். அவரது ஆன்மிகச் சேவையே அவரை இந்த உலகிற்கு அடையாளம் காட்டும். கவலையை விடுத்து கடவுளை நம்புங்கள். அவரது வாழ்விற்கான அர்த்தத்தினை அவர் வெகு விரைவில் புரிந்து கொள்வார்.

திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகியும் இன்று வரை குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறவில்லை. பல்வேறு கோயில்களுக்கும் சென்று வழிபாடு செய்து அர்ச்சனை செய்து வந்துள்ளோம். குழந்தை பாக்கியம் கிடைக்க வேறு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? சபா, நாகப்பட்டினம்.

மிருகசீரிஷ நட்சத்திரம், மிதுன ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மனைவியின் ஜாதகத்தினையும், ரேவதி நட்சத்திரம், மீன ராசி, மீன லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தினையும் ஆராய்ந்ததில் வம்ச வளர்ச்சி என்பது உள்ளது. எனினும் உங்கள் இருவரின் ஜாதகத்திலும் தத்துபுத்திர யோகமும் இணைந்துள்ளது. 19.11.2017ற்குப் பின், ஆதரவற்ற சிறு குழந்தையை அதாவது, பிறந்து 10 மாதத்திற்குள் இருக்கும் ஒரு பெண் குழந்தையை தத்து எடுத்து வளர்த்து வாருங்கள். அந்தக் குழந்தையின் ஸ்பரிசம் உங்கள் இருவரின் உடல்நிலையிலும் மாற்றத்தினை ஏற்படுத்தும்.

வருகின்ற 2018ம் ஆண்டு இறுதிக்குள் உங்கள் மனைவி கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு உண்டு. நீங்கள் தத்து எடுக்கும் பெண் குழந்தையை நீங்கள் பெற்ற பிள்ளையாகவே பாவித்து வளர்த்து வர வேண்டியது அவசியம். தெய்வீக அம்சம் நிறைந்த அந்தக் குழந்தையால் மட்டுமே உங்கள் வம்சத்தைத் தழைக்கச் செய்ய இயலும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். திங்கட்கிழமை தோறும் மாலை வேளையில் தம்பதியராக இணைந்து அபிராமி அந்தாதியைப் பொருளுணர்ந்து படித்து வாருங்கள். அபிராமியின் அம்சமாக அழகான பெண் குழந்தையைப் பெறுவீர்கள்.

எனது பேரன் பிறந்து மூன்று வயது ஆகியும் தன்னால் எழுந்து உட்காரவும், நடக்கவும் இயலவில்லை. இரண்டு கைகளையும் இறுக மூடிக்கொண்டு கால்களையும் பின்னிக் கொண்டு உள்ளார். கூப்பிட்டால் திரும்பிப் பார்ப்பது, சிரிப்பது, தாய்தந்தை, தாத்தாபாட்டியை அடையாளம் கண்டு கொள்கிறார். அவர் பிறந்த பயனை அடையவும், எங்களுக்கு மனநிம்மதி கிடைக்கவும் உரிய பரிகாரம் கூறி ஆசிர்வதியுங்கள். தமிழ்வாணன், மன்னார்குடி.


சதயம் நட்சத்திரம், கும்ப ராசி, மகர லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் பேரனின் ஜாதகத்தில் தற்போது குரு தசை நடந்து வருகிறது. குரு பகவான் ஆறாம் இடத்தில் அமர்ந்துள்ளது சற்று பலவீனமான நிலை ஆகும். எனினும் அவரது லக்னம் மற்றும் ராசிக்கு அதிபதியான சனிபகவான் உச்சம் பெற்ற நிலையில் அமர்ந்திருப்பது ஆயுள் பலத்தினைத் தருகிறது. இதனை நரம்பியல் ரீதியான பிரச்னை என்று மட்டும் கருதாமல் எலும்பு சார்ந்த பிரச்னையாகவும் எண்ணி உரிய மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்.

தினசரி காலை, மாலை இரு வேளையிலும் சந்தியா காலத்தில் அதாவது, சூரிய உதயம் மற்றும் அஸ்தமன காலத்தில் சூரியஒளி படும்படியான இடத்தில் குழந்தையை குப்புறப் படுக்கச் செய்து சூரிய ஒளியானது அவரது முதுகுத் தண்டு வடத்தின் மீது விழும்படியாகச் செய்யுங்கள். இந்தப் பிள்ளைக்கு ஒரு உடன்பிறப்பு உண்டாகி அந்தச் சகோதரன் அல்லது சகோதரியின் தொடு உணர்ச்சி இவருடைய உடலிலுள்ள செல்களைத் தூண்டும். பிள்ளையின் கைகள் மற்றும் கால்களில் தாமிர உலோகத்தினாலான காப்புகளை அணிவித்து வையுங்கள். சனிக்கிழமை தோறும் அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்கு பிள்ளையை எடுத்துச் சென்று அங்கு தரும் துளசி தீர்த்தத்தை பருகச் செய்யுங்கள். இறைவனின் அருளால் உங்கள் பேரன் விரைவில் உடல்நலம் பெறுவார்.

எனக்கு முதல் திருமணம் விவாகரத்து ஆன நிலையில் கடந்த பிப்ரவரியில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டேன்.திருமணம் ஆனநாள் முதல் எங்களுக்குள் தாம்பத்ய உறவு உண்டாகவில்லை. கூட்டுக் குடும்பத்தில் வசிக்கும் எங்களுக்கு கடன் பிரச்சினை, தொழில் நெருக்கடி, போதிய வருமானமின்மை என்று பல தொல்லைகள் உள்ளன. எனக்கு ஒருவழி காட்டுங்கள். பிச்சை இன்பென்ட், திருச்சி.


உத்திராடம் நட்சத்திரம், மகர ராசி, கடக லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தின்படியும், ரேவதி நட்சத்திரம், மீன ராசி, கடக லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் இரண்டாவது மனைவியின் ஜாதகத்தின்படியும் தற்போது நல்ல நேரமே நடந்து கொண்டிருக்கிறது. உங்கள் மனதினில் குடிகொண்டிருக்கும் பயம் முற்றிலும் அநாவசியமானது என்பதை புரிந்து கொள்ளுங்கள். உங்கள் முதல் மனைவியின் மீது நீங்கள் வைத்திருந்த நம்பிக்கை பாழானதால் இந்த நிலைக்கு ஆளாகி உள்ளீர்கள். நடந்ததை மறந்து நடக்கப் போவதினை எண்ணி உற்சாகமாய் செயல்படுங்கள்.

ஒரு குழந்தை பிறந்ததும் உங்கள் வீட்டு நிலைமை கொஞ்சம், கொஞ்சமாக மாறத் துவங்கும். மழலையின் குரல் வீட்டிலுள்ள துர்சக்திகளை தூர விரட்டும். உங்கள் மனைவியின் ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் என்பது வலிமையாக உள்ளது. செய்யும் தொழிலினைஅவரது பெயரில் மாற்றிக் கொள்ளுங்கள். நெருக்கடியும், கடன் பிரச்னைகளும் குறையும். வெள்ளிக் கிழமை நாளில் தம்பதியராக வேளாங்கண்ணி ஆலயத்திற்குச் சென்று தலா ஆறு மெழுகுவர்த்திகள் ஏற்றி வைத்து மனமுருகி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். மாதாவின் அருளால் உங்கள் குடும்ப வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள்.

நான் எனது தம்பியுடன் நகைக்கடை வைத்துள்ளேன். என் ஜாதகப்படி தனியாக நகைக்கடை வைக்கலாமா? தொழில் சிறப்பாக நடக்க எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதையும் கூறவும். ஆறுமுக விநாயகம், விருதுநகர்.

புனர்பூச நட்சத்திரம், மிதுன ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தில் தற்போது புதன் தசையில் செவ்வாய் புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் ஜீவன ஸ்தானாதிபதி சூரியன் உச்சபலத்துடன் இருந்தாலும், ஆறாம் பாவத்தில் அமர்ந்திருக்கிறார். சுயவியாபாரத்திற்கு அதிபதியான புதனும் ஆறாம் பாவத்தில் இணைந்து அமர்ந்திருக்கிறார். கடன்தொல்லை அதிகரிக்கும் என்பதால் தனியாகக் கடை வைப்பது அத்தனை உசிதமில்லை. உங்களது பெயரிலேயே சகோதரர்களின் இணைவு உள்ளதால் நீங்கள் உங்கள் தம்பியை விட்டுப் பிரிய வேண்டிய அவசியம் இல்லை. இருவரும் ஒன்றாக இணைந்து தொழிலைச் செய்வதே இருதரப்பினருக்கும் நன்மை தரக்கூடியது.

உங்களுடைய வேகமும், அவருடைய விவேகமும் இணையும் பட்சத்தில் வெற்றி என்பது சாத்தியமாகும். கணக்கு  வழக்குகளை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சரிபார்த்து லாபத்தினை சரிவர பிரித்துக் கொள்ளுங்கள். ஏதேனும், ஒரு புதன்கிழமை நாளில் மதுரை சிம்மக்கல் பகுதியில் அமைந்துள்ள ஆதிசொக்கநாதர் ஆலயத்திற்குச் சென்று ஸ்வாமி  அம்பாள் இருவருக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்து பச்சை நிற வஸ்திரம் சாத்தி வழிபடுங்கள். தினமும் காலையில் கடையைத் திறந்தவுடன் வெளியில் வந்து நின்று சூரியனை வழிபட்ட பின்பு வியாபாரத்தைத் துவக்குங்கள்.வெற்றித் திருமகள் என்றும் துணையிருப்பாள்.

என் கணவருக்கு தீராத கடன் பிரச்னைஉள்ளது. எங்கள் கடன் பிரச்னை தீர உரிய பரிகாரம் சொல்லவும். மாலதி, தஞ்சாவூர் மாவட்டம்.

கார்த்திகை நட்சத்திரம், ரிஷப ராசி, கன்னியா லக்னத்தில் பிறந்துள்ள உங்கள்கணவரின் ஜாதகத்தில் தற்போது குருதசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தில் கடன் பிரச்னையைக் குறிக்கும் ஆறாம் பாவத்தில் குருவும், சூரியனும் இணைந்து அமர்ந்திருப்பது சற்று பலவீனமான அம்சம் ஆகும். ஐந்தாம் பாவத்தில் இணைந்திருக்கும் புதனும், சுக்கிரனும் அளவுக்கதிகமாக ஆசையைத் தூண்டக்கூடும். ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்பதை புரிந்து கொண்டால் கடன் பிரச்னையில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக விடுபட முடியும்.

குடும்பத்தினரை உயர்ந்த நிலையில் வாழவைக்க வேண்டும் என்ற எண்ணத்தினாலும், நண்பர்களுக்கு உதவி செய்ய முயன்றதினாலும் கடன் பிரச்னை அதிகமாகி விட்டது. தொழில் முறையில் தற்போது நேரம் நன்றாக உள்ளதால் செய்யும் தொழிலில் அதிக கவனத்தைச் செலுத்தச் சொல்லுங்கள். வெள்ளிக்கிழமை தோறும் வீட்டினில் ஐந்துமுக குத்துவிளக்கினை ஏற்றி வைத்து மகாலட்சுமி பூஜை செய்து வாருங்கள். பிரதிமாதந்தோறும் வருகின்ற சுவாதி நக்ஷத்ரநாளில் அருகில் உள்ள பெருமாள் கோயிலில் அமைந்திருக்கும் லட்சுமி நரசிம்மர் சந்நதியில் ஆறு அகல் விளக்குகள் ஏற்றி வைத்து வழிபட்டு வாருங்கள். தினமும் கீழேயுள்ள ஸ்லோகத்தினைச் சொல்லி நரசிம்மரை மானசீகமாக வணங்கி வர கடன் பிரச்னைகள் தீரும்.

“லக்ஷ்ம்யா லிங்கிதவாமாங்கம் பக்தாநாம் வரதாயகம் ஸ்ரீ ந்ருசிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே.”

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா்  திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை, பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் தினகரன் ஆன்மிக மலா் 229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம். பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • sushmafrancepm

  பிரான்ஸ் அதிபருடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு : இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை

 • coolingtowersflorida

  அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் குளிர்விப்பு கோபுரங்கள் வெடிவைத்து தகர்க்கப்படும் காட்சிகள்!

 • taiwaneseminimodels

  தைவானிய நுண்பொருள் கலைஞரால் வடிவமைக்கப்பட்ட மிகச்சிறிய மாதிரிகளின் புகைப்படத் தொகுப்பு

 • tentsforchildrenstexas

  அமெரிக்காவில் பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகளுக்காக டெக்சஸில் கூடாரங்கள் அமைப்பு!

 • PresidentGreeceleaders

  அரசு முறைப் பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கிரீஸ் பயணம்: முக்கிய தலைவர்களுடன் சந்திப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்